தைப்பொங்கல்

தைப்பொங்கல்

பொங்கல் (தைப்பொங்கல்) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும்.  இந்த விழா தென்னிந்தியா மட்டுமல்லாது, வேறு சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தமிழ் கடவுளாகிய முருக பெருமானை மிக முக்கிய தெய்வமாக தமிழர்கள் கருதுவதால், முருகனையும் சூரியனோடு சேர்த்து அவர்கள் வழிபடுவது வழக்கம்.

பொதுவாக தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியிற்கேற்ப, பொங்கல் தினத்தன்று, புது தொழில் ஆரம்பித்தல், புது வீடு வாங்குதல் அல்லது கட்டுதல், திருமணம் புரிவது, போன்ற சில முக்கிய முடிவுகளை மக்கள் எடுப்பர். அந்நாளில் எல்லா கோவில்களிலும் கூட்டம் நிரம்பி வழியும்.
அறுவடை செய்து பயன் பெரும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் சர்க்கரை அல்லது வெல்லம் மற்றும் பால், நெய் சேர்த்துப் புத்தம் புதிய பானையிலிட்டுப் அடுப்பில் கொதிக்க வைத்துப், பொங்கல் சோறாக்கி, சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து பின்னர் நாமும் உண்டு மகிழும் பண்டிகையே, பொங்கல் பண்டிகையாகும்.

பொங்கல் பண்டிகை சங்க காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் விழா, மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான தமிழர் திருவிழா. பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படும்.
போகி
போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழைய பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம், அதை போல நம் தீய எண்ணங்களையும் எரித்து விடுவோம் என இந்த இனிய நாளில் சபதமேற்போம். போகி முக்கியமாக சிறுவர்க்குகந்த பண்டிகையாகும். சிறுவர்கள், அதிகாலையில், சிறு மேளம் கொட்டி கொண்டே, பழைய பொருட்களை எரித்து மகிழ்வர். சில சிறுவர்கள் வேடிக்கையாக, மற்ற சிறுவர்களை தீயினுள் தள்ளி விடுவேன் எனவும் கூறி மகிழ்வர்.

தைப்பொங்கல்

தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல் அன்று அதிகாலை எழுந்து, சூரிய பகவானை தொழுது சர்க்கரை மற்றும் வெண்பொங்கல் உணவு சிறப்பாக செய்யப்படும். பின்னர் அதனை தெய்வத்திற்கு படைத்த பின்னால், குடும்பத்தார் அனைவரும் பேசிக்கொண்டே சந்தோஷமாக உட்கொள்வார்கள். சிறப்பு மிகுந்த இந்நாளில் அம்மன் கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடுவது சிறந்ததாகும்.

மாட்டுப் பொங்கல்

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். ‘பொங்கலோ பொங்கல்! மாட்டுப் பொங்கல்! என்று அன்று உற்சாகமாக கூறப்படுவது வழக்கம். அந்நாளில் மாடுகளை நன்றாக அலங்கரித்து, உணவளித்து சிறப்புடன் சீராட்டுவார்கள், மற்றும் பசு மாடுகளை கோமாதா காமதேனுவாக பூஜித்து வணங்குவர், மற்றும் சிலர் காளை மாடுகளை நந்தி பகவானாக பூஜிப்பதும் வழக்கம்.
காணும் பொங்கல்

இந்நாளில் மக்கள் தங்கள் சொந்தபந்தங்களை சந்தித்து தங்கள் அன்பையும் உணவுகளையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம் பெறும். இது பெரும்பாலும் தமிழத்திலே கொண்டாடப்படுகிறது. தற்சமயத்தில் பெரும்பாலோனோர் குடும்பத்துடன் பிக்னிக் செல்வது வழக்கம். அதனால் அந்நாளில் பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டிருக்கும். வட மாநிலங்களில் நம் பொங்கல் பண்டிகை, மகர சங்கராந்தி  என கொண்டாடப்படுகிறது.

ஓம் ஸ்ரீ சூர்ய ஷண்முகா நமோ நமஹ
எழுதியவர்
ரா.ஹரிசங்கர்

Write Your Comment

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading