13. ஏனாதிநாத நாயனார்
ஏனநல்லூர் என்ற ஊரிலே ஏனாதிநாதர் பிறந்தார். மன்னர்களுக்கு போர் பயிற்சி தரும் பணியை மேற்கொண்டார் ஏனாதிநாதர். ஏனாதிநாதர் அஞ்சா நெஞ்சம் உடையவராய் திகழ்ந்தார். ஊரில் வாட்படைப் பயிற்சிக்கூடம் அமைத்துப் பயிற்சி கொடுத்து வந்தார். அவர் பெற்ற செல்வம் எல்லாம் அடியவர்கட்கே பயன் பட்டது. அவர் புகழ் அதிகரித்தது. அவ்வூரில் வாழ்ந்த வாட்பயிற்சி தரும் அதிசுரன் அவர்மேல் அழுக்காறு கொண்டான். அவனது திறமையின்மையால் அவனால் பெயர் பெற முடிவில்லை என்பதை உணர முடியாதவன் ஏனாதி நாதர்மேல் பொறாமை கொண்டான். ஒருநாள் அதிசூரன் ஏனாதிநாதர் இருக்கும் இடம் தேடிவந்தான். நான் பயிற்றுவித்தவரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன், நீங்கள் பயிற்றுவித்தோரைக் கூட்டிக் கொண்டு வாருங்கள். இருவரும் சண்டை யிடுவோம். யார் வெற்றி பெறுகிறோமோ அவரே இனி இவ்வூரில் பயிற்சி கொடுக்க வேண்டும் என்றார். அதற்கு ஏனாதி நாதரும் உடன்பட குறித்த நாளில் போர் தொடங்கியது. ரத்தக் களாமாகிய இடத்திலிருந்து அதிசூரன் ஆட்கள் ஒடி ஒளிந்தனர்.
தோற்ற அதிசூரன் போரில் ஏனாதிநாதரை வெல்வது கடினம் என உணர்ந்தான். வஞ்சனையால் வெல்ல நினைத்தான். மீண்டும் ஏனாதி நாதரைச் சந்தித்தவன் நம்மால் ஏன் பலர் மடியவேண்டும். நாமிருவரும் வாட்போர் செய்யலாம். வெற்றி பெற்றவர் பயிற்சி சொல்லித்தரலாம் என்றார். அதற்கு இசைந்தார் ஏனாதிநாதர். போர் குறிப்பிட்ட நாளில் நடந்தது.
தோற்கும் நிலையடைந்த அதிசூரன் தான் திட்டமிட்டபடி தன் நெற்றியில் உள்ள திருநீற்றை மறைத்திருந்த மறைப்பை விலக்க, நெற்றியில் திருநீற்றை கண்ட ஏனாதிநாதர் அடியவரைக் கொல்வதா என வாளை எறிந்துவிட எண்ணினார். அதனால் சண்டையிடுவதுபோல் பாசாங்கு செய்தார். அதிசூரன் தன் எண்ணத்தை நிறைவேற்ற மண்ணில் சாய்ந்தார்.
நெற்றியில் திருநீறு கண்டமைக்காக அடியவர் என நினைத்து கொல்லாமை தவிர்த்து தன் உயிரைக் கொடுத்த ஏனாதிநாதருக்கு அருள் வெளியில் பெருமான் காட்சி கொடுத்து அருளினார்.
14. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
காஞ்சிமாநகரில் பல்லவர் குலத்தில் ஐயடிகள் காடவர்கோன் பிறந்தார். காடர் என்பது பல்லவ குலத்தினரைக் குறிக்கும். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூவாகும், கலியையும் பகைவரது வலியையும் அடக்கி சைவநெறியை எங்கும் பரவச் செய்து நீதி நெறி தழுவாது அரசு புரிந்தார். வடமொழி, தமிழ் இரு மொழிகளிலும் வல்லவர், காலக்கிரமத்தில் உலகத்தை அரசு புரிவது துன்பம் எனக் கருதினார், மனம் சிவனடியார்கள்பால் லயித்தது. உலகயியலில் மனம் ஒட்டவில்லை. எனவே அரசாட்சியை தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு திருத்தொண்டு செய்வதில் ஈடுபட்டார்.
பெருமான் கோவில்கள் தோறும் சென்று பல பணிகள் செய்து உள்ளம் உருக வெண்பா பாடல் பாடி வழிபட்டு வந்தார். பல தலங்களுக்குச் சென்று வழிபட்டு தன் தேக யாத்திரையையும் முடித்து இறையடி சேர்ந்தார்.
15. கணநாத நாயனார்
சீர்காழியில் மறைவர் குலத்தில் தோன்றியவர் கணநாதர். அடியார்களுக்கு தொண்டு செய்து உதவிகள் புரிந்து வந்தார். நல்ல தொண்டர்களை உறுவாக்கினார்.
திருஞானசம்பந்தரைப் போற்றி அவரை தன் குருவாகக் கொண்டவர். அந்தப் பெருமானின் திருவடிகளே தனக்கு காப்பு என்று ஏற்றிப் போற்றி வாழ்ந்து இறையடி சேர்ந்தார்.
16. கணம்புல்ல நாயனார்
இருக்குவேளூரில் கணம்புல்லர் பிறந்தார்.நிறைந்த செல்வம் உடையவர். திருக்கோவில் உள்ளே விளக்கு எரிந்து ஒளியூட்டுதல் சிறந்த பணி என நினைத்தார். எனவே கோவிலில் விளக்கிட்டு பாடி வழிபட்டு வந்தார்.
வறுமை அவரை வாட்டியது. தில்லைசென்று ஆடலரசை பலகாலம் வழிபட்டு வந்தார். வீட்டில் உள்ள பொருள்களை யெல்லாம் விற்று திருப்புலீச்சுவரம் கோவிலில் விளக்கு ஏற்றி வந்தார். விற்பதற்கு அவரிடம் ஒரு பொருளும் இல்லை. அயலாரிடம் சென்று இரஞ்சுவதற்கு அஞ்சினார். உடல் உழைப்பால் அரிந்த கணம் புல்லைக் கொண்டுவந்து விற்று அதனால் கிடைக்கும் பெருளால் நெய்வாங்கி விளக்கிட்டுத் தொண்டு செய்தார்.
ஒருநாள் அரிந்து கொண்டு வரும் கணம் புல் எங்கும் விற்காமல் அவதிப்பட்டார். அதனால் விளக்கு எரிக்க அந்த புல்லையே திரித்து எரித்தார். தொடர்ந்து எரிக்க புல் இல்லை என்ற நிலையில் அன்புருகும் சிந்தையுடன் அவ்விளக்கில் தன் தலையை வைத்து எரிக்க முயன்றார்.சிவபெருமான் தடுத்து அருள் புரிந்து சிவலோகப் பதவிதந்தார்.