63 நாயன்மார்கள்

25. குலச்சிறை நாயனார்
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள மணமேற்குடி என்ற ஊரில் குலச்சிறை பிறந்தார். இறைவனைச் சென்றடைய,
1. சிவலிங்கத் திருமேனியை வழிபடுதல்
2. குருவை சிவமாக வழிபடுதல்
3. அடியார்களை சிவமாக வழிபடுதல்
என்ற குரு லிங்க சங்கம வழிபாட்டை வகுத்தனர். இதில் சிவனடியார்களை சிவமாக எண்ணி வழிபடும் நெறியில் நின்றவர் குலச்சிறையார்.

பாண்டியநாட்டில் மங்கையர்கரசியார் சைவம் வளர்க்க துணை நின்றார். சம்பந்தர் பெருமானோடு சொந்த ஊரில் சிவ வழிபாடு செய்தார், சொக்கலிங்கப் பெருமானை நாளும் வழிபட்டார்.மதுரை நின்ற சீர் நெடுமாறன் மன்னரிடம் அமைச்சராக இருந்தார். அப்போது மன்னனுக்கு வெப்ப நோய் கண்டு வருந்த குலச்சிறையார் ஞான சம்பந்தரை வரவழைத்து மன்னரை வெப்ப நோயிலிருந்து காப்பாற்றினார்.

அடியார்கள் ஒவ்வொருவராய் வந்தாலும் கூட்டமாக வந்தாலும் அவர்களை வணங்கி அன்பு குறையாமல் வேண்டியன வழங்கி தொண்டாற்றினார். அமைச்சராக பல்லாண்டு இருந்து அடியவர்களுக்குத் தொண்டு செய்து இறைவன் அடி சேர்ந்தார்.

26. கூற்றுவ நாயனார்
களந்தை என்ற ஊரில் கூற்றுவனார் என்ற அடியவர் வாழ்ந்திருந்தார். பகைவர்களுக்கு எமன் போன்று இருப்பதால் கூற்றுவர் எனப் பெயர் பெற்றார். சிறந்த வாள் வலியும் தோள் வலியும் பெற்று மாவீரராக விளங்கியவர். சிற்றரசராக இருந்து பல மன்னர்களை வென்று தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். சோழர்களின் மணிமுடி தில்லை கருவூலத்தில் இருந்தது. சோழமன்னர்களுக்கு தில்லைவாழ் அந்தணர்கள் முடிசூட்டுவார்கள். சோழநாடு தன் ஆளுகைக்கு கீழ் வந்தபடியால் கூற்றுவனார் தனக்கு முடி சூட்டும்படி தில்லைவாழ் அந்தணர்களைக் கேட்டார். அவர்கள் சோழ மன்னரன்றி வேறு யாருக்கும் முடி சூட்டமாட்டோம் என்றனர். தீட்சதர்கள் தங்கள் மரபில் வந்த ஒருவரிடம் மகுடத்தைக் கொடுத்து சேரநாடு சென்றனர். கூற்றுவனார் அதிகாரத்தைப் பயன் படுத்தி மகுடம் சூட்ட விரும்பவில்லை.

கூத்தபிரானிடத்தில் உன்னுடைய திருமுடியையே மணிமுடியாக சூட்டி அருள் புரிய வேண்டினார். இறைவன் அவரது கனவில் தோன்றி தலைமீது திருவடியைச் சூட்டி அருள் புரிந்தார். கூற்றுவனாரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அரசு செல்வத்தை பெருமான் கருணையினால் கிடைத்தது என்று எண்ணி மகிழ்ந்து இறைப்பணிக்கும் அடியவர் பணிக்கும் பயன்படுத்தி தொண்டு செய்து இறையடி எய்தினார்.

Write Your Comment