37. சோமாசிமாற நாயனார்
அம்பர் என்ற ஊரில் மறையவர் குலத்தில் சோமாசிமாறர் பிறந்தார். சோமயாகம் செய்பவரை சோமையாஜி எனக்கூரினர். நாளடைவில் அது சோமாசிமாறர் என்றாயிற்று. எந்தக் குலத்தில் பிறந்தாலும் ஈசனுக்கு அன்பர் என்றால் அவர் நம்மை ஆளும் குருநாதர் எனும் இயல்பினர். சிந்தை தெளிய சிவனின் ஐந்தெழுத்தை ஓதுவார். அடியவர்கள் யாராயினும் அவர்களைப் போற்றி வணங்கினார்.
அடியவர்கள் இறைவனாகவே போற்றத் தக்கவர்கள். அடியார்கள் உள்ளத்தில் எப்போதும் இறைவன் குடியிருக்கின்றான். அடியவர்களுக்குள் ஜாதி, இனம் பார்ப்பது கூடாது. சிவனை அவர்கள் உருவில் கண்டு வணங்க வேண்டும் என்ற கொள்கைதனை சோமாசிறார் கடைபிடித்து வந்தார். நம்பியாரூரர் பால் அன்பு கொண்டு திருவாரூர் அடிக்கடிச் சென்று அவர் திருவடியை வணங்கி வந்தார். அவருக்கு இனிய நண்பரானார். குரு அருளும் திரு அருளும் பெற்று இறைவன் திருவடி நிழலை எய்தினார்.
38. தண்டியடிகள் நாயனார்
திருவாருரில் பிறந்தவர் தண்டி. சிவனின் சிந்தனையைத்தவிர வேறு எதையும் நினையாதவர். அகம் நோக்குவதைத் தவிற புறம் நோக்கி அறியா இவ்வடியாருக்கு பிறவியிலேயே கண் தெரியாது, திருவாரூர் மேற்குப்பகுதியில் உள்ளது கமலாலயம் திருக்குளம். தண்டியார் இறைவனை வணங்கி ஐந்தெழுத்தை ஜபித்துக்கொண்டு கோவிலை வலம் வருவார். கமலாலயக் குளம் அடியவர்கள் குளிப்பதற்கும் பெருமானுக்கு தீர்த்த குளமாகவும் இருந்தது. சமணர்கள் அந்தக் குளத்தில் பாழிகளும் பள்ளிகளும் அமைத்தனர். குளத்தின் அளவு குறைந்தது.
இதை உணர்ந்த தண்டியார் குளத்தைத் தோண்டி அகலப்படுத்த எண்ணினார். செயலை செய்வதற்காக குளத்தை அகலமாக்கும் குழிவாயில் ஒரு தறியை நட்டார். குளக்கரையில் ஒன்றை நட்டார். இரண்டையும் கயிற்றால் இணைத்தார். குளத்தில் இறங்கி மண்ணைத் தோண்டி ஓரு கூடையில் எடுத்துக் கொண்டு கயிற்றின் துணையுடன் மேல்வந்து கரையில் கொட்டினார். உடல் பணி செய்யும்போது உள்ளம் ஐந்தெழுத்தை ஓதியது.
தண்டியாரின் இப்பணி குறித்து சமணர்கள் ஐயா மண்ணைக் கிண்டாதீர்கள் அதில் உள்ள சிற்றுயிர்கள் மாண்டு போகும் என்று தடுத்தனர். சிவனுக்குரிய திருப்பணி என்றார். நாங்கள் சொல்வது காதில் விழவில்லையா. கண்தான் தெரியவில்லை காதுமா கேட்கவில்லை என்றனர். எனக்கு கண் தெரிந்தால் என்ன செய்வீர்கள் எனக்கேட்ட தண்டியரைடம் நாங்கள் இந்த ஊரில் இருக்கமாட்டோம் எனக் கூறி தண்டியரிடம் இருந்த மண்வெட்டியையும் கூடையையும் பிடுங்கி எறிந்தனர்.
தண்டியார் பெருமானிடம் முறையிடுகின்றார். தூர்வாரும் திருப்பணியை செய்யும் என்னை அவமானப்படுத்தினர். என மனம் நொந்தது. இந்த இடரை நீக்கி அருள் புரிய வேண்டும் என வேண்டி திருமடத்தில் தங்கினார். அன்று இரவு கனவில் இறைவன் தோன்றி தண்டியாரே உன் கண்கள் நாளை ஒளி பெறும். உன்னை இழிவாகப் பேசியவர்கள் ஒளி இழப்பர். அஞ்சாதே. எனக் கூறி மறைந்தார், சோழமன்னன் கனவில் தோன்றி நம் தொண்டன் நமக்கு குளம் வெட்ட சிலர் அப்பணிக்கு இடர் செய்து இழிவு படுத்தியுள்ளனர். அதை சரிசெய்க என்றார், மன்னன் தண்டியாரிடம் சென்று நடந்தவைகளை தெரிந்தார். அரசன் சமணர்களையும் அழைத்து கேட்க அவர்கள் முதல் நாள் கூறியபடி சம்மதம் தெரிவித்தனர். தண்டியார் இறைவன் முன் வணங்கி திருக்குளத்தில் மூழ்கி எழுகையில் அவருக்கு கண்பார்வை கிடைத்தது. சமணர்களுக்கு பார்வை மறைந்தது. மன்னன் சமணர்களைப் பார்த்து நீங்கள் ஒப்பியபடி திருவாரூரை விட்டு நீங்குங்கள் என்றான். தண்டியார் நாளும் சிவனடி வணங்கி ஐந்தெழுத்தை ஓதி வழிபட்டு இறைவன் அடி சேர்ந்தார்.