41. திருநாவுக்கரசு நாயனார் (அப்பரடிகள்)
திருநாவலூருக்கு அருகில் உள்ள திருவாமூரில் துறுக்கையர் குடி என்ற வேளாளர் குலத்து புகழனார்- மாதினியார் தம்பதியினருக்கு திலகவதி என்ற மகளும், மருள் நீக்கியார் என்ற மகனும் பிறந்தனர். திலகவதி பன்னிரண்டு வயதை அடைந்தபோது அப்போதைய வழக்கப்படி அவருக்கு மணமுடிக்க ஏற்பாடுகள் செய்தார்.
வேளான் குடித்தலைவரான கலிப்பகையாருக்கு தன் மகளை கொடுக்க இசைந்தனர். அப்போது வடநாட்டு மன்னன் தமிழகம் நோக்கி படையெடுத்து வருதலை அறிந்த மன்னன் கலிப்பகையாரை சேனைத் தலைவராக்கி வடவரை தடுத்து நிறுத்த அனுப்புனார். சண்டை நீண்ட நாள் நடந்தது. புகழனார் நோய்வாய்பட்டு இறக்க மாதினியாரும் உயிர் துறந்தார். பெற்றோரை இழந்த திலகவதியாரும் மருள் நீக்கியாரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி வாழ்ந்தனர்.
கலிப்பகையார் போர்களத்தில் உயிர் மாண்டார் என்ற செய்தி இவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தந்தையும் தாயும் அவருக்கு என்னை கொடுக்க இசைந்தனர். ஆதலால் என்னுயிரை அவர் உயிரோடு இசைவிப்பேன் என்றதைக் கேட்ட மருள் நீக்கியார் தந்தை தாய்க்குபின் தாயாகிய தமக்கையே நீர் உயிர் துறந்தால் உனக்குமுன் நான் உயிர் துறப்பேன் என்றார். தம்பி சாகச் சகியாது தவ வாழ்வை மேற்கொண்டார் திலகவதியார். இம்பர் மனைத்தவம் புரிந்து தம்பியரை கல்வி கேள்விகளில் சான்றோனாக வளர்த்தார். மருள் நீக்கியார் ஆரூர் அப்பன் எனக்குத் திலகவதி தாயாரைத் தந்தான் என்றார்.
42. திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்)
வயல் வழம் கொழிக்கும் மாட மாளிகைகள் நிறைந்த ஆதனூரில் பிறந்தார் நந்தனார். மாட மாளிகைகள் ஒருபுறமிருந்தாலும் மறுபுறம் சேரி. அச்சேரியிலுள்ள புலையர்களின் தலைவராக இருந்தார் நந்தனார். சிவன்பால் சிந்தை கொண்டிருந்தார். செம்மையான சிந்தனையில் வேறு நினைப்பின்றி ஈசன் திருப்பணியை தமக்கு ஏற்ற வகையில் செய்து வந்தார்.
வைதீஸ்வர கோவிலிருந்து 3கி.மீ. தூரத்தில் இருக்கும் திருப்புன்கூர் சிவலோக நாதரை வணங்க ஆர்வம் கொண்டார். கோவிலைச் சுற்றி வலம் வந்தார். அப்போதிருந்த சமுதாய அமைப்பின் காரணமாக கோவில் உள்ளே செல்ல முடியாததால் வெளியே நின்றார். நந்தி பெரிய நந்தியாகையால் பெருமானை தரிசிக்க முடியவில்லை. காட்சி கிடைக்கவில்லை என மனம் நொந்தார்.
அவரின் அன்பைக் கண்ட சிவலோகநாதர் நந்தியை விலகச் சொல்லிக் காட்சி தந்தார், அவ்வூரில் அடியவர் பயன் பாட்டிற்கும் ஆண்டன் திருமுழுக்கிற்கும் ஓர் குளம் வெட்டினர். சிவத் தலங்களை வழிபடுவதோடு தேவையான தோல், வார், நரம்பு கோரோசனை முதலிய வற்றைத் தந்தும் தொண்டு செய்து வந்தார். என்ன செய்தும் கோவில் உள் சென்று வழிபட முடியவில்லை.
தில்லையில் கூத்தரை வழிபட வேண்டும் என்பது அவருடைய நீண்டகால அவா. அந்த உணர்வு வரும் போதெல்லாம் நம்மால் அது முடியுமா என மாய்ந்து போவார். சந்திப்போரிடம் சிதம்பரம் போவேன் நாளைப் போவேன் என்பார். எப்போதும் இதையே கூறிக் கொண்டிருந்ததால் மக்கள் அவரை திருநாளைப்போவார் என்றனர். ஒருநாள் மிகச்சிந்தித்து இப்பிறவி எப்போது முடியும் எனத் தெரியாது எனவே செய்யும் அறப்பணியை உடனே செய்ய வேண்டும் என்று உடன் புறப்பட்டார் தில்லை நோக்கி.
இந்த உடலோடு புனிதமான தில்லைக்குள் எப்படிச் செல்வது என வருந்தினார். எல்லையிலிருந்தே அழகு தமிழில் பாடி பரவசமானார். கண்ணீர் மல்க தன் நிலை குறித்து வருத்தப்பட்டார். பலநாள் அங்கிருந்தபடியே வழிபட்டார் நந்தனார். ஒருநாள் இரவு கூத்தபிரான் தோன்றி நந்தனே உன் விருப்பப்படி முப்பரிநூலோடு நம் காட்சி காண வருவாய் என அருள் புரிந்தார், தில்லைவாழ் அந்தணர்கள் கனவில் தோன்றி உண்மைத் தொண்டன் ஊரின் எல்லையில் தன் உடம்பு கீழானது எனக் கூறி தங்கியுள்ளான். நீங்கள் எரியமைத்து அதில் மூழ்கச் செய்யுங்கள். தூய உடம்பு பெற்ற அவரை நம் சன்னதிக்கு அழைத்து வாருங்கள் என்றார்.
அடுத்த நாள் தில்லைவாழ் அந்தணர்கள் இறை சொன்னவாறே சென்று நந்தனாரை தூய்மைப்படுத்தி அழைத்து வந்தனர். கோபுரதரிசனம் கண்டார். இறைவனைக் காண ஓடினார். மூல கருவறையில் சென்று மறைந்தார். நந்தனாரை யாரும் அதன்பின் காணவில்லை.