63 நாயன்மார்கள்

17. கண்ணப்ப நாயனார்
ஆந்திரமாநிலம் பொத்தப்பி நாட்டில் உடுப்பூர் எனும் ஊரில் வேடமன்னன் நாகன் – தத்தை இருவருக்கும் முருகப்பெருமானை வேண்டி மகனாகப் பிறந்தார். குழந்தையின் உடல் திண்மையாக இருந்ததால் திண்ணன் எனப் பெயர் வைத்தனர். தம் குலத்தொழில் படி வில் வித்தைகளைக் கற்று தேறினார். திண்ணப்பருக்கு வயது பதினாறாகியது. நாகன் முதுமை அடைந்தான். காட்டில் மிருகங்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் இளவரசர் திண்ணப்பர் தலைமையில் வழி நடக்க முடிவெடுக்கப்பட்டது.

தலைமைப் பொறுப்பு ஏற்க வேடர் தலைவன் கன்னி வேட்டைக்குச் செல்ல வேண்டும். அதன்படி திணணப்பர், நாணன், காடன் என்ற இருவருடன் கன்னி வேட்டைக்குப் புறப்பட்டார். வழியில் ஒரு காட்டுப்பன்றி வலையை அருத்துக் கொண்டு ஓடியதைப் பார்த்தவர்கள் அதைத் துரத்தி கண்ணப்பர் தன் வாளினால் குத்திக் கொன்றார். நீண்டதூரம் ஓடிவந்த களைப்பால் நாணா தண்ணீர் தாகமாக உள்ளது என்றார் திண்ணப்பர். இந்த தேக்குமரக்காட்டைக் கடந்ததும் பொன்முகலி ஆறு ஓடும். அதில் சுவையான நீர் பருகலாம் என்றான் நாணா.

அவர்கள் செல்லும் வழியில் ஒரு மலை தென்பட்டது. மலையை நோக்கிச் செல்ல செல்ல திண்ணன் புதியதோர் உணர்வு பெற்றார். அதை உணர்ந்த திண்ணன் அந்த மலையைக் காணவும் அங்கு உள்ள குடுமித்தேவரையும் பார்க்கவும் ஆவலுற்றான். படிகளைக் கடந்து காளத்தியார் திருமுன் நின்றான்.

அந்தப்பெருமானைப் பார்த்தவுடன் பரவசமானார். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். ஓடினார். தழுவினார். உச்சு மோந்தார். சிலையாக நமக்குத் தெரிந்த காளத்தியர் திண்ணனுக்கு உயிர்புடைய பொருளாகக் காட்சி கொடுத்துள்ளார். திண்ணன் நாணனை இறைவனுக்கு வேண்டுவது யாது என வினவ. நாணன் நானும் உன் தந்தையும் ஒருமுறை இக்கோயிலுக்கு வந்தோம். அப்போது ஐயர் ஒருவர் பெருமானுக்கு தண்ணீர் ஊற்றிப் பூப்போட்டு உணவு படைத்தான் எனத் தாங்கள் பார்த்ததை கூரினார்.

அதைக்கேட்ட திண்ணன் இவர் எப்போது சாப்பிட்டாரோ என மனம் கலங்கினார். உடனே ஓடிச்சென்று தான் கொன்ற பன்றி கறியைப் பக்குவப்படுத்தி எடுத்துக்கொண்டு, மலர்களைப் பறித்து தன் தலையில் வைத்து, ஆற்று நீரை வாயிலே நிரப்பிக் கொண்டு வந்து காளத்தியர் முன் நின்று அவர்மேலிருந்த அந்தணர் முன்பு பூசித்த மலர்களையெல்லாம் தன் செருப்புக் காலால் அகற்றிவிட்டு வாயில் உள்ள நீரை பெருமான்மேல் உமிழ்ந்தார். தலையிலிருந்த மலர்களை பெருமான்மீது உதிர்த்தார். பெருமானே நானே நன்கு ருசித்துப் பார்த்த இறைச்சி நல்லூன் இதனை உண்ண வேண்டுமென வேண்டினார். இறைவனும் அதை ஏற்றுக்கொண்டார். பின்னர் வந்த அந்தணர் இறைச்சியின் கழிவுகள் இருப்பதைப் பார்த்து கலங்கினார். துப்பரவு செய்து மலரிட்டு வழிபட்டுச் செல்வார், இப்படியே சில நாட்கள் சென்றது.

அந்தணர் தினமும் இப்படி நடப்பது பற்றி இறைவனிடம் புலம்பினார். அன்று அவர் கனவில் இறைவன் தோன்றி நீ தீண்டத் தகாதன் மூடன் என யாரை நினைத்துக் கொண்டிருக்கின்றாயோ அவன் செயலை நாளை நீ மறைந்து பார் என்றார். அந்தணர் சிவகோசரியார் அதிகாலை எழுந்து வழிபாடு செய்தார். பின் ஒருபுறம் மறைந்து நின்றார்.

திண்ணன் ஓடோடி வருகின்றார். அவருக்கு சகுனங்கள் சரியில்லை. எம்பிரானுக்கு எதோ தீங்கு எனக் கவலையுற்றார். அவர் பார்க்கும்போது பெருமான் கண்ணில் உதிரம் சிந்தியது. பார்த்த கண்ணப்பர் கவலையுற்றார். யார் செய்தது என அங்குமிங்கும் தேடினார். என் செய்வேன் என கலங்கினார். அருகில் உள்ள தனக்குத் தெரிந்த பச்சிலைகளை ஓடிக் கொண்டுவந்து கண்ணில் பிழிந்தார். உதிரம் நிற்கவில்லை.

அவருக்கு தன் குலத்தில் ஊனுக்கு ஊன் இடல் என்ற மருத்துவ முறை நினைவிற்கு வர தன் கண்ணை தன் அம்பினால் பெயர்த்தார். பெருமான் கண்ணில் அப்பினார். அதுபொருந்தி குருதி நின்றது. தன் கண்ணில் இரத்தம் பெருகியும் பெருமான் கண்ணில் இரத்தம் நின்றதே என மகிழ்வுற்றார். அந்த மகிழ்ச்சி சிறிது நேரம்கூட இருக்கவில்லை. பெருமானின் மற்றொரு கண்ணிலும் குருதி வந்தது. திண்ணன் கவலையில்லை மருந்து கண்டேன்! என தன் செருப்புக் காலால் பெருமானின் இடது கண்ணை அடையாளமாக வைத்து தன் மற்ற கண்ணையும் எடுக்க முயன்றார். அப்பொது பெருமான் திருமேனியிலிருந்து ஓர் கரம் தோன்றியது. நில் கண்ணப்பா! என்று அவரை தடுத்தது.

‘உன்னுடைய உண்மையான அன்பால் நான் மனம் உருகினேன். கண்ணை கொடுத்ததால் கண்ணப்பர் என்றும், என்றும் எனது வலப்பக்கம் இருப்பாயாக’ என அருள் புரிந்தார். இதைக் கண்ட அந்தணர் ஆனந்தம் அடைந்து தொடர்ந்து வழிபட்டு வந்தார்.

Write Your Comment

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading