கங்கா மாதா பாடல்கள் (MA GANGA SONGS IN TAMIL)
கங்கா தேவி என்பவர் பர்வதராஜன் – மைனாகுமாரி தம்பதியரின் மகளும், சிவபெருமானின் ஜடாமுடியினுள் வீற்றிருந்தவர் என கூறப்படுகின்றது. இவர் பகீரதனின் வேண்டுதலால், கைலாசத்திலுள்ள சிவபெருமானின் சடாமுடியிலிருந்து பூமியை அடைந்தார்.
இந்து மதத்தில், கங்கை ஆறு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஆறு, இந்துக்களால் தாய் கடவுளாகப் போற்றப்படுகிறது. கங்கையில் குளித்தால் செய்த பாவங்கள் எல்லாம் விலகிவிடும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வரும் இந்துக்கள், இறந்துபோன தங்கள் உறவினர்களின் சாம்பலை கங்கையில் கரைக்கின்றனர். இதனால் இறந்தவர் சொர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கையாகும். ரிஷிகேஷ், ஹரித்வார்,அலகாபாத், காசி போன்ற முக்கியமான இந்துத் தலங்கள் கங்கையாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன. மகாபாரதம், கங்கையைப் பீஷ்மரின் தாயென கூறுகிறது.
கங்கா தேவி வெண்ணிற ஆடையுடுத்தி வெண் தாமரையில் வீற்றிருக்கும் தேவி, நான்கு கரங்களையும், அதில் முன்னிரு கைகளில் அபயவரத ஹஸ்த முத்திரைகளையும், பின்னிரு கைகளில் தாமரையும், அமிர்த பொற் குடமேந்தியிருக்கிறார். இவருடைய வாகனமாக முதலையுள்ளது.
கங்கா மாதா பாடல்கள்
அம்மா தாயே கங்கா மாதா, உன்னை போற்றி புகழ்ந்திடுவேன், புனித அன்னையே, உனக்கு ஆரத்தி எடுக்கின்றேன், பல தீபமேற்றி உனக்கு ஆரத்தி எடுக்கின்றேன், உன்னுடைய நீரினை அருந்துவோருக்கு எல்லா விதமான வியாதிகளும் குணமடைகின்றதே அம்மா, என் உயிர் கங்கையம்மா.
சிவனாரின் சடைமுடியினுள் குடியிருந்தவளே, சிவனாரின் அனுகிரஹம் பெற்றவளே, உன்னை போற்றி பாடிடுவேன், உனது திவ்ய நாமங்களை கூறியே பாடி மகிழ்ந்திடுவேன், உனக்கு அழகிய மலர்களை சூடி, பட்டு புடவை சாற்றி, தங்க ஆபரணங்கள் அணிவிப்பேனம்மா, உன்னை பார்த்து பார்த்து நானும் மகிழ்ந்திடுவேனம்மா, என் உயிர் கங்கையம்மா.
எங்கும் நிறைந்தவளே எதிலும் நிறைந்தவளே, என் உயிர் கங்கா மாதா, உன்னிடத்தில் என் உயிரை விட நானும் துடிக்கின்றேனே, புனித நதியான உன்னிடத்தில் மூழ்கி நானும் ஸ்வர்க்கம் செல்ல விரும்புகின்றேனே. புண்ணிய நதிகளில் மிக மிக சிறந்தவளே, உன்னை தாங்க இப்பூமி என்ன பாக்கியம் செய்ததோ, பாவங்களை போக்கி புண்ணியத்தை அளிப்பவளே, என்னுடைய பாவங்களை நீ தீர்ப்பாயோ, என் உயிர் கங்கா மாதா, என்றென்றும் உன்னை நான் மறவேனே. உன்னுடைய நதியினை நானும் தூய்மை செய்திடுவேனே, என் புனித அன்னை கங்கையை தூய்மையாக்கிடுவேனே, கங்கை அழகு நல்மங்கை, நீ தங்க நிறமாக மின்னுகின்றாயே, விளக்கொளியின் வெளிச்சத்தில் நீயும் தூய தங்கமாக பிரகாசிக்கின்றாயே.
வற்றாத நதியே, அழகிய தெய்வமே, உன் காலடியில் எப்போதும் இருக்கும் பாக்கியத்தை எப்போது எனக்கு நீ அளிப்பாயோ, என் உயிர் கங்கையம்மா, அண்ட சராசரங்கள் அழிந்தாலும் உனக்கு மட்டும் என்றும் அழிவு கிடையாதம்மா, உன் ஒப்பற்ற பெருமைகளை விளக்கி கூறிட மும்மூர்திகளாலும் முடியாதம்மா, என் உயிர் கங்கையம்மா. அழகிய முதலையின் வாகனமாக கொண்டவளே சமுத்திர ராஜனான வருணனும் உன்னை வணங்கும் பேறு பெற்றவளே, என் உயிர் கங்கையம்மா, உன்னை போற்றி துதித்திடுவேனே. புனித நதிகளான, யமுனா, நர்மதா, தபதி, கோதாவரி, காவேரி, துங்கை, முதலானவர்களும் உன்னை வணங்கி மகிழ்கின்றனரே, என் உயிர் கங்கையம்மா, உன்னையே மனதார பாடி மகிழ்கின்றேனே.
உன்னை புகழ்ந்து பாட எனக்கு ஒரு வாய்ப்பளித்ததற்கு மிக்க நன்றியம்மா என் உயிர் கங்கையம்மா, உன்னுடைய மகன் இந்த ஹரிஷங்கர் என்றும் உன்னை அவன் நெஞ்சினில் அழகிய சிம்மாசனத்தில் அமர்த்தி வைப்பான், என்றும் உன்னை அவன் தெய்வீக தாயாக கருதிடுவான், இரு கைகூப்பி, தலை குனிந்து, என்றுமே உன்னை அவன் வணங்கிடுவான்.
ஜெய் மா கங்கா மாதா கீ ஜெய்
எழுதியவர்
ரா.ஹரிஷங்கர்