63 நாயன்மார்கள்

52. புகழ்த்துணை நாயனார்
அரிசில்பரைப்புத்தூர்- அழகாப்புத்தூரில் புகழ்துணையர் பிறந்தார். ஆகம விதிப்படி பெருமானைப் பூசித்துவந்தார். நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பசிநோயால் வருந்தினாலும் உள்ளம் தளராது இறைவனை நாளும் பூசித்து வந்தார்.

ஒருநாள் சிவலிங்கத் திருமேனிக்கு திருமஞ்சனம் செய்விக்கும்போது பசியின் மிகுதியால் உடலில் சோர்வு ஏற்பட்டு தண்ணீர் குடத்தை தாங்க முடியாமல் இறைவன் திருமுடி மேல் விழுந்தது. வேதனையடைந்து மயங்கி வீழ்ந்தார். அப்படியே மயக்கத்தில் அயர்ந்துவிட்டார். இறைவன் அவர் கனவில் தோன்றி பஞ்சம் நீங்கும் வரை உனக்கு ஓர் காசு நாள்தோறும் வைப்போம் என அருள் செய்தார்.

கண்விழித்தார். இறைவன் கருணையை எண்ணி உருகினார். பீடத்தின் கீழ் ஓர் காசு இருந்தது. அதைக் கொண்டு தினமும் தன்னால் முடிந்த அளவிற்கு தொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.

53. பூசலார் நாயனார்
திருநின்றவூர் என்ற ஊரில் மறையவர் குலத்தில் பூசல் பிறந்தார். அக வழிபாட்டிலே சிறந்து விளங்கிய சிவ பக்தர். சிவபெருமானுக்கு ஓர் கோவில் கட்ட நினைத்தார். பலரிடம் கேட்டும் நிதி கிடைக்கவில்லை. கோவில் கட்டுவது என்ற தன் முடிவு வீணாகாமல் புறத்தே கட்ட முடியவில்லை என்றாலும் அகத்தே கட்டத் தொடங்கினார்.

தன் மனத்திலே நிதி சேர்த்தார். செங்கல், சுண்ணாம்பு, மரங்கள் எல்லாவற்றையும் நினைத்து மனத்திலே தேடிக்கொண்டார். அடிக்கல் நாட்டுவது முதல் அடுத்தடுத்து கட்டடங்களை தன் மனத்திலே கட்டினார். பல நாட்கள் சிந்தித்து புறக்கோவிலை விட அகக்கோவிலை சிறப்பாக வடிவமைத்தார்.

இதே சமயத்தில் காஞ்சியில் காடவர்கோன் மன்னன் திருக்கோயில் கல்லிலே அமைத்தான். கயிலாயநாதர் கோவில் என்று அழைத்தான். அற்புதமான சிற்ப வேலையும் கலை நுணுக்கமும் கொண்டதாக அமைந்தது கோவில். கோவில் பணிகள் முடிந்ததும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுக்கு நாள் குறித்தான். அதே நாளில் பூசலார் தன் மனக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த எண்ணியிருந்தார்.

அன்று இரவு மன்னன் கனவில் பெருமான் தோன்றி, ’நீ கட்டிய கற்கோவிலுக்கு அன்று நான் வரமுடியாது, என் அன்பிற்கினிய திருநின்றவூர் பூசலார் திருக்கோவிலுக்கு அந்த வேளையில் செல்ல வேண்டி யிருப்பதால் நீ இன்னொரு நாளைக்கு வைத்துக் கொள்’ என்றார்.

கண் விழித்த மன்னவன் பெருமானே வலிந்துபோய் அருள் செய்கின்ற திருக்கோவிலைக் கட்டிய அடியாரை நான் வணங்க வேண்டும் என திருநின்றவூருக்குச் சென்றான். பூசலார் அமைத்த அருள் கோவில் எங்கே என மறையவர்களைக் கேட்டான். அப்படி ஒரு கோவிலும் இல்லை என்றனர். மன்னரே இருங்கள் பூசலாரை வரச்சொல்கிறோம் என்றனர். மன்னவன் பூசலார் இருக்குமிடம் சொல்லுங்கள். அவரை அழைக்ககூடாது. அவர் ஈசனின் அன்பர். அவரை நாம் வணங்க வேண்டும். நான் அங்கு செல்ல வேண்டும் எனக்கேட்டு அங்கு சென்றார்.

ஊர்மக்கள் பூசலாரைக் காட்ட மன்னர் நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். நீங்கள் பெருமான் எழுந்தருள கட்டிய கோவில் ஏது அக்கோவிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்யும் நாள் இந்த நாள் என்று இறைவர் தெரிவித்து அருள தெரிந்து உம்மைக் கண்டு பணிவதற்கு வந்தேன் என்றார். மன்னர் கூறியதைக்கேட்டு அச்சத்தினால் பூசலார், என்னையும் ஒரு பொருளாகக் கொண்டு எம்பெருமான் அருள் செய்தார் என்றால் என்னால் பொருள் சேர்க்க இயலாமையால் மனத்தினால் அமைத்த கோவில் அது என்று அந்த அமைப்பினை விரிவாக மன்னனுக்கு கூறினார். மன்னவன் அடியவரின் பக்தி என்னே என்று மீண்டும் தரையில் வீழ்ந்து வணங்கினான். காஞ்சி திரும்பினான். பூசலார் தன் மனக்கோவிலில் உள்ள இறைவனை வழிபட்டு அவனடி சேர்ந்தார்.

Write Your Comment

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading