63 நாயன்மார்கள்

56. மானக்கஞ்சாற நாயனார்
காஞ்சாறு என்ற ஊரில் வேளாளர் குடியில் பிறந்தார் மானக்கஞ்சாறனார். அந்தக் குலத்தின் தலைவர். மன்னரின் படைத்தளபதி. சிறந்த சிவபக்தர். சிவமே மெய்ப்பொருள் என்று அறிந்தார். அதுவே எல்லாமென உணர்ந்தார். சிவனடியார்கள் என்ன நினைப்பார்களோ அவர்களின் குறிப்பறிந்து தொண்டு செய்து அவர்தம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தன்மை யுடையவர்.

அவருக்கு ஒரே ஒரு குறை. அது மகவு இல்லை என்பதாகும். தவம் மேற்கொண்டு பெருமான் கருணையினால் பெண் குழந்தையை அடைந்தார். அப்பெண் வளர்ந்து பருவமடைந்தார். நீலகண்டபெருமான்மேல் அளவுகடந்த பக்திகொண்ட ஏயர்கோன் கலிக்காமர் என்பவருக்கு பெரியோர்களால் மணம் பேசி முடிக்கப்பட்டது.

மகிழ்ச்சி வெள்ளம் கரைபுறண்டு ஓடியது. மணமகள் வீடு திருமணக்கோலம் பூண்டது. மானக்கஞ்சாறனார் தன் ஒரே செல்ல மகளின் மணத்தை ஊர் போற்ற சிறப்புற நடத்த ஏற்பாடுகளைச் செய்தார். பெருமான் தொண்டர்கள் விருப்பம் எதுவாயினும் குறிப்பறிந்து கொடுத்து மகிழும் மானக்கஞ்சாறனார் பண்பை உலகறியச் செய்ய முடிவு செய்தார். மாவிரதியர் கோலத்தில் கஞ்சாறு நோக்கிப் புறப்பட்டார். அடியாரை மானக்கஞ்சாறனார் வரவேற்று உபசரித்தார்.

மானக்கஞ்சாறனார் இல்லத்தில் உள்ள அனைவரையும் அடியாரை வணங்கி ஆசி பெறச் சொன்னார். மணப்பெண்ணையும் வணங்கச் சொன்னார். அவரும் வணங்கினார். தவமாவிரதியர் கோலம் கொண்ட அடியவர் மணப்பெண்ணின் மயில் போன்ற சாயலும் மேகம் போன்ற கருத்த அடர்ந்த நீண்ட கூந்தல் பஞ்சவடிக்கு ஆகும் என்றார். அடியவர் தம் குறிப்பறிந்து கொடுக்கும் தன்மையுடைய மானக்கஞ்சாறனார் மகளின் திருமணநாள் என்றும் பாராமல், மணமகன் வீட்டார் என்ன சொல்வார் என்றும் பாராமல், மணமகன் என்ன நினைப்பார் என்றும் பாராமல், அடியவர் குறிப்பறிந்து ஈயும் பண்பு தலைதூக்க ஒரு கத்தியை எடுத்து வந்து மணமகளின் அலங்கரிக்கப்பட்ட கூந்தலை அடியுடன் அறுத்து அடியவரின் கையில் கொடுத்து வணங்கினார்.

அதை வாங்குவதுபோல் நின்ற அடியவர் அம்பிகையுடன் விடைமேல் தோன்றிக் காட்சி கொடுத்தார். மணமகள் கூந்தல் பெருமான் கருணையினால் வளர்ந்தது. அன்பனே நம்பாலும் நம் அடியர்பாலும் நீர் கொண்ட மெய்யன்பை அறிந்து மகிழ்ந்தோம். உமக்கு நம் புவனத்தில் இடம் கொடுத்தோம் என அருள் செய்தார், மணக்கோலத்தில் ஏயர்கோன் கலிக்காமர் வந்தார். நிகழ்வுகளைக் கேட்டு மாவிரதியாய் வந்த எம்பெருமானை வணங்கும் பேறு இழந்தோமே என வருந்தினார்.

57. முருக நாயனார்
திருவாரூர் அருகே நன்னிலத்தை அடுத்த திருப்புகலூரில் பிறந்தார் முருகர். மறையவர் குலத்தில் பிறந்தவர். மூன்று வேளையும் இறைவனுக்கு மலர் சூட்டி வழிபாடு செய்து வந்தார். ஞான நெறியில் நிற்பவர். சிவபெருமான் பால் உருகும் மனத்தால் வழிபடும் பண்பினர்.

நால்தோறும் நால்வகை மலர் கொய்து வண்ணவகையாக்கி பெருமானுக்கு அணிவித்து மகிழுவார். இத் தொண்டு செய்வதையே பெரும் புண்ணியமாக நினைத்தார். கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பு, நிலப்பூ என்ற நான்வகை மலர்களால் அறுவகை மாலைகளை தொடுத்து அணிவித்து வழிபடுவது வழக்கம்.

ஞான சம்பந்தரை தம் நண்பராகப் பெற்றார். முருகர் பெருமானை அலங்கரித்து தூர நின்று பார்த்துப் பார்த்து மாற்றியமைத்து கண்டு கண்குளிர களிப்பாரம். நாளும் தொண்டு செய்து வந்தவர் ஞான சம்பந்தப் பெருமான் திருமணநாளில் அப்பெருமானோடு திருநல்லூரில் சிவ சோதியில் கலந்தார்.

Write Your Comment