63 நாயன்மார்கள்

20. கழற்றறிவார் நாயனார் (சேரமான்)
சேரநாட்டில் பெருமாக்கோதையார் வாழ்ந்து வந்தார். அஞ்சைக்களம் என்ற திருத்தலத்தில் தொண்டு செய்து வந்தார். காலை புனித நீராடி திருவெண்ணீறு அணிந்து பணிசெய்து மலர்கொய்து பெருமானுக்கு மாலை சூட்டு மகிழ்ந்திருந்தார். சேரநாட்டை ஆண்ட செங்கோற்பொறையன் அரசும் அதிகாரமும் நிலையல்ல. இறைவன் திருவடியடைந்து தவஞ்செய்வதே சிறந்தது என்று கானகம் சென்றார். அடுத்த அரச உரிமையுள்ளவர் பெருமாக் கோதையர் என அறிந்து அவரிடம் பொருப்பை ஏற்க சொல்கின்றனர்.

திருத்தொண்டைவிடவா அரசபதவி இன்பம் தருவது. இறைவன் திரு உள்ளம் என்ன நினைக்கின்றது என அறிந்து செயல்பட நினைத்து இறைமுன் தொண்டு செய்ய என் உள்ளம் விரும்பினாலும் இவர்கள் அரசு பொறுப்பைத் தருகின்றார்கள். நான் எதை மேற்கொள்வது என வேண்ட இறைவன் அரசு புறத்தலே உன் கடன் என்றார். அப்படியென்றால் எல்லா உயிர்களின் துன்பத்தை நீக்குகின்ற ஆற்றலும் அவற்றை அறிகின்ற ஆற்றலும் வேண்டும் என வேண்டினார். எல்லா உயிர்களும் சொல்லுவதனைப் பெருமான் அருளால் அறியப் பெற்றமைக்கு கழறுதல் எனப்படும். எனவே கழற்றறிவார் எனப் பெயர் பெற்றார்

கழற்றறிவார்க்கு முடி சூட்டும் விழா நடந்தது. கோவிலில் பெருமானை வழிபட்டு பட்டத்து யானைமீதேறி அரண்மனை சென்றபோது எதிரில் ஓர் வண்ணான் எதிர்பட்டான் அவன் மேனியெல்லாம் உவர்மண் ஒட்டி நீறுபூசிய முனிபோல் தென்பட்டான். மன்னர் யானைமீதிருந்து கீழிறங்கி வணங்கினான். என்னை யாரோ என நினைத்துள்ளீர் நான் வண்ணான் என்றான். மன்னர் நான் அடியேன் அடிச்சேரன் என்றார். நாம் பிடிசாம்பலாவது நிச்சயம் என்ற உணர்வுடன் செயல்பட்டார் மன்னர். பெருமான் இவர்தம் வழிபாட்டினை ஏற்கும் வண்ணம் நாள்தோறும் இறைவன் பாதச்சிலம்போசை அளிப்பார். அதன்பின்னர்தான் வழிபாட்டை நிறைவு செய்து அரசுப் பணிகளில் ஈடுபடுவார்.

ஒருநாள் வழிபாடு செய்யும்போது பாதச் சிலம்பொலி கேட்கவில்லை. வழிபாட்டை இறைவன் ஏற்கவில்லை என வருத்தத்துடன் இனி நான் வாழ்ந்து என்ன பயன் என உயிர்துறக்க முற்பட்டார். அப்போது வழக்கத்துக்கு மாறாக இறைவன் வேகமாக சிலம்பொலி எழுப்பினார். சுந்தரரின் பதிகச் செஞ்சொல்லில் ஒன்றியதால் சிலம்பொலிக்க சற்றுதாமதம் ஆயிற்று என்றார்.

இறைவனை மகிழ்வித்த சுந்தரரை ஆரூரரை தில்லையில் காணத்திட்டமிட்டு பயணம் மேற்கொண்டார் சேரமான். கோவிலை அடைந்து புலனும் உளமும் ஒன்றுபெற வழிபட்டார். ‘பொன்வண்ணத்தந்தாதி’ என்ற நூலைப்பாடினார். வன்தொண்டர் திருவாரூர் சென்றார் என்பதை அறிந்து அங்கு சென்றார். வழியில் உள்ள தலங்களை வழிபட்டுச் சென்றார். சேரமான் வருவதை அறிந்த ஆரூரர் எதிர்கொண்டழைத்தார். ஆரூரரை வணங்கி வீழ்ந்தார் அடியில். வாரியெடுத்து தழுவினார் ஆரூரர். ஆரூராரை கொடுங்காளூர் அழைத்துச் சென்றார். சேரமானை ஆரூர் அழைத்துச் சென்றார் ஆரூரார். இருவரும் மாற்றி மாற்றி அவர் இங்கு வந்து தங்குவதும் இவர் அங்கு சென்று தங்குவதுமாய் இருவரின் நட்பு ஒன்றியது. இருவரும் புற்றிடம் கொண்ட பெருமானை வணங்கி ஆரூரர் முன் ‘திருவாரூர் மும்மணிக்கோவை’ என்ற பாசுரம் பாடினார். சேரமானை அழைத்துக் கொண்டு பரவையர் இல்லம் வந்தார் ஆரூரர். நிறைகுடமும் பூமாலையும் கொண்டு வரவேற்றார் பரவையார். தன் குருநாதருடன் சரிசமமாக அமர்ந்து உணவு உண்ண அஞ்சினார் சேரமான். ஆரூரர் கைப்பற்றி சென்றார்.

இருவரும் மதுரை சென்று சொக்கலிங்கப் பெருமானை வழிபட்டனர். சேரமானை பாண்டியன் வரவேற்றார். பாண்டியன் சோழன்மகளை மணந்திருக்க சோழனும் அங்கிருந்தான். மூவேந்தர் புடைசூழ ஆரூரர் திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டார். வழியில் பல தலங்களை வழிபட்டு திருவாரூர் வந்தனர். சிலநாட்கள் கழித்து ஆரூரர் சேரநாடுவர வேண்டுகோள் விடுத்தான் சேரமான். இருவரும் திருவாரூரிலிருந்து புறப்பட்டு பல தலங்களை வழிபட்டு கண்டியூர் சென்றனர். காவிரியில் வெள்ளம். எதிர்கரையில் ஐயாறப்பர். பெருமானை வழிபட நினைத்த ஆரூரர் பதிகம் பாட ஆற்றுநீரை விலக்கி வழிகாட்ட ஆரூரரும் சேரமானும் ஒன்று சேர்ந்து ஐயாறப்பரை வழிபட்டனர்.

இருவரையும் வரவேற்ற சேரமக்கள் திரண்டு தோரணம் அமைத்து விழா செய்தனர். ஆரூரர் அஞ்சைக்களம் சென்று ‘முடிப்பது கங்கை’ என்று பதிகம் பாடினார். திருவாரூர் நினைவு வரவே சேரமானிடம் விடை பெற்றார். சேரமான் கொடுத்த பொன் பொருளோடு திருமுருகன் பூண்டி வந்தனர். எதிர்பாரவிதமாய் கொள்ளையர்கள் எல்லாவற்றையும் களவு செய்தனர். ஆரூரர், பெருமான் திருவருள் எப்படி இதற்கு அனுமதி தந்தது என்று வருந்தினார். திருமுருகன் பூண்டி இறைவனிடம் கோபமாக பதிகம் பாடி முடித்ததும் பூண்டி பெருமான் கொள்ளை அடித்த பொருளை எல்லாம் அவரிடம் கொடுத்தான்.

நேற்றுவரை நீவேண்டியது எல்லாம் நான் கொடுத்தேன். இன்று புதிய நட்பால் என்னை மறந்தாயோ. எனவே அதைக் கொள்ளையடித்து நான் தருவதாகவே இதனை தருகின்றேன் என்றார் இறைவன். ஆரூரர் திருவாரூர் சென்று புற்றிடம் கொண்டாரை வழிபட்டு இருந்தார். ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவஞ்சைக்களத்தில் பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான் வெள்ளை யானையை அனுப்பி சுந்தரரை அதில் ஏறி கையிலை வரும்படி பணித்தார். அப்போது தன் நண்பன் சேரமானும் உடன் இருந்தால் நன்றாயிருக்கும் என எண்ணினார். சுந்தரர் இப்படி நினைப்பது உடனே சேரமானுக்கு தேரிந்தது.. உடன் குதிரைமீதேறி திருவஞ்சைக்களம் செல்ல அங்கு சுந்தரர் ஐராவதத்தில் ஏறி விண்ணில் செல்வதைப் பார்த்தவர் தன் குதிரையின் காதில் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத அது விண்ணென்று விண்ணில் பறந்து ஐராவதத்தை வலம் வந்து அதன் முன் சென்றது.

சேரமான் ஆரூரருடன் கயிலை சென்றார். அங்கு வாயிலில் பூதகணங்களால் தடுத்து நிறுத்தப்பட்டார் சேரமான். உள்ளே சென்ற சுந்தரர், சிவபெருமானை வணங்கி சேரமான் வாயிலில் நிற்பதைத் தெரிவிக்க ஈசன் புன்னகையுடன் சேரமானை உள்ளே அழைத்தார். சுந்தர மூர்த்தி நாயனார் திருவடிகளைப் பற்றி ஐந்தெழுத்து மந்திரம் ஓதியே இங்கு வந்ததாக கூறி திருக்கயிலாய ஞான உலாப் பற்றி ஓர் கவியாகப் பாடி சிவன் மனம் குளிரவைத்தார். சிவகணநாதராகிச் சிவபெருமானின் தொண்டரானார்.

Write Your Comment