பதினெண் புராணங்கள் (The Eighteen Puranas)

பதினெண் புராணங்கள்(The Eighteen Puranas)

பதினெண் புராணங்கள் வியாசரால் தொகுக்கப் பெற்ற புராணங்களாகும். இவை படைப்பு, பிரளயம் மூலம் உலக அழிவும், தோற்றமும், வெவ்வேறு மன்வந்தரங்கள், சூரிய வம்ச, சந்திர வம்ச வரலாறு, அரச பரம்பரைகள் சரிதம் ஆகிய ஐந்தினையும் கொண்டதாக உள்ளது. இவைகளில் ஒன்றோ, இரண்டோ தகுதி குறைவாக இருப்பவை உப புராணங்கள் என்று அழைக்கப் பெறுகின்றன. இப்புராணங்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பெற்றவை. எனினும் இந்திய மொழிகள் பலவற்றில் இவை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. கந்த புராணம், சிவமகா புராணம் போன்றவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மகா புராணங்களில் பிரம்மனின் பெருமைகளை கூறுபவை ராஜசிக புராணம் என்றும், திருமாலின் பெருமையைக் கூறுபவை சத்துவ புராணம் என்றும், சிவபெருமானது பெருமைகளை கூறுபவை தாமச புராணம் என்றும் அழைக்கப்பெறுகின்றன.

18 மகா புராணங்கள்

பிரம்ம புராணம்

பிரம்ம புராணம் என்பது மகா புராணங்களில் முதலில் தோன்றியதாகும். எனவே இதனை ஆதிபுராணம் என்றும் கூறுகின்றனர். இது பத்தாயிரம் (10,000) சுலோகங்களை உள்ளடக்கிய ராஜசிக புராண வகையைச் சார்ந்ததாகும்.

பத்ம புராணம்
பத்ம புராணம் என்பது வியாசர் எழுதிய பதினெண் புராணங்களில் இரண்டாவது புராணமாகும். இது 55,000 ஸ்லோகங்களை உள்ளடக்கியது. இந்த புராணம் சாத்துவிக புராண வகையை சார்ந்ததாகும். பிரம்ம தேவனின் பத்ம கல்பத்தில் எழுதப்பட்டதால் இது பத்ம புராணம் என்று அழைக்கப்படுகிறது.

விஷ்ணு புராணம்
விஷ்ணு புராணம் (என்பது பதினெண் புராணங்களில் மூன்றாவது புராணமாகும். இது இருபத்து மூன்றாயிரம் (23,000) ஸ்லோகங்களை உள்ளடக்கியது. மைத்ரேய முனிவரின் கேள்விகளுக்கு பராசர மகரிஷி கூறியவை விஷ்ணு புராணமாக தொகுக்கப்பட்டுள்ளது. இப்புராணத்தில், விஷ்ணு புராண வரலாறு, படைப்பு, காலப் பிரமாணம், வர்ணாசிரமங்கள், படைப்புகள் போன்றவற்றை பற்றி கூறுகிறது. உலகம் விஷ்ணுவினால் உருவாக்கப்பட்டது, அவரின் சொரூபமாகவே காட்சியளிக்கிறது, அவரின் எண்ணப்படியே இயங்குகிறது என்பதை விஷ்ணு புராணம் விளக்குகிறது.
பிரபஞ்சத்தின் தோற்றம், வராக அவதாரம், தேவ மனித படைப்புகள், வருணாசிரமம் போன்ற பலவற்றை விஷ்ணு புராணம் விளக்குகிறது.

சிவ புராணம்
சிவ புராணம் என்பது பதினெண் புராணங்களில் நான்காவது புராணமாகும். வியாச முனிவரால் இயற்றப்பட்ட பதினெட்டு மகா புராணங்களுள் சைவ கடவுளான சிவபெருமானின் பெருமையை உரைக்கும் புராணங்கள் சிவபுராணங்களாகும். இவை தாமச புராணம் என்றும் அறியப்படுகின்றன.

இப்புராணங்களை படிக்கத் தொடங்கிய பொழுதும், படித்து முடித்த பொழுதும் மகேசுர பூசையை அவசியம் செய்ய வேண்டுமென ஆறுமுக நாவலர் தனது சைவ வினா விடை இரண்டாம் புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். ஆசாரியராவதற்கு சிவபுராணங்களை அறிந்திருக்க வேண்டுமெனவும், சிவபுராணங்களை படிக்கும் பொழுதும், கேட்கும் பொழுதும் உத்திராட்சத்தினை தரிக்க வேண்டுமெனவும், சிவராத்தியன்று சிவபுராணங்களை படிக்க வேண்டுமெனவும் ஆறுமுக நாவலர் கூறுகி்றார்.

பாகவத புராணம்
பாகவத புராணம் என்பது பதினெண் புராணங்களில் ஐந்தாவது புராணமாகும். இது பகவான் என வைணவர் போற்றும் திருமாலின் அவதாரம் பற்றிக் கூறுவது. இதனை வடமொழி நூல்கள் ஏழு வகையான கோணத்தில் செய்துள்ளன. அவற்றுள் இரண்டு வகையான நூல்-பாங்கினை மட்டுமே தமிழ் பின்பற்றியுள்ளது.

நாரத புராணம்
நாரத புராணம் என்பது பதினெண் புராணங்களில் ஆறாவது புராணமாகும். நாரதரைப் பற்றி கூறும் இப்புராணம் இருபத்தி ஐந்தாயிரம் (25,000) சுலோகங்களைக் கொண்டது.
நாரத முனிவர் சனத்குமாரர்களுக்கு கூறிய நாரத புராணத்தினை மீண்டும் சூதர் என்பவருக்கும், முனிவர்களுக்கும் கூறினார். இதில் நாரத முனிவரின் பிறப்பு, அவருக்கு கிடைத்த தட்சனின் சாபம், பிரம்மனின் சாபம், மனிதனாக நாதரர் பிறந்தமை, சனிபகவான் பார்வை நாரதர் மேல் பட்டது போன்றவைகள் அடங்கியுள்ளன.
நாரத புராணத்தின் குருபாவனபுர மகாத்மியத்தில் குருவாயூர் குருவாயூரப்பன் திருத்தல வரலாறு கூறப்பட்டுள்ளது.

மார்க்கண்டேய புராணம்
மார்க்கண்டேய புராணம் என்பது பதினெண் மகாபுராணங்களில் ஏழாவது புராணமாகும். இப்புராணம் 90,000 ஸ்லோகங்களை கொண்டதாகும். மேலும் இந்த புராணம் வியாசரின் சீடர்களில் ஒருவர் ஜைமினி துரோணரின் புதல்வர்களான நான்கு பறவைகளிடம் மகாபாரதத்தில் ஏற்பட்ட ஐயங்களை வெளியிட்டு விடைப்பெற்றுக் கொண்டமையாகும்.

அக்னி புராணம்
அக்னி புராணம்  என்பது பதினெண் புராணங்களில் எட்டாவது புராணமாகும். இப்புராணம் பதினைந்தாயிரம் (15,000) புராணங்களை உள்ளடக்கியது. அக்னி தேவனால் சொல்லப்பட்ட புராணம் என்பதால் அக்னி புராணம் என்று அழைக்கப்படுகிறது.

இப்புராணம் வியாசரால் தொகுக்கப்பட்டது. இதில் 8000 கிரந்தங்கள் உள்ளன. இப் புராணத்தில் சிவ தீட்சை, விஷ்ணு தீட்சை, பிரபஞ்ச விளக்கம், மருந்தியல், சோதிடம் போன்றவை சொல்லப்பட்டு உள்ளன.
திருமாலின் தசாவதாரங்கள், புத்தர், பிரத்யும்னன் அநிருத்தன், பிரம்மன், பரந்தாமன், ஹயக்ரீவர், தத்தாத்ரேயர், விஷ்வக்சேனர், சண்டிகை, துர்க்கை, சரசுவதி, கங்கை, யமுனை, பிராம்மி, சங்கரி, கவுமாரி, வராகி, இந்திராணி, விநாயகர், முருகன் என பல தெய்வங்களின் திருமேனிகளை அமைக்கும் விதம் பற்றி இந்நூலில் குறிப்புள்ளது. தீர்த்த குளங்களில் நீராடுதல், தெய்வ ஆராதனை வழிமுறைகள் பற்றி குறிப்படப்பட்டுள்ளது.
பவிஷ்ய புராணம்
பவிஷ்ய புராணம், என்பது மகாபுராணங்களில் ஒன்பதாவது புராணமாகும். பவிஷ்யம் என்றால் வருங்காலம் என்று பொருளாகும். சூரிய பகவான் மனுவிற்கு முன்கூட்டியே நடக்கவிருக்கும் நிகழ்வுகளை எடுத்துரைப்பதாக இப்புராணம் உள்ளது. மேலும் இப்புராணம் 15,500 சுலோகங்களை உள்ளடக்கியது.
திருமால் வருங்காலத்தில் எடுக்கும் கல்கி அவதாரம் குறித்து பவிசிய புராணத்தில் குறிப்புகள் உள்ளது.

வாயு புராணம்
வாயு புராணம் என்பது சிவபெருமான் பெருமைகளை வாயு பகவான் கூறியதாகும்.
வாயு புராணம் பூர்வ பாகம், உத்தர பாகம் என்று இரண்டு பெரும் பிரிவுகளை கொண்டது. மேலும் 112 அத்தியாயங்களையும், இருபத்து நான்காயிரம்(24,000) ஸ்லோகங்களையும் உள்ளடக்கியது. இது வாயுபகவானால் கூறப்பட்டதால் வாயு புராணம் என அழைக்கப்படுகிறது.
இப்புராணத்தில் சிவனின் எட்டு பெயர்கள் குறிப்பிட்டுள்ளது. அவ்வெட்டு பெயர்கள் முறைய 1 உருத்திரன், 2 பவன், 3 சிவன், 4 பசுபதி, 5 ஈஸ்வரன் , 6 பீமன், 7 உக்கிரன், 8 மகாதேவன் ஆகும்.

லிங்க புராணம்
லிங்க புராணம் என்பது வியாசர் எழுதிய பதினெண் புராணங்களில் பதினொன்றாவது புராணமாகும். இப்புராணம் லிங்க வழிபாட்டின் மேன்மையை எடுத்துரைக்கிறது. இது பத்தாயிரம் (10,000) ஸ்லோகங்களை உள்ளடக்கியதாகும். பஞ்ச பூதங்களின் தோற்றம், இந்து காலக் கணக்கீடு, பிரபஞ்சத்தின் தோற்றம் என பலவற்றை இந்நூல் எடுத்துச்சொல்கிறது.

வராக புராணம்
வராக புராணம் என்பது மகாபுராணங்களில் பன்னிரண்டாவது புராணமாகும். இது திருமாலின் அவதாரத்தினை விளக்கும் புராணம். இப்புராணம் 24,000 ஸ்லோகங்களை கொண்டதும், திருமாலின் பெருமைகளை எடுத்துரைக்கும் புராண வகையைச் சார்ந்ததும் ஆகும்.

பாதாளத்திற்கு சென்ற பூமாதேவியை மீட்க திருமால் வராக அவதாரம் எடுத்தார். அவ்வாறு மீட்கபட்ட பின்பு பூமாதேவியின் கேள்விகளுக்கு வராக அவதாரக் கோலத்திலேயே திருமால் அளித்த பதில்களின் தொகுப்பே இந்நூலாகும். வராக அவதாரத்தில் காசியப முனிவருக்கும், அவருடைய மனைவியான திதி்க்கும் பிறந்த இரணியாகசனை திருமால் அழித்தார்.
இப்புராணத்தில் திதிகள், விரதங்கள், தீர்த்தங்கள், பாவங்கள், பாவங்களுக்கான பரிகாரங்கள் ஆகியவையும் கூறப்பெற்றுள்ளன.
கந்த புராணம்
கந்த புராணம், என்பது மகாபுராணங்களில் பதின்மூன்றாவது புராணமாகும். தமிழில் கந்த புராணம் என்பது  பன்னிரண்டாம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாசாரியார் என்பவரால் எழுதப்பட்டது.

கந்த புராணம் சிவபுராணங்கள் பத்தில் ஒன்றாகும். இது நூறாயிரம் சுலோகங்களால் ஆனது. உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்று ஆறு காண்டங்களை உடையது. இது முருகப்பெருமானின் வரலாற்றை முழுமையாக கூறுகிறது.

வாமன புராணம்
வாமன புராணம் என்பது மகாபுராணங்களில் பதினான்காவது புராணமாகும். திருமாலின் வாமன அவதாரத்தினை விளக்கும் புராணமான இது, ராஜசிக புராண வகையினைச் சார்ந்தது. இதில் பத்தாயிரம் ஸ்லோகங்களும், தொண்ணூற்றைந்து அத்தியாயங்களும் உள்ளன. அரக்கர் குல அரசன் மகாபலி சக்கரவர்த்தியை அழிக்கவும், துந்து என்ற அரக்கனை அழிக்கவும் திருமால் இருமுறை வாமன அவதாரம் எடுத்தாக இப்புராணம் கூறுகிறது.

கூர்ம புராணம்
கூர்ம என்பது பதினெண் புராணங்களில் பதினைந்தாவது புராணமாகும். கூர்ம புராணம் தமிழில் அதிவீர ராம பாண்டியன் என்னும் மன்னனால் 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.

திருமால் கூர்மாவதாரம் எடுத்து சிவனுடைய பெருமையை மக்களுக்கு உரைத்த செய்தியை இது கூறுகிறது. இது பூர்வ காண்டம், உத்தர காண்டம் என்று இரு பகுதிகளாக உள்ளது. வடமொழியிலுள்ள கூர்ம புராணத்தை இவர் தமிழில் செய்தார்.

மச்ச புராணம்
மச்ச புராணம், என்பது பதினெண் புராணங்களில் பதினாறாவது புராணமாகும். இது 14,000 சுலோகம் கொண்டது. இதில், மச்சாவதாரத் தோற்றம், திருமால் நீர்ப்பிரளயத்திலிருந்து வைவஸ்தமனு மற்றும் சப்தரிஷிகளையும் காத்து உலகில் மீண்டும் சீவராசிகளை வளர்ச்சியடையச் செய்ததையும், பிரம சிருட்டி, திரிபுர வதம், தாரகாசுரனுடன் போர், பார்வதி சிவபெருமானை மணத்தல், கந்தனாகிய முருகனின் தோற்றம் ஆகியவற்றை விளக்குகிறது.

கருட புராணம்
கருட புராணம் என்பது இந்து சமய பதினெண் புராணங்களில் பதினேழாவது புராணமாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது. மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி விளக்குகிறது. இப்புராணத்தில் வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவாதிக்கிறது. பிரம்மாண்ட புராணம்
பிரம்மாண்ட புராணம் என்பது மகாபுராணங்களில் இறுதியானதாகும். இப்புராணம் பூர்வபாகம், மத்யம பாகம், உத்தர பாகம் என்ற மூன்று பிரிவுகளையும், 12,000 ஸ்லோகங்களை கொண்டுள்ளது. மேலும் இப்புராணம் பிரம்மாவை புகழும் ராஜசிக புராண வகையினைச் சார்ந்தது.

ஓம் நம சிவாய!!!
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்

Write Your Comment