ஸ்ரீ பக்த பிரஹலாத , துருவ மற்றும் மார்கண்டேயர் மகிமைகள்

நான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பக்தன். சிறு வயதிலிருந்தே அயனவரத்திலுள்ள அவரின் மடத்திற்கு சென்று வந்துள்ளேன். அவரின் முக்கிய அவதாரமாகிய ஸ்ரீ ப்ரஹலாத அவதாரத்தை பற்றி பலருக்கும் தெரிய வேண்டும் என்பதால் , இச் சிறு நூலினை தொகுத்து வழங்கியுள்ளேன்.

பக்த ப்ரஹலாதரை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் சில விஷயங்களை பற்றி தான். பல விஷயங்கள் பலருக்கும் தெரியாது. அது பற்றி தெரிய வேண்டுமென்றால் பல் வேறு நூல்களை ஆராய வேண்டும். நாம் பக்தியுடன் இறைவனை துதித்தால் நமக்கு அதை செய்வதற்குரிய சக்தியும், பலமும் கிடைக்கும். இந்த சிறிய நூலினை நான் எழுதுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால்,பக்த ப்ரஹலாதரை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் அவரின் நாராயண பக்தியும், இரண்யகசிபுவை அழித்து ப்ரஹலாதரை நரசிம்மர் ஆட்கொண்டது மட்டும் தான். ஆனால் அதற்கும் மேல் அவரின் வாழ்க்கை வரலாறு மிக முக்கியமானது. அதனால் சிலவற்றை நான் இங்கு தொகுத்து வழங்கிறேன். அதற்கு முன்பு அவரின் வாழ்வின் முதல் கட்ட சுருக்கமான தொகுப்பு.

சங்கு கர்ண தேவர் என்பவர் ஸ்ரீ சத்ய லோகத்தில் ஒரு தேவராய் அவதரித்தார். அவரின் அன்றாட பணி தினந்தோறும் பூவுலகில் இருந்து வாசமுள்ள நறுமலர்களை பறித்து அதனை நாராயண பூஜைக்காக ஸ்ரீ ப்ரம்ம தேவரிடம் சமர்ப்பித்து வந்துள்ளார். ஒரு நாள் பூஜைக்கான பூவை பூவுலகில் இருந்து கொண்டு வருவதற்கு தாமதமாகியது. அதனால் அவரை பிரம்ம தேவர் அசுரர் குலத்தில் பிறக்க வேண்டும் என்று சபித்து விட்டார். அதன் பிறகு அவர் ஸ்ரீ ப்ரஹலாதராய் இப் பூவுலகில் கிருத யுகத்தில் பிறந்தார்.

ப்ரஹலாதர் ஸ்ரீ ஹரியின் மீது மிகுந்த பக்தி கொண்டு மற்ற அசுர சிறுவர் துணையுடன் ஸ்ரீ ஹரி பூஜை மற்றும் பஜனை செய்து வந்துள்ளார். இதனை கண்டு அவரின் தந்தையான இரண்யகசிபு கோபமுற்று அவரை அழிக்க பல்வேறு முயற்சி செய்ததும், அதன் பின்பு ஸ்ரீ ஹரி, ஸ்ரீ நரசிம்மராய் வந்து இரண்ய கசிபுவை அழித்து, ப்ரஹலாதரை காத்து அவரை அரசனாக்கினார்.

நீண்ட காலத்திற்கு முன்பு அதாவது முதலாம் யுகமான க்ருத யுகத்தில், நர நாராயணர் என்ற இரு தபஸ்விகள் கையில் ஆயுதத்துடன் தவம் இயற்றி கொண்டிருந்தனர். அப்போது அவ்விடம் வந்த ப்ரஹலாதர் அவர்கள் யாரென்று வினவினார். அதற்கு அவர்கள் பதில் ஏதும் கூறாமல் தவம் இயற்றி கொண்டிருந்தனர். அதனால் ப்ரஹலாதர் கோபம் கொண்டு அவர்களுடன் இடைவிடாது பல நாட்கள் போர் புரிந்தவாறு இருந்துள்ளார். அவர்களும் தங்கள் கைகளில் தர்ப்பையை ஏந்தி போர் புரிந்தனர். பல நாட்கள் ஆகியும் அவர்களை வெல்ல முடியாதலால் ப்ரஹலாதர் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை த்யானம் செய்தார். உடனே நரசிம்ம மூர்த்தியும் ப்ரத்யக்ஷம் ஆகி நான் வேறு நர நாராயணர் வேறு இல்லை. இருவரும் ஒன்று தான் என்றார். ப்ரஹலாதரும் தனது தவறினை புரிந்து கொண்டு அவர்களை வணங்கி அவ்விடம் விட்டு அகன்றார்.

மற்றுமொரு சமயத்தில் ப்ரஹலாதர் ஆண்டு வந்த பிரதேசத்திற்கு சில வழிப்போக்கர்கள் வழி தவறி வந்தனர். அவர்கள் அங்கிருந்த அசுரர்களை பார்த்து மிகவும் பயந்தனர். ஆனால் அவ்வசுரர்கள் அவர்களின் பயத்தை தெளிவித்து அவர்களை தங்கள் ராஜாவான ப்ரஹலாத மஹாராஜாவிடம் கூட்டிச் சென்றனர். ப்ரஹலாதர் அவர்களை பார்த்து மகிழ்வுற்று அவர்களின் நலம் விசாரித்து அவர்களை நன்கு உபசரித்தார். அவரின் அழகையும் தேஜஸையும் பார்த்து வியந்த அவ்வழிப்போக்கர்கள் அவரை பாராட்டி விட்டு சென்றனர்.

ப்ரஹலாதரின் நல்லாட்சியில் அனைத்து மக்களும் துன்பம், துயரற்று இருந்தனர். அவரின் ஆட்சி ராம ராஜ்யம் போன்று மிகவும் நன்றாக இருந்தது. யாவரும் உடல் ஆரோக்கியத்துடன், செல்வ செழிப்புடன் இருந்தனர். ஒரு தருணத்தில், ப்ரஹலாதரின் பெரியப்பா மகனான ஒரு அசுரன் அவரை ஜெயித்து கொடுங்கோலாட்சி நடத்தி வந்தான். ப்ரஹலாதரும் காட்டிற்கு சென்று ஸ்ரீ நரசிம்மரை குறித்து தவமியற்றி வந்துள்ளார். நரசிம்ம மூர்த்தியும் தக்க சமயத்தில் உன் கவலை அகலும் என்று தெரிவித்தார். சில காலம் கழித்து ப்ரஹலாதரும் அவ்வசுரனை வென்று மீண்டும் நல்லாட்சியை தொடர ஆரம்பித்தார்.

ஹோலியின் வரலாறு ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சூரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, திரினிதாத், இங்கிலாந்து, மொரீசியசுமற்றும் ஃபிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது. இட்ந்தத்யு வின் மேற்கு வங்காளம்,வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் (“வசந்தகாலத் திருவிழா”) என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, விருந்தாவன், நந்தகோன், பர்சனா ஆகிய நகரங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகை காலத்தில் அவை நடைபெறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத்தளங்களாக இருக்கும்.

துல்ஹேதி, துலாந்தி அல்லது துலேந்தி எனவும் அழைக்கப்படும் ஹோலியின் முக்கிய நாளில் மக்கள், ஒருவர் மீதொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர். அந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை மூட்டுவார்கள். இது ஹோலிகா தகனம் (ஹோலிகாவை எரித்தல்) அல்லது சோட்டி ஹோலி (சிறிய ஹோலி) எனவும் அழைக்கப்படும். இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரகல்லாதனை நெருப்பில் போட முயன்ற போது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்ததன் நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன. ஹோலிகா எரிந்தாள், ஆனால் கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகல்லாதன், தனது அசைக்க முடியாத தெய்வபக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான். ஹோலிகா தகனம், ஆந்திர பிரதேசத்தில் காம தகனம் அல்லது காமன் எரிப்பு எனக் குறிப்பிடப்படுகின்றது.

பஞ்சமிக்கு (முழு நிலவிற்கு பிறகு ஐந்தாவது நாள்) சில நாட்கள் கழித்து வருகின்ற அரங்கபஞ்சமியுடன் இவ் வண்ணப் பண்டிகை முடிவடையும்.
ப்ரஹலாதர் ஆட்சியில் எல்லா இடத்திலும் நாராயண மந்திரம் ஒலித்தன. ஹரி நாம சங்கீர்த்தனம் எல்லா இடத்திலும் பரவின. யாவரும் இன்பமுடன் நாராயண பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், ப்ரஹலாதர் இப்போதைய பாகிஸ்தானில், முல்தான் என்னுமிடத்தில், ஒரு நரசிம்மர் கோவிலை உருவாக்கினார். பல்வேறு மக்களும் அதனை வணங்கி பயன் பெற்றனர். அத்தகைய கோவில் சில ஆண்டுகளுக்கு முன்னால், சில பாகிஸ்தானியர்களால் சேதப்படுத்தப்பட்டது.

ப்ரஹலாதர் தினமும் ஆயிரக்கணக்கான ப்ராஹ்மணர்களுக்கு உணவளித்துவந்துள்ளார். அமிர்தம் வேண்டி பாற்கடல் கடைந்தபோது அவ்விடம் ப்ரஹலாதரும் இருந்துள்ளார். ப்ரஹலாதர் நாராயணரின் இரு அவதாரமாகிய வாமன மற்றும் நரசிம்ம அவதாரங்களை பார்த்துள்ளார்.

ப்ரஹலாதர் தன பேரனான மஹாபலியுடன் சுதல லோகத்தில் நீண்ட நெடுங்காலம் இருந்துள்ளார். ஆகமத்தில் கூறியுள்ளபடி நரசிம்மரை வணங்குவதற்கு முன்பு ப்ரஹலாதரை வணங்கினால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். பல நரசிம்ம கோவில்களில் ஸ்ரீ ப்ரஹலாத விக்கிரகம் இருப்பதை இன்றும் நாம் பார்க்கலாம் . ப்ரஹலாதரின் நாமாவை சொல்ல சொல்ல சகல வினைகளும் நம்மை விட்டு விலகி விடும்.

நரசிம்மர் இரண்ய வதத்திற்கு பிறகு ஸ்ரீ ப்ரஹலாதருக்கு நீ நானாகவே விளங்கி வாழ்வாயாக என்று அருள் புரிந்தார் . அதன் பொருள் எனக்கு கட்டுப்படும் அனைத்தும் உனக்கும் கட்டுப்படும் என்பதாகும். அத்தகைய சிறப்பு அவருக்கு உண்டு. ஆழ்வார்களில் முதன்மையானவர் ஸ்ரீ ப்ரஹலாத ஆழ்வார் ஆவார்.

ப்ரஹலாதர் ஸ்ரீ பாஹ்லிகர், ஸ்ரீ வ்யாஸராஜர், ஸ்ரீ ராகவேந்திரர் என்ற அவதாரங்களை எடுத்துள்ளார்.

ஓம் ஸ்ரீ ப்ரஹலாத பாலகாய நம என்று கூற வேண்டும். ப்ரஹலாதரின் நாமாவை சொல்ல சொல்ல, ஸ்ரீ ஹரி பக்தியும் தானாகவே பிறக்கும். ஹரியும், ப்ரஹலாதரும் வெவ்வேறில்லை. இருவரும் ஒன்று தான். இவரின் இதயத்திலே அவரும், அவரின் இதயத்திலே இவரும் என்று அருள் பாலித்து வருகின்றனர்.

ப்ரஹலாத சாலிசா

பிரகலாதா நீ என்றென்றும் ஸ்ரீ மத் நரசிம்ம பெருமானின் இருதயத்தில் வீற்றிருக்கிறாய். உன்னுடைய பக்தியினால் தான் நரசிம்மரின் உக்ரம் தணிந்து சாந்த ஸ்வரூபி ஆனார். உன்னுடைய நாமத்தினால் அனைவரின் அனைத்து பாபங்களும் விலகுகின்றன. நீயே அனைவருக்கும் துணைவன். அனைத்து பக்தர்கள் சார்பிலும் நீயே ஸ்ரீ நரசிம்மரிடம் வேண்டி அனைத்து கஷ்டங்களையும் போக்குவாயாக. அனைவர்க்கும் வஜ்ர தேகத்தையும் ,மன அமைதியும், நீண்ட ஆயிளும் தருவாயாக. நரசிம்மர் வசிக்கும் வைகுண்டத்தை நீயே காவல் காக்கின்றாய். உன் அனுமதி இல்லாமல் யாரும் அங்கு செல்ல முடியாது. நரசிம்மரால் சூட்டப்பட்டுள்ள கிரீடத்துடன் காவலாளியாக விளங்குகிறாய். நீயே நரசிம்மரால் ஆசிர்வதிக்கப்பட்ட பாலகனாக அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகனாக விளங்குகிறாய். உன்னால் ஆசிர்வதிக்க பட்ட அனைவரும் நலமாக வாழ்வார்கள். இதில் எந்த வித சந்தேகமும் இல்லை. நீயே சிரஞ்சீவி. உனக்கு முடிவில்லை. உன்னுடைய புகழ் என்றென்றும் இவ்வுலகத்தில் பரவியிருக்கும். அனுமார் ராம ஜபம் சொல்வதை போல் நீ ஹரி நாம ஜெபத்தை சொல்கின்றாய்.

இந்த ப்ரஹலாத மஹாத்மியத்தை படிப்பவரும் கேட்பவரும் நீண்ட ஆயுளுடனும்,நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ்வார்கள்.

ப்ரஹலாதா போற்றி – 18

1 ஓம் ஸ்ரீ பக்த ப்ரஹல்ஹாதய நமஹ
2 ஓம் ஸ்ரீ நாராயண பக்தனே போற்றி
3ஓம் ஸ்ரீ ஹிரண்யகசிபுவின் மைந்தனே போற்றி
4 ஓம் ஸ்ரீ ப்ரஹலாதாய பாலகனே போற்றி
5 ஓம் ஸ்ரீ சங்குகர்ண தேவரே போற்றி
6 ஓம் ஸ்ரீ பாஹ்லிக ராஜரே போற்றி
7 ஓம் ஸ்ரீ வ்யாஸராஜரே போற்றி
8 ஓம் ஸ்ரீ ராகவேந்திரரே போற்றி
9 ஓம் ஸ்ரீ அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகரே போற்றி
10 ஓம் ஸ்ரீ நரசிம்ம பிரியரே போற்றி
11 ஓம் ஸ்ரீ சகல இன்பங்களையும் அளிப்பவரே போற்றி
12 ஓம் ஸ்ரீ துனபங்களை களைபவரே போற்றி
13 ஓம் ஸ்ரீ நவகிரஹ தோஷங்களை தீர்ப்பவரே போற்றி
14 ஓம் ஸ்ரீ மந்த்ராலய மஹானே போற்றி
15 ஓம் ஸ்ரீ மானம் காப்பவரே போற்றி
16 ஓம் ஸ்ரீ பிருந்தாவன வாஸரே போற்றி
17 ஓம் ஸ்ரீ ஆய கலைகளையும் அறிந்தவரே போற்றி
18 ஓம் ஸ்ரீ தியான ஸ்வரூபியே போற்றி போற்றி போற்றி.

துருவ நட்சத்திரம் Dhruva Natchathiram

துருவன் உத்தனபாதன் என்ற மன்னனுக்கு மகனாக பிறந்தான். தன்னுடைய சிற்றன்னையால் அவமதிக்கப்பட்டு காட்டிற்குச் சென்று கடுமையான தவம் செய்து ஸ்ரீ மன் நாராயணனின் மகிமையால் கடுமையான தவம் செய்து துருவ நட்சத்திரனாய் விண்ணில் இன்றும் ப்ரகாசிக்கின்றான் நட்சத்திரமாக .
வானில் ஜொலிக்கும் சகல நட்சத்திரத்திற்கும் மேலானவன் துருவன் நட்சத்திரம் . அத்தகைய துருவ நட்சத்திரத்தை வேண்டி கொண்டால் , நமக்காக சகல நன்மைகளையும் ஸ்ரீ ஹரியிடம் கேட்டு செய்வார் . இவரது பக்தி பக்த ப்ரஹலாதரின் பக்திக்கு நிகரானது . அவர் பிரளய காலத்திலும் அழிவில்லாமல் என்றும் நித்ய சூரியாய் வானில் ஜொலிக்கின்றார்.

அவர் ஸ்ரீமன் நாராயணரிடம் வரம் வேண்டும் போதும் தனக்கு என்று எந்த வரமும் கேட்கவில்லை. அவர் ஹரியிடம் நிறைந்த பக்தி ஒன்றே போதும் என்றே கேட்டார். ஆனால் ஸ்ரீஹரியானவர், அவருக்கு வானில் மின்னும் நட்சத்திரமாக ஜொலிக்க வரம் கொடுத்தார் . அது தான் உண்மையான பக்தி நிலை .

இதன் கருத்து என்னவென்றால் நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று இறைவனுக்கு தெரியும் . அதனால் நாம் இது வேண்டும் , அது வேண்டும் என்று கேட்பதற்கு பதிலாக எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று உனக்கு நன்றாக தெரியும் , அதனால் தக்க சமயத்தில் அதனை நிறைவேற்று என்று வேண்டினால் , கடவளும் தக்க சமயத்தில் நமக்கு கொடுக்க வேண்டியதை கொடுப்பார் . இதில் எந்தவிதமான சந்தேகமும் நமக்கு வரக்கூடாது.

ஓம் ஸ்ரீ துருவாய நமஹ என்று சொல்லி அவரை வேண்டிக் கொள்ள வேண்டும் .நமக்கு வேண்டியதை ஸ்ரீ ஹரியிடம் கேட்டு தக்க சமயத்தில் அதனை நிறைவேற்றுவார் . பக்திக்கு இலக்கணமாக விளங்குபவர் ஸ்ரீ துருவர் .

துருவ சாலிசா

ஓம் துருவ நட்சத்திர மண்டல தலைவனே, நீயே சகல நட்சத்திரத்திலும் மேலானவன். உன்னுடைய புகழ் சகல லோகங்களிலும் பரவியுள்ளது . விஷ்ணுவின் பரம பக்தனான நீயே எங்களுக்கு நல்ல குணத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருவாயாக .

அழிவில்லாத நட்சத்திர மண்டல தலைவனே, உன்னுடைய ஆற்றல் அளவிட முடியாதது. வானத்தில் உயர்ந்த இடத்தில் குடி கொண்டுள்ள நீயே எங்களுக்கு மோட்ச மார்க்கத்தை அடைய உதவி புரிய வேண்டும். எங்களை எப்போதும் நல் வழி படுத்துதல் வேண்டும். உன்னிடத்தில் எங்களுக்கு குறையாத பக்தி இருக்க அருள் புரிய வேண்டும். உந்தன் பாத கமலத்தில் நாங்கள் சரண் அடைந்தோம்.

துருவா போற்றி 18

1.ஓம் ஸ்ரீ துருவாய நமஹ போற்றி
2.ஓம் ஸ்ரீ ஹரி பக்தனே போற்றி
3.ஓம் துருவ நட்சத்திரமே போற்றி
4.ஓம் ஸ்ரீ பாதராஜரே போற்றி
5.ஓம் வானில் ஜொலிக்கும் நட்சத்திரமே போற்றி
6.ஓம் ஆபத் பாந்தனே போற்றி
7.ஓம் அனாதை ரட்சகனே போற்றி
8.ஓம் உத்தனபாதன் மைந்தா போற்றி
9.ஓம் நட்சத்திர மண்டல தலைவா போற்றி
10.ஓம் உத்தம குணம் கொண்டவனே போற்றி
11.ஓம் சகலரின் கவலைகளையும் தீர்ப்பவனே போற்றி
12.ஓம் தங்க நிறம் கொண்டவனே போற்றி
13.ஓம் பத்திக்கு இலக்கணமாக விளங்குபவனே போற்றி
14.ஓம் சகல நோய்களையும் தீர்ப்பவனே போற்றி
15.ஓம் ஈகை குணம் கொண்டவனே போற்றி
16.ஓம் அன்னதான பிரியனே போற்றி
17.ஓம் சகல வேதங்களையும் அறிந்தவனே போற்றி
18.ஓம் ஆய கலைகளையும் அறிந்தவனே போற்றி, போற்றி, போற்றி.

இப்படியாக ஸ்ரீ துருவர் தன்னிடத்திலே சகல நற் குணங்களை கொண்டு , சகலருக்கும் நன்மைகளை செய்து வருகிறார். அவர் நாம் எப்போது அவரை வேண்டுவோம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த துருவனின் மகிமைகளை படிப்போரும் , கேட்போரும் சகல நன்மைகளையும் அடைவார் என்பதில் எந்த ஒரு ஐயமும் வேண்டாம் .

மார்க்கண்டேய மஹரிஷி Markandeya Maharshi

மிருகண்டு முனிவர் மருத்துவவதியைத் திருமணம் செய்தார். நீண்டகாலமாக அவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. சிவபெருமானை மனமுருகித் தொழ அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மார்க்கண்டேயர் எனப் பெயர் சூட்டிமகிழ்ந்தனர் மிருகண்டு முனிவரும் மருத்துவவதியும் ஜோதிடம் பார்க்கப்பட்டபோது மார்க்கண்டேயன் நீண்டகாலம் உயிர்வாழமாட்டான் பதினாறு வயதில் அவன் இறந்துவிடுவான் என்று கூறப்பட்டது. மற்ற ஞானிகளும் அவ்வாறுதான் நடக்கும் என்றனர். பெற்றோர் அழுதனர், புலம்பினர், விதியை வெல்லமுடியாது என்று மனம் சாந்தியடைந்தாலும் பதினாறு வயதில் மார்க்கண்டேயர் இறந்துவிடுவார் என நினைத்து வேதனைப்பட்டனர். மார்க்கண்டேயர் வளந்தார். அவர் நாட்டமெல்லாம் சிவபூஜையில் தான் இருந்தது. சிவபெருமானிடம் மார்க்கண்டேயன் பூரணமாகச் சரணாகதி அடைந்தான்.

பதினாறு வயது வந்தடைந்து மார்க்கண்டேயர் சிவபூசையில் தன்னை மறந்து உட்கார்ந்து விடுகின்றார். அவரது உயிரை எடுக்க எமதூதர்கள் வருகின்றனர். ஆனால் மார்கண்டேயனிடம் நெருங்கமுடியவில்லை. இறுதியில் எமதர்மனே எருமைக்கடா மீது வருகின்றார். உயிர்வாங்க பாசக் கயிற்றினை வீசுகின்றான். என்ன ஆச்சரியம் உக்கிரமூர்தியாகச் சிவபெருமான் தோன்றி காலனை எட்டி உதைக்கின்றார். எமதர்மன் மூர்ச்சையாகி கீழே சாய்கின்றார். பூமாதேவியின் வேண்டுகோளுக்கிணங்க எமதர்மனை சிவபெருமான் மன்னித்து மூர்ச்சை தெளியவைக்கின்றார். என்றும் பதினாறு வயதுடன் சீரஞ்சீவியாக மார்க்கண்டேயன் வாழ அம்பலத்தரசர் அருள்பாலிக்கின்றார்.

மார்க்கண்டேயர் எமனை வென்று என்றும் பாலகனாய் வாழ்கின்றார் .
அவர் மிகுந்த சிவ பக்தியுடன் வாழ்ந்தவர். அவர் பல காலம் கடந்த பிறகும் இன்றும் நித்ய சிரஞ்சீவியாய் வாழ்ந்து வருகிறார்.

மார்க்கண்டேய சாலிசா

என்றும் இன்றும் நித்ய சிரஞ்சீவியாய் விளங்கும் மார்க்கண்டேய மகரிஷிக்கு எங்களுடைய நமஸ்காரங்கள். ஓ மகிமை பொருந்திய மகரிஷியே , நீயே யமனையே வென்ற மாபெரும் பக்தன். என்றும் பதினாறாய் நித்ய சிரஞ்சீவியாய் வாழ்கின்றாய். உன்னுடைய பக்தி அளவிட முடியாதது. ஜீவன் முக்தராய் விளங்கும் நீயே எங்கள் அனைவரையும் காப்பாயாக. ஐந்து துர் குணங்களான காம , குரோத , லோப , மோஹ , மதமாச்சரியங்களை வென்றவனே எங்களை நல் வழிபடுத்த வேண்டுகிறோம். உன்னிடத்தில் எங்களுக்கு ஒரு இடம் கொடுப்பாயாக.

மார்கண்டேயா போற்றி 18
1 ஓம் மிருகண்டு முனிவர் மைந்தா போற்றி

2 ஓம் எமனை வென்றவனே போற்றி

3 ஓம் சிவ பக்தனே போற்றி

4 ஓம் களங்கம் இல்லாதவனே போற்றி

5 ஓம் ஈகை குணம் கொண்டவனே போற்றி

6 ஓம் மார்கண்டேய மகரிஷியே போற்றி

7 ஓம் சகல ஸித்திகளும் அறிந்தவனே போற்றி

8 ஓம் அன்னதான பிரியனே போற்றி

9 ஓம் பக்தர்களுக்கு சிவனின் அருளாசியுடன்
அநுக்கிரகம் செய்பவனே போற்றி

10 ஓம் சகலரின் சகல பாபங்களையும் களைவனே போற்றி
11 ஓம் காம, குரோத , லோப , மோஹ , மதமாச்சரியங்களை வென்றவனே போற்றி.
12 ஓம் தவக்கோலம் பூண்டவனே போற்றி
13 ஓம் ஆய கலைகளையும் அறிந்தவனே போற்றி
14 ஓம் அன்புள்ளம் கொண்டவனே போற்றி
15 ஓம் அனைத்தையும் அறிந்தவனே போற்றி
16 ஓம் ஒப்பற்ற அழகுடையவனே போற்றி
17 ஓம் மனதிற்கு சாந்தி தருபவனே போற்றி
18 ஓம் மோட்சத்தை அருள்பவனே போற்றி, போற்றி, போற்றி.

இந்த மார்க்கண்டேயரின் திவ்ய சரிதத்தை கேட்பவரும், படிப்பவரும் சகல நன்மைகளையும் அடைவர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வர கூடாது.

எழுதியவர்
ரா. ஹரிசங்கர்

Write Your Comment