வாழ்கை என்பது எதுவரை……
இதற்கு பதில், நம் குரு ராகவேந்திரர் நம்மிடம் இருக்கும் வரை!
வாழ்கை என்பது சுலபமானது அல்ல. ஒருவருக்கு இனிதாகவும், மற்றோர்க்கு கசப்பானதும் ஆகும்.
இது ஒரு உண்மை கதை! இங்கே நாம் பார்க்க போவது நம் கதாநாயகன் ராமை பற்றி! அவன் வாழ்வில் பட்ட கஷ்டங்களையும், அவனது அனுபவங்களையும், குரு ராகவேந்திரர் அவன் வாழ்வில் புரிந்த அற்புதங்களையும், அனுகிரஹத்தையும் நாம் இங்கே காணலாம். குரு ராகவேந்திரரை நான் கும்பிட்டு கொண்டிருக்கும் படத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
இனி நம் கதாநாயகன் ராமை பற்றி நாம் பார்க்கலாம்.
ஒரு திரைப்படத்தில், அப்படத்தின் கதாநாயகன், ஒரு பாட்டில், படைப்பு கடவுள் பிரம்மன் என் தலையெழுத்தை எழுதும் போது உறங்கி விட்டானோ! என்று பாடுவார். அதை போல நம் கதாநாயகன் ராமும் வாழ்வில் அடிக்கடி சலிப்படைகிறான்.
ராம் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை திருவல்லிக்கேணியில். அவன் படித்தது சென்னை இந்து மேல்நிலை பள்ளியில். அவன் வாழ்வையே புரட்டிப் போட்டது சிறு வயதில் அவன் விளையாடும் போது அவன் பின் மண்டையில் அடிபட்டது தான்! அதன் பின்பு அவன் வாழ்வு முழுவதும் போராட்டம் தான்! அவனால் சரியாக படிக்க முடியவில்லை. உடல் ஆரோக்கிய குறைவினால், சக மாணவர்களிடம் மிக்க பயம் கொண்டிருந்தான். சில மாணவர்கள் அவன் ஸ்கூல் பையினை எடுத்து கொண்டு ஓடுவார்கள், சிலர் மறைவாக நின்று அவன் பின்னந்தலையில் தட்டுவார்கள். கல்லூரி ராக்கிங்கை அவன் ஸ்கூலிலேயே அனுபவிக்க வேண்டியிருந்தது. ஒரு நாள் அவன் வீட்டிற்கு செல்லும் வழியில், சில சிறுவர்கள் வேண்டுமென்றே அவனை வம்பிழுத்து அவனை கல்லால் அடிக்க முயன்றனர். எப்படியோ கடவுளின் அருளினால் ஒரு பெரியவர்(குரு ராகவேந்திரர் அந்த ரூபத்தில் வந்து) தலையிட்டு அவனை அப்பிரச்சனையிலிருந்து காப்பாற்றினார்.
ஸ்கூல் படிப்பை சிரமப்பட்டு முடித்தவுடன் நம்முடைய ஹீரோ ராம், பச்சையப்பன் கல்லுரியிலே பி.காம் பட்டப்படிப்பில் சேர்ந்தான். அவனுடைய இயலாமையினால், அங்கும் அவனால் சோபிக்க முடியவில்லை, மற்றும் சக மாணவர்களின் தொந்தரவு வேறு! எப்படியோ குரு ராகவேந்திரரின் அருளினால், பி. காம் பட்டபடிப்பினை செகண்ட் கிளாசில் தேர்ச்சியுற்றான்! அவன் விருப்பப்படியே அவன் தகப்பனார் அவனை, ஒரு நல்ல ஆடிட்டரிடம் சேர்த்து விட்டார். நம் ஹீரோவின் திறமையை! பார்த்த ஆடிட்டர், உனக்கு நூறு தடவை சொல்லி தந்தால் கூட உன் மரமண்டையில் ஏறாது என்று கிண்டலாக கூறினார். எப்படியோ தட்டி தடுமாறி சி. ஏ ட்ரைனிங் முடித்தான், ஆனால் அவனால் சி.ஏ.வை முடிக்கமுடியவில்லை. சில வருடங்கள் வீட்டில் உட்கார்ந்து படித்தும், சி.ஏ பரிட்சையில் அவனால் தேற முடியவில்லை.
எட்டு தடவை பரீட்சை எழுதிய பின்பு அப்படிப்பினை அவன் விட்டுவிட்டான். அவனது இருபத்தி ஏழாம் வயதில் ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான். அங்கும் அவனுடைய உடல் ஆரோக்யக்குறைவினாலும், நரம்பு தளர்ச்சியினாலும் மிக்க அவமானப்பட்டான். அவனின் சோர்ந்த நடையினை பார்த்து அவனின் முதலாளி எதனால் இப்படி ஆகி விட்டாய், பேமிலி பிரச்சனையா, காதல் தோல்வியா அல்லது ஏதாவது ஆபாச (பலான பலான) படம் பார்த்ததினால் ஏற்பட்ட பிரச்சனையா என்று கூறி நக்கலாக சிரித்தார். மற்றும் உனக்கு கல்யாணம் ஆகி விட்டால் அவ்வளவு தான், உன் மனைவி வேலைக்கு சென்று வரட்டும், நீ வீட்டில் துணி துவைத்து, மாவரைத்து கொண்டிரு என்றார். இப்படியே பல கம்பெனிகளில் ஏச்சு பேச்சு கேட்டு
சிரமப்பட்டு நம் ஹீரோ ராம் வேலைக்கு சென்று வந்தான்.
எப்படியோ அவன் தந்தையின் மறைவிற்கு பின், அவனுக்கு கல்யாணமும் நடந்தேறியது! அவனுக்கு வாய்த்த பெண்ணோ சரியான பணப்பிசாசு. அவனுக்கும் அவன் மனைவிக்கும் தினந்தோறும் சண்டைதான். ஒரு நாள் நம் ஹீரோ ராம், வேலை பளுவினால் வேலையை விடப்போகின்றேன் என்று அவன் புது பொண்டாட்டியிடம் கூற, அவளோ கூலாக, அட விடுங்களேன் யாரு வேண்டாங்கிறது, அப்புறம் உங்களை யாரு கல்யாணம் செஞ்சுப்பாங்க என்று கூறி அவளின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டாள்! சில காலத்திற்கு பின் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாள். சில லட்சங்கள் அவளுக்கு ஜீவனாம்சமாக கொடுத்து அவர்களிடையே மணமுறிவு நடந்தது.
தற்போது நம் ராம், குரு ராகவேந்திரரின் அனுகிரஹத்தினாலும், அவன் குல தெய்வம் அங்காளம்மனின் அநுகிரஹத்தாலும், ஒரு நல்ல பெண்ணை மறுமணம் புரிந்து ஆன்மிக துறையினிலும் மற்றும் பங்கு வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருமானம் ஈட்டி வருகிறார். கடவுளின் அருளினால் அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. மந்த்ராலயம் சென்று வந்த பின், அவனுடைய உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளும் தீர்ந்தன.
தற்போது மொத்தத்தில் அவன் வாழ்வே மாறி விட்டது நம் குருராஜரின் அருளினால்!
ஓம் ஸ்ரீ சர்வ வல்லமை படைத்த குரு ராகவேந்திர ஸ்வாமி நமோ நமஹ
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்