63 நாயன்மார்கள்

45. திருநீலநக்க நாயனார்
நன்னிலத்திற்கு கிழக்கே 10கி,மீ தூரத்தில் உள்ள சாத்தமங்கையில் நீலநக்கர் பிறந்தார். அந்த ஊரின் கோவிலுக்கு அயவந்தி என்று பெயர். இறைவன் அயவந்திநாதர், அம்பிகை மலர்கண்அம்மை. அடியவர்களை போற்றுவதும் பெருமானை அர்ச்சிப்பதுமே வாழ்வின் குறிக்கோள் என வாழ்ந்தார்.

திருவாதிரைத் திருநாள் சிவபெருமானுக்கு உரிய நாள். 27 நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருஆதிரை இரண்டும் சிறப்பானது. சிவனுக்கும் அடியவர்க்கும் உகந்தநாள் ஆதிரை. இந்த நாளில் சிவபூஜை செய்ய எல்லாப் பொருள்களையும் எடுத்துக் கொண்டு மனைவியையும் உடன் அழைத்துக் கொண்டு கோவிலில் பூஜை செய்தார். இறைவனை வணங்கி ஐந்தெழுத்தை ஓதி வலம் வந்தார். அப்போது இறைவன் மேல் ஓர் சிலந்தி விழுந்தது. அதைக் கண்ட அம்மையார் சிலந்தியினால் இறவனுக்கு பங்கம் எனநினைத்து வாயினால் ஊதித் தள்ளினார்.

சிலந்தி கீழே விழுந்தது. இதைக் கண்ட நீலநக்கர் அறிவில்லாமல் நீ இப்படி செய்து இறைவன் மேனியை எச்சில் செய்தாயே என வருந்தி இனி உன்னை நான் துறந்தேன். இனி உனக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்றார். சென்றார். மாலையாயிற்று. அம்மையார் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. கோவிலிலேயே தங்கினார். நீலநக்கருக்கு உறக்கத்தில் ஓர் கனவு தோன்றியது. அவந்திநாதர் தோன்றி நீல நக்கரே, உன்மனைவி ஊதி அவள் எச்சில் பட்ட இடம் தவிர மற்ற இடங்களில் எல்லாம் கொப்புளம் வந்துவிட்டது. எனக்கூறி திருமேனி காட்டி உண்மையைக் கூறினார். விடிந்தது. நீலநக்கர் பெருமானை வணங்கினார், அம்மையாரை விட்டிற்கு கூட்டிவந்தார்.

ஞானசம்பந்த பெருமான் காலத்தவர். அவருடன் நெருங்கிப் பழகியவர். ஞானசம்பந்தப் பெருமான் திருமணத்தைக் கண்டு களிக்க திருப்பெருமணநல்லூர் அடைந்து திருமணத்தை நடத்திவைத்தார். ஞானசம்பந்த பெருமானோடு திருநல்லூரில் சிவ சோதியில் கலந்து ஐக்கியமானார்.

46. திருமூல நாயனார்
கயிலைவாழ் சித்தர்களில் நந்திதேவரருள் பெற்ற மாணாக்கர் சுந்தரநாதன். அட்டமா சித்திகள் கைவரப்பெற்ற சிறந்த சிவயோகி. அவரின் நண்பர் அகத்தியர். அவர் பொதிய மலையில் எழுந்தருளியுள்ளதால் அவரோடு சில நாள் தங்கியிருக்க எண்ணம் கொண்டு கயிலையிலிருந்து புறப்பட்டார். திருக்கேதாரம், பசுபதிநேபாளம், காசி(அவிமுத்தம்) விந்தியமலை, ஆகிய தலங்களில் வழிபாடு செய்து திருப்பருப்பதம், திருக்காளத்திநாதர், காஞ்சி ஏகாம்பரநாதர் ஆகிய தலங்களிலும் முப்புரமெறிந்த திருவதிகை நாதரை வழிபட்டு திருபெரும்பற்றப்புலியூரில் சிவானந்த திருக்கூத்தினை கண்டு களித்து காவிரியில் நீராடி தென்கரையில் உள்ள திருவாவடுதுறை அடைந்தார்.

அங்கு காவிரிக்கரையில் இடையர்குல மூலன் விடம் தீண்டி உயிர் துறக்க பசுமாடுகள் அவன்மேல் கொண்ட அன்பால் அவனைச் சுற்றிவந்து அழுது கொண்டிருந்ததை பார்த்தவர் தன் மேனியை ஓர் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு பரகாயப் பிரவேசம் மூலம் மூலன் உடலில் தன் உயிரைப் புகுத்தார். பசுக்கள் சந்தோஷமடைந்தன. மாலை வந்ததும் பசுக்கள் பழக்கம் காரணமாக சாத்தனூர் நோக்கி செல்ல மூலரும் பின் தொடர்ந்தார். பசுக்கள் யாவும் அதனதன் வீட்டிற்கு சென்றன. வீதியில் நின்ற அவரை பசுக்கள் எல்லாம் வீட்டிற்கு சென்று வெகு நேரமாகியும் மூலன் வரவில்லை என்பதால் அவனைத் தேடிவந்த அவன் மனைவி அவன் வீதியில் நின்றிருப்பதைக் கண்டு அவன் அருகில் வர விலகி நின்றார்.

அவளை நோக்கி நீ எண்ணியவாறு இங்கு உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை எனக்கூறி வீட்டிற்கும் செல்லாமல் மண்டபத்தில் யோகத்தில் இருந்தார். அவர் மனைவி அவர் வீட்டிற்கு வரமறுப்பதை ஊர் பெரியவர்களிடம் கூற யோகியரைக் கண்டு வந்தவர்கள் உண்மையறிந்து அப்பெண்ணைக் கூட்டிச் சென்றனர். அடுத்த நாள் காலை யோகி பசுக்கள் வந்தவழி சென்று தாம் மறைத்துவைத்த இடத்தில் தன் உடம்பு இல்லாதது கண்டு சிவபெருமான் உடலை மறைத்தது கண்டு அவர் அருள் செய்த ஆகமத்தினுடைய பொருளை எல்லாம் தமிழ் ஆக்க எம்பெருமான் இவ்வுடல் தந்துள்ளார் என்பதை முற்றுணர்வினால் உணர்ந்தார். பின் தொடர்ந்த ஆயர் குலத்திற்கும் தமக்கும் யாதொரு தொடர்புமில்லை என உணர்த்தினார்.

திருவாடுதுறையை அடைந்து பெருமானை வணங்கி கோவிலின் மேற்குப் பகுதியிலுள்ள அரச மரத்தடியில் அமர்ந்து சிவயோகத்தில் இறையுடன் ஒன்றினார். இவ்வுலகத்தார் உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நால்வகையாக விரிந்து மலரும் நல்ல திருமந்திரமாலை என்ற நூலை ஆண்டுக்கு ஒருமுறை ஒருபாடல் வீதம் 3000 பாடல்கள் அருளினார். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற சொற்தொடரை தந்தவர் திருமூலரே. சைவ சித்தாந்தங்களுக்கு முன்னோடி திருமந்திரம்.

Write Your Comment