63 நாயன்மார்கள்

24. குங்குலிக்கலய நாயனார்
திருக்கடவூரில் கலயர் பிறந்தார். கடவூர் திருக்கோவிலில் குடியிருக்கும் பெருமான் மீது அளவுகடந்த அன்பைக் கொண்டார் கலயர். காலையும் மாலையும் பெருமானுக்கு குங்குலியம் என்ற மணப்பொருளை நெருப்பில் இட்டு தூப பணியாற்றினார். கோவில் முழுக்க சிவமணமும் குங்குலிய மணமும் நிறைந்திருந்தது.

செல்வமிக்க அந்தணர் குடியில் பிறந்தவர். சிவபெருமான் இவ்வடியவரின் திருத்தொண்டினை உலகறியச் செய்ய நினைத்தார், அதன் விளவாக கலயர் நிலங்களை விற்பனை செய்தார். வீடு மனை இவற்றின்மீது கடன் பெற்று தன் குங்குலியப் பணியை தவறாமல் செய்து வந்தார். வறுமை வாட்டியது. சுற்றமும் மனைவியும் செய்வது அறியாது திகைத்தனர். அனைவரும் பட்டினியாய் கிடந்து துன்பமுற்றனர். அதைக் காணச் சகியாத அவர் மனைவி தன் கழுத்தில் மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டு தாலியைக் கழற்றி கொடுத்து அதில் நெல் வாங்கிவரச் சொன்னாள்.

கலயரும் நெல் வாங்கி வரப் புறப்பட்டார். நெல் வாங்கச் செல்லும்பொது வழியில் குங்குலிய மூட்டையுடன் வணிகன் ஒருவனைப் பார்த்தார். குங்குலியத்தைப் பார்த்தவுடன் குழைந்தைகள் மனைவி நெல் எல்லாம் மறந்தார். அருமையான குங்குலியம் இதனைப் புகைத்தால் கோவில் எப்படியிருக்கும் என எண்ணினார். வணிகரே என்னிடம் பணமில்லை அதற்குப் பதில் தங்கம் தருகிறேன் எனக்கூறியதற்கு அவ்வணிகன் சம்மதித்தான். அவ்வளவுதான் குங்குலியம் கலயரின் கைக்கு வந்தது. அப்படியே வேகமாக எடுத்துச் சென்று கோவில் பண்டாரத்தில் வைத்தார். கொஞ்சம் எடுத்து தூபம் போட்டார். பின் பசி மயக்கத்தில் மயங்கினார்.

அவ்வேளை எம்பெருமான் ஆணையினால் குபேரன் கலயர் வீட்டில் செல்வச் செழிப்பினை உருவாக்கினார். அனைவரும் பசியாறி கலயர் வருகைக்கு காத்திருந்தனர். மயங்கிய கலயர் செவியில், ‘கலயரே நீர் பசியில் இருக்கின்றீர் உம் வீடு சென்று அன்னம் உண்டு மகிழ்ந்து பின் வருக’ என்ற குரல் கேட்டு நனவிற்கு வந்தபிந்தான் தான் செய்தது நினைவிற்கு வந்தது. குழைந்தைகளின் பட்டினி நினைவுக்கு வந்தது. இருப்பினும் பெருமானின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தளர் நடையுடன் வீடு வந்து சேர்ந்தார்.

வீடு தான் விட்டு வந்த நிலையிலிருந்து மாறி செல்வ செழிப்புடன் இருப்பதக் கண்ட கலயர் வியப்புடன் மனைவியைக் கேட்க அவர் எல்லாம் இறைவன் செயல் என்றார். மேலும் அளவுகடந்த பக்தியுடன் தன் தொண்டினை செய்து வந்தார்.

அப்போது அருகில் உள்ள திருப்பனந்தாள் என்ற ஊரில் தடாகை என்ற சிவபக்தை இருந்தார். அவர் தினமும் பெருமானுக்கு குடநீர் கொண்டுவந்து உற்றி மலர்மாலை அணிவித்து வழிபட்டு வந்தார். ஒருநாள் தாடகை மலர்சூட்ட முனையும்பொழுது அவருடைய சேலை நெகிழ்ந்தது. மாலையை கீழேவைக்கவும் முடியாமல், சேலையையும் விடவும் முடியாமல் சேலையை தன் இரு முழங்கையினாலும் பிடித்துக் கொண்டு மாலை சூட்ட அம்மையார் அவஸ்திபடுவதைக் கண்ட பெருமான் அம்மையின் அன்பிற்கு இரங்கி குனிந்து மலர் மாலையை ஏற்றுக் கொண்டார். அதைக் கவனியாமல் தடாகை அம்மையார் வழிபாடு முடித்துச் சென்றுவிட்டார்.

பின்னர் வழிபாடு செய்ய வந்த அந்தணர்களும் மற்றவரும் பெருமான் சாய்ந்திருப்பதக் கண்டு பதைத்தனர். என்ன கேடு நிகழுமோ என வருத்தமுற்று மக்கள் கூடி பெருமானை நிமிர்த்த முடிவு செய்தனர். மன்னரிடம் சொன்னார்கள். அனைவரும் சேர்ந்து இரும்பு சங்கிலி, குதிரை, யானை என்று இழுத்தும் ஒன்றும் நடக்கவில்லை. எல்லோரும் அயர்ச்சியடைந்தனர். இதனைக் கேள்விப்பட்ட கலயரும் திருப்பனந்தாள் சென்றார்,

இறைவனை நிமிர்த்தும் பணியில் மன்னனும் மக்களும் ஈடுபட்டு துன்புறுவதால் அப்பணியில் தானும் ஈடுபட்டு அத்துன்பத்தை அடைய நினைத்தார். பெருமான் மீது இருந்த இரும்பு சங்கிலிகளை அகற்றச் சொன்னார். ஒரு வாழை நாறினை எடுத்தார். பெருமான் மீதும் தன் கழுத்தின் மூதும் இனைத்து பூட்டி இழுத்தார். கலயரின் கழுத்து அறுபடும் என்று பெருமான் நேரே நின்றார். பெருமான் பலத்திற்கு மசியவில்லை, அன்பிற்கு கட்டுப்பட்டார்.

கலயர் மீண்டும் கடவூர் வந்து பெருமானுக்குத் தூபத்தொண்டு பல காலம் செய்து சிவபதம் அடைந்தார்.

Write Your Comment