63 நாயன்மார்கள்

27. கோச்செங்கட்சோழ நாயனார்
சோழமன்னன் சுபதேவன்- கமலவதி ஆகியோர் மழலை வேண்டி தில்லைக் கூத்தபிரானை வேண்ட இறைவன் இராணியின் கருவில் திருவானைக்காவில் பெருமானுக்கு பந்தல் இழைத்து வழிபட்ட சிலந்தி மகவாய்ச் சார்ந்தது. கரு முதிர்ந்து மகப்பேறு வேலை வந்தபோது இன்னும் ஒரு நாழிகை கழித்து குழந்தை பிறக்குமானால் மூன்றுலகம் அரசாளும் என சோதிடர்கள் கூறினார்கள்.

அச்சொல் கேட்ட கமலவதி அவ்வாறு ஒரு நாழிகை கழித்துக் குழந்தை பிறக்கும்படி என் காலைப் பிணித்து தலைகீழாக மேலே தூக்கி நிறுத்துக என்று சொல்ல அவ்வாறே செய்து ஒரு நழிகை கழித்துக் ஆண் குழந்தை பிறந்தது. காலநீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. குழந்தையைக்கண்ட தாய் என் கோச்செங்காணானோ என அழைத்து உயிர் நீக்கினாள். மன்னன் குழந்தையை வளர்த்து உரிய பருவத்தில் மணிமுடி சூட்டி தான் தவநெறியை சார்ந்து சிவலோகம் சென்றான்.

அவ்வாறு பிறந்த கோச்செங்கட் சோழர் திரு அருளினாலே முன்னைப் பிறப்பின் உணர்வோடு சைவத்திருநெறி தழைக்க நாட்டில் சிவாலயங்கள் பலவற்றைக் கட்டும் திருப்பணியை மேற்கொண்டார். வெண்ணாவல் மரத்தினூடே பெருமான் வீற்றியிருந்தருளும் நிலையில் அதனை கோவிலாக மாற்றினார். சோழநாட்டில் சிவபெருமான் திருக்கோவில்கள் பலவற்றை அமைத்து நிகழும் பூசனைக்கு பெரும் பொருள் வகுத்து செங்கோல் ஆட்சி நடத்தினார். தமிழ் நாட்டில் எழுபது மாடக் கோவில்களை அமைத்தார். திருநறையூரில் திருமாலுக்கு மணிமாடம் என்ற கோவிலைக் கட்டினார். தில்லைவாழ் அந்தணர்களுக்கு திருமாளிகை கட்டுவித்து இறுதிவரை திருவடித்தொண்டு செய்து இறைவன் திருவடி அடைந்தார்.

28. கோட்புலி நாயனார்
திருநாடியத்தான்குடி என்ற ஊரில் வேளான் குடியில் கோட்புலியார் பிறந்தார். சோழமன்னனின் சேனாதிபதியாக பல போர்முனைகளுக்குச் சென்று வெற்றி பெற்று புகழடைந்தவர். மன்னன் தரும் நிதிக் குவியலை சிவபெருமானுக்கு திருஅமுதுக்குரிய செந்நெல் கொடுத்து மகிந்தார். நெல்லைக் குவித்து திருக்கோவில்களில் உள்ளபெருமான் அமுது படிக்கு அளித்து மகிழ்வார்.

ஒரு சமயம் மன்னன் ஆணைபடி போர்முனைக்கு செல்ல வேண்டியிருந்தது. சிவபெருமான் அமுது படிக்காக தாம் திரும்பி வரும் அளவும் போதுமான நெல் வைத்துவிட்டு புறப்பட்டார். அப்போது குடும்பத்தினரை அழைத்து இது சிவனுக்குரியது நான் திரும்பும் வரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டினார்.

ஊரில் பஞ்சம் ஏற்பட்டது. சுற்றத்தார்கள் அமுதுபடிக்காண நெல்லை இறைவனுக்கு படைக்காமலேயே எடுத்து உண்டனர். போர்முனையில் வெற்றி பெற்று மன்னன் கொடுத்த பொற்குவியலுடன் ஊருக்கு வந்தவர் சிவனுக்குரியதை எடுத்து சுற்றத்தார் நைவேத்தியம் செய்யாமல் உண்டதையறிந்து சினம் கொண்டு உறவினர்களை அழைத்து ஒவ்வொருவராய் வெட்டிக் கொன்றான். எஞ்சியிருந்த ஒரு சின்னஞ்சிறு குழந்தையையும் வெட்ட வாளை ஓங்க காவலன் ஐயா இச்சிறுகுழந்தை என்ன செய்தது. கொல்லாதீர் என்றதற்கு இது உணவு உண்ணவில்லை. உணவு உண்ட அதன் தாயின் பாலை அருந்தியதுதான் குற்றம் எனக்கூறி வாளினால் வெட்டினார்.

சிவபெருமான் தோன்றி உன்வாளினால் வெட்டுண்ட சுற்றத்தினர் பாவத்தினின்றும் விடுபெற்று பொன்னுலகில் இன்புறுவர். நீயும் சிவபதம் அடைவாயாக என்றார்.

Write Your Comment