ஸ்ரீ மஹா பக்த விஜயம்

ஸ்ரீ மஹா பக்த விஜயம்

1.ஸ்ரீ ஜயதேவ ஸ்வாமிகள்

ஜகந்நாத க்ஷேத்ரம். இங்கே இறைவன் பலதேவனுடனும் தங்கை சுபத்திரையுடனும் காட்சி தருகிறான். எப்பொழுதும் பக்தர்களால் சூழப்பட்டிருக்கும் இத்திருத்தலத்திலே வேத கோஷமும் மெய்யன்பர்கள் நெக்குருகிக் கண் பனி சோர இறைவனைப் பாமாலைகளால் வழிபடும் ஒலியும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும்.

இத்தகைய பெருமை வாய்ந்த தலத்தின் அருகே ‘பில்வகாம்’ என்ற அழகிய சிற்றூர் ஒன்றுண்டு. இதைத் திந்து பில்வம் என்றும் சொல்வதுண்டு. இந்த சிற்றூரிலே ஓழுக்கத்தில் சிறந்தவரும் இறைவனது திருவடிகளிலே எப்பொழுதும் ஈடுபட்ட மனத்தை உடையவருமான நாராயண சாஸ்திரியார் என்ற பெரியார் வாழ்ந்து வந்தார். இவரது மனைவியின் திருநாமம் கமலாபாய். முற்றும் துறந்த முனிவரைப்போல வாழ்ந்த இப்பெரியாருக்குத் தமக்குப் பின் குலம் விளங்க ஒரு குழந்தை இல்லையே என்ற எண்ணம் எழவில்லை. இறைவனது வழிபாட்டிலும் பஜனையிலுமே இவர் மனம் நிறைந்திருந்தது. ஆனால் ஜகநாதப்பெருமானிடத்தில் நோன்பு பூண்ட கமலா பாயோ, இறைவனை வழிபடும்தோறும் எனக்கு ஒரு நன்மகனை அளித்து குலம் விளங்க அருள் செய்ய வேண்டும் என்று உருகி உருகி வேண்டி நிற்பாள்.
ஒரு நாள் இரவு நாராயண சாஸ்திரியார் தம் ஆராதனைகளை முடித்து இறைவனது நாம சங்கீர்த்தனத்திலே ஈடுபட்டு நாமாவளிகளைப் பாடிய வண்ணம் கண் அயர்ந்து விட்டார்.

“கருமுகில் தாமரைக் காடு பூத்துநீடு இருசுடர் இருபுறத் தேந்தி எடவீழ் திருவோடும் பொலியாவோர் செம்பொற் குன்றின்மேல் வருவபோல் கலுழன்மேல் வந்து தோன்றினான். “

அழகிய ஒளி மயமானதோர் உலகத்திலே ஸ்ரீமந்நாராயணர் முகத்திலே புன்னகை தவழ சங்கு சக்ர கதா தரராய் வந்து நின்றார். மார்பிலே திருமகள், அருகிலே பூமகள்-இந்த காட்சியிலே மெய்மறந்தார் நாராயண சாஸ்திரிகள். இறைவரது முகம் ஆனந்தமிகுதியினால் மலர்ந்தது. சிவந்த கொவ்வை இதழ்கள் திறந்தன, “ஏ பக்தா உங்கள் இருவரது தவமும் பலிக்கும் சுபதினம் வந்து விட்டது. உன் இன்னுயிர் துணைவி கோரிய வரம் அளித்தேன். உங்களது குறையும் முன்னோர்களது குறையும் நீங்கும்”, என்ற செய்தி இன்பத்தேனாய் அவர் செவிகளிலே நிறைந்தது. திடுக்கிட்டு கண் விழித்தார் அவர். தாம் அன்று கண்ட அந்த அற்புதக் கனவின் பயனாக அவர் உள்ளம் பொங்கிப் பூரித்தது.

கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் என்று மனம் எக்களித்தது. அந்த காட்சியை மீண்டும் காணமாட்டோமா என்ற பேராவலுடன் மீண்டும் கண்ணை மூடினார். இறைவரது புன்னகையுடன் கூடிய திருமுக மண்டலம் அருள் நோக்கு சாந்தமும் கருணையும் பொழியும் கண்கள் இவை மீண்டும் காணக் கிடைக்குமோ? கிடையா, என்றாலும், அந்த இன்ப நினைவிலே அவர் நெஞ்சம் நெகிழ்ந்தது. “அடடா! எத்தகைய பெரும் பேறு!” என்று நினைத்தவாறே மனைவியை அழைத்து இறைவன் அருள் பொருள் நமக்கு கிட்டி விட்டது, ஆனாலும் நீ கேட்ட நீ விரும்பிய பொருளை அளித்திருப்பதாக இறைவன் உரைக்கின்றானே நீ எதைக் கேட்டாய்? என்றார்.
திடுக்கிட்டு எழுந்தாள் கமலா பாய். ஒரு பெண் இறைவனிடம் எதைக் கேட்பாள்? “தாயாகும் பேறு எனக்கில்லயா’ என்றுதான் ஏங்கினேன்; நம் குலம் விளங்க பிதுர்கடன்கள் செய்ய, ஒரு புதல்வனை வேண்டிதான் தவங்கிடந்தேன். அளித்துவிட்டாரா, அடடா! கடவுளை நம்பினோர் கைவிடப்படார் இறைவனது அனுக்கிரகம் எனக்கு பரிபூரணமாகக் கிடைத்து விட்டது!” என்று மெய்சிலிர்க்க நாத்தடுமாற சொன்னாள். ஆச்சரியமும் ஆனந்தமும் அவள் கண்களில் ஒளி வீசின.

நாராயண சாஸ்திரியாரின் கண்களும் ஒளிவீசின. ஆனால் அவைகளிலே கோபக்கனல் தெறித்தது. கோபம் இரக்கமாக மாறியது. “அடி பேதையே! இறைவரிடம் “நின்கருணை நிதி வேண்டும்” என்று கேட்பதை விடுத்து, கேவலம் ஒரு குழந்தை வேண்டும் என்றா கேட்டாய்? என்ன விபரீத புத்தி! இறைவர் இன்னருள் சுரக்கக் காத்திருக்க, அழியாய் பெரும் பதம் அளிக்க காத்திருக்க, அதை விடுத்து, இந்த அற்பப்பொருள்-அழியக்கூடியது-இதையா கேட்டாய்? எம்பெருமானுக்கு எப்போதும் பணி செய்கின்ற பேறு கிடைக்க கூடியதா? அதை பெற உனக்கு தெரியவில்லையா? என்றார் பச்சாதாபத்தினால் அவர் கண்களிருந்து கண்ணீர் பெருக்கோடியது. அவர் தலையைத் தாழ்த்திக் கொண்டார்.

கமலாபாயின் இதயம் படீர் படீர் என்று அடித்துக் கொள்ளத் தொடங்கியது. “கணவரது மனநிலைமையை அறிந்து கொள்ளாமல் நாம் இப்படி பிள்ளை வரம் கேட்டு விட்டோமே!” என்று ஏங்கிக் கண்ணீர் சொறியலானாள் அவள். ஒருவரோடுஒருவர் பேசவும் வழியில்லாது விம்மலாயினர். “இப்படிப் பேதைத்தனமாகக் கேட்டு விட்டாளே!” என்று அவர் நெஞ்சம் குமுற தொடங்கியது. “உலக வாழ்க்கையின் இன்பமே பெரிதாகக் கருதி கேட்டுவிட்டோமே!” என்ற தவிப்பு இவள் நெஞ்சிலே. கபடநாடக சூத்ரதாரி என்ற பெயர் பெற்ற எம்பெருமான் பக்தி மிருந்த இத்தம்பதியரின் தவிப்பை எவ்வளவு நேரம் தான் பார்த்துக்கொண்டிருப்பார்? ஓர் அந்தணனாகக் கனவிலே தோன்றி, “பிள்ளை இன்பம் பேரின்பமே அல்லவா? புத்திரனில்லாதவன் பிதுர்க் கடன்களை எவ்வாறு செய்ய முடியும்? அன்பனே, உன் துணைவியின் நோக்கம் தவறன்று, உங்களது பக்தியைப் பரப்பவும் ஒரு மைந்தன் வேண்டாமோ?” என்று கூறியருளினார்.

இறைவரே அந்த அந்தணன் என்பது விளங்க வெகுநேரமாகவில்லை. நாராயண சாஸ்திரியார் கண்களிலே அனந்தபாஷ்யம்! முகத்திலே மகிழ்ச்சி! கமலா பாயை அழைத்து கனவினிலே வந்த கருணாமூர்த்தியின் மொழிகளைச் சொல்லித் தேற்றினார்.

கனவு பலித்தது. இறைவனின் அருள்மொழி பொய்ப்பதுண்டா? ஸ்ரீ வேதவியாசர் மீண்டும் பிறந்து இறைவரது திருநாமத்தை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து உலகெலாம் பரவ வழி செய்ய வேண்டும் என்று ஒரு முறை நினைத்தாராம். அதன் பயனாகவே ஸ்ரீ வியாசரின் அம்சமாகவே தோன்றினார் ஸ்ரீ ஜெயதேவ ஸ்வாமி. “முப்பிறவிகள் எடுத்து உன் திருவிளையாடல்களைப் பாட வேண்டும்!” என்று கேட்டாராம் ஸ்ரீ கண்ண பெருமானை. அதன்படி இவரே மீண்டும் தீர்த்தநாராயணர் என்ற யதிராஜாவாகவும், க்ஷேத்ரஞர் என்ற மகாவித்வானாகவும் தோன்றினார், என்று கர்ண பரம்பரைக் கதைகள் சொல்லும். தீர்த்தநாராயணரின் தர்க்கங்களை ஷேத்ராஞரின் பதங்களும் இன்றும் நம் இதயத்தை வசீகரித்து பக்தி மழையைப் பொழிகின்றன.

நெடுநாட்களாக குழந்தையின் மலரடிகளே படாத ஒரு பக்தரது இல்லத்திலே குழந்தையின் வரவு எவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கும் என்பது வாயினாலுரைக்க முடியாது. அனுபவித்தவர்களுக்கே தெரியும் அந்த அருமை. இறைவர் அருள் என்றும் குழந்தை சாக்ஷத் பகவானே என்றும் நினைத்தனர் பக்தி மிகுந்த அந்த தம்பதிகள்.

‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’, என்ற முதுமொழிக்கிணங்க, குழந்தை ஜெயதேவனது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும், சிறு அசைவுகளிலும், இசையின்பம் பொங்கியது. தந்தை தாயாருடன் அமர்ந்து அவன் பாடியும் ஆடியும் வழிபடும் காட்சிகள் கண்டு அந்தத் திந்துபில்வம் முழுவதும் திகைத்தது அனந்தக்கடலுள் மூழ்கியது.

உரிய வயது வந்ததும், மணமுடிக்க வேண்டுமென்ற எண்ணம், தாயின் நெஞ்சத்தே எழுந்தது. கல்வி கேள்விகளிலும் இசையிலும் வல்ல தன் மகனுக்கேற்ற மணமகள் எங்கே பிறந்திருக்கிறாளோ என்ற ஏக்கம், கமலாபாயின் நெஞ்சிலே குடிகொண்டது. உறவினருள் ஒருவரது மகளாகிய பதுமாவதி என்ற கட்டழகி, தெய்வ பக்தியிலும் குணத்திலும் சிறந்தவளாய்த் தோன்றவே, அவளையே மணம் பேசி முடித்து மிகமிகச் சிறப்பாக விவாகத்தை செய்வித்தனர். குழந்தை ஜயதேவன் இல்லத்தலைவன் ஜயதேவனாக விளங்கினான்.

ஸ்ரீ ஜகந்நாத பெருமாளே, அர்ச்சகரின் கனவில் தோன்றி, தேவசர்மா என்ற பதுமாவதியின் தந்தையை அழைத்து, அவளை ஜாயதேவருக்கே மணம் செய்து வைக்கும்படி சொன்னாராம். இத்தகைய சிறப்பு வாய்ந்த பதுமாவதி தன் நல்ல குணங்களாலும், பணிவிடைகளாலும், இல்லறத்தை நல்லறமாக நடத்தி வரலானாள். மாமனாரும், மாமியும், தங்கள் புதல்வனது அழகினாலும் கவிதையினாலும் நல்லோழுக்கத்தினாலும் மனம் நிறைந்தனர். அருமை மருமகள் பதுமாவதியின் ரூபசௌந்தர்யத்தினாலும் குண சௌந்தர்யத்தினாலும் அவளது இசைத்திறமையும் அவர்களை பேரானந்தத்தில் ஆழ்த்தின.

மனம் நிறைவுற்ற அந்த தம்பதிகள், தமது வீடு நிலபுலன்கள் பொருள்களை ஓப்புவித்து, வைராக்கியத்தை மேற்கொண்டு வானப்பிரஸ்தம் புகுந்தனர்.

மகாகவி ஜயதேவரின் இல்லம், கோயிலாகவே விளங்கியது. விடியற்காலையிலே தன் கடன்களை முடித்து, பக்தர்களை வீட்டில் அழைத்து, உபசரிப்பதிலும், பூஜை புனஸ்கரம், அண்டை அயலார்க்கு உதவுதல், ஓய்வு நேரங்களில் இறைவனது திருவடிக்கு பாமாலைகளை இசைத்தல், என்று இப்படி ஒரே விதமாக அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது அவரது வாழ்கை.
“இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுண்டோ?” அதிலும் பதுமாவதியைப்போன்ற ஒரு தெய்வப்பெண், உடனிருந்து அவர் கவிதைகளைப் படிப்பதும், பாடுவதும், ஆடுவதும், ஆக இன்பத்தில் ஆழ்ந்திருந்தது அவ்வில்லம். இப்படி வருவாய் அதிகமின்றி, வந்தவர்களை எப்போதும் உபசரித்துக்கொண்டே இருந்தால், எங்கிருந்து பொருள் வரும்? நாட்கள் செல்ல, வீட்டிலே வறுமை தோன்றலாயிற்று. அப்போதும் அவர்கள் விருந்தோம்பலையும் பூஜைகளையும் நிறுத்தவேயில்லை. அவன் அருளாலே அவன் தாள் வணங்குகிறோம், வறியோர்க்கு அழகு வறுமையில் செம்மை, என்று தான் நினைத்தாள் பதுமாவதிதேவி.

இந்த சூழ்நிலையில் தான் ஜயதேவரது கீதகோவிந்த மகாகவியம் மலர்ந்தது. அக்கவிகளை, அக்கிராமவாசிகள் இயற்று முன் வந்து, கற்று, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதிப் பரவசமடைவார்கள். இதிலே ஒரு அஷ்டபதி. அன்று காலை பூஜைமுடிந்து மெய்மறந்த நிலையில் அமர்ந்திருந்தார் ஜயதேவஸ்வாமி. ‘சாருசிலே ப்ரியே சாருசிலே’, என்ற பல்லவியுடன் கூடிய ஓர் அடியில் தம்மையும் அறியாமல் ‘ஏ ராதே விரகத்தினால் தவித்து கொதிக்கும் என் சிரத்திலே பனிமலர் போன்ற உன் தாமரை தளிர் அடிகளை வை’, என்று வேண்டுவதாக அமைந்து விட்டது. ஜயதேவர் திடுக்கிட்டார்! அடடா கவிதையின் மயக்கத்தினாலே, எத்தனை பெரிய அபசாரம் செய்து விட்டோம். தவறு தவறு என்று மனதுள் நொந்தவராய், ஏன் இப்படி நம்முடைய புத்தி போய் விட்டது என்று கலங்கி, அந்த ஓலையை தூள் தூளாக கிழித்து கையிலே எடுத்து கொண்டு, அன்று எண்ணெய் முழுக்காடும் முறையாகையினால், உச்சிக் காலத்திற்கு முன் ஆற்றிற்கு செல்வதாக கூறிப் புறப்பட்டார். நலங்கு வட்டிலையும் எண்ணெய் கிண்ணியையும் கொணர்ந்து கொடுத்து விட்டு, பதுமாவதி தேவி சமையலை கவனிக்க உள்ளே சென்று விட்டார்.

சில நிமிஷங்கள் ஆயின. கணவரது காலடி ஓசைக் கேட்டு கூடத்தை அடைந்தாள் பதுமாவதி. எண்ணெய் தலையோடு, கணவரைக் கண்ட அவளுக்கு விஷயம் விளங்கவில்லை. ஏன் என்று கேட்பது போல அவரை ஏறிட்டு நோக்கினாள். காலையில் எழுதிய கவிதை சுவடிகளையும் எழுத்தாணியையும் எடுத்து வா, என்றார் அவர். எடுத்து வைத்தாள் அவள். ஓர் அழகிய கற்பனை பின்னர் மறந்து விடும் என்று சொல்லி, அவர் சில வரிகளை எழுதிச் சென்று விட்டார்.

வழக்கம் போல, பகல் பூஜையும், வழிபாடுகளும் முடித்த அவர், காலையிலே எழுதியதை நினைத்து நினைத்து அபசாரம் செய்து விட்டோமே என்ற மனநிலையிலே மீண்டும் ஒலைச் சுவடியைக் கேட்டார். பதுமாவதி தேவி கொண்டு வந்து கொடுக்க, ஆச்சர்யத்தினால் திகைத்து போனார் ஜயதேவ கவி.

‘பதுமா நீ ஏதாவது எழுதினியா’, என்றார். காலையிலே அவர் வேண்டா என்ற கிழித்தெறிந்த ஓலைகளிலிருந்த வாசகங்கள், அந்த பனை ஓலையிலே பளிச்சிட்டன.

நான் ஏன் எழுத வேண்டும், நீங்கள் தான் எண்ணெய் கையோடு எழுதினீர்களே என்று சரவச்சாதாரணமாகச் சொன்னாள் பதுமாவதி. அவரது ஆச்சர்யம் அதிகரித்தது! ‘என்ன நானா வந்து எழுதினேன் என்றார்’. ஆமாம் நீங்களே தான் எண்ணெய் பட்டிருக்கிறது பாருங்களேன் என்று சுட்டிக் காட்டினாள் பதுமாவதி.

‘அடடா, இறைவன் வந்தல்லவா திருத்தி இருக்கிறான்’. கண்ணா, கண்ணா, மணிவண்ணா உன்னைக் காணும் பேறு எனக்கில்லையே! பதுமாவதி நீயே பாக்கியசாலி, கண்ணன் என்னப்பன், என்னையன், தானே வந்து எழுதி வைத்து விட்டான். அவனைக் காணும் பேறு உனக்கு கிடைத்தது. நாள் முழுவதும் கதறுகின்றேன், உன் திருவடியைக் காண, எனக்கு நீ அருள் செய்யவில்லை, கார்முகில் வண்ணா கண்ணா அச்சுதா அமரர் ஏறே எனக்கு காட்சித் தர இன்னும் கருணை வரவில்லையா, என்று பலவாறுப் பாடி மூர்ச்சித்து விட்டார்.

இன்னது செய்வதறியாத பதுமாவதி, ஆ ஆ இறைவர் என் துணைவராகவே வந்து காட்சி தந்த அற்புதத்தை, என்ன சொல்வேன் என்று வியந்து வியந்து, ஆனந்த கண்ணீர் சொரிய, நெஞ்சம் நெக்குருக நின்றாள். ஜயதேவர் எழுந்தார். பதுமாவதியின் இரு மலர்க்கரங்களையும் கையினாற்பற்றி ‘ஐயது பதுமாவதி ரமண ஜயதேவகவி’, என்று பாடினார்.

இப்படிப்பட்ட பண்சுமந்த அருட்பாடல்கள் நாள்தோறும் புதிது புதிதாக அந்தத் கிராமத்திலே ஓலித்தன! அது மட்டுமா! இந்த அமுதமயமான கவிதை ஸ்ரீ ஜகந்நாத ஷேத்திரத்திலே எம் பெருமானது முன்னினையிலே, பலராலும் பாடப்பெற்றுப் புகழ் பெறலாயிற்று.

ஜகந்நாத ஷேத்திரத்தின் அரசன் இசையிலும் கவிதைகள் புனைவதிலும் வல்லவன். அவனும் வடமொழியிலே பற்பல அருமையான இசை மாலைகளைத் தொடுத்துத் தொடுத்து, ஜகநாதரின் திருத்தாமரைகளுக்குச் சூட்டியிருந்தான், என்றாலும், ஜயதேவரின் பாடல்களே கோவில் பிரகாரங்களெல்லாம் ஓலித்தன. அரசனும், கவிஞரை, கவிஞன் உகக்கும் முறையிலே அவைகளைக் கேட்டான். அவன் உள்ளம் ஆனந்தமிகுதியினால் மலர்ந்தது, என்றாலும், மக்கள் தன்னுடைய கவிதைகளை விட ஜயதேவர் கவிதைகளையே போற்றிப் புகழ்ந்து பாடுவதும், அவன் மனதுள் ஒரு சிறு பொறாமைத் தீயைக் கிளப்பியது. அவன் தொண்டர் குலம் ஒரே குலம் என்பதை மறந்தான்.

அங்கே கூடியுள்ளவர்களை நோக்கி, “என் பாடல்களும் ஜெகநாதப்பெருமானைப் பற்றியது தானே அவற்றை விடுத்து நீங்கள் ஜயதேவர் பாடல்களையே படுவானேன் என்று கேட்டான்”. அதற்கு அவர்கள் சரியான மறுமொழி கூறாமல் உங்கள் இருவரது பாடல்களையும் பகவானுடைய சந்நிதியிலே வைப்போம். எது உயர்வு என்பதை அவரே முடிவு செய்யட்டும், என்றார்கள். அந்தணரை தெய்வமெனும் கருதும் அம்மன்னன் மேற்கொண்டு பேசாமல் இதற்கு ஒப்புக் கொண்டான். சுவடிகள் இரண்டும் இறைவரது சந்நிதானத்திலே வைக்கப்பட்டன. கர்பகிரஹத்தின் கதவுகளை மூடி, பூட்டி, தன் இலச்சினை பொறித்து அரசன் அரண்மனை சென்றான்.

இரவு முழுவதும் உறக்கம் கொள்ளாதவனாய், ஜகந்நாத பெருமானை நோக்கி, நானும் உனது அடியவனல்லவா, என்று வேண்டியவனாய் இரவைக் கழித்து, காலை, முறைப்படி, ஆலயத்தை அடைந்து பூட்டை திறந்தான். அங்கே ஜயதேவரின் கவிதைகளின் மேலே உவந்தோம் என்று எழுதியிருந்தது, அரசன் சுவடிகளோ கலைந்து கிடந்தன.

அரசனது மனம் துன்பமிகுதியினால் துடிதுடித்தது. இறைவரே உமது திருநாமத்தைத் தான், நானும் இசையிலே அமைத்து தொடுத்தேன் இருந்தும், ஏன் இந்த பாரபக்ஷம்! நான் உன் அடியான் அல்லவா? நான் செய்யும் திருப்பணிகளிலே ஏதும் குறைவுண்டோ? என்று மனம் உருகி வேண்டினான். இறைவரது அருள் கிட்டவில்லையே, என்று அவன் மனம் ஏங்கி துடித்தது தவித்தது.

இரவு அரசன் நித்தரையிலே ஆழ்ந்திருந்தான். அவன் கண்களின் முன்பு அழகிய ஒளி வட்டம் ஒன்று தோன்றியது. கையிலே புல்லாங்குழலுடன் தோன்றினான் கண்ணபிரான். அவன் மலர் வாயினின்றும் மெல்லிய குரலில், அரசே, நீயும் என் மெய்யன்பன் தான், என்றாலும், நாம் அரசன் என்ற செருக்கை அங்கே கண்டேன். அதுதான் உன்னிடமுள்ள பெருங்குறை. ஜயதேவனது ஒலி மாலைகளுக்கு நிகராக, வேறு எதுவுமே நிலை நிற்க இயலாது என்றாலும், அதைக் கௌரவிக்க வேண்டும் என்ற நல்ல நினைவு உனக்குள் எழுவது தெரிகிறது. ஆகவே உன் கவிமாலைகளின் முதல் பதின்மூன்று பாடல்களை, நான் ஏற்பேன். உங்களது பக்தியின் சிறப்பை உலகுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்தேன் என்று கூறி மறைந்தான்.

இந்த அற்புதமான கனவை வெளியிட விரும்பாத அரசன், மீண்டும் ஜகந்நாதராது ஆலயத்தை நாடினான். கீத கோவிந்த மஹாகாவியத்தின் சில பாடல்களை தானும் பாட தொடங்கினான். அதே மூலஸ்தானத்திலிருந்து அசரீரி எழுந்தது ‘அன்பனே உன் பாடல்கள் பதின்மூன்றையும் ஏற்றோம் வருந்தாதே என்று தெளிவாக எல்லோர் செவியிலிலும் கேட்டது’.

அரசன் கண்களிலே ஆனந்த பாஷ்யம். நானே தவமுடையோன் என் நெஞ்சே நன்னெஞ்சம் என்று நினைத்தவனாய், ஆண்டவனே, ‘ஏ ஜகன்னாத ப்ரபோ என் புன்கவியையும் ஏற்ற உன் அருளினை எவ்வாறு புகழ்வேன்’ என்று நெஞ்சுருகி பாடி புகழ்ந்து மெய்மறந்தான். ஜகந்நாத ஜகந்நாத ஜகந்நாத பாஹிமாம் என்ற பேரொளி அந்த கோபுரத்தையும் மீறி, வான மண்டல முழுவதும் எதிரொலித்தது. ஆனந்த மிகுதியினால் அங்கு கூடியிருந்த தொண்டர் குழாம் மீண்டும் மீண்டும் கோஷித்தது.

அரசனும் ஆண்டவனும் ஒருங்கே புகழ்ந்த அந்த பாடல்களின் பெருமை, மெள்ள மெள்ள பதுமாவதியின் தந்தையான தேவசர்மாவிற்கும் தெரிந்தது. மகளையும் மருமகனையும் தெய்வத் தம்பதிகளாக கருதி காண வேண்டுமென்று வந்து சேர்ந்தார் அவர். ஜயதேவராது கீதகோவிந்தமும் அரசனது இசைமாலையும் ஒன்றாக இணைத்து பூரி என்ற ஜெகநாத சேஷ்ரத்திலே பாடப்படுவதை தம் மகளுக்கு அறிவித்தார்.

கடந்த சில நாட்களாகத் தனியே காடுகளிலே இருந்து அமைதியான சூழ்நிலையிலே தியானம் செய்ய வேண்டுமென்ற ஆவல், ஜயதேவரது நெஞ்சகத்தே எழுந்திருந்தது. மாமனார் வந்து சேர்ந்த சமயத்தை, நல்லதோர் வாய்ப்பாகக் கருதி, வனவாசம் செல்லத் தீர்மானித்தார். தேவசர்மா சில நாட்களிலே, ஊர் திரும்ப விரும்பினார். அவரை வழியனுப்ப, பதுமாவதியும் தங்கள் கிராமத்தின் எல்லை வரையிலும் சென்றாள்.

அங்கிருந்து திரும்பி வீடு வந்த பதுமாவதி, கணவனைக் காணாமல் திகைத்தாள். பிறகு அண்டையிலுல்லோர்களைக் கேட்டுத், தானும் அவரைத் தேடிடப் புறப்பட்டாள். விடியற்காலையிலே, ஒரு நதிக்கரையில், தியான மூர்த்தியாய் அமர்ந்திருந்த அவரைக்கண்டு, மீண்டும் வீட்டிற்கு அழைக்க, மறுபடி வீடு திரும்பி வந்தார் ஜயதேவர். இந்த சம்பவம் பதுமாவதியின் மனதிலே ஒரு சிறு புயலை ஏற்படுத்த, அவள் ஜகந்நாத பெருமாளின் திருவடியில் விழுந்து, தன் கணவர் என்றென்றும் பிரியாதிருக்க வேண்டும் என்று வேண்ட, இறைவனான ஜகன்மோஹன வேணுகோபாலன் அவள் முன் தோன்றி ‘அஞ்சேல் அஞ்சேல்’ என்று அபாயமளித்தார்.

ஜெகநாதத்தையடுத்துள்ள ஒரு சிறிய கிராமம். அதிலே பகவன்தாஸ் என்பவர் ஒரு வியாபாரி அவர் கல்விகேள்விகளிலே சிறந்த பேரறிவாளர். ஜயதேவரது பெருமையைக் கேட்கக் கேட்க, அவரிடம் உபதேசம் பெற விரும்பியது அவர் மனம். அவரைத் தனது வீட்டிற்கே அழைத்து பாத பூசனைகள் செய்து போற்றி வழிபட வேண்டும் அவரது அறிவுரைகளால் தமது வாழ்வு வளம் பெற வேண்டும் என்று நெடுநாளாய் நினைத்திருந்தார்.

தற்செயலாக ஜயதேவர் முன்கூறிய நதிக்கரையிலே யோக சமாதியிலே ஆழ்ந்திருந்த சமயம், பகவன்தாஸ் அங்கே வர நேரிட்டது. எதிர்பாராத இந்த சந்திப்பினால் மெய்மறந்து அங்கம் பூரிக்க அங்கேயே நின்று விட்டார் அவர். ஜயதேவர் நிஷ்டை கலையும் வரை அங்கேயே காத்திருந்தார். நிஷ்டை கலைந்தது. தம்மோடு வந்து தமது குடிலை புனிதமாக்கவேண்டும் என்று வேண்டினார் அவர். இறைவன் புகழைப் பாடும் பணியே பணியாய்க் கொண்ட ஜயதேவர், அவருடன் செல்லச் சித்தமானார்.

தமது தேரிலேயே, அவரையும் ஏற்றிக் கொண்டு, தமது சிற்றூர் சென்றார் பகவன்தாஸ். ஜயதேவர் அன்று முழுவதும் அங்கே தங்கி அவருக்கு மந்திரோபதேசம் செய்து இறைவனை அடையும் வழிகளையும் உபதேசித்தார். பிறகு பகவன்தாஸ் இறைவனது திருப்பணிக்கென்று ஆயிரம் வராகங்களையும், பதுமவதி தேவிக்கென்று சில உயர்ந்த ஆபரணங்களையும் கொடுத்துத் தமது தேரிலேயே பில்காம் சென்று விடுத்து வர உத்தரவிட்டார்.

பஞ்சமி இரவு பின் நிலா. தேர் அடர்ந்த ஒரு காட்டின் வழியே சென்று கொண்டிருந்தது. தீந்து பில்வம் கிராமத்திற்கு இன்னும் அரைக்காத தூரம் தானிருக்கும். வழியிலே படபடவென்று ஓசைகேட்டது தேர்ப்பாகன் நடுநடுங்கிப்போனான். குதிரைகளும் பயத்தினால் மருளத் தொடங்கின. தேரைச் சுற்றி நாற்புறமும் சூழ்ந்து கொண்டனர் கள்வர். பாகன் இறங்கி ஓட்டம் பிடித்தான். இவற்றுள் ஓன்றையும் பொருட்படுத்தாதவராய் எதையெனும் எடுத்துப்போகட்டும் நமக்கென்ன என்று ஜயதேவரும் இறங்கி ஒரு புறமாய் நடக்கலானார்.

கொள்ளையிடப்புகுந்தவர்களிலே ஒருவன் அதோ போகிறானே, அவன் பயந்து பொருள்களை விட்டுவிட்டுப் போகவில்லை, ஊருக்குள்ளே போய் ஆட்களை அழைத்துவரத்தான் போகிறான், ஆகவே, அவனை முடித்து விட்டுத்தான் நாம் பொருட்களை பங்கு போட வேண்டும் என்றான். உடனே கூட்டம் ஜயதேவரை நோக்கிப் பாய்ந்தது.

கொலைகாரப்பாதகர்கள் அவரது வேண்டுகோளையும் காதில் ஏற்காமல், அவரது கால்களையும் கைகளையும் கத்தியினால் வெட்டி, ஒரு பாழுங்கிணற்றில் தள்ளி விட்டு, வெற்றி முழக்கத்தோடு தேரை ஓட்டிச் சென்றனர். அந்த சமயத்திலும் அவரது வாய் இறைவனது திருநாமத்தை ஓதிக் கொண்டே இருந்தது. ஆண்டவனே இதுவும் உன் சோதனை தானோ! முடமாகி மீண்டும் வாழவேண்டுமென்றோ என்னைக் கொல்லாமல் விட்டிருக்கிறீர், என்றெல்லாம் ஓடின அவர் சிந்தனைகள். வெட்டுண்ட காயங்களிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது, வேதனையும் நோவும் தாளாமல் உடல் துடிதுடித்தது. ஆனால் மனமும் வாக்கும் இவற்றை ஒன்றையும் பொருட்படுத்தாமல், நாராயணா நாராயணா என்றும் கிருஷ்ணா கிருஷ்ணா என்றும் முனகிக்கொண்டிருந்தன. ஆயிற்று ஒரு சாமமும் ஆயிற்று. ரத்தப்பெருக்கினாலே உடலும் உள்ளமும் சோர்ந்து, நினைவும் தப்பிப் போகின்ற நிலை ஏற்பட்டது. இனி பிழைக்க போவதில்லை என்ற எண்ணம் வரவே, தனது கீதகோவிந்தத்தின் இனிய காட்சிகள் அவர் முன்னே விரிந்தன.
ஜயதேவருக்கு ஐம்புலன்களும் மெல்ல மெல்ல ஒடுங்குவது போல தோன்றியது.

அரையிற் பீதக ஆடையணிந்து, அழகிய சந்தன பூச்சுடன் கூடிய நீல மணிவண்ணன், யமுனைக் கரையிலே குழலூதும் ஒளி, அவர் செவிகளிலே தேவ கானமாய் ஒலிக்கிறது. அந்த ஆனந்த காட்சியிலே அவரது நினைவு தடுமாறுகிறது, குழப்பமான நினைவின் பின்னணியிலே அகமனத்திலே கீத கோவிந்த நாடகம் நடைப்பெற்றுக்கொண்டே இருக்கின்றது. அதிலேயே ஈடுபட்டு நினைவிழந்து கிடந்தார் ஜயதேவ கவி.

பில்காமிலே காலையில் நீராடச்சென்றவர் வரவில்லையே என்று ஏங்கி நின்றார் பதுமாவதி. சமாதியிலே ஆழ்ந்திருப்பவர்களுக்குக் பொழுது எப்படி தெரியும்! நிலவு நாட்கள் தானே இரவிலே எழுந்து வரவும் கூடும், என்று நினைத்தது அவள் பச்சையுள்ளம். ஆனால் நாட்கள் இரண்டு ஆயின, மூன்றும் ஆயின, அவரைக் காணவில்லை! ‘ஜகந்நாத ஜகந்நாத’ இது என்ன சோதனை என்று தவித்தது உள்ளம். தவிக்கும் நெஞ்சத்திற்குத் துணையாக எதிர்பாராமல் வந்து நின்றார் அவள் தந்தையார். முன்பு வழியனுப்ப சென்ற போது நேர்ந்த சம்பவம் அவள் நெஞ்சில் எழவே, தந்தையார் மீது அவளுக்கு கோபம் கோபமாய் வந்தது. தெளிந்த அறிவு பெற்றவளாகையினால் தனது கோபத்தை அடக்கி, தந்தையரை வரவேற்று உபசரிக்க புகுந்தாள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரோ ப்ரஹ்மஞானி, எங்காவது குகையிலே தவம் செய்ய உட்கார்ந்து அப்படியே நிர்விகல்ப சமாதியிலே ஆழ்ந்திருக்கக் கூடும் கவலைப்படாதே அம்மா என்று ஆறுதல் சொல்லித் தேற்றினர்.

ஜெகநாத ஷேத்திரத்தை அடுத்துள்ள சில பகுதிகள், கிரவுஞ்ச மன்னனது ஆட்சிக்கு உட்பட்டவை. அன்று வேட்டையாடுவதற்குரிய நாள். கிரவுஞ்ச மன்னன் சிலர் மட்டுமே புடைசூழ, அரண்யத்துள் புகுந்தான். எதிர்பாராத வகையிலே, எங்கேனும் நீர்நிலை உண்டோ! என்று தேடிவந்த அவன், ஏதோ ஓசை கேட்கிறதே என்று நினைத்து, அந்த பாழுங்கிணற்றருகே வந்தான். உள்ளே தவ ஒளி வீசும் மஹாதேஜஸ்வியாய் ஒருவர் வீழ்ந்து கிடப்பது தெரிந்தது.

அவன் சிறந்த சிவநேச செல்வன். ‘நீலகண்டா மகாதேவா’, யாரோ மகான் தான் தவறி வீழ்ந்திருக்க வேண்டும்! சிவபெருமானே இவனை ஆண்டருளும், என்று இறைஞ்சியவனாய், இன்னும் சற்று அருகே நெருங்கித் தானே இறங்கவும் முயற்சி செய்தான். இதற்குள் வீரர் இருவர் கிணற்றில் குதித்து, ஜயதேவரை மெல்லப் பிடித்து ஏற்றிக் கரை சேர்த்தனர்.

கரையை அடைந்த உடனேதான், அரசனுக்கு அவர் கை கால்கள் வெட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவன் அப்படியே அயர்ந்து போனான். நல்ல அரசாட்சியிலே இப்படிப்பட்ட கொடுமைகளும் நடைபெறுமோ, சிவ சிவ சிவ இதென்ன காலம்? இத்தகைய மகானுக்கு இவ்வளவு பெரிய கொடுமையை இழைத்தவர் யார்? என்று வாய்விட்டு கதறி விட்டான் கிரவுஞ்ச மன்னன்.

அப்பொழுதும் அவரது சமாதி நிலை கலையவில்லை. சில வினாடிகளுக்கு பிறகு கண் விழித்த அவர், ‘ஒருவரையும் குற்றம் சாட்டுவதிலே பயனில்லை, உழ்வினையும் எம்பெருமானது திருவுள்ளமும் இருந்தவாறு, இது இறைவனது பேரருளின் முன்னே இந்த உடலைப் பொறுத்த சிறு துன்பங்களான இவை என்ன செய்யும் அரசே, கோபம் வேண்டா, என் வினை இது, என்று கோபத்தால் கொதித்தெழுந்த மன்னனுக்கு அமைதி கூறினார் ஜயதேவர்’.
அடடா, இவர் யாரோ தெரியவில்லை, முற்றும் துறந்த மெய் ஞானியார் அல்லாவிடில், கால்களையும் கைகளையும் இழந்த இந்த நிலையிலே என்ன சாந்தம் என்ன அமைதி, பெரியார்கள் இப்படித் தான் இலைமறை காய்களாய் வாழ்கின்றனர், என்றெண்ணி, அவரருகிலே பணிந்தெழுந்தான் அரசன். பிறகு மெல்ல மெல்ல பல்லக்கிலே ஏற்றி, தனது நகருக்கு அழைத்து சென்று, தனது குருவாக்கிக்கொண்டான். அரண்மனை மருத்துவர்கள், உடலிலிருந்த காயத்தை ஆற்றினார்கள், ஏற்கனவே அவரது புகழை கேட்டிருந்த அவன், இதுவும் சிவபெருமான் திருவருள் தான் என்று மனதிட்கொண்டு, அவருக்கு தக்க பணிவிடைகள் செய்யலானான். முக்திக்கு வழி இவரது பணிவிடை தான் என்று நினைத்து துறவி போல் வாழ்ந்து வந்தான்.

ஆனால், ஜயதேவர், ‘அரசே இது உன் போன்ற அரசருக்கு ஏற்றதன்று உன் கடைமைகளைக் குறைவின்றிச் செய். குடிகள் நல்வாழ்வு வாழ வழி வகுப்பதே கொற்றவன் கடமை. ஆகவே அரசியலை முதலில் கவனி பிறகு ஆத்தும விசாரணை செய்யலாம்’, என்று உபதேசித்து அரசாங்கத்தை கவனிக்கும்படி தூண்டி, அதற்குரிய வழிகளையும் போதிக்கத்தொடங்கினர் கீதையினால் மனந்தெளிந்த அர்ஜுனனைப் போல, கிரவுஞ்ச மன்னன், ஜயதேவரது நன்மொழிகளினால் மனங்குளிர்ந்து, மீண்டும் அரசுரிமையை ஏற்று நடத்தலானான். பெரியோர்களது அருளாட்சியிலே குறைகளும் உண்டோ.

1.ஜயதேவரும் பதுமாவதியும்

அரசனது மனம் கவலையிலே ஆழ்ந்திருந்தது. கடந்த சிலநாட்களாக ஜயதேவரிடம், அவரது குடும்ப நிலையைப்பற்றிக் கேட்க வேண்டும், அதை அவர் மனம் நோகாமல் எவ்வாறு கேட்பது, என்ற சிந்தை தான். அன்று ஒருவாறு துணிந்து கேட்டு விடுவது என்ற முடிவுக்கு வந்தான்.
ஜெயதேவரது முகத்திலே இளநகை அரும்பிற்று. பதுமாவதியைப் பற்றிய

செய்திகளைக் கூற, அரசன் உடனே ஆட்களை அனுப்பி, அவளைத் தகுந்த மரியாதையுடன் அழைத்து வர ஏற்பாடு செய்தான். பிறகு மிகவும் மிருதுவான குரலிலே, நல்லோர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் கயவர்களுக்கு, ஏன் ஒருவிதமான தீமையும் வருவதில்லை! உங்களுக்கு இப்பெருந்தீமையைச் செய்தவர்கள் ஏன் அப்போதே எரிந்து சாம்பலாகிவிடவில்லை என்றான்.

ஜயதேவரது இதழ்களுக்கிடையிலே இளமுறுவல் தோன்றிற்று. அரசே ஓர் ஊரில் ஒரு குருவுக்கு ஒருவன் சீடன். அந்த குரு அவனைப் பல வகையாகச் சோதித்து பிறகு உபதேசம் செய்வது என்று ஒரு நாள் நிச்சயித்தார். அப்பொழுது அவனது வருங்காலத்தை ஞானதிருஷ்டியினால் பார்க்க, அம்மாணவன் அன்று இன்னும் சிறிது நேரத்தில் மரணமடைந்துவிடுவானென்பது தெரிந்தது. தனது அருமை மாணவன், அவ்வாறு மரிப்பதைக் குரு விரும்பவில்லை. ஆகவே வான வீதியிலே செல்லக்கூடிய குளிகை ஒன்றை மாணவனுக்கு கொடுத்து, தானும் ஒன்றை வாயில் அடக்கி வைத்து, மாணவனுடன் விண்ணுலகம் சென்றார். படிப்படியாக ஒவ்வொரு உலகினையும் கடந்து, பிரம்மலோகம் சென்று, பிரம்மதேவரிடம் மாணவனுக்கு ஆயுளை வேண்டி வணங்கி நின்றார். அவரோ நான் அன்று எழுதியதை அழித்து எழுவதில்லை என்றார். சித்திகள் பல பெற்ற குரு, அங்கிருந்து வைகுண்டமும் கைலாயமும் சென்றார். அவர்களும் கைவிரித்து விடவே, பின்னர் யமலோகம் சென்றார். அப்போதே மாணவன் உயிரிழந்து விட்டான்.

குருவிற்கு கோபம் பொங்கி எழுந்தது. அவரது பெருமூச்சினின்று எழுந்த கனல், யமலோகத்தையே எரிக்கத் தொடங்கி விட்டது. அஞ்சி நடுங்கியவனாய், கரம் குவித்து ஓடி வந்தான் காலதேவன். ‘பெரியீர், மாணவன் இறந்தற்கும் காரணம் நீங்கள் தான்! அசிரமத்திலிருந்தே நீடுழி வாழ வேண்டுமென்று உங்கள் திருவாக்கல் வாழ்த்தியிருந்தால், எல்லாம் வல்ல சித்தராகிய உங்கள் வாக்கு பலித்தே தீரும்! அவனுக்கு யமபயமே இல்லை! உங்களது அருள்வன்மையால் அவனுக்கு மும்மூர்த்திகளை தரிசிக்கும் பெரும் பேறு கிடைத்தது. யமபுரியின் வாயிலே மரணம் என்று அவனுக்கு விதித்திருந்தது. நீங்களே அழைத்து வந்து விட்டிர்கள். போகட்டும், உங்கள் மாணவன் மீது உங்களுக்கு உண்மையான அன்பு இருந்தால் இப்பொழுதேனும் அவனை தீர்காயுளுடன் வாழ வேண்டும் என்று ஆசீர்வதியுங்கள், என்றான் யமதர்மராஜன்.

குருவும் கண்ணீர்மல்க, நாத்தழுதழுக்கத் தமது மாணவனை ஆசீர்வதித்தார். மாணவன் விழுதெழுந்தான். இருவரும் மண்ணுலகிலுள்ள தமது குடிலை நோக்கி விரைந்தனர்.

அரசே, ‘இந்த கதையிலிருந்து விதி வலியது என்பது புலனாகவில்லையா’, இறைவன் திருஅருள் ஒன்று தான் விதியையும் மாற்றக்கூடியது. ஊழிப்பெருவொளி யாவுள என்பது தான் பெரியோர் போதனை! என் முன்வினைப்பயன் கைகளையும் கால்களையும் இழந்து வாழ வேண்டுமென்று வகுத்து விட்டது. இறைவனது திருநாமத்தின் துணையினால், இதை துன்பமென்று கருதாத ஒரு மனநிலையை நான் எட்டி விட்டேன். ஆகவே வருகின்ற நன்மை தீமைக்கெல்லாம் தலை வணங்கி, ஏற்றுக் கொள்வதே, நமது கடமை. இடுக்கண் வருங்கால் நகுக என்பது தான் பெரியோர் கருத்து, என்று சற்றே நிறுத்தினார் ஜயதேவர். மன்னனது மனம் தெளிந்தது.

‘ஊழிற்பெருவலி யாவுள’, என்ற சொல் கிரவுஞ்ச மன்னனது செவிகளுள் ஒலித்து கொண்டே இருந்தது. இத்தகைய மெய் ஞானியாரைத் தனக்குக் குருவாக அளித்த சிவபெருமானை வாயார வாழ்த்தினான்.

கிரவுஞ்ச மன்னனது பரிவாரங்கள், பில்காம் சென்று தேவியை அழைத்து வந்தனர். ஜயதேவர் அமர்ந்திருந்த இடத்தை நெருங்கி மும்முறை வலம் வந்து வணங்கி நிலந்தோய பணிந்து எழுந்தாள் அவள். ஆனந்த மிகுதியினால் அவள் கண்கள் நீரைப் பொழிந்தன. அவள் பணிந்து எழுந்து நின்ற போது தான் அவருக்கு கை கால்கள் இல்லாததைக் கண்டாள். ஐயோ! என்று அலறினாள்! அந்த சபா மண்டபம் முழுவதும் சிலை ஓடிற்று! நெடுமரம் போல் தரையிலே விழுந்து விட்டாள் பதுமாவதி. அவளைத் தூக்கி எடுக்க வேண்டுமென்ற ஆவல் அவர் நெஞ்சிலே பீரிட்டு எழுந்தது. அவர் தமக்கு கரங்களிலை என்பதனையும் மறந்து பதுமாவதி, என்று அழைத்து கொண்டே எழுந்திருக்க முயன்றார் அவர்.

மூர்ச்சையடையும் நிலையிலிருந்த பதுமாவதி, மெல்ல மெல்ல எழுந்தாள். எத்தகைய மாபாவிகள், உங்களுக்கு இந்த கொடுமையைச் செய்தவர்கள் என்று குமுறினாள்.

ஜயதேவர், மிகவும் அமைதியான குரலில், ‘பதுமாவதி இன்னல்கள் அலை அலையாய் வரும் என்பது உனக்கு தெரியாதா? இறைவன் நமக்கு அளித்திருக்கும் சோதனை இது. அவன் ஆட்டுவிக்க நாம் ஆடுகிறோம். பகவானையே நேரில் காணும் பேறு பெற்ற உனக்கு, இது விளங்கவில்லையா! நமது புராண புருஷர் பலர் பட்ட துன்பங்களின் முன் இது எம்மாத்திரம். இறைவனோ தொண்டர் உள்ளதொடுக்கம். அவன் எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் பார்க்கிறான். நம் உள்ளத்திலிருந்து நம் துயர்களையெல்லாம் பார்க்கிறான். பங்கும் கொல்கிறான். ‘பயக்ருத் பய நாசன’, பயத்தை உண்டாக்குகிறவனும் அவனே; பயத்தை போக்குகிறவனும் அவனே; எல்லாம் தெரிந்தும் ஏன் கலக்கம்? ஹரிச்சந்திரன் பட்டபாடு யாருக்குதான் தெரியாது. காட்டில் விலங்கறியும் கைகுழந்தையறியும். அது மட்டுமல்ல, புருருவ சக்ரவர்த்தியின் கதை நீ அறியாததா! இவர்களெல்லாருக்கும் மேல் நளமகராசன் பட்ட பாடு எத்தனை எண்ணத்தொலையாது; ஏட்டில் அடங்காது; கடைசியிலே அவன் தமிழ்நாட்டிலே திருநள்ளாறு என்ற திருத்தலத்திலே இறைவனை பூசித்து வழிபட்டபிறகல்லவா கலி நீங்கியது. நளன் கெளுவிய நள்ளாறே என்று அடியார், அந்த தர்பாரண்ய ஷேத்திரத்தை வழிபடுகின்றனர். இவைகளை எல்லாம் அறிந்த நீ இப்பிடிப் பேதையாய் வருந்துவாயா என்று கூறித் தேற்றினார்’.

மெல்ல மெல்ல அவள் மனம் தெளிந்தது. கணவருக்குப் பணிவிடை செய்வதே இனி நம் கடமை. அவருடைய கவிதைகளை ஏட்டிலே எழுதுவதும், அடியார் திருக்கூட்டங்களுக்கு அன்னம் அளிப்பதும், தான் இறைவனுக்குகந்த செயல் என்று மணந்தேறினாள். அவர்கள் வரவினால் நாடு செழித்து வருவதை எண்ணி எண்ணி உள்ளம் பூரித்தான், கிரவுஞ்ச மன்னன்.

2.கள்வர் பாதாளத்தில் அமிழ்ந்தது

ஜயதேவரைக் கிணற்றிலே தள்ளிய கயவர்கள், கிரவுஞ்ச மன்னனது நகரிலே, நாள்தோறும் சாதுக்களுக்குப் பொன்னும் பொருளும் வழங்கிகிறார்கள் என்பதைக் கேள்வியுற்றார்கள். கள்வர் தலைவன், ஒரு வேலையும் செய்யாமல் காவி உடுத்தி, ராமா கிருஷ்ணா கோவிந்தா என்று சொல்லிக் கொண்டு போனால், அழைத்து ஆதரித்து பொன் கொடுக்கிறார்களாம்! எவ்வளவு சுலபமான வழி! நாம் ஏன் நாள்தோறும் பயந்து இப்படித் திருடி பிழைக்க வேண்டும் என்று எண்ணினான்.

அவன் தன் தோழர்களையும் சாதுக்களாக மாற்றித் தானும் காவி உடுத்தி, கிரவுஞ்ச மன்னனது சபையை அடைந்தான். சாதுக்களிடமுள்ள அன்பின் மிகுதியினாலும் அரசரது ஆணையினாலும் தடையின்றி அவர்கள் அரண்மனையில் புகுந்து ஜயதேவரது இருப்பிடம் அடைந்தார்கள். சாதுக்களைக் கண்ட ஜெயதேவர் பெருமகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று உபசரித்தார். அப்போது திருடர் திகைத்தனர். நம்மால் வெட்டப்பட்டவனே இங்கு வள்ளலாய் வாழ்கிறான் என்று எண்ணி மெல்ல எழுந்து நழுவத் தொடங்கினர்.

வணங்க வந்தவர்கள் செல்லத்தொடங்குவதைக் கண்ட ஜெயதேவர், வாருங்கள் வந்து உட்காருங்கள் என்று உபசரித்தார். ஆனால் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்றபடி, அவர்கள் தவியாய் தவித்தார்கள்! அந்த சமயத்தில் அரசனும் வந்தான். அவர்களை வணங்கினான். அவர்கள் தவிப்பதை உணர்ந்தான். இதை மறைமுகமாக ஜயதேவருக்கு உணர்த்த முயன்றான். ஜெயதேவர் அதை அறிந்தும் பொருட்படுத்தாமல், அவர்களுக்குப் பொன்னையும் பொருளையும் ஆடைகளையும் கொடுத்து, அவர்களைத் தகுந்த காவலுடன் இருப்பிடம் கொண்டு சேர்க்க தன் வீரர்களுக்கு கட்டளை இட்டார். வீரர்கள் நகரத்தின் எல்லையை தாண்டி, வனத்துள் புகுந்தார்கள். அப்பொழுது திருடர் தலைவன், எங்களை இங்கேயே விட்டு விடலாம் என்றான். அதற்கு ஓர் வீரன், ‘ஏன் ஸ்வாமி இந்த ஜயதேவஸ்வாமியை உங்களுக்கு முன்னமே தெரியுமா, இவர் நீங்கள் ஓடி வர முயன்றதை தடுத்து நிறுத்தி, உங்களுக்கு இவ்வளவு பொருட்களை அளித்திருக்கின்றாரே’, என்றான்.

அதற்கு அந்த கள்வர் தலைவன், ஆம்! இவனை முன்னமே எங்களுக்குத் தெரியும். இவன் ஒரு பக்காத் திருடன். எங்கள் அரசரிடம் பெரிய ஞானி போல் நடித்து, கடைசியில் ரத்தினங்களைத் திருடி விட்டான். அவர் இவனை வெட்டி எறியும்படி உத்தரவு செய்தார். நாங்கள் தான் கொல்ல மனம் வராமல், இவனை முடமாக்கி விட்டுவிட்டோம், எங்கே தான் திருடன் என்பதை நாங்கள் காட்டிக் குடுத்து விடுவோமோ, என்று பயந்து எங்களுக்கு இவ்வளவு உபசாரம் செய்தான் என்றான்.

பரம பக்தராகிய ஜயதேவரை குறித்து, அவன் இவ்வாறு சொல்லி வாயை முடும்முன், அகழ்வாரைத் தாங்கும் நிலம், பொறுமையில் பூமி தேவி என்றெல்லாம் உலகத்தார் போற்றும் பூமிதேவி, தன் பொறுமையை இழந்தாள்! தடாரென்று ஓர் பேரொளி கேட்டது! அந்த பாதகர்கள் நின்ற இடம் பிளந்தது. அவர்கள் அப்படியே அந்த படுகுழியில் விழுந்து மறைந்தார்கள். வழி விட வந்த வீரர்கள் திகைத்து நின்றார்கள்.

ஜெயதேவர் தமது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். வந்திருந்த திருடர்களை பற்றியே அவர் மனதுள் சுழன்று கொண்டிருந்தது. காட்டிலே அவர்களுக்கு நேர்ந்த கதியை ஒரு சேவகன் வந்து தெரிவித்தான். அதைக்கேட்டு ஆச்சர்யத்தில் மூழ்கினான் கிரவுஞ்ச மன்னன். அடடா நாம் கண்டு கொள்ளாதது போல் அனுப்பியும், அவர்களுக்குத் தீங்கு நேர்ந்து விட்டதே என்று மனங்கலங்கினார் ஜெயதேவர்.

அடடா அப்படியா நடந்தது! அவர்கள் நம்மைத் தூஷித்ததனால், பூமிதேவி அவர்களுக்கு இடங்கொடுக்கவில்லை. அவர்கள் உண்மையான சாதுக்களே, நம் அதிதிகளாக வந்தவர்களிடம் எத்தனை குற்றங்குறைகள் இருந்தாலும், நமக்கு அவர்கள் அதிதிகளே, அவர்கள் நம்மால் வணங்கி வழிப்படத்தக்கவர்களே, அவர்களுக்கு அபசாரம் செய்து விட்டோமே என்று வாய்விட்டு அலறினார். பிறகு அரசனை நோக்கி, ‘அரசே அந்த பாதாள படுகுழியிலே அவர்கள் எவ்வாறு வீழ்ந்தார்களோ அவர்களை மீட்க முடியுமா என்பதையெனும் பார்ப்போம்’, என்று கூறி அவ்விடம் செல்லச் சித்தமாகும்படி, அவனுக்குக் கட்டளை இட்டார்.

அரசனும், ஜயதேவரும், வீரர்கள் புடைசூழக் காட்டில் கள்வர்கள் மறைந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அரசன் கள்வருக்கு நேர்ந்த கதியை எண்ணி மனம் வருந்தவில்லை; முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றே நினைத்தான். ஆனால் ஜயதேவரோ, அவர் எவராயினும் நம்மை நாடி வந்த விருந்தினர், இறைவனுடைய அடியார்கள், அவர்களுக்கு இந்தக் கதி நேர்ந்ததற்கு நாமே காரணம்! ஆகவே நாமும் இந்த படுகுழியிலே வீழ்ந்து மரிப்பதே இதற்கு பரிகாரம் என்றெண்ணித் தாமும் குழியில் குதிக்க முயலவே, அரசன் நீர் விழுவதானால் நானும் உயிர் விடுவேன் என்று சபதம் செய்ய, துயரம் தாளாத ஜயதேவர் மூர்ச்சித்துத் தடாலென்று கீழே விழுந்து விட்டார்.

கிரவுஞ்ச மன்னன் துடிதுடித்துப் போனான். ‘இவர் இறந்து விட்டாரோ’, என்ற சந்தேகமும் எழுந்தது. தனது இஷ்டதெய்வமான சிவபெருமானை நோக்கி, இறைவா இதுவும் நீதியோ, உன் அருளாட்சியிலே இப்படியும் நேரலாமா, என்று புலம்பி ‘சம்போ சங்கர மகாதேவா சிவ சாம்ப மகாதேவா’, என்று சிவநாமாவளிகளை நெஞ்சுருக அவன் வாய் இசைத்தது. சிரம் தாழ்ந்து கரம் குவிந்தன. கண்கள் பனிசோர, மெய்மறந்து, அவன் எவ்வளவு நேரம் துதித்தானோ தெரியாது!

அந்த வனத்திடையே, ஒரு சோதிப்பிழம்பு தோன்றியது. வெள்ளை வெளேறென்ற இடபத்தின் மீது கொண்டலும் மின்னலும் போல, உமையாளோடும் தோன்றினார் சிவபெருமான். ஜடாமகுடத்திலே இளம் பிறை துலங்க, இதழ்களிலே இள நகை அரும்ப, தம் கரங்களை உயர்த்தி, அன்பனே அஞ்சேல் அஞ்சேல் உன் உறுதிக்கு மெச்சினேன், உன் தவப்பயனே ஜயதேவரது நட்புச்செல்வம் உனக்கு கிடைத்தது, அவர் இறந்து விடவில்லை, அவர் செய்ய வேண்டிய செயல்கள் இன்னும் பல, முன்வினையால் இந்த கொடுமை வந்தது, கைகால்கள் முடமாயின, ஆனால் விரைவிலே அவர் கைகால்களைப் பெறுவார் என்று சொல்லி, ஜயதேவரது சிரத்திலே தமது திருக்கைகளை வைத்து ஜயதேவ கவியே எழுந்திரு என்று அழைக்க, அவர் விழித்தெழுந்தார். எதிரே நின்ற மான் மழுகையரைக் கண்டவுடன், ஆஹா என்ன பாக்கியம், என்ன பாக்கியம், இன்றே உடல் பெற்றதன் பயனைப் பெற்றேன், ஆண்டவனே உனது பேரருள் இருந்தவாறு தான் என்ன, அந்தத் திருடர்களால் அல்லவோ உன்னை தரிசிக்கும் பேறு கிடைத்தது, ‘சங்கரா சந்திரசேகரா சாம்பசிவா சதாசிவா உன்னையல்லாள் யார் எமைக் காப்பவர்’, என்று துதித்தார் அவர். துதிகளால் மகிழ்ந்த சிவபெருமான், ‘ஜயதேவா உனக்கு என்ன வரம் வேண்டுமோ கூசாமல் கேள்’, என்றார்.
ஆனந்த மிகுதியினால் ஜயதேவர் மனம் பூரித்தது. அவர், ‘ஆண்டவனே இந்தக் கள்ளர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்’, அதுவே நான் வேண்டும் வரம்! என்றார்.

ஜயதேவா உன் விருப்பம் நிறைவேறும். உன் பொருட்டு அப்பாபிகளையும் ஏற்கிறேன் என்றார் சிவபெருமான்.

ஜயதேவரது அகமும் முகமும் ஒருங்கே மலர்ந்தது. மஹாப்ரபு அவர்களாலல்லவா; எனக்கும் கிரவுஞ்ச மன்னனுக்கும் உன்னை நேரிலே காணும் மஹாபாக்யம் கிடைத்தது, இத்தகைய பெரும் பேற்றை எங்களுக்கு அளித்த அவர்கள் பாவிகளாவது எப்படி, என்று கூற சிவபெருமான் முகத்திலே இளநகை அரும்பியது.

கிரவுஞ்ச மன்னனுக்கு என்ன செய்வதென்றே விளங்கவில்லை. பேரின்பத்திலே மூழ்கித் திளைத்தான் அவன். இறைவரது தோற்றமும் அருள்மொழிகளும், அவனை மெய்சிலிர்க்கச் செய்தன. இன்ப மிகுதியினால் அவன் உள்ளம் பொங்கிப் பொங்கி எழுந்தது. இந்த நிலையிலே என்றென்றும் இருக்க விழைந்தது அவன் உள்ளம்! ஆனந்தக் கண்ணீர் பெருக, இறைவர் அருள் செய்ததை வியந்து வியந்து வாழ்த்தினான். ஜயதேவர் செய்ய வேண்டிய செயல்கள் உள்ளனவா அவர் மீண்டும் கைகால்களைப் பெறப்போகிறாரா என்பவைகளையெல்லாம் எண்ண எண்ண, அவன் உள்ளம் பூரித்தது. இந்த நிலையில் சிவபெருமான் எப்போது மறைந்தார், என்பதே அவனுக்குத் தெரியவில்லை. அப்போது விண்ணகத்தினின்றும் ஒரு குரல், ‘கிரவுஞ்சமன்னா நீ பாக்கியசாலி உனக்கு ஸ்ரீமந் நாராயணனது தரிசனமும் கிடைக்கும்’, என்று கேட்டது. இன்பத்தால் நிறைந்த மனத்துடன் குருவும் சீடருமான அவ்விருவரும், நகரை நோக்கி புறப்படலாயினர்.

மன்னனது அந்தபுரத்திலே பதுமாவதி தேவியும் அரசியும், அவ்வப்போது சந்தித்து அளவளாவி மகிழ்ந்திருப்பதுண்டு. அரசி, குருவின் பத்தினி என்ற மரியாதையுடன், பதூமவதிதேவியைத் தனக்கு நல்லுரைகள் கூறவும், புராணங்களின் சாரங்களையெல்லாம் எடுத்துரைக்கவும் வேண்டும், என்று கேட்பதுண்டு.

ஒரு நாள் நடுப்பகல். அரசியும் பதுமாவதி தேவியும், கற்புக்கரசிகளான சீதை சாவித்திரி சந்திரமதி இவர்களுடைய சரிதைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அரசி, அவை அந்தந்த காலத்திற்கு ஏற்ப நடைப்பெற்றன. பெண்கள் கணவனே தெய்வம் என்றும் அவனுக்கும் அவன் சுற்றத்தாருக்கும் பணிவிடை செய்தலே தங்கள் கடமை என்றும் நினைத்துத்தான், இப்போதும் வாழ்ந்து வருகின்றனர். தமயந்தியின் கற்புக்கனல் வேடனை எரித்தது. இப்பொழுது யாராவது அப்படிச் செய்ய முடியுமா என்றாள்.

உடனே பதுமாவதி தேவி, கற்புக்கரசிகள் எக்காலத்திலும் உண்டு! என்றாள். அதற்கு அரசி ‘அதோ தெரிகிறதே, அந்த வீட்டின் தலைவி தன் கணவனோடு சேர்ந்து உயிர் விடுவேன் என்றாள்’, அவளைத் தடுத்து நிறுத்துவதற்குள் போறும் போறும் என்றாகிவிட்டது. அப்படிப்பட்ட உத்தமிகள் கூட, நீங்கள் சொல்லும் புராணப் பெண்மணிகள் போல எரிக்கும் திறன் பெறவில்லையே என்றாள்.

அப்பொழுது பதுமாவதி, மிகவும் கனிவோடு, ‘அம்மணி, நான் சொன்னதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. தவறாகக் கருதி விட்டிர்கள்! உத்தமமான மனைவி கணவன் இறந்தபின் சககமனம் செய்வானேன்! கணவர் இறந்து விட்டார் என்ற சொற்கேட்டதும், தானாகவே அவள் உயிர் போய்விடும். இப்படிப்பட்டவர்களைத்தான் ஈருடலும் ஓருயிருமாய் வாழ்ந்தவர் என்பது என்றாள்.

அரசியின் முகம் கோபத்தால் சிவந்தது. இவளுக்குத் தான் பெரிய பத்தினி என்ற கர்வம், அதனாலே தான் சொற்கேட்டவுடனே உயிர் போய் விட்டதா என்று பேசுகிறாள். உயிரென்ன நாம் விரும்பினால் விட்டு விடக்கூடிய அற்பவஸ்துவா? அழகுதான்! மகா பதிவிரதையும் கடவுளையே மகனாக பெரும் பேற்றையுடைய கௌசல்யா தேவி தசரரோடு உயிரை விட்டு விட்டாளா? குந்திதேவி போன்றவர்கள் உத்தமமானவர்கள் அல்லவா? இவள் சொல்வது போலவே, உத்தமமான மனைவி, கணவன் படுந்துன்பத்தை தனதாகக் கருதுவானால், அவர் கைகால்களை இழந்து கிணற்றிலே கிடந்தாரே, அது இவளுக்குத் தெரிய வந்ததா, அப்பொழுது ஏன் இவள் உயிர் போகவில்லை, என்று நினைத்தவளாய் அங்கிருந்து எழுந்துச் சென்றாள்.

பிறகு தாதிகளை அழைத்து, ‘நீங்கள் ஒரு பட்சியைக் கொன்று, அதன் ரத்தத்தை ஜயதேவரது உடைகளிலே தெளித்து கொண்டு வந்து, அவரைக் காட்டிலே புலி அடித்து விட்டது என்று சொல்லுங்கள்’, என்றாள். உள்ளுரப் பயந்த தாதிகள் அரசியின் கட்டளையை ஏற்று அப்படியே செய்ய ஒப்புக் கொண்டார்கள்.

அரசி மீண்டும் பதுமவதிதேவியிடம் வந்து, அம்மணி காட்டிற்குச் சென்ற அரசரையும் கவிஞரையும் புலி ஒன்று வந்து தாக்கியதாம், அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று தெரிந்து வர, ஒரு தோழியை அனுப்பியிருக்கிறேன், என்று மிகுந்த கவலையுடன் சொன்னாள்.

பதுமாவதியின் முகம் சுண்டியது! என்ன புலியா! என்று திகைத்தவளாய், கண்ணா நீ தான் காப்பாற்ற வேண்டும், என்று புலம்பும் சமயம், தாதிகள் ஓடோடி வந்து, ஜயதேவரது உடைகளைக் காட்டி, அம்மா, கவிஞரைப் புலி கொன்று விட்டதாம்! இப்படிப்பட்ட மகானுக்கு இந்த துர்மரணமா நேர வேண்டும் என்று புலம்பினார்கள்.

என்ன கவிஞரைப் புலியா கொன்றது? இது உண்மைதானா என்று கேட்ட பதுமாவதியின் கண்கள், அப்படியே திகைத்தபடி நின்றன. அவரைப் பிரிந்தும் நான் உயிருடன் இருக்க வேண்டுமா, என்ற தீனமான குரல் அவள் வாயினின்று எழுந்தது. அவ்வளவு தான், தடாலென்று, அவளது உடல், பூமியிலே சாய்ந்தது, மூச்சும் பேச்சும் நின்று போயின. உயிர் உடலை விட்டு பறந்து போயிற்று.

அரசி அவளைத் தாங்க கைகளை நீட்டினாள். ஆனால், பதுமாவதியின் உயிரற்ற உடல் தான், அவள் மீது விழுந்தது. ஐயோ கற்புக்கரசியின் பெருமையை அறியாமல், மோசம் போனேனே; விளையாட்டு வினையாகி விட்டதே; அரசர் வந்தால் என்ன சொல்லுவேன், என்று தவிக்கலானாள் அரசி.
அப்பொழுது அங்கே வந்த ஒரு பெரியவர், இப்பொழுது ஒரு சோதி, இங்கிருந்து கிளம்பி வானை நோக்கிச் செல்வதைப் பார்த்தேன். அது பதுமவதிதான் என்றாலும், ஜயதேவர் வரப்பிரசாதம் பெற்ற கவிஞர், அவர் எழுந்திருக்க வேண்டும், என்று ஒரு கவிதை பாடினால் அவள் பிழைத்து விடுவாள். நீ வருந்திப் பயந்து உயிரை மாய்த்து கொள்ள நினைக்காதே, அவர் வந்ததும் உள்ளதை உள்ளபடி சொல்லி விடு என்று சொன்னார். அரசியோ ஒரே கவலையிலே ஆழ்ந்தவளாய்ப், பதுமவதிதேவியின் மிருத சரீரத்தை ஓர் அறையிலே வைத்துப் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யலானாள்.

அரசரது மனமும், கவிஞரது மனமும், ஆனந்தமிகுதியினால் நிறைந்திருந்தன. சிவபெருமானது அற்புத காட்சியும், அவர் பேரருளும், கவிஞருடைய கண் முன்னே நர்த்தனம் செய்தன. அரசனோ, அதுமட்டுமின்றி, என்ன வரம் வேண்டும், என்று கேட்டதற்கு. ஜயதேவர், திருடர்களுக்கு நற்கதியளிக்கவேண்டும் என்று கேட்ட பெருந்தகைமையை எண்ணி எண்ணி வியந்தான்.

இதற்குள் பதுமாவதியின் மரணச்செய்தியும் அரசியின் மதியீனமான செயலும் ஊர் முழுவதும் பரவி விடவே, அரசன் வந்ததும் என்னென்ன விபரீதங்கள் நிகழுமோ என்று மக்கள் தவியாய் தவித்தார்கள். நாட்டை அடைந்த அரசன் வழக்கத்திற்கு மாறாக நாடு களையிழந்து காணப்படுவது கண்டு, தேரை விட்டு இறங்கி, என்ன என்று கேட்கச் சொன்னான். கேட்பவர்களுக்கு ஒருவரேனும் விடையளிக்கவில்லை.

அரசன் தானே நேரில் கேட்க, அரண்மனை செல்லுங்கள் தெரியும், என்ற மறுமொழியே கிடைத்தது. என்ன தான் நேர்ந்திருக்கும்; மக்கள் இப்படி ஒன்றும் சொல்லாமல் திகைப்பதற்குக் காரணம் என்ன; என்று சிந்தித்தவனாய் அரண்மனை அடைந்தான். அரசியின் அலறல் அவன் செவியிலே விழுந்தது. தோழிகள் ஒருவாறு செய்தியைச்சொல்ல, அடடா இதென்ன பேதைமை! தீராப்பழியையும் அந்தணரைக்கொன்ற பாபத்தையும் தேடி வைத்து விட்டாயே! அடிப்பாவி நீயும் ஒரு பெண்ணா எனக்கதறி மூர்ச்சையாகிவிட்டான்.

ஜயதேவரோ அப்போதே விஷயம் விளங்கப்பெற்றவராய், ‘ஆ பதுமாவதி, நான் இறந்தேன் என்று கேட்டதும், உயிரைவிட்டாயோ பதுமாவதி சரண சாரண சக்ரவர்த்தி என்று என்னை பெருமிதத்துடன் பேசி கொண்டேனே, ஏ பதுமாவதி, என்னைப் பிரியும் காலமும் வந்ததோ, என் பக்தி பயிருக்கு ஓர் வான்மழையாய் இருந்து வாழ்வித்த என் கண்மணியே போய்விட்டாயோ; நீ இல்லாவிடில் பூவேது பூசனை தான் ஏது; யமுனைத் துறைவனை நான் புகழ்ந்து பாடுவது தான் ஏது; கண்ணன் கழலிணைகளையே எண்ணும் என் கண்ணின் கருமணியே, என் இனிய ராதிகையே போதியோ போதியோ என்று அலறி விட்டார். என்ன தான் ப்ரஹ்மஞானி என்ற பெயர் பெற்றாலும், மனைவியின் பிரிவையும் பரிவையும் மறக்கமுடியுமோ! பதுமாவதி என் இன்னுயிரே பதுமாவதி என் இல்லொலியே, என்று புலம்பிப் புலம்பி, கண்ணீர் சொரிந்தார் ஜயதேவர்.

இதற்குள் அரசன் மூர்ச்சை தெளிந்தான். அரசியின் மீது கோபம் பொங்கி எழுந்தது. ‘பாவி உன்னைக் கண்டதுண்டமாய் வெட்டினாலும் பாவமில்லை’, என்று கத்தியை உருவி, அவள் மீது பாய்ந்தான் அரசன். அரசன் எழுந்ததும், ‘ஓ ஜயதேவ ஸ்வாமி என்னைக் காப்பாற்றும்’, என்று அரசி கூறியதும், அரசன் கோபம் கண்டு ஜயதேவர் தடுக்கப் பாய்ந்ததும், ஒரே கணத்தில் நிகழ்ந்தன. தாம் முடவர் என்பதையும் மறந்து, ஜயதேவர் தடுக்க எழுந்த அந்த கணத்திலே தான் அற்புதம் நிகழ்ந்தது! ஜயதேவரது கைகள் அரசனைத் தடுத்தன. கால்கள் நடந்தன. ஜயதேவர் அரசன் கைகளைப் பற்றித் தடுத்து நின்றார். அவரது மலரடிகளில் வீழ்ந்து கிடந்தாள் அரசி.

இந்த நிலையிலே, ஜயதேவர் இவைகளிலே மனம் பதியாதவராய், கைகளால் அரசனைப் பற்றிய வண்ணம், ‘ஜெகநாதா அன்று மீனமாகி உலகைக் காத்தாய்’, இன்று எங்களைக் காப்பது உனக்கு பாரமா என்று கேட்பது போலவே இறைவன் தசாவதாரங்களையும் முன்பு கீதகோவிந்த மஹாகாவியத்திலே துதித்தது போல மீண்டும் துதிக்கலானார். அரசரது மனம் சற்றே அமைதி அடைந்தது. தன் கரங்களைத் தடுத்த அவர் பொற்கரங்களை விடுவித்து கொண்டு, சிவபெருமான் அருள் பலித்து விட்டது, கவிஞர் கைகளும் கால்களும் வந்து விட்டன! இவரை இனி பதுமாவதி இருக்குமிடம் அழைத்து செல்வோம், என்றெண்ணி, அவரை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, ஜயதேவர் அங்கே மீண்டும் துதிகளை பொழிய, இறைவர் அங்கேயே ஓர் ப்ராஹ்மண வடிவந்தாங்கி வந்து நின்றார். கண்மூடி மௌனியராய் நின்ற ஜயதேவர், அந்தணர் வந்ததை அறியாமல் மனம் உருகிப் பாடிய வண்ணமே நின்றார்.

ஜயதேவா உனக்கு என்ன வேண்டும் என்று அந்தணர் கேட்க, கண்களைத் திறந்தார் ஜயதேவர். ‘ஜெகந்நாதா உன்னையே நேரில் கண்ட பிறகு வேறு வரமும் வேண்டுமா உன் திருவடிகளை அடைவது தான் என் வாழ்க்கையின் லட்சியம் நீயே வந்து விட்டாயே வேறு என்ன வேண்டும்’, என்று பகவானது தாள்களில் வீழ்ந்து வணங்கினார் ஜயதேவர்.

இறைவர், அந்தணக்கோலம் மாறி, சங்குசக்ர கதாபாணியாய், நீலமேகம் தவழும் நெடும்பொற்குன்றம் போல் நின்றார். அவர் முகத்தில் முறுவலுடன், ‘ஜெயதேவா, உன்னால் செய்ய கூடிய செயலுக்கு என்னை அழைப்பானேன். பதுமாவதியை உயிர் பெறச் செய்ய உன்னால் முடியாதா’, ‘நான் செய்தேன் என்ற அகம்பாவம் வந்துவிடும் என்றல்லவா, என்னை அழைத்தாய்’, என்று சொல்லி பதுமாவதி இன்னுமா தூக்கம் என்றார். பதுமாவதி உயிர் பெற்றெழுந்து நின்றாள். வணங்கினாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இறைவர், மூவருக்கும் ஆசி கூறி, ஜெயதேவா உன் கல்வியையெல்லாம் உன் அழகிய அனுபவங்களையெல்லாம் குடத்தில் விளக்காக வைக்காமல், குன்றின் மேலிட்ட விளக்கு போல், மக்களுக்கெல்லாம் வாரி வாரி வழங்கு, என்று சொல்லி மறைந்தார். ஜயதேவர் அனந்தத்தினால் மெய்மறந்தார். கண்ணனது பெருமையைப் பாடும் பாகவதப் புராணத்தைப் பாட வேண்டும் என்று நெடுநாளாய் எண்ணிக் கொண்டிருந்தார். இறைவர் இவ்வாறு கூறவே மீண்டும் அதையே செய்ய அவர் மனம் விழைந்தது.

3.ஜயதேவர் பாகவதம்

இறைவர் திருவிளையாடல்களையும் ப்ராஹ்மஞானத்தை பெறும் வகையையும் ஒருங்கே எடுத்துரைக்கும் நூல் ஸ்ரீமத்பகவாதம். அவதாரங்களிலே நிகழ்ந்த அற்புதங்களையெல்லாம் அதிலே காணலாம். பகவானது கட்டளைப்படி, அந்தத் தெய்வத் திருநூலைப் பாமரரும் அறிந்து உய்யும் வண்ணம் ஜயதேவர் பாடிமுடித்தார். பின்பு அரசனிடம் சென்று, இந்த பாகவதக் கதையை இசையோடு நல்ல முறையிலே விளக்கம் கூறிப் பிரசங்கம் செய்யக் கூடிய பெரியவர்கள் கிடைப்பார்களானால் சபையிலே வாசிக்கலாம் என்றார் ஜயதேவர்.

சபை நிறைந்திருந்தது. வித்துவான்கள் கூடியிருந்தார்கள். பக்தி மிகுந்த தொண்டர் கூட்டத்திலே, முதலாசிரியர்களையும் விஞ்சி விளக்கம் சொல்லும் உரை ஆசிரியர்களும் இருக்கலாம், என அரசன் நினைத்த சமயம், ஓர் அந்தணர் வந்து சேர்ந்தார். வந்தவர் அரசனை அணுகி, அரசே நான் இருப்பது கோகுலம், நான் எல்லா சாஸ்திரங்களையும் கற்றிருக்கிறேன், ஊரூராகச் சென்று பல பண்டிதர்களுடன் விவாதித்திருக்கிறேன், இந்த சமஸ்தானத்திலே ஜயதேவர் என்று ஒருவர் இருப்பது தெரிந்து அவருடன் தர்க்கம் செய்யவே வந்தேன் என்றார்.

அவரது முகப்பொலிவைக் கண்ட ஜயதேவர், அவரை வணங்கி, ‘பெரியோரே ஜயதேவன் பண்டிதன் அல்லன்! உங்களைப்போன்ற பெரியார்களுக்குத் தொண்டு செய்வது தான் அவன் வாழ்கை லட்சியம். அடியேன் தான் அந்த ஜயதேவன்’, என்று மிகுந்த பணிவுடன் சொன்னார்.

அந்தணரது புருவங்கள் சுருங்கின. கண்கள் சிவந்தன. நீ இப்படிப் பணிந்து பேசித்த்தான் உலகத்தை ஏமாற்றி வருகிறாய். உன் தந்திரம் என்னிடம் பலியாது. உன் கையில் இருப்பது என்ன சுவடியா இங்கே கொடு பார்க்கலாம் உன் அறியாமையை எடுத்து காட்டுகிறேன்; அதில் உள்ள குறைகளையெல்லாம் அம்பலமாக்குகிறேன் கொடு என்று கைகளை நீட்டினார்.

ஜயதேவர் மிகவும் தணிந்த குரலில் ‘நான் சிறியவன். ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டியபடி கண்ணபிரான் திருவிளையாடல்களைப் பாடியிருக்கின்றேன். உங்களைப் போன்ற பெரியோர்களிடம் காண்பிக்கவே கொணர்ந்தேன் நீங்கள் பார்த்து ஏற்றுக் கொள்ள வேண்டும்’, என்றார்.

அதற்கு அவர், பாகவதத்தை நீ புதுப்பித்திருக்கிறாயா, அழகு தான்! அவ்வளவு தைரியம் உனக்கு வந்து விட்டதா; சரி சரி நீயே அதை வைத்துக்கொள்; பழைய பாகவத ஸ்லோகங்களை நான் சொல்லிக்கொண்டே வருகிறேன். அவற்றை நீ எழுதிய ஸ்லோகங்களுடன் ஒப்பிட்டுப் பார். நீயே உனது அறியாமையை உணர்ந்து கொள்வாய், என்று சொல்லி பாகவத ஸ்லோகங்களை ஒவ்வொன்றாகச் சொல்லத் தொடங்கினார்.

என்ன ஆச்சரியம், அவர் பாடியது பழைய பாகவதமன்று! ஜயதேவர் எழுதியதையே அவர் சொல்லி வந்தார். அந்த அந்தணர் பாடிய ஸ்லோகங்களை, சபையோர் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தனர். அங்கங்கே சுரக்கம்பமும் சிரக்கம்பமும் செய்தனர். இந்த அற்புதமான கதையை கேட்ட சிவபெருமானும் அங்கே தோன்றினார். கண்ணபிரானைத் துதித்திருக்கும் இனிமையிலே மூழ்கி தாமே மெய்மறந்து விட்டார் அந்த அந்தணர். அப்பொழுது வந்தது இறைவரே என்று கண்டுக்கொண்டார் ஜயதேவர். சிவபெருமான் ‘ஏ ஜனார்தனா உன் மாயை யாருக்குத் தெரியும் உன் அருளை நாடி தவமிருக்கும் ஜயதேவனை ஆசிர்வதிப்பாய்’, என்றார்.

அதைச் செவியுற்ற பகவான், ‘அப்பா ஜெயதேவா நீ பாடியவற்றை நானே அரங்கேற்ற வேண்டும் என்ற ஆவலிலே தான் பார்ப்பனர் கோலம் தரித்து வந்தேன். சுகமுனிவரது பாகவதம் முழுவதையும் படித்த பயனை, உன் உன் பாகவத்தின் ஓர் அத்தியாயத்தைப் படித்தவர்கள் அடைவார்கள்; என்ற வரமும் தந்தேன், என்றார். ஒரு புறம் சிவபெருமானும் ஒரு புறம் நாராயணனுமாகக் காட்சியளித்து மறைந்து போனார்கள். ஆனந்த மிகுதியினால் மலர்ந்த கண்களுடன் அவர்கள் நின்ற இடத்தையே நெடுநேரம் பார்த்திருந்தனர் அரசனும் ஜயதேவரும். சபையோர்களோ எதிர்பாராமல் தமக்கு கிடைத்த திவ்யதரிசனத்தால் மெய்மறந்தார்கள்.

4.புனல் வாதம்

ஜயதேவர் பாகவதத்தை பாடி முடித்த பின், புதியதோர் கவலை பிறந்தது. ஏற்கனவே தாம் பாடியுள்ள கீதகோவிந்தத்திலே தாம் ராதையின் திருவடிகளை இறைவன் முடி மீது வைக்கும்படி வேண்டியதாக ‘ஸ்மரகரள கண்டனம் மமசிரசிமண்டனம் தேஹிபதப்பல்லவ முதாரம் சாருசீலே பிரியே சாருசீலே’, என்று எழுதிய அடிகளைப் பற்றிய கவலை தோன்றியது. இறைவரே எண்ணெய் கையேடு எழுதியும், அவர் சந்தேகம் தீரவில்லை! அக்காலத்திலே காசியிலே பண்டிதர்களும் ப்ரஹ்மஞானிகளும் மிகுதி. தாம் எழுதியதை மறைத்து வைத்துத் தமது கவிதைகளுக்கு ஆதாரம் தேட விரும்பினார் அவர். ஆகவே காசிக்குச் செல்ல விரும்ப, அரசனும் உடன் வரக் காசியை அடைந்தனர் முறைப்படி விசுவநாத பெருமானை வணங்கி வழிபட்டனர்.

இரவு, ஜயதேவர் நித்திரையில் சிவபெருமான் தோன்றி, என் மீது ஐந்து அஷ்டகங்கள் பாடுவாயானால், உன் சந்தேகத்தை தெளிவிக்கிறேன் என்றார். விழுதெழுந்த ஜயதேவர், உடனே ஐந்து அஷ்டகங்களை பாடி முடித்தார். சற்று நேரத்திற்கெல்லாம் மாணவர் குழாம் புடைசூழ ஒரு முதியவர் இவர்கள் இருக்குமிடம் வருவது தெரிந்தது. ஒரு மாணவன் உள்ளே வந்து, ‘எங்கள் குருநாதர் வருகின்றார், உலகில் எல்லாருடைய சந்தேகங்களையும் போக்குவதனால் சந்தேக நிவர்த்தி குடார பண்டிதர் என்று உலகம் அவரைப் புகழ்கிறது அவர் உங்களைக் காணவே வந்திருக்கிறார்’, என்றான்.

முறைப்படி வரவேற்றார் ஜயதேவர். குடார பண்டிதர், தாம் வந்ததோடு அல்லாமல், காசிவாசிகளான பண்டிதர்களனைவரையும் அழைத்து, பண்டிதர்களே கேட்டீர்களா! இந்த அதிசயத்தை! வேதங்களின் முடிமீது இறைவன் திருவடிகள் இருப்பதாக சாஸ்திரங்கள் பேசுகின்றன. ஆனால் இவன் தன் பாடலிலே இறைவனது திருமுடி மேல் இராதையின் திருவடிகள் இருப்பதாக எழுதியிருக்கிறான் இது நியாயமா என்றார்.

பண்டிதர்கள் முகத்திலே அருவருப்பு, ‘அபசாரம் அபசாரம் எந்த மூடனும் இப்படிப் பாட மாட்டான்’, என்றனர்.

ஜயதேவரது முகம் வெட்கத்தினால் குன்றியது. தாம் மறைத்து வைத்த செய்தி எவ்வாறு அம்பலமாயிற்று, என்பதை அறியாதவராய்த் திணறலானார் அவர். உடனே குடார பண்டிதர் மிகவும் ஏளனமாக குரலில், ஜெயதேவா மறதியினால் பாடி விட்டாயோ, என்று கேட்டபின் பண்டிதர்களே இவன் இப்படியே ஊரை ஏமாற்றி வருகிறான். ஸ்ரீமத் பாகவததிற்கு எதிராக இவனும் ஒரு பாகவதம் பாடியிருக்கின்றானாம்! இவனுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்! இவன் பாடல்களை முதலில் புனல் வாதம் செய்வோம். கங்கையின் பிரவாகத்திலே அவைகளை எறிவோம். ஏடெதிர்த்து வர வேண்டும், கங்காதேவியே தன் வாக்கினால் ஏற்றுக்கொண்டேன் என்று சொல்ல வேண்டும் அப்படியில்லாவிடில் அந்தப் பாகவதத்தையும் எடுத்துக் கங்கையிலே எரிந்து விடுவோம் என்றார்.

பண்டிதராய் வந்த சிவபெருமான் கீத கோவிந்தத்தை எடுத்து கங்கையை நோக்கி, ‘கங்காதேவி இவைகள் நல்ல கவிகளானால் என்னிடம் கொடு’, என்று வீசி எறிந்தார். ஒரு விநாடியிலே சுவடிக்கட்டுத் தண்ணீரிலே மூழ்கி மறைந்தது. மறுவினாடி ஓர் அழகிய சிறு பெண் வெள்ளைச் சேலை ஈரத்தினால் உடம்போடு இசைய, பாதரசங்கள் குலுங்கக் கையில் சுவடியுடன், இவர்கள் நின்ற இடைத்தருகே கரை ஏறினாள். பண்டிதரே குடார பண்டிதரே, இவைகளுள் ஒரு குற்றமும் இல்லையே, என்று சொல்லி அவரிடம் ஏட்டை அளித்தாள் அந்தச்சிறுமி. பண்டிதர் அப்பொழுதும் தணியவில்லை. கங்காதேவி நீ சிவபெருமானின் முடி மீதே எப்போதும் இருக்கிறாய்! ஆகவே உன் திருவடி முடி மீது படுவது குற்றமாக நீ கருதவில்லை! ஆனால் ராதையை பற்றி இப்படிப் பாடுவது தவறுதான் என்று சொல்லி அவள் அளித்த ஈரச்சுவடிகளை மீண்டும் எறிய மூன் வந்தார் சந்தேகக் குடாரபண்டிதர். ஐயா நில்லும் நில்லும் என்ற ஒலியுடன் எங்கிருந்தோ ஓடி வந்தான் கண்ணன். வைஜயந்தியும் வனமாலையும் அசையத் தன் இருக்கரங்களையும் நீட்டி அவர் கைசுவடியைப் பற்றிக்கொண்டான் பண்டிதரை ஏறிட்டு நோக்கினார்கள் ஜயதேவரும் மற்றவர்களும், ஆனால் அவர்கள் கண்டதென்ன?

ஸ்ரீ விசாலாக்ஷி தேவியோடு விசுவநாதரும், ராதாஸமேத கிருஷ்ணனும், முகத்தில் முறுவல் தவழ அங்கே நின்றனர். ‘ஜெயதேவா உன் பாடல்களைப் பாடும் அடியார் குழாம் எல்லாப் பெருஞ்செல்வமும் பெறட்டும்’, என்ற ஆசிமொழி அந்த நதிதீரத்திலே ஒலித்தது.

5.உபதேசங்களும் முக்தியும்

இதன்பின் கிரவுஞ்ச மன்னனும், ஜயதேவரும் காசியிலிருந்து புறப்பட்டுப் பாரத நாடு முழுமையுமுள்ள பல தலங்களையும் தரிசித்து, அங்கங்கே உபதேசங்களும் செய்து. வாரணாசியை வந்தடைத்தனர். பின்பு ஜயதேவஸ்வாமி, அரசனுக்குரிய நல்லறங்களையெல்லாம் கிரவுஞ்ச மன்னனுக்கு உபதேசம் செய்ததோடு, மற்றுமுள்ள மக்களுக்கும் வையத்துள் வாழ் வாங்கு வாழ்வது என்பது என்ன மனிதனது லட்சியம் எது பிறவிப் பெரும் பயம் என்பது எதைக் குறிக்கிறோம் என்பவைகளையெல்லாம் தெளிவாக விளக்கினார். மேலும் பிரமம் என்று பெரியோர் எந்த மெய்ப்பொருளைக் குறிக்கின்றனர் பிரமத்தை அறிந்தவன் பிராமணன் என்ற சொல் எப்படி எழுந்தது என்றும்,
‘ஓம் எனப் பெரியோர்கள் என்றும்
ஓதுவ தாய்வினை மோதுவதாய்த்
தீமைகள் மாய்ப்பதுவாய்த் துயர்
தேய்ப்பது வாய் நலம் வாய்ப்பதுவாய்
நாமமும் உருவும் அற்றே மனம்
நாடரி தாய்புந்தி தேடரிதாய்
ஆமெனும் பெருளணைதாய் வெறும்
அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய்
நின்றிடும் பிராமம்யென்பர் அந்த
நிர்மலப் பொருளினை நினைத்திடுவோம்
நன்றுசெய் தவயோகம் பர
ஞானமும் பக்தியும் நணுகிடுமே’,
என்று பெரியோர்கள் எடுத்துரைத்த தத்துவங்கள் இன்ன என்றும், இறைவனை அடையும் வழிகளாகிய ஒன்பது வகையான வழிகளில், ‘தாஸ்யம் பாதசேவனம் ஸக்யம் ஆத்மநிவேதனம்’ என்பவைகளே, இக்கலியிலே சுலபமாகச் செல்ல கூடிய வழிகள் என்றும் உபதேசித்தருளி, மக்களை உய்வித்தார். இப்படி வாரணாசி என்ற காசிநகரிலே இறைவனது திருபுகழினைப் பாடியருளினார். இப்படியே ஒரு சுபதினத்திலே ஸ்ரீகீத கோவிந்தத்தைப் பாடியபடியே, தம்பதிகள் இருவரும் கண்ணபிரானது அருளோடு, பூத உடலைவிடுத்தனர்.

ஜயதேவர் மறைந்து விட்டார். ஆனால் நம் எண்ணங்களிலும் ஏடுகளிலும் என்றென்றும் வாழ்கிறார் அவர். அவர் அமரராகி இன்றும் நம்மை நல்வழிப்படுத்துகிறார். அதோ வீதியிலே செல்லுகிறார். பாகவதர் ஜால்ராவின் ஒலி ஜல் ஜல் என்று கேட்கிறது, தோடியிலே,
‘சஞ்சர ததர ஸுதா மதுரத்வனி
முகிரித மோகன வம்சம்
சந்தன பிந்து லலாடம்’
என்ற கீதம் காற்றிலே தவழ்ந்து வருகிறதே அது யாருடைய கவிதை?
**************************ஜெய் ஜெய் ஜயதேவ நமோஸ்துதே*********************************************

 

2
ஸ்ரீ கபீர்தாஸர்
“நாடிய பொருள்கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம் விடியல் வழிய தாக்கும் வேரியங் கமலை நோக்கும் நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவார்க்கே”.
கதையில் வருபவர்கள்
தமால்: கபீர் தந்தையார்
கபீர்: கவிஞரான பக்தர்
கமால்: கபீர் புதல்வர்
கோரக்கர்: ஒரு சித்த புருஷர்
இராமானந்தர்: கபீருடைய குருநாதர்
ஜிஜ்ஜா பீபீ: கபீருடைய தாயார்
சுந்தரா: கபீருடைய மனைவி
கதை நிகழுமிடம்: வாரணாசி என்னும் காசி ஷேத்திரம்
தோற்றுவாய்

கபீர்தாசர் என்னும் பெயரை எண்ணும் பொழுதே, இறைவன் ஸ்ரீ ராமபிரானது உருவம் நம் கண் முன்னே தோன்றுகிறது. கபீர்தாஸருடைய கவிதைகள், பாரத நாடு முழுவதும் பரவியிருப்பதைக் காணலாம். இவரது மதத்தை சூஃபி தத்துவத்தை தம்முட்க்கொண்டது என்றும் கூறுவர். இவர் பிறவியிலே முஸல்மான். தெய்வ பக்தியிலே இவருக்கு இணை இவர் தாம்! இவர் கவிதைகளை கேட்போர் மெய்மறக்கச் செய்யும் மந்திர சக்தி வாய்ந்தவை. இராமன் என்று வேண்டுமானாலும் சொல், ரஹீம் என்று வேண்டுமானாலும் சொல், இறைவன் ஒருவனே என்பதே இவர் கொள்கை. இவரது மதத்தை கபீர் பந்த் என்றே வழங்குகிறார்கள். இன்றும் பல்லாயிரக்கணக்கான மெய்யடியார், இவரது மார்க்கத்தை கடைப்பிடித்து, பக்தி செய்து, பேரின்பப் பெருவீட்டை அடைய காத்து நிற்பதைக் காண்கிறோம். பஜனை சம்பிரதாயத்திலும் ஹரிகதா காலக்ஷேபங்களிலும் கபீர்தாஸருடைய பாடல்களே நிறைந்து நிற்கும். இத்தகைய மகானது வரலாறு இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டியாகும்.

1.கபீர்தாஸரது இளமை

வாரணாசி என்னும் கசியம்பதியிலே, தமால் என்னும் பெயர் பூண்ட முஸ்லீம் பெரியவர் வாழ்ந்து வந்தார். அவர் குற்றமற்ற தொழிலாகிய நெசவுத் தொழிலைச் செய்துவந்தார். அவர் மிகுந்த தெய்வபக்தியுள்ளவர். அவர் மனைவியார் ஜிஜ்ஜா பீபீ என்பவர். கணவருக்கேற்ற மனைவியார். கிடைத்ததிலே திருப்தி கொள்ளும் மனமுடையவர். வறுமையிலும் செம்மையான வாழ்வுடையவர். நாள்தோறும் பக்கிரிகளுக்கு அன்னமிடாமல் உண்ணாதவர்.

நெடுநாட்கள் வரை அந்த வீட்டிலே மைந்தன் இல்லை. தம்பதியர் இருவரும் முதுமையை அடையும் சமயம், ஒரு நாள் விருந்தினராக வந்த ஒரு பெரியவர், இந்த விருந்தோம்பலை உங்களோடு நிறுத்தி விட இறைவன் விரும்ப மாட்டார்! இந்த மாபெரும் கைங்கர்யத்தை தொடர்ந்து நடத்த உங்கள் மகன் வருவான், என்று ஆசி கூறிச் சென்றார். ஜிஜ்ஜா பீபியின் மனம் நிறைந்தது. ஆனால் தமாலோ பரிசாகமாக நகைத்து, ‘மைந்தனா இந்த முதுமையிலா’, என்றார்.

பெரியோர் ஆசி பலிக்கும் என்று நீங்கள் பலமுறை சொன்னதுண்டல்லவா, அதுபோலவே இதுவும் பலியாதா என்றார் ஜிஜ்ஜா பீபீ.

தமால் மனம் நொந்தவராய், நெய்வதற்கு உரிய நூல்களை அலசும் பொருட்டு, கங்கைக்குச் சென்றார். அங்கேயும் பலர் மக்களை வேண்டி வழிபடுவதுகண்டு, அவருக்குக் கோபம் வந்தது. காசிக்கு வந்தும் கர்மம் தொலையவில்லையே, மக்கள் மக்கள் என்ன உலக ஆசை என்று நினைத்து, சற்றே நின்றார் அப்பொழுது தண்ணீரில் விழுந்த நூல் சுருளைக் கங்கை இழுத்து போய் விட்டது.

தமால் அடடா இந்த வேண்டாத எண்ணங்களால் அருமையான பட்டுநூல் ஆற்றோடு போயிற்றே, இது இருந்தால் ஐம்பது பக்கிரிகளுக்கு ஆகாரமாகுமே, என்று வருந்தி அந்த நூல் சுருளைத் தொடர்ந்து, கரை ஓரமாகவே ஓட்டமும் நடையுமாய் விரைந்தார். நூல் சுருள் கண்ணுக்கெட்டாதபடி மறைந்தே போயிற்று! அவர் மனத்திலே ஏக்கமும் விரக்தியும் எழுந்தன. அவர் ஓடி நின்ற இடம், ஆரண்யத்தின் ஒரு பகுதி, அங்கே ஓர் அழகிய பர்ணசாலை இருந்தது. வீடு திரும்பி என்ன பயன் இங்கேயே தங்கி இறைவனை வழிபடுவோம் என்று நினைத்தார். அந்த குடிலின் அருகே அமர்ந்து தியானத்திலே ஆழ்ந்தார்.

ஸ்ரீ வைகுண்டம் திருமாமணி மண்டபம் குமுதாதி பரிவாரங்கள் பணி செய்ய ஸ்ரீமந் நாராயணர் வீற்றிருக்கின்றார். மெய்ஞானியாகிய சுகக்ப்ரஹ்மம் அங்கே இறைவனுக்கெதிரே நிற்கின்றார். அன்பா பாரத பூமியிலே பக்தி குறைகிறது, சாதிமத வேறுபாடுகள் பக்திக்கு இடையூறு செய்கின்றன. அன்றொரு பாகவதம் செய்தாய்; இன்று தமால் என்பவருக்கு மகனாகப் பிறந்து மக்களை நல்வழிப்படுத்து என்றார்; சுகப்ப்ரஹ்மம் தலை வணங்கினார்; தங்களது கட்டளைக்கு கீழ் படுகிறேன் ஆனால் தாய் வயிற்றிலே பிறக்கும்படி மட்டும் நீங்கள் கட்டளையிடுவது தகாது என்றார்; பகவான் சற்றே யோசித்தார், நான் பலமுறை தோன்றவில்லையா என்றார். சுகர் வாயே திறக்கவில்லை.

உனக்கு விருப்பமில்லாவிடில் தாயே வேண்டாம் தான்தோன்றியாகவே இரு, தமால் கங்கை கரையிலே தியானம் செய்கிறார், அங்கே கிட என்றார்.

அவ்வளவுதான்! கங்கைக்கரையிலே தியானத்திலே அமர்ந்த தமால், திடுக்கிட்டு கண் விழித்தார். குவா குவா இளங்குழந்தையின் குரல் கேட்க ஓடி எடுத்தார், வீட்டை நோக்கி திரும்பினார். வாயிலிலே காத்திருந்த ஜிஜ்ஜா பீபி குழந்தையைக் கண்டு உள்ளம் பூரித்தாள். கண்டெடுத்த கண்மணி என்று அகமகிழ்ந்தாள். குழந்தையின் மலர்முகத்தையும் பட்டுப்போன்ற கைகால்களையும் தொட்டுதொட்டுப் பார்த்து இன்புற்றாள். அவள் தெய்வம் தந்தது என்று அவள் மனம் பூரித்தது. குழந்தைக்கு கபீர் என்று பெயரிட்டனர்.

குழந்தை கபீரின் விளையாடல்களிலேயே தெய்வமணம் கமழ்ந்தது. குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான், தவழ்ந்தான், தளிர்நடை நடந்தான். கல்வியும் பயின்றான், தறியிலே நூலிடவும் சுருளிடவும் கற்றான், எந்த வேலையிலே ஈடுபட்டாலும் அவன் நா தெய்வத்தின் பெயரையே உச்சரிக்கும். இப்படி நாட்கள் செல்ல சின்னஞ்சிறு வயதிலேயே, கபீருக்கு மனம் முடிக்க விரும்பிய பெற்றோர் பெண்ணைத் தேடலாயினர்.

முன்பு ஒரு காலத்தில் சுகப்ப்ரஹ்மத்தை மயக்க முயன்ற ரம்பை, இப்பொழுது அவர் பூவுலகில் வந்தது தெரிந்து, தானும் பூவுலகிற்கு வந்து, அவரது உறவினரிலேயே சுந்தரா என்ற ஒரு பெண்ணாகப் பிறந்து வளர்ந்து வந்தாள். கபீரது தாய்தந்தையர் அந்த பெண்ணின் அழகைக் கண்டு பெண்பேசி மகனுக்கு மணம்முடிக்க நிச்சயித்தனர்.

இதன் முன்பு, தங்கள் மத வழக்கப்படி சுன்னத்துச்செய்ய நினைத்து, அதற்குரிய ஏற்பாடுகளைச்செய்ய, கபீரானவர் அவர்களுடன் வாது செய்து, வாதத்திலே வென்று, தாம் அதை ஏற்க முடியாது, என்று நிரூபித்தார். சீறி எழுந்த அவர்கள், இவன் மதச்சடங்கை அவமதிக்கிறான் இவனை வீட்டை விட்டு துரத்த வேண்டுமென, தாய்தந்தையர் மனம் நொந்தனர். கபீரும் வீட்டை துறந்து ஓட முற்பட்டார். தமால் வேறு வகையின்றி அவரைத் தடுத்து, தம்முடன் வீட்டிலேயே தங்கித் தறி நெய்யும்படி சொல்ல, அன்று முதல் கபீர் நெசவுத் தொழிலைச் செய்து வந்தார்.

2.அந்தணருக்கு ஆடை அளித்தது

கமாலின் வீட்டு முற்றத்திலே, கைத்தறியின் ஓசை இரவும் பகலும் கேட்டவண்ணம் இருக்கும். ஆனால் கபீரது மனமும், நாவும், இறைவனது புகழையே பாடிக்கொண்டிருக்கும்! அவர் சிற்சில சமயங்களில் மெய்மறந்து நின்றுவிடுவார். தறியின் ஓசையும் நிற்கும்! ஆனால் அவர் கைகள் அசையாமலே, தறி தானாகவே நகர்ந்து நகர்ந்து நெய்யும். இறைவன் அன்பானது கை நோகுமோ என்று தாமே அமர்ந்து தறியை இழுப்பார்.

‘என்னுயி ரனையாய் நீ இளவல் உன் இளையான் இந் நன்னுத லவள் நின்கேள் நளிர்க்கடல் நிலமெல்லாம் உன்னுடையது நான் உன் தொழில் உரிமையினுள்ளேன்’
என்று சொல்லி குகப்பெருமானது படகோட்டும் துடுப்பையும், செங்கோல் பற்றும், தன் கைகள் பற்றும், என்று சொன்னானல்லவா இராமபிரான் அதுபோல இங்கே தோன்றாத் துணையாய் இறைவன் தறி நெய்கிறான். ஒரு முழம் நெய்தபோது, தியானத்திலே அமர்ந்தார் கபீர். இறைவன் இன்னொரு முழம் நெய்தான், அந்த சமயம் அங்கு வந்து நின்றார் தாயார்.

அவருக்குத் தந்தையார் கோபிப்பாரே என்ற ஏக்கம், பயம், அடே சோம்பேறி கபீர் இன்று முழுவதும் இந்த இரண்டே முழம் தானா நெய்தாய் இதை விற்று பணம்வந்தாலொழிய உனக்குச் சோறு கிடையாது என்று கோபித்து கூறினார் ஜிஜாபீபீ.

தறியிலிருந்து எடுத்துக் கொண்டு கடைத்தெருவை நாடிச் சென்றார் கபீர். அந்த அழகிய துண்டு, சிலருக்கு மிகவும் அற்பமாகவும், சிலருக்கு மிகவும் உயர்வாகவும் தோன்ற ஒருவரும் வாங்குவாரில்லை, கபீர் மனம்தளர்ந்து போனார்.

சரி இன்று விற்பனை இல்லை, என்று நினைத்து, அந்த வஸ்திரத்தை மடித்து மறைத்துக்கொண்டு வீடு திரும்பினார். வழியிலே ஓர் அந்தணர் திடீரென்று தோன்றி, அதைப் பறித்துக்கொண்டு ஓட, கபீர் அவரைப் பின்தொடர்ந்து ஓடி மறித்து, அந்த வஸ்திரத்தைப் பிடித்து இழுத்தார். கூட்டம் கூடி விட்டது. இந்த மனிதர் விட்டுக்கொடாமல் சுற்றிலும் கூடிய மக்களிடம் ‘ஜனங்களே இந்த வைகுண்ட சல்லா பெரிய பீதாம்பரமாம் விலை பேச வந்தானாம், கடைக்கு’, என்று சொல்லி அந்தப் புதிய துணியை இரண்டாகக் கிழித்தார். கபீரது முகத்திலே கோபக்கனல் வீசியது. சீ அற்பனே, ஊரார் உடமைக்கு ஏன் பேயாய் பறக்கிறாய், என்று தாமும் பிடித்து இழுக்க, அடடா பார்த்தீர்களா, இந்தக்கந்தை பீதாம்பரமாம், என்று இகழ்ந்தார் அந்தணர். கோபம் கொண்ட கபீர் கிழிந்தாலும் அது பட்டுதான் எம்பெருமானுக்கு உகந்ததுதான், என்று தமது துணியை சுருட்டி எடுத்துக்கொண்டு நடக்கலானார். அப்பொழுது அந்த அந்தணர் விடாமல் நான் கிழித்ததை நானே எடுத்துக்கொள்கிறேன், விலை சொல்லடா என்று அதட்டினார். நாலு பேர் சொல்லுவதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்றார் கபீர். மக்களை விலை சொல்லும்படி அந்தணர் கோர, ஒருவர் ஒரு வராகன் என ஒருவர் பத்து பணம் என, அந்த அந்தணர், போம் ஐயா, இவர்கள் உம்மைபரிகசிக்கிறார்கள் இந்த கந்தை இவ்வளவு தான் பெறும், என்று சில சோழிகளைக் கொடுத்தார். ‘அக்காலத்தில் சோழிகள் சிறு நாணயமாகக்கருதப்பட்டது’. கோபம் கொண்ட கபீர் அந்தச் சோழிகளை வீசி எறிந்தார்.

இதில் இனிமேல் ஒன்றுமில்லை, என்று வேடிக்கை பார்த்து நின்ற கூட்டம் கலைந்தது. அந்த அந்தணரோ, ‘என்னிடம் வேறு ஒன்றுமேயில்லை இதை நீ இனமாகவே கொடுத்தால் பிரிந்தவனம் போகிறேன் அங்கே கண்ணனுக்கு சாத்தி மகிழ்வேன்’, என்றார்.

கபீர் சற்றே யோசித்தார். இதை நான் விற்று செல்லாவிட்டால், என் பெற்றோர் தண்டனை கிடைக்கும், ஆகவே கொடுக்க முடியாது என்றார். அந்தணரோ, தானத்தினால் வரும் பயனைப் பற்றி ஒரு பிரசங்கமே செய்தார். கபீரது மனம் சற்று மாறத் தொடங்கியது. அந்தணர் கர்ணனையும் மாவலியையும் உவமை கூறி பேசியது, அவர் நெஞ்சைத் தொட்டது. கொடுத்து விடலாமா என்று தயங்கினார்.

கபீரது தயக்கத்தை கண்ட அந்தணர், கபீர் இறைவனை உருவத்தோடு வழிபடுவதும் உருவமற்றவனாக வழிபடுவதும் வெவ்வேறுவகை. இந்த கலியுகத்திற்கு சகுன உபாசனை தானே ஏற்றது. இறைவனது திருநாமங்களும் மிகமிகச் சிறந்தது இராமநாமம். இராமன் சக்கரவர்த்தி திருமகன். அவன் மக்கள் வாழ வேண்டியதைச் செயலாலே தானே நடந்து காட்டினான். அந்த தாரக நாமம் உயர்வு என்று இறைவன் விசுவநாதன் இங்கே மரிப்பவருக்கு உரைக்கிறாராம். அதனாலே தான் காசியிலே இறக்க முக்தி என்கிறார்கள். நீயும் ஏதோ கொஞ்சம் தெரிந்தவனாகக் காணப்படுகிறாய் ஆகவே இடைவிடாமல் ராமநாமத்தையே கூறு மற்றும் ப்ரஹ்மஞானத்தை அடைய முயற்சி செய் என்று சொல்லி அந்தப் புத்தம் புது துணியை வாங்கிக் கொண்டு மறைந்து போனார்.

கபீரது மனம் குழம்பியது. நான் தியானத்தை பற்றி அறிய நினைத்தேன். இவரோ ஞானத்தை அடை என்கிறார். சத்குருவின்றி, ஞானம் எப்படிக் கிடைக்கும்! எதற்கும் இவர் சொன்ன ராமநாமத்தையே துணை கொள்வோம் என்று முடிவு செய்து வீட்டை நோக்கி நடந்தார். தன் கையிலிருந்த ஒரு முழத்துண்டை மீண்டும் ஒரு முறை பார்த்து மடித்தார்.

3.இறைவன் பகீர் உருவுடன் வருதல்

கையிலே பாதியாய் கிழிந்த துண்டுள்ளது, பசியோ காதை அடைத்தது, செய்வது இன்னதென்று அறியாது தளர் நடை நடந்து வீடு நோக்கி நடந்த கபீர், தம் எதிரே ஒரு பகீர் வருவதைக்கண்டார். பகீர், அவரை நெருங்கி ‘ஐயா புண்ணியவானே நீர் சாதுக்களுக்கு தானதருமம் அளிப்பவர்’. என்று கேள்விப்பட்டேன் குளிர் மிகுதியான இந்த நாளிலே ஒரு முழத்துண்டு கிடைத்தாலும் போதும் தலையிலே கட்டிக் கொள்வேன் என்று இறைஞ்சி அழுதார் பகீர்.

இல்லை என்று சொல்ல மனம் வராத கபீர், சற்றுமுன் அந்தணர் சொன்ன கருத்தை நினைத்து, ‘ஜெய் சீதாராம்’, என்று சொல்லி, அந்தத் துண்டை, பகீரின் கையில் அளிக்க, அவர் வாங்க மறுத்து, ‘அட நீ என்ன காபீர் ஆக இருக்கின்றாயே! இறைவன் அல்லாவின் திருநாமம் இருக்க, எவனோ ஒரு மனிதனின் பெயரைச் சொல்லி கொடுக்கின்றாயே முஸல்மானாக இருப்பதால் உன்னைக் கேட்டேன் காபீர் கைம்பொருள் நமக்கு வேண்டா’, என்றார்.

கபீரோ பல நியாயங்களை எடுத்துக்காட்டி, ‘இறைவன் ஒருவனே’, என்றும் சொல்லி அந்தத் துணியைக் கொடுக்க அவர் மறுத்து, அடே கபீர், நீ புரட்சிக்காரன். நீ முஸ்லீம் மதத்துக்கே துரோகி. உன் கொள்கைகளையெல்லாம் உன் பெற்றோரிடம் சொல்லித் தண்டிக்கவேண்டும் என்று சொல்லி நடந்தார்.

கபீரோ இதேது பெரிய வம்பாகிவிட்டது; இந்தப் பக்கிரி என்னென்ன கோள் முடிவானோ என்று பயந்து, ஓர் பாழ் வீட்டிலே பதுங்கிக் கொண்டார். துணியைப் பெற்றுக்கொண்ட பகீர், ஜிஜாபாயிடம் சென்று, அம்மா உன் மகன் குலத்தைக்கெடுக்கும் கோடரிக்காம்பாய் திரிகிறான், காலையில் ஓர் அழகான துணியை யாரோ ஓர் அந்தணருக்கு வற்புறுத்திக் கொடுக்கப் போனான். நான் வழிமறித்து எனக்கு கொடு என்றேன். அதை இரண்டாகக் கிழித்து தலைக்கு பாதியாக்க நான் வேண்டாம் என்றேன். என் தாயாரிடம் போய் கேள் பெரிய வஸ்திரம் கொடுப்பார், நான் கொடுத்ததைச் சொல்லாதே என்று வீட்டையும் காட்டி, இந்த வீட்டில் ஒளிந்துக்கொண்டான் என்று அவரை அழைத்து வந்து, நான் பின்புறம் போகிறேன் நீங்கள் வாயிற்புறம் வந்து பிடித்துக்கொள்ளுங்கள், என இருவரும் பாழ்வீட்டை அடைந்தனர். ஜிஜ்ஜா பிபிஐக்கு கோபம் ஒரு புறம் துணியைவிற்றுப் பணம் வரும் என்றிருந்தவருக்கு ஏமாற்றம் ஒரு புறம், ஆகவே பக்கீரைத் தொடர்ந்து வந்து கபீரைப் பிடித்து இழுத்து, பக்கிரியின் கைபிரம்பினால் பளீர் பளீர் என்று இரண்டு அடிகள் அடித்தார்.

ஹரே ராம் ஹரே ராம் என்ற ஓலம், பெருங்குரலிற் கிளம்பியது. அந்த அடிகள் இறைவனது முதுகிலும் வீழ்ந்தன! உலகிலுள்ள எல்லா உயிர்களின் உடம்பின் மீதும் விழுந்தன! அந்தநாளில் பிட்டுக்கு மண் சுமந்த சொக்கலிங்கப் பெருமானைப் பாண்டியன் பிரம்பாலடித்தபொழுது அந்த அடி சகல சராசரங்களின் மீதும் பட்டது போல, கபீரின் மீது பட்ட அடி, உலகம் எல்லாம் பட்டது. ஜிஜ்ஜா பீபியின் முதுகிலும் சுரீர் சுரீர் என்று விழுந்தது, ஐயோ என்று துடித்துப் போனார் அவர். இந்த அடிகள், இறைவனது முதுகிலும் பட்டன. அங்கேயே தனது சுய உருவுடன் கபீரைத் தழுவிக்கொண்டான் எம்பெருமான்.
சங்கு சக்ர கதாதரனாய், சிரத்திலே அழகிய பொன்முடி விளங்க, மலர் முகத்திலே இன்முறுவல் துலங்க, இரு செவிகளிலும் பொற்குண்டலம் இலங்க, சாந்தமும் கருணையும் பொழிகின்ற மலர் விழிகள், கபீரின் முதுகையே நோக்க நின்றான். இறைவன், ‘கபீர் நீதான் மெய்த்தொண்டன் கொடுப்பது என்பது தவத்தால் வாராது அது பிறவிக்குணம் இந்த வறுமை நிலையிலும் நீ கொடுக்க முன் வந்தாய்’, என்று அடிப்பட்ட முதுகைத் தடவினான் இறைவன்.
ஜிஜா பீபிக்கு இன்னது செய்வதென்பது விளங்கவில்லை, ‘ஆ இறைவனே உன்னையே நாடித் தவம் இருப்பவரையெல்லாம் விட்டு விட்டு இந்தப் பேதைக்கு காட்சியளித்தாயே, ‘கபீர் கபீர் உன்னை உண்மை அறியாமல் அடித்து விட்டேனே’, என்று ஏங்கிப் பின் துதிக்கலானார்.

பகவான், அம்மா நீ பரம பாக்கியவதி நீ அவனை அடித்தது அவன் முதுகில் படவில்லை என் முதுகைப் பார் என்று தன் முதுகைக் காட்டினான். அடித்தழும்புகள் இறைவனது முதுகிலே தெரிந்தன. இறைவன் மேலும் இந்தக் கபீர், ‘ஞானி சிறந்த பக்தன் இனிமையான பாமாலைகளினால் உலகத்தாருக்கு உபதேசம் செய்வான் என்னையும் வழிபடுவான்’, என்றான். இறைவனது முதுகிலே அடிகளின் தழும்பைக் கண்ட பீபி துடிதுடித்து, ஐயோ எத்தகைய பெருந்தவறு செய்து விட்டோம் என்று அலறி மூர்ச்சித்து விழுந்தார்.

இறைவன் தானே தன் திருக்கரங்களினால் அவரைத் தெளிவித்து எழுப்பினான். பின்பு கபீரை நோக்கி, கபீர் உலகிலே சிலருக்கு ஞானமார்க்கம் சுலபம். பக்தியும் சிரத்தையும் உள்ளவர்களுக்கே ப்ரஹ்மஞானம் கிட்டும். நீயோ இளம்பிள்ளை. பக்திமார்க்கமே உன்னால் பின்பற்றத்தக்கது. ஆகவே சதகுருவைத் தேடி அடைவாய் என்று கூறி மறைந்தான். தாயாரும் மைந்தரும் ஆனந்த மிகுதியினால், நிறைந்த மனதுடன் அங்கிருந்து வீடு திரும்பினர்.

4.கபீர் ராமானந்தரிடம் உபதேசம் பெறல்

வாரணாசியில் இராமானந்தர் என்ற ஒரு பெரியார் பலரையும் நல்வழிப்படுத்தி வந்தார். அவரையே குருவாக நினைத்துக் கபீர், பல நாள் மாலை வேலையிற் காண முடியாமல் திரும்பினார். ஒரு நாள் அதிகாலை அவர் தங்கியிருந்த மடத்திற்குச் சென்றார்.

அங்கிருந்த ராமனந்தரின் சீடர்கள் ‘இவன் துருக்கன் திருடவே வந்தான்’, என்றெண்ணி விரட்ட, கபீர் தாம் ராமானந்தரைப் பார்க்க வந்ததாகச் சொல்லியும், நம்பாமல் தடிகளால் அடித்துப் பிடித்துத் தள்ள, கபீர் அடிகளையும் பொறுத்துக் கொண்டு, அங்கேயே உட்கார்ந்து விட்டார். அவர்கள் மேலும் அடிக்க, கபீர் அலறத்தொடங்கினார். அலறும் குரல் கேட்டு ராமானந்த ஸ்வாமிகள் எழுந்து வெளியே வந்தார். கபீரைப் பார்த்ததும் அவர் மனம் இறங்கியது.

அங்கிருந்த ஒருவர் ஸ்வாமி திருடத்தான் வந்தான் அகப்பட்டுக்கொள்ளவே பொய்ச்சொல்கிறான் என்றார்.

ஸ்வாமிகள் அதை உண்மையென்று கொண்டாரோ, சோதிக்க விரும்பினாரோ தெரியாது, இவனை வெளியே துரத்துங்கள் என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே போய் விட்டார். கபீர் மேலும் முயன்று அடியும் பட்டு வீடு நோக்கித் திரும்பினார்.

உடலெல்லாம் அடிபட்டுக் கன்றிக் கிடந்தது கண்டு பெற்றோர் வருந்தி ராமனந்தரையும் அவர் சீடர்களையும் திட்டத் தொடங்கினர். அனால் கபீரோ மீண்டும் ஒரு முறை அடிபட்டு வந்து சேர்ந்தார்.

இடையில் கபீருக்கு ஒரு நல்ல யோசனை உதித்தது. ராமானந்தரோ விடியற்காலையில் கங்கையில் நீராட வருகிறார். அந்தப் படியிலே நாம் படுத்திருந்தால் இருளிலே மிதித்து விடுவார். பெரியோர்கள் தவறு செய்தாலும், நன்மை வந்தாலும், இறைவனுடைய திருநாமத்தையே சொல்லுவார்கள், அதையே நாம் உபதேசமாகவும் திருவடி தீட்சையாகவும் கொள்வோம் என்று எண்ணி கங்கையின் படிக்கட்டிலே சென்று படுத்துக் கொண்டார் கபீர்.

எதிர்பார்த்தபடியே ராமனந்தர் கங்கையின் படிகளிலே இறங்கிய பொழுது, கபீரை மிதித்து விட்டார். உடனே வழக்கப்படி ராம் ராம் என்று உச்சரித்த வண்ணம் இறங்கி நீராடித் திரும்பினார். ஸ்வாமிகளின் பாதத்துளி தம் மேல் பட்டதைப் பெரும் பேறாகக் கருதினார் கபீர். வீட்டிற்கு வந்து நெற்றியில் திலகம் அணிந்தார். துளசி மாலையை அணிந்தார். பூஜைக்கு உரிய பொருள்களுடன், மடத்தில் சென்று தாமும் மற்றவருடன் அமர்ந்து ராம நாம ஜெபம் செய்யத் தொடங்கினார்.

சீடர்கள் அவரை ராமனந்தரிடம் அழைத்துச் செல்ல, அவர் கோபித்து பாதுகையை வீச அது அவர் நெற்றியிலே பட்டது. பின் மறைமுகமாக உபதேசித்து, நீ வஞ்சனையினால் உபதேசம் பெற்றாய், ஆதலால் மடத்திலே சேரத் தகுதியற்றவன் என்றாலும், ராமநாமத்தை செபித்து வா என்று சொல்லி அனுப்பினார். இவ்வளவு கிடைத்ததே மஹா பாக்கியம் என்று நினைத்த கபீர் மனநிறைவுடன் வீடு திரும்பினார்.

5.கபீர்தாஸரும் கோரக்கரும்

இடையில் முகம்மதியர் கபீரை, வாதிலே வெல்ல முயன்றனர். ஆனால் கபீர் ராமும் ரஹீமும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தினார். இறைவன் ஒருவனே என்பதை அவர்களும் ஒப்ப வேண்டி வந்தது.

அக்காலத்தில் மச்சேந்திரநாதர் என்ற பெரியவர் ஒருவர் இருந்தார். அவருடைய மாணவர் கோரக்கநாதர் என்பவர். அவர் எட்டு வகையான சித்திகளையும் கைவரப் பெற்றவர். கர்வம் கொண்டவர்! அவர் எல்லோரையும் வாதிலே வெல்ல விரும்பி ஊர் ஊராக வந்துக்கொண்டிருந்தார். அவர் காசிநகருக்கு வந்து ராமானந்தரது மடத்திற்கு வந்தார். ஸ்வாமிகளின் சீடர்களுக்கு கோரக்கரைப் பற்றித் தெரியும். அவர்கள் கலங்கினார்கள். கோரக்கர் ஸ்வாமிகளின் சீடர்களை நோக்கி, ராமனந்தர் எங்கே? என்று இடிக்குரலில் கேட்டார்.

சீடர்கள் நடுநடுங்கி உள்ளே சென்று ராமானந்தரிடம், ஸ்வாமி நாம் அந்த ராக்ஷஸனோடு வாதிட்டு வெல்வது முடியாது, அவனோ அஷ்டமாசித்தி பெற்றவன், பரமதுஷ்டன்! ஆகவே நாம் இங்கிருப்பது தகாது என்றார்கள். மிகவும் சாந்த சீலரும் பெரியவருமான ராமானந்தர் செய்வதறியாது திகைக்க, குருவை விட்டுவிட்டு சீடர்கள் ஓடி ஒளிந்தார்கள். ராமனந்தர் மட்டும் தனியே தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

கோரக்கரது வருகையும், சீடர்களின் ஓட்டத்தைப் பற்றிக் கேள்வியுற்ற கபீர், உடனே மடத்திற்கு ஓடி வந்தார். இந்த நெருக்கடியான சமயத்திலே வந்த அவரைப் பார்த்த ராமானந்தருக்கு கோபம் ஏற்பட்டது. கபீர் மிகவும் பணிவுடன் ஸ்வாமி கோரக்கருடன் வாது புரிய என்னை அனுமதிக்க வேண்டும் என்றார்.

அதற்கு ஸ்வாமிகள் ‘அடே என்ன சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறாய். புலியைப் பூனை வெல்லுமா, நீ போய் தோல்வியுற்றால் நான் தான் உன்னை அனுப்பி வைத்தேன் என்று என்னையும் அவன் பீடிப்பான் ஆகவே நீ வந்த வழியே போ ஏன் இந்த வீண் விவகாரம்’, என்றார்.

கபீர் அதை ஏற்காதவராய் ராமனந்தரின் திருவடிகளில் வணங்கி எழுந்து, வீதியிலே அட்டகாசம் செய்து நிற்கும் கோரக்கர் எதிரே வந்து, ‘கோரக்கரே என் குருநாதரது வல்லமை உமக்குத் தெரியாது வாதிலும் சரி ப்ரஹ்மஞானத்திலும் சரி அவரை வெல்ல உனக்கு என்ன தகுதி இருக்கிறது, எழுந்து மரியாதையாய் நடவும்’, என்றார்.

கடகடவென்று இடிமுழக்கம் போலச்சிரித்தார் கோரக்கர். அடே சிறுபயலே நீ யார் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று எழுந்தார்.

இந்த சொல்லக் கேட்டு ராமனந்தர், அவன் இந்தச் சிறுவனை என்ன செய்வானோ என்று எழுந்து வந்து கோரக்கரை வணங்க முற்பட, கபீர் அவரைத் தடுத்து இதோ நான் இவரை வெல்கிறேன் என்று சொல்லி, தன் கையிலிருந்த பட்டு நூல் கண்டு ஒன்றை நுனி பூமியிலே நிற்க ஆகாயத்தை நோக்கி வீசினார். அந்த நூல் இழை மரம் போல் நின்றது. அவர் அதன் மேல் மளமளவென்று ஏறி உச்சியிலே அமர்ந்து, ‘சித்த புருஷரே நீரும் இங்கே வாரும் வான வெளியிலே வாது செய்வோம், என்றார்.

கபீர்தாசரது இந்தச் செயல்கண்டு கோரக்கர் திகைத்தார். ஆனாலும் திகைப்பை வெளிக்காட்டாமல், கபீர் உன் மயவித்தையைக் கண்டு நான் மயங்கி விட மாட்டேன், இறங்கி வந்து எதிர் நின்று பேசு என்று சொல்லி, ராமனந்தரது உருவில் நின்றார். கபீர் யார் உண்மையான ராமனந்தர் என்பது விளங்காமையால் சற்றே திகைக்க, உண்மை ராமனந்தர் இறைவனை நோக்கி ஐயனே என் சீடனைக் காப்பாற்று என்று வேண்டினார். கபீரது மனதிலே புதியதோர் உற்சாகம் பிறந்தது. அவர் கோரக்கரை அடக்க தாம் மச்சேந்திரநாதராகி நின்றார். உடனே கோரக்கர் மகா விஷ்ணுவானார். கபீர் சரப மூர்த்தியானார். இப்படி கோரக்கர் எதைச் செய்தாலும் அதற்கு மேலே விளங்கினார் கபீர். கோரக்கர் கர்வம் ஒடுங்கியது. இப்படிப்பட்ட சீடனைப் பெற்ற ராமனந்தர் பாக்கியசாலி என்று அகங்குளிரை அவர் தாள்களில் விழுந்து வணங்கினார். மேலும் கபீரை நோக்கி ‘அப்பனே உன் குருபக்தி மெச்சத்தக்கது நீ இந்த இளம் பருவத்திலே இறைவனை அடையும் ப்ரஹ்மஞானத்தை பெற்று விட்டாய் நீ நீடுழி வாழ வேண்டும்’, என்று வாயார வாழ்த்தினார். இதன்பின் கோரக்கர், அவரிடமிருந்து பல அறிய விஷயங்களை அறிந்துக் கொண்டு வியந்தார். காசி நகரம் முழுவதும் ராமனந்தரையும் கபீரையும் போற்றிப் புகழ்ந்தது.

6.திருமணம்

மகனுக்கு விவாகம் செய்து விடவேண்டுமென்ற கவலை, பெற்றோருக்கு இருப்பது இயல்பேயல்லவா! முன்பே நிச்சயம் செய்த சுந்தராவென்னும் பெண்ணை மணம் பேசப்போக, அவர்கள் சுன்னத்துச் செய்து கொள்ளாத ப்ரஷ்டனுக்கு பெண் கொடோம் என்றார்கள். வந்தவர் திரும்பினர்.

சுந்தராவின் தந்தை, கனவிலே ஒரு பகீர் வந்து உன் மகளைக் கபீருக்கே மணம் புரிக என்று சொல்லியும், அவர் மணம் துணியவில்லை. சுந்தராவோ, ‘அப்பா ஏற்கனவே நீங்கள் அவருக்கு வாக்களித்தது முதல் நான் அவரையே மணாளனாக வரித்துவிட்டேன் இனிப் பிறரைச் சிந்தையாலும் தொடேன்’, என்றாள்.

பெற்றோருக்கு சினம் பொங்கி எழுந்தது. கபீர் ஏதேனும் மாயமந்திரம் செய்ந்திருப்பானோ, என்ற எண்ணமும் எழுந்தது, ஆகவே அவளை வீட்டிலேயே காவல் வைத்தனர். இறைவன் இத்திருமணத்தை முடிக்க திருவுள்ளங் கொண்டான். அவன் ஒரு பகீர் வேடம் பூண்டு மாணவர் புடைசூழச் சுந்தராவின் பெற்றோரிடம் வந்து சேர்ந்தான்.

வந்தவன், கபீர் முன்பே சுன்னத்துச் செய்துகொண்டு முஸ்லீம் பழக்க வழக்கங்களுடன் வாழ்வதாகவும், அவருக்கே பெண்ணை கொடுக்கலாம் என்றும் சிபாரிசு செய்தான். அதோடு நில்லாமல் தாமே முன்னின்று ஒவ்வொருவருக்கும் சமாதானம் சொல்லி விவாகம் செய்வித்தான். விவாகம் முடிந்தது. மணமகள் வீட்டிற்கு வந்ததும், ஸ்ரீ ராமனந்தரைக் கண்டு வணங்கவேண்டுமென்ற தன் விருப்பத்தை தெரிவித்தாள். முஸ்லீம் மகள் தம்மை விரும்பி மணந்ததோடு தமது பக்திக்கும் உறுதுணையாக நிற்பாள் என்பதை அறிந்த கபீர் மனம், பெருமகிழ்ச்சியினால் பூரித்தது.

7.இல்லறம்

கபீர்தாசரது இல்வாழ்க்கை, அன்பும் அறமும் உடையதாய்த் திகழ்ந்தது. நெசவுத்தொழிலையும் இறைவரது திருநாமத்தையும் கைவிடாத அவர், எப்பொழுதும் இறைவனோ தொண்டர் உள்ளத்தொடுக்கம் என்று சாதுக்களை அழைத்து உபசரிப்பதையே, தமது வாழ்கை லட்சியமாகக் கொண்டு இல்லறத்தை நடத்தினர்.

பெரும்பான்மையான பொழுது, இறைவழிபாட்டிலே செல்ல, நெசவு குறைந்தது வறுமையும் வந்தது. என்றாலும் அவர்கள் இரந்தோர்க்கு ஈவதைக் குறைக்கவில்லை தங்கள் உணவினை வரும் விருந்தினர்களுக்கு அளித்து வந்தார்கள்.

இந்த நிலையிலே பக்ரீத் பண்டிகையும் வந்தது. கபீர் பசுக்கன்றை வதைப்பது கொடிய பாவம் என்பதை வற்புறுத்தி, முஸ்லிம்களின் மனத்தை மாற்றினார். இந்த சமயம் பகவான் அவரை மீண்டும் சோதிக்க எண்ணினான்.

ஒருநாள் பிற்பகல் நூறு சாதுக்கள் பின்தொடர, இறைவன், கபீரின் வீட்டை அடைந்து, இன்று முழுவதும் பட்டினி, நீ தான் உதவ வேண்டும், என்று கெஞ்சினான். வீட்டிலோ ஒரு தானிய மணியும் இல்லை. கபீரும் அவர் மனைவியுமே பட்டினி, இந்நிலையிலே நூறு அததிகளை ஏற்பது எப்படி தவியாய்த் தவித்துப் போனார் கபீர்.

உள்ளே சென்று ஏதேனும் நகைகளோ துணிமணியோ அடகு வைக்க இருக்கிறதா என்றார். அங்கே ஏதேனும் இருந்தால் தானே! திடிரென்று சுந்தரவிற்கு ஒரு யோசனை தோன்றியது. அவள் கபீரிடம் நெருங்கி, கடைத்தெருவிலே ஒரு சௌகார், நெடுநாளாய் என் மீது கண் வைத்திருக்கிறான். ஒரு நாள் என் மீது கற்களை எறிந்து, நான் திரும்பிப் பார்த்த பொழுது தகாத வார்த்தைகள் சொன்னான். ஒரு முறை நான் அவன் விருப்பத்திற்கு இணங்கினால் பெரும் பொருள் தருவதாக ஆசை வார்த்தைகளையும் சொன்னான். இந்த இக்கட்டான சந்தர்ப்பத்திலே, அவனிடம் சென்றால் பணம் கிட்டும், அதிதிகளைப் பட்டினிப் போடுவதைவிட, என் உடலை நான் விற்பது பாபம் ஆகாதென்று தோன்றுகிறது, அவனிடம் கேட்டுச் சாமான் வாங்கி வாருங்கள் என்றாள்.

கபீர் சற்றே சிந்தித்தார். பிறகு அவளை நோக்கி ‘உன் யோசனை நல்லதுதான் அவன் யாரென்பதை நான் அறியேன் நீயே என்னை அழைத்துச் செல்’, என்றார். அவள் புறப்பட்டாள். இருவரும் வியாபாரியின் வீட்டை அடைந்தனர். கபீர் வியாபாரியை நோக்கி, ‘நூறு சாதுக்களுக்கு வேண்டிய உணவு வகைகளை அளிப்பதற்கு விலையாக இவளை உனக்கு அளிக்கிறேன் அவர்களுக்கு அன்னமிட்டபிறகு நானே இவளை அழைத்து வந்து விடுகிறேன்’, என்றார்.

மதிமயங்கி நின்ற அந்த வியாபாரி. இதற்கு இணங்கி. நூறு பேர்களுக்கு வேண்டிய பண்டங்களைக் கொடுத்தான். இருவரும் சுமக்கமாட்டாமல் சுமந்து வீடு வந்தனர். உரிய காலத்தில் சமையல் செய்து நூறு சாதுக்களுக்கும் உணவளித்தனர்.
பிறகு கபீர் வாக்களித்தபடி, சுந்தராவை அந்த வியாபாரியின் வீட்டிற்கு அழைத்துத் சென்றார். வழியிலே தூற்றல் தொடங்க, அவளைத் தனது தோளில் சுமந்துத் சென்றார், என்றும் சொல்லப்படுகிறது. வியாபாரி வழிமேல் விழி வைத்துக்காத்திருந்தான்.

அவளை வேற்றுடைகள் அணியச் சொல்லித் தன் அந்தரங்க அறைக்கு அனுப்பிவிட்டுக் காத்திருந்தான். சற்று நேரம் குறுக்கும் நெடுக்குமாய் நடக்க, வீதியிலே யாரோ தடதடவென்று கதவைத் தட்டுவது கேட்டது. அடடா இதென்ன கரடி, என்று கதவைத் திறக்க, அவ்வூர்க் கொத்தவால் உன் வீட்டிலே களவுப்பொருள் இருக்கிறது சோதனை செய்வேன் என்று நேரில் அவனது அந்தரங்க அறைக்குள் புகுந்து, கபீர் மனைவியாரல்லவா, இவர் மகா உத்தமியாயிற்றே என்று சொல்லி, சுந்தரவின் கரங்களை பற்றி இழுத்துக்கொண்டு வெளியேறி, அவளை அவளுடைய வீட்டிலே விட்டுச் சென்றான்.

திரும்பி வந்த அவள் சொன்ன செய்தி கேட்ட கபீர் ‘என் மனைவியைக் கண்டிக்க இவன் யார்’, என்று சினம் கொண்டு கொத்தவாலின் வீடு தேடித் போய் கதவைத் தட்ட, கொத்தவால் தனக்கு ஒன்றுமே தெரியாது என்றான். செய்ததையும் செய்து விட்டு பொய்யும் பேசுகிறாயா என்று கபீர் கோபத்துடன் அவனை அடிக்க கையை ஓங்கவே, பகவான் தோன்றி, ‘கபீர் வியாபாரியை அடித்து உன் மனைவியை மீட்டவன் நானே ஆகையால் என்னை அடி’, என்றான் கபீர் மெய்சிலிர்த்தார். இறைவன் திருவடிகளில் வீழ்ந்து, ‘ஐயனே உன் செயல்களை யார் அறிவர்’, என்று பலவாறு பாடித் துதித்தார். பின்னர் தமாலும், ஜிஜாபீபியும் தம் மைந்தனது பொறுமையை எண்ணி எண்ணி மகிழ்ந்து இறைவனை வழிபட்டு வந்தனர். உரிய காலத்தில். அவர்களுக்கு முக்தியும் கிடைத்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

8.கமாலின் யாத்திரை

இதன்பிறகு கபீருக்கு இரு கண்மணிகள் தோன்றினார்கள். புதல்வர் பெயர் கமால். அவர் இளமையிலே கேள்விகளிலே சிறந்து விளங்கினார். அவர் ஏழு வயதிலே தீர்த்த யாத்திரை செய்ய விரும்பினார். முதலில் மறுத்த கபீர், பிறகு இணங்கினார். யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் இறைவனது திருப்புகழைப் பரப்புவதே பணியாகச் செய்து கொண்டிருந்த கமாலை, மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கண்டார்கள். கமாலை கண்ணபிரானது அம்சம் என்றே கருதினார்கள்.

ஒரு நகரிலேயே ரத்னவியாபாரம் செய்யும் ஒருவர் இல்லத்திலே, கமாலைப் பற்றி இகழ்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வியாபாரிக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்தது. இந்த நோயை கமலால் தீர்த்து வைக்கமுடியும் என்றால் அவன் ஒரு பக்தன் என்று நம்பலாம் என்றார்கள்.

மறுநாட்காலை வியாபாரி வயிற்று வலியினால் துடித்த போது, முந்தினம் கமாலைப் பற்றிப் பேசியது நினைவில் எழுந்தது. கமாலைப் பற்றிப் பேசிய உடனேயே வயிற்றுவலி நின்று போயிற்று. உடனே அவன் கமாலை தன் வீட்டிற்கு அழைத்து வணங்கி வழிபட்டு, பொற்காசுகள் நிறைந்த ஒரு பையை அளிக்க, நானோ சிறுவன் என்னால் இந்த பொருளை ஏற்றுக் காத்து வீடு போய் சேர முடியாது என்று மறுத்து விட்டார். எனினும் அந்த வியாபாரி அவருக்குத் தெரியாமல் அவருடைய உத்தரீயத்திலே விலையுயர்ந்த மரகதம் ஒன்றை முடித்து வைத்தான்.

கமால் வீடு சென்று பெற்றோரை வணங்கும் பொழுது தான் அந்த மரகதம் முடிந்திருப்பது அவருக்குத் தெரிந்தது. அவர்களைச் சோதிக்க கருதி ஸ்ரீராமபிரான், ஒரு அந்தணனாக அங்கு வந்து இந்தப் பச்சைக்கல் என்னுடையது இவன் திருடி விட்டான், என்று பேச, கபீர் தம் மைந்தரை அடிக்க கை ஒங்க, இறைவர் சீதா லக்ஷ்மண பரத சத்ருகன சமேதராக காட்சி தர, அதே சமயம் அங்கு வந்த ராமானந்தர், கபீர் கபீர் உன்னால் எனக்கும் இந்த அற்புதக் காட்சி கிடைத்தது என்று மெய்மறந்து கண்பனிசோர நாக்குழற துடித்து நின்றார்.

பின்பு ஒரு சமயம், சாதுக்களுக்கு உணவளிக்க வீட்டிலே ஒன்றும் இல்லை, நூற்றுக்கணக்கான சாதுக்கள் கால் நடையால் களைத்து இரவின் முதல் சாமத்தில் வந்து சேர்ந்தார்கள். வேறு வழியின்றி தந்தையரும் மகனும் மாளிகைக் கடையில் புகுந்தனர்.

கமால், ரொட்டியிற்கு நெய் முதலியவற்றை திருடி சுவரைத் தாண்டி கபீரிடம் கொடுத்து விடுவது என்றும், கபீர் அவற்றை வாங்கிக் கொண்ட பின் கமால் சுவற்றின் உள்ள பிளவின் வழியே குடித்து ஓடி வந்து விடுவது, என்றும் தீர்மானித்து, கமால் உள்ளே சென்று மாவு நெய் முதலியவற்றை எடுத்து கபீரிடம் கொடுத்து விட்டார். அவர் கொடுப்பதற்குள், பின்னே வந்த கடைக்காரன் சுவற்றின் வழியே வெளிவந்த கமாலின் காலைப் பிடித்து விட்டான். தறி வேலை செய்யும் கத்தி கபீரின் இடையில் இருந்ததைக் கண்ட கமால், அப்பா என் தலையை வெட்டிக் கொண்டு போய் விடுங்கள். மகேசுர பூஜை நடைபெறட்டும், என்னை தலையினால் தானே அடையாளம் தெரியும், தலையில்லாத உடலை யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள், எனவே கபீர் மிகவும் தயங்கித் தலையை வெட்டி எடுத்துக் போய் விட்டார். கடைக்காரன், கமாலின் உடலை மட்டும் கொத்தவாலிடம் ஒப்படைத்தான். திருடர்களுக்கு ஒரு படிப்பினையாக ஊர்பொதுச் சாவடியில், கொத்தவால் அந்த உடலைத் தொங்க விட்டான்.
அங்கே மறுநாள், சாதுக்கள் கோஷ்டி பஜனை செய்த வண்ணம் வர, தலையற்ற அந்த உடல் அவர்களைக்கண்டு கரங்குவித்தது. சாதுக்கள் திகைக்க, இறைவன் அசரீரியாக, கபீர் உலகிலிலேயே வாத்சல்யங்களுள் சிறந்தது புத்ர வாத்சல்யம், மனைவியின் மீது உள்ள பாசம், புத்ர பாசம் ஆகிய இரண்டையுமே நீ வென்று விட்டாய், உன் விருந்தோம்பலும் பக்தியும் மெச்சத்தக்கது; மகனைக் கொன்றெனும் அன்னமிட முயன்ற உன் ஒப்பற்ற தியாகத்தின் முன் உலகமே தலை வணங்கும்; கமால் எழுந்திரு எழுந்திரு, என்றான். சாதுகளோடிருந்த கபீரிடம் இருந்த தலை, உடலோடு பொருந்த ,கமால் சிரித்தவண்ணம் வந்து ‘ஹரிநாராயண ஹரிநாராயண’, என்று கோஷிக்க தொடங்கினர். அடடா அற்புதம் அற்புதம் என்று வியந்தன ஊரார் உள்ளங்கள்.

இதன் பின் கபீர் மீண்டும் ஒரு முறை கோரக்கரை வென்றார், என்றும், தன் வாழ்நாள் முழுவதும் பக்திப் பிரச்சாரம் செய்வதிலேயே கழித்தார் என்றும் சரித்திரம் பேசுகிறது.

இவர் நானக்ஷா என்பவருக்கு ஹிந்து மத தத்துவங்களை போதித்ததும், ரோகிதாசர் என்ற சக்கிலியருடன் ‘’ராமன் பரதெய்வமா கிருஷ்ணன் பரதெய்வமா’, என்று விவாதித்ததும், மிகச் சுவையுள்ள விஷயங்கள்! இதன் பின் இவர், பல முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, மெக்காவிற்கு யாத்திரை செய்ததும், அங்கும் ராமநாமத்தைப் பரவச் செய்ததும், பிறகு அங்கேயே மஹாசமாதியடைந்ததையும் எல்லோரும் அறிவர். அங்கே அடக்கம் செய்தபின் மலர்களை வாரி இறைக்க, அவை ஒரு பகுதி முழுவதும் மலர்களாகவும், மற்றொரு பகுதி, துளசி தளங்களாகவும் இருந்தனவாம். இப்பொழுதும் மெக்காவிற்குச் செல்வோர், இவரது சமாதியைக் கண்டு தொழுது வருவதாகச் சொல்லப்படுகிறது.

இவரது பாமாலைகள், மிகமிகச் சிறந்தவைகள். என்று போற்றிக்கொண்டாடப்படுகின்றது. தமிழ் நாட்டிலே எவ்வாறு தேவார திருவாசகங்களும் போற்றிக் கொண்டாடப்படுகின்றதோ, அவ்வாறே கபீர் தாசரது பதாவளிகள் பாராட்டிப் போற்றப்படுகின்றன! நெஞ்சை அள்ளும் அக்கவிதைகளையும் அவற்றில் பொதிந்துள்ள மிகமிக உயர்ந்த கருத்துகளையும், தமிழ் மக்களும் கற்றுப் பயனடையவேண்டும். மூலத்தையே படித்துப் பயன் பெறத் தகுதி உள்ளவர்களாகத் தம்மை ஆக்கிக் கொள்ளவும் வேண்டும்.

கபீர்தாசர் விரதங்கள் இருந்து உடலை வருத்தி இறைவனை வழிப்படக்கூடாது என்ற நோக்கம் உடையவர். அதை இவரது உபதேசங்களில் அங்கங்கே காணலாம். உடலும் மனமும் நல்ல நிலையில் இருந்தால் தான் பக்தி செய்ய முடியும் என்பதை ‘பூகே பக்த நஹோயி குஸாயி’ என்கிறார். மேலும் பஜனைக் கீர்தனைகளிலே இவரது அற்புதமான கருத்துகள் பொதிந்துக் கிடக்கின்றன.
ஹரி போலோ பாயி ஹரிபோலோ என்ற பாடலில்,
‘மேரா மேரா கஹ்கர் கியா பல் பாயா ஹரிகே பஜன வினா ஜுடக மாயா கஹத கபீரா ஹரிகுண கானா காவத நாசத வைகுண்ட ஜானா’. என்று படுகிறார்.

பஜனை சம்பிரதாயத்திலே அடியார்களின் வரிசையிலே இவரது பாடல்கள் வரும்பொழுது, பக்தி என்பதே அறியாத பாமரர் நெஞ்சிலும், உணர்ச்சிகள் பொங்கி எழும். அவர்கள் இறைவனது இசை வடிவிலே மனம் ஊன்றி மெய்சிலிர்ப்பார்கள்.

———————கபீர்தாஸ் மஹாப்ரபு கீ ஜெய்——–

3 ஸ்ரீ துளஸிதாஸர்

‘அம்பொன்நேடு மணிமாட அயோத்தி எய்தி அரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான் தன்பெருந்தொல் கதைகேட்டு மிதிலைச் செல்வி உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் செம்பவளத் திறல்வாய்தன் சரிதை கேட்டான் தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே’
——–குலசேகரர்
கதையில் வருபவர்கள்
ஆத்மாராம்: துளஸியின் தந்தை
அக்பர் பாதுஷா: மொகல் மன்னர்
மமதா பாயீ: துளசிதாசரது மனைவி
கதை நிகழுமிடங்கள்: டெல்லி மாநகர் ராஜாப்பூர் வாரணாசி என்ற காசியம்பதி
தோற்றுவாய்
உலக மகாகவியங்களுள் ஒன்று ராமாயணம். தமிழ் நாட்டிலே வால்மீகி ராமாயணமும் கம்ப ராமாயணமும் எப்படிப் போற்றிப் புகழப்படுகின்றனவோ, அதுபோல வடநாடு முழுவதும் போற்றிக் கொண்டாடப்படும் ஒரு சிறந்த மகா காவியம், ‘ராம சரித மானஸ்’, என்று பெயர் பெற்ற துளசி ராமாயணம். ஹிந்தி இலக்கியத்தின் படைப்புகளுக்கு ஆதிபுருஷராகக் கருதப்படுகிறார், கோஸ்வாமி துளசிதாஸர்.

இவரது அற்புதமான அருட் கவிதைகளின் பெருக்கு, ராமசரிதத்தோடு நின்று விடவில்லை! விநாய பத்ரிகா என்ற ஒரு நூலாகவும், வெவ்வேறு வகையான தனிப்பாடல்களாகவும் உருவெடுத்து, மக்களது மனத்துள் தெய்வபக்தி நல்லொழுக்கம் பண்பாடு இவைகளை வளர்த்து வாழ்வை வளம் செய்விக்கிறது. இவரது ராமகாதை தோஹா என்ற ஈரடிப்பாக்களாலும், சௌபாயி என்ற நாலடிப் பாக்களாலும் அமைந்தது. அவற்றை இசையுடன் பாடும் பொழுது, கல்லும் கரைந்து உருகும். அத்தகைய தெய்வீகத்தன்மை வாய்ந்த அருட்கவிதைகள் அவை. மொழியிற்கும் நாட்டிற்கும், இறைவனுக்கும் ஒருங்கே பணி செய்த இப்பெரியாரது சரிதம், அற்புதங்கள் நிறைந்தது.

1.துளசிதாஸரின் இளமை

துளசிதாஸரின் காலம் அக்பர் பாதுஷாவின் காலமாகும். அக்பர் மொகலாய சக்ரவர்திகளுள் மிகச் சிறந்தவர், என்று பெயர் பெற்றவர். அக்பர் இந்துக்களை ஆதரித்து வந்தவர், என்பது சரித்திர பிரசித்தம். அவரது சபையிலே ஆத்மாராம் என்றொரு பிரதான மந்திரி இருந்தார். அதிமான ஞான ஆத்ம ஞான விசாரணையில் பெரிதும் ஈடுபட்டவர். அவரது சிறந்த தபோபலத்தால் அவரது நன்மகனாக தோன்றினார், கோஸ்வாமி துளசிதாஸர். ஆத்மாராம் ஸ்வாமி கல்விகேள்விகளில் சிறந்தவர். அரசியலில் நிபுணர். ஆழ்ந்து சிந்தித்து பல பெரிய செயல்களைச் செய்தவர். அக்பர் பாதுஷாவின் பெருமதிப்பையும் பெரும் பதவியையும் பெற்றவர். பெரிய ஞானியாகிய ஆத்மாராமஸ்வாமி, தர்பாருக்குச் செல்லும்போதெல்லாம், தன் மகனாகிய துளசிதாசரையும் கூட அழைத்துச் செல்வார். இளமையிலே முயற்சியின்றி கல்வியெல்லாம் அனாசியமாக கைகூடின துளசியிற்கு, தந்தையுடன் அரசவை பழக்கமும் சேரவே, சிறந்த அரசியல் மேதையாக விளங்கினான். ஆத்மாராம், துளசிக்கு தக்க வயது வந்தவுடன் தமது சுற்றத்தை சேர்ந்த மமதா பாய், என்ற குணநலன் நிரம்பிய அழகியை, மணம் செய்வித்தார். மகனை இல்லறத்தில் இருத்தித் தாம் தீர்த்த யாத்திரை செல்லப் புகுந்தார்.

2.கூடா ஒழுக்கம்

துளசிதாஸரது சிறந்த கல்விக்கேள்வியையும் அரசியல் ஞானத்தையும் நன்றாக அறிந்த பாதுஷா, தந்தையின் பதவியை அவருக்கு அளித்து, தந்தையினும் மேலாக அவரை கௌரவித்தார். ஆனால் துளசிதாஸரது வாழ்வை உலகத்தை ஞானமர்க்கத்திற்கு திருப்புவதற்கு பயன்பட வேண்டும் என்ற திருவுள்ளம் கொண்ட இறைவனது திருவிளையாட்டால், செல்வத்தின் செருக்கும் அடக்குவார் இன்மையும் சேரவே, கூடா நட்புகள் பெருகின. மெல்லமெல்ல பரத்தையரின் நேசமும் மேலிட்டது. இதைக்கண்டு அவர் தாயார் எவ்வளவோ புத்திமதிகள் சொல்லியும், பயன் இல்லை. ஆகவே உண்மையான நண்பர் ஒருவரிடம், கணவருக்கு தன் மகனது கூடாஒழுக்கம் பற்றி சொல்லி அனுப்பினாள். அது கேட்ட ஆத்மாராம், நொந்த மனதுடன் வந்தார் மகனை நல்வார்த்தைகள் சொல்லி, வேசிகள் நேசத்திலிருந்து மீட்டு அழைத்து வந்தார்.

பிறகு அவருக்கென ஒரு சோலையிலே வீடு கட்டிக்கொடுத்து, எல்லா வசதிகளுடன் வாழ வழிவகுத்தார். நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் என்ற முதுமொழிக்கிணங்க, சில நாட்கள் நல்ல மதியோடு நடந்த துளசிதாசருக்கு, மீண்டும் பழைய வாசனை பிடித்தது. ஆகவே இந்த டெல்லி மாநகரை விடுத்து நமது சொந்த ஊராகிய ராஜாப்பூருக்குச் சென்று உள்ளதைக் கொண்டு வாழட்டும் என்று நினைத்து தன் மனைவியையும் மருமகளையும் அழைத்து, இனி அந்த மடையனைக் காப்பது உங்கள் பொறுப்பு, என்று சொல்லி நைமிசாரண்யம் சென்றார் ஆத்மாராம்.

3.துளசிதாஸரும் மமதா தேவியும்

துளசிதாஸரைத் தாய் அருகில் அழைத்து தன்னால் இயன்றவரை நல்லுரைகள் கூறிக் குடும்பத்தை ஒழுங்கு செய்ய ஆரம்பித்தாள். துளசிதாசரோ வெறும் பெண் பித்தராய் வீட்டிலேயே அடைப்பட்டு கிடந்தார். இவைகளை எல்லாம் எத்தனை நாட்கள் தான் மறைக்க முடியும்! பாதுஷா அக்பரின் செவிகளிலே இவரது திருவிளையாடல்கள் எல்லாம் வீழ்ந்தன. ஒழுக்கத்தால் உயர்ந்த ஆத்மாராம் ஸ்வாமிக்கு இப்படி அவப்பெயர் தேடும் ஒரு பிள்ளையா என்ற கேள்வி அகண்டாகாரமாக அக்பர் பாதுஷாவின் முன்னே நின்றது. முதலிலே வேசையர் வீடே புகலாகத் திரிந்தார். இப்பொழுதோ மமதா மமதா என்று அவளையே வட்டமிடுகிறார். சீ சீ என்ன மனிதர் என்று நினைத்த பாதுஷா, தமது ஆட்களை அனுப்பி அழைத்தார். காமத்தில் விருப்பமுடைய துளசிதாசர், பாதுஷாவின் அழைப்பை ஏற்றுக் கொண்டு டெல்லி சென்றால், மனைவியைப் பிரிய நேரும் என்று நினைத்தார். அதனால் பாதுஷாவின் முயற்சி பலனில்லாமல் போனது. பாதுஷாவின் ஆட்கள் துளசிதாசர் மறுத்ததைப் பாதுஷாவிடம் தெரிவித்தனர்.

உடனே பாதுஷா, பிறர் சொல்வதெல்லாம் உண்மை தான் போலும் நாமே நேரில் சென்று பாப்போம் என்ற முடிவிற்கு வந்தவராய்த் தன் பரிவாரங்களுடன் ராஜாப்பூருக்கு வந்து தாம் வந்த செய்தியைச் சொல்லி அனுப்பினார்.

துளசிதாசரோ பாதுஷாவைப் பார்த்தால் டெல்லிக்கு அழைப்பார் அங்கே மமதா தேவியை உடனே அழைத்துச் செல்ல முடியாது ஆகவே இல்லை என்று சொல்லி விடுவோம் என்று எண்ணியவராய், வந்தவர் அறியாமல் இருக்க ஒளிந்துக் கொண்டார்.

மமதா தேவிக்கு ஏற்கனவே கணவரது செயல்களில் வெறுப்பு. இப்பொழுது கோபமும் வந்தது. அதனால் அவ்வம்மையார் துளசி தாஸரிடம், நீங்கள் பாதுஷாவைச் சென்று பார்க்காவிடில், நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார்.

துளசிதாஸர் வேறு வழியின்றி பாதுஷாவைப் பார்க்கச் சென்றார். அவர் பயந்தது போலவே, பாதுஷா அவரை வற்புறுத்தி டெல்லிக்கு அழைத்துச் சென்றார்.

துளசிதாசர், பாதுஷாவுடன் சென்ற மறுகணமே, அவர் தாயார் இதுதான் தருணமென்று, தம் மருமகளைப் பிறந்த வீடு போய் சில நாள் இரு பிறகு டெல்லி செல்லலாம் என்று தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். மகனது செயல்கள் தாயின் மனத்திலே வெறுப்பை ஊட்டியிருந்தன. சில நாள் மனைவியைப் பிரிந்து இருந்தால் தன் மகன் திருந்தி விடுவான் என்று தாய் நினைத்தாள்.

ஆனால் துளசிதாசரோ டெல்லிக்கு செல்லும் பிரயாணத்தின் நடுவே, பாதுஷாவிடம் ஏதோதோ சொல்லி கெஞ்சி பல்லைக்காட்டி, மமதா தேவியைப் பார்க்க விரும்பி, வீட்டிற்குத் திரும்பி விட்டார். அவர் ராஜாப்பூருக்கு வந்த பொழுது நள்ளிரவு. மமதா தேவி பிறந்தகம் போயிருக்கிறாள் என்றாள் தாய்.

இந்த க்ஷணமே அவளைப் பார்க்க வேண்டும் என்று குதியாய் குதித்தார் துளசிதாசர். தாய்க்கு துக்கமும் கோபமும் மாறி மாறி வந்தது. தொலை நீயும் ஒழிந்துப் போ என்று கூச்சலிட்டார் தாய்.

துளசிதாசருக்குத் திருவருள் கிடைக்கும் காலம் நெருங்கியது. உலக இச்சைகளில் அவருக்கு வெறுப்பை உண்டாக்க வேண்டும் என்று இறைவன் நினைத்தான். அதனால் அவ்விரவிலே இறைவன் சில அற்புதங்களைச் செய்தான்.

வானம் இருண்டிருந்தது. கார்காலத்து மேகங்கள் குமுறித்தூற்றலாய்த் தூறிக் கொண்டிருந்தன. சற்று நேரத்திற்கெல்லாம் இடியும் மின்னலும் புயலும் தோன்றின. இவற்றுக்கெல்லாம் சிறிதும் சளைக்கவில்லை துளசிதாசர். அவரது காதல் மயக்கம் அச்சத்தை வென்றது. மமதாவின் கிராமமோ, யமுனையின் எதிர் கரையில் இருந்தது. ஆற்றிலே பெருவெள்ளம் கரைப் புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் இடையே ஒரு பிரேதம் மிதந்துக் கொண்டிருந்தது. ஓடி வந்த துளசிதாசர் மனவேகத்தால் ‘பிரேதம் என்றும் அறியாது’, ஏதோ ஒரு கட்டை என்று நினைத்துப் பற்றி அதன் மீது ஏறி அக்கரை அடைந்தார்.

நள்ளிருள்! நடுநிசி. மழையோ தாரையாகப் பெய்கிறது. யார் வீட்டில் தான் கதவு திறந்திருக்கும், தன் மனைவியின் வீட்டுவாயிலை அடைந்தார். கதவு தாழிட்டிருந்தது. ஆகவே சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைவோம் என்று வீட்டைச் சுற்றி நாற்புறமும் பார்த்தார். தாழ்வாரத்தை அடுத்த மரக்கிளையில் ஏதோ ஒரு கயிறு தொங்குவது தெரிந்தது. அதைப்பற்றி ஏறி உள்முற்றத்திலே குதித்தார் துளசிதாசர். திருடன் திருடன் என்று கூச்சலிட்டனர் வீட்டிலுல்லோர். இந்த மழையிலும் புயலிலும் திருடனாவது என்று எழுந்து எட்டிப் பார்த்தாள் மமதா தேவி. விஷயம் விளங்கிவிட்டது. வெட்கத்தினால் அவள் உடல் ஒரு சாணாகக் குன்றியது. கணவனை வணங்கி வரவேற்றாள் அவள்.

மழை நின்றது. எப்படி வந்தீர்கள் என்றாள் மமதா தேவி. மரத்திலே ஒரு கயிறு இருந்தது என்றார் துளசிதாசர். என்ன ‘மரத்தில் கயிறா பார்ப்போம்’, என்று விளக்கை எடுத்துச் சென்று பார்த்தனர். துளசிதாஸரை ஆட்கொள்ளவிரும்பிய பகவான், பாம்பாக உருவெடுத்து மரத்தில் தலைகீழாகச் சுற்றிக் கொண்டிருந்தான். துளசிதாஸர் ஏறிய இடத்தில் குளிர் தாளாத ஒரு பெரிய நாகம் மரத்திலே சுற்றியபடி தலைகீழாகத் தொங்கியிருந்ததைக் கண்ட மமதா தேவியின் கண்களிலே கண்ணீர் துளிர்த்து நின்றது. ‘அடடா பேதை மனிதரே, இந்த அழியும் உடலின் மீது இவ்வளவு மோகமா! இந்த ஆவல் இந்த உறுதி இவைகளில் நுற்றிலே ஒரு பங்கை இறைவன் பால் வைத்தாலே போதுமே! அதை விட்டுக் கேவலம், இந்த ஊனுடலுக்காக இப்படி ஓடிவந்தீரே; வெள்ளமும் இடியும் புயலும் பாம்பும் இவையெல்லாம் ஒரு பொருட்டல்ல என் குறிக்கோள் நோக்கி ஓடுகிறேன் என்று ஓடி வந்தீரே; அந்தக்குறிக்கோள் கேவலம் ஒரு பெண் தானா; அந்தக் குறிக்கோள் இறைவனது திருவடியாகவல்லவா இருக்கவேண்டும், என்று துயரமும் விம்மிதமும் நிறைந்த குரலில் கூறினாள் அவள். துளசிதாசருக்கு ஞானக்கண்கள் திறந்தன.

4.வைராக்கியம்

உலகில் தவறுகள் செய்வது இயல்பு. அதைப் பிறர் கூறத் தெரிந்து திருத்திக்கொள்ளும் தன்மையுள்ளவனே மனிதன். இதனால் தான் திருந்திய வாழ்க்கை மருந்தினும் இனிது என்ற முதுமொழியும் பிறந்திருக்க வேண்டும். இல்லறத்திலிருந்தே முக்தி பெறலாம் உலகைத் துறந்து தான் முக்திப் பெற வேண்டும் என்பதில்லை என்ற கருத்துதான் நமது முன்னோர்களின் உபதேசங்களிலிருந்து தெளிவாகிறது. சட்டி சுட்டதும் கைவிட்டதும் என்பது போல அந்த நள்ளிரவிலே மனைவியின் சொற்களின் வெம்மையிலே, மனைவியின் ஏக்கத்திலே, அவருக்கு ஞானம் பிறந்தது. சித்தம் தெளிந்தது. நீயே என் சத்குரு என்று மனதில் நினைத்தவராய் வீட்டைத் துறந்து வெளியேறினார் அவர். திடீரென்று திரும்பிச் செல்வது கண்டு மமதா தேவி இது கோபமோ என்று நினைத்து வேண்டித் தடுத்ததையும் கேளாமல் அவர் வெளியேறவே, அவள் மூர்ச்சித்து விழுந்து விட்டாள்.

தனயன் திரும்பி வராததைக் கண்டு தாயார் சம்மந்தி வீடு வந்தார். கொட்டும் மழையிலே நடைபெற்றவற்றைக் கேட்டு அவரது தாயுள்ளம் புலம்பியது. மகனைத் தேட ஆட்களை அனுப்பித் தாம் வீடு சேர்ந்தார்.

வீடு துறந்த துளசிதாஸர், காசியை அடைந்தார். அங்கே பல பெரியோர்களை அண்டினார். பக்தி பெருக்கெடுத்தது பித்தனைப் போல இறைவனது திருநாமத்தையே பாடித் திரிந்தார். இந்தச் செய்திக் கேட்ட தாய், தானும் காசிக்குச்சென்று மகனை வீடு திருப்பும்படி வேண்டினார். அவள் சொற்கள் அவர் செவியில் ஏறவேயில்லை.

சில நாட்களுக்கெல்லாம், ஆத்மாராம் வீடு திரும்பினார். தன் புதல்வனது செய்திகள் கேட்டு இன்பத்தில் ஆழ்ந்தார். ஒழுக்கம் சிறிதுமற்ற தன் மகனை இறைவன் ஆட்கொண்ட விதத்தை எண்ணி எண்ணி உள்ளம் குளிர்ந்தார். காசிக்கு வந்து மகனைக்கண்டு ஆசிக்கூறி தம் கடமை முடிந்தது என்று உடலை விட்டார். அவருக்கு பின் வாழ விரும்பாத சதியாகிய அவர் மனைவியார், அவரது உடலுடன் தாமும் கங்கையிலே குதித்து விட்டார்.

அப்போது அசரீரீ, ‘ஏ துளசிதாஸ், உன் பெற்றோர்கள் ஈமக்கடமை முடி. இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய், என்று கூறியது. உடனே மமதா தேவியை அழைத்து வந்து இல்லத்தார்க்கு உரிய முறைப்படி தாய் தந்தையார்க்குச் செய்ய வேண்டிய கடன்களை செய்து முடித்து தாமும் தவத்தை மேற்கொண்டார்.

5.தெய்வ தரிசனங்கள்

தவத்திலே ஆழ்ந்திருந்த சமயம்.
ஒரு நாள் துளசிதாசருக்கெதிரில் ஒரு பூதம் தோன்றியது. அது அவரது திருவடிகளின் தூசியினாலே தனது சாபம் நீங்கியதாக தெரிவித்து, வணங்கி வழிபட்டு போயிற்று. இதன்பின், அவர் ஸ்ரீராமரை தரிசிக்க பேராவல் கொண்டார். இறைவனை கணமும் மறவாத அனுமனின் அனுக்கிரஹம் தனக்குக் கிடைத்தால் ராமரது தரிசனம் எளிதில் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு, அனுமனை வழிப்படத் தொடங்கினார். அப்பொழுது முன் வந்த பூதம் எதிரே வந்து, ‘அடுத்த தெருவிலே ஒரு பெரியவர் ராமாயணம் சொல்லுகிறார் அதன் இனிமையிலே மயங்கிய மாருதி தினமும் கிழவேதியர் உருவில் வந்துக் கேட்கிறார் நீர் அங்கே சென்று அவரைப் பற்றிக்கொள்ளும்’, என்று சொல்லி மறைந்துப் போயிற்று. ஒரு நாள் மாருதியாகிய கிழவேதியரைப் பிடித்துக்கொண்டார் துளசிதாஸர். ஐயா நீங்கள் எனக்கு அருள் செய்தாலன்றி விடப்போவதில்லை என்றார். அனுமனாகிய ப்ராஹ்மணரோ திமிறிக் கால்களை விடுவித்துக்கொண்டு திட்டியபடியே புராணீகரது வீட்டினுள் நுழைந்து விட்டார்.

இவரோ செய்வதறியாது தாமும் உள்ளே நுழைந்து அவர் திருவடிகளிலே விழுந்து தாங்கள் தான் மாருதி என்று அறிவேன் ஆட்கொள்ளவேண்டும் என, அவர் கூட்டத்துள் புகுந்து மறைந்தார். இப்படிப் பலமுறை அவர் ஏமாற்ற, துளசிதாசரும் இவரை விடுவதில்லை என்ற உறுதியுடன், ஒரு நாள் அந்தக் கிழவரது கைகளிரண்டையும் சேர்த்து தமது உத்திரியத்தினால் கட்டி விட்டார். கூடியிருந்தவர்களுக்கு என்ன தெரியும்.

ஐயோ பாவம், விருத்தப் ப்ராஹ்மணனை விட்டு விடு என்றனர். இவர் மறுக்க, இவர் கைகளையும் இழுத்துக் கொண்டு கிழவர் ஒடத் தொடங்கினார். அவருடன் ஓட முடியாமல் கீழே விழுந்து விட்டார் துளசிதாஸர், என்றாலும், கைப்பிடி தளரவில்லை. ஆகவே இவரை இழுத்துக் கொண்டு அவர் ஓட இவரது உடல் முழுவதும் கல்லும் முள்ளும் குத்திக்காயங்கள் ஏற்பட்டன. அந்த நிலையிலும் கைகள் தளராத மனஉறுதியைக்கண்டு மனங்களித்த ஹனுமான், தன் சுயஉருவுடன் எழுந்து நிமிர்ந்து நின்றார். துளசிதாசரது கண்களில் அனந்தக்கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மிகவும் அன்பும் பரிவும் கலந்தக்குரலில் அன்பனே உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார்.
‘எனக்கு ஸ்ரீ ராமபிரானைத் தரிசிக்க வேண்டும்’, என்றார் துளசிதாஸர்.

அன்பனே உன் உறுதிக்கு உவந்தேன். நீ வசிக்கும் தெருவிலேயே ராமபிரானைத் தரிசிக்கும்படி செய்கிறேன், என்று சொல்லி மறைந்தார் அனுமான். தவம் பலித்தது என்று அகமகிழ்ந்து வீடு சென்றார் துளசிதாஸர்.

மறுநாள் ஹனுமான், ஸ்ரீவைகுண்டம் சென்று துளசிதாசருக்கு தான் வாக்களித்ததாய்ச் சொல்ல, சீதா லஷ்மண ஹனுமான் சமேதராய் வந்த இறைவன் துளசிதாசரை சோதிக்க எண்ணி கிழப்பக்கிரியாக நின்றார். இவரோ அதைக் கண்டுக்கொளாமல், இன்னும் ராமபிரான் வரவில்லையே என்றுக் கண்மூடி மௌனியாகி அமர்ந்து வருந்திக்கொண்டிருந்தார். இறைவனோ இவரது மௌனம் கண்டு மறைந்து போனான்.

சற்று நேரத்திற்குப்பின் கண்விழித்த இவர், இங்கே ஆஞ்சநேயர் இருப்பதுக்கண்டு ஓடிச் சென்று அவர் கால்களில் விழுந்து, ஸ்வாமி என்னை ஏமாற்றி விடீர்களே இது தகுமா, என்று கெஞ்சிக் கேட்டார்.

அவரோ இப்போது பகவான் உன் கண் முன் கிழப்பக்கிரி உருவில் வந்தார் நீ கண்டுக்கொள்ளவில்லை நான் என்ன செய்ய என்றார்.
தமது மடமையை நொந்துக்கொண்டவராய் மேலும் தியானத்தில் ஆழ்ந்தார் துளசிதாஸர்.

மறுமுறையும் ஏமாற்றி மூன்றாம் முறையாக இறைவன் துளசிதாஸருக்கு காட்சி கொடுப்பதாகச் சொல்ல அது காசிவாசிகளிடையே பரவியது. ஊரார் எல்லாரும் ராமபிரானது வருகையைக் காண குழுமி விட்டனர்.

மாலை நேரம். மாடுகள் தங்கள் கழுத்திலேயுள்ள மணிகள் ஒலிக்க வீடு திரும்பிக்கொண்டிருந்தன. தீபங்கள் வரிசை வரிசையாக ஒளி வீசிக்கொண்டிருந்தன. புஷ்பங்களின் நறுமணம் ஊதுபத்தி சாம்பிராணி இவைகளிலிருந்து எழுந்த சுகந்தம் ஒன்றுசேர்ந்து அவ்விடத்தைப் புனிதமாக்கிக்கொண்டிருந்தன. மமதா பாய், மடத்து வாசலிலே மிகப் பெரிய பந்தல். அதிலே மணமகன் வருவது போல சீதா லக்ஷ்மணர் பரத சத்ருகனர் புடைசூழ கால் நிலந்தேய நடந்து வந்து நின்றான். ராமபிரான் கண்டோம் கண்டோம் ஜெயசீதாராம் என்ற கோஷம் வானவீதி முழுவதும் ஒலித்தன. அடியற்ற மரம் போல அவரது திருவடிகளிலே விழுந்தார் துளசிதாஸர். அந்த அற்புதக்கட்சியை வாய்த்த கண் வாங்காமல் பார்த்துப் பொங்கிப் பூரித்தது பக்தர் கூட்டம்.

ராமா ஏ ராமா, இப்பொழுது தான் உன் மனம் கனிந்ததோ, என் ஐயனே, என்னை ஆட்கொள்ளும், என்று மேலும் பேச வாய்வராமல் நெஞ்சம் தடுமாற நாக்குழற தொண்டை தழுதழுக்க கண்ணீர்ப் பெருகியவராய் எழுந்தார் துளசிதாஸர். ராமனும் சீதையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மமதா பாயோ திறந்த வாய் மூடாமல் ஒருபக்கமாய் நின்றாள். ராமனும் சீதையும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகை புரிந்துக் கொண்ட காட்சி அவளை மெய்சிலிர்க்கச்செய்ய, ‘ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்’, என்ற சொற்கள் மட்டும் அவள் வாயினின்று எழுந்தன.

இறைவனது திருமுக மண்டலத்திலே மீண்டும் இளநகை அரும்ப, பவளவாய் திறந்து, ‘ஏ துளசி ஆட்கொள்ள வேண்டுகிறாய்’. ‘நீ செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன’. அமுதாகிய தமிழிலும், தேவபாஷையாகிய வடமொழியிலும் என் சரிதம் உள்ளது. இங்குள்ள மக்கள் அவதி மாகதி மைதிலி என்ற பாஷையை குழப்புகின்றனர். சிறந்த இலக்கியங்கள் தோன்ற வேண்டும். அவை பக்தியைப் பரப்புவதாய் தெய்வ மணம் கொண்டதாய் அமைய வேண்டும்; மக்கள் நெஞ்சிலே தூய்மையும் ஒழுக்கமும் பக்தியும் வளரச்செய்ய வேண்டும்; நல்லோழுக்கமில்லாத பாபியான நான் பாடினால் ஏற்குமோ உலகம் பார்க்குமோ என்று வருந்தாதே; எவ்வளவு தாழ்ந்து போனாலும் உள்ளத்தில் உண்மையும் உறுதியும் தெய்வநெறியும் உண்டானால் மீளலாம்; மீண்டும் நல்வாழ்வு பெறலாம்; தானும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்கலாம் என்ற உண்மையை உன் திருந்திய வாழ்க்கை மக்களுக்கு உணர்த்தும்; ஹனுமன் சொல்லின் செல்வன்; நவவியாகரண பண்டிதன்; அவனிடம் ஞானனோபதேசம் பெற்று பக்தியைப் பரப்பி பணி செய்து பிறகு முக்தியடையலாம்; ஹிந்தி மொழியிலே உனது ராமச்சரித்திரமானஸம் தன்னிகரற்று விளங்கும், என்று கூறி மறைந்தார். மெய்மறந்து நின்ற துளசிதாசரது கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் அருவி போல வழிந்தோடியது.

அனுமன் அருளாலும், இறைவனது பேரருளாலும், துளசிதாசரது திருவாயிலிருந்து எழுந்த ராமச்சரித்திரமானஸம், என்ற இன்னமுதப் பாடல்கள், மக்களின் செவியிற்கு விருந்தாகின. அனுமன் துளசிதாசருக்கு தனியே உபதேசம் செய்தது, ‘ஞான ராமாயணம்’, என்ற பெயர் பெற்றது.

6.சோதனைகள்

துளசிதாசரது மடத்திலோ செல்வத்திற்கு குறைவில்லை. பாதுஷாவின் காணிக்கைகளும் பக்தர்கள் தாமாகவே வலிய வந்து அளிக்கும் பொருட்களும் தானியங்களும் நிறைந்திருந்தன. அங்கு தங்கி வந்த சாதுக்களில் நால்வர் மடத்துப் பொருட்களைக் கொள்ளையிட்டுப் போக நினைத்து, ஓர் அமாவாசையன்று மெல்ல மெல்ல கொல்லை வழியாக மூட்டைகளுடன் திருடிய பொருட்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். தோட்டத்தின் எல்லையைக் கடக்கும் முன் இரு காவலர்கள் அவர்களை வந்துப் பிடித்தனர். சாதுக்களோ திருடியதோடு இல்லாமல், உங்களுக்கும் பங்கு கொடுக்கிறோம் விட்டு விடுங்கள் என்று கெஞ்சினர். காவலர்களோ முடியாது என்று அதட்டி, அங்கிருந்த மற்றவர்கள் முன் கொண்டுபோய் நிறுத்தி மறைந்து போயினர்.

சாதுக்களிலே நால்வர் திருடர் என்ற செய்தி, மற்றவர்களை தலை குனிய வைத்தது. அவர்களைத் துளசிதாசரிடம் அழைத்துச் சென்றனர். அவரோ அந்த நால்வரையும் பார்த்து, சாதுக்களே இந்தப் பொருளுக்கு இவ்வளவு கஷ்டப்படுவானேன்; பகலிலே எடுத்துக் போகலாமே என்றார்.

அவர்கள் அழுத குரலோடு, ஐயா எங்களுக்கு புத்தி வந்து விட்டது நேற்றிரவு மடத்துக் காவல்காரர்கள் அடித்த அடியை நினைத்தாலே நடுக்கம் உண்டாகிறது. இனி ஏழு பிறவிக்கும் திருட மாட்டோம் என்றனர்.

திடுக்கிட்டார் துளசிதாஸர். என்னது மடத்துக்காவலர்களா அடித்தார்களா யார் அது காட்டுங்கள்; சாதுக்களை அடித்த அவர்களை நான் தகுந்தபடி தண்டிக்கிறேன் என்று எழுந்தார்; அவர்கள் காவலர்களை எங்கு தேடியும் காணோம்; இவருக்கோ கோபம் தணியவில்லை. அப்போது ராமலக்ஷ்மணர்கள் எதிரே தோன்றி, நாங்கள் தான் அடித்தோம், என்ன தண்டனையோ கொடுங்கள், என்று கையிலிருந்த வில்லை கீழே போட்டு நின்றனர். என் பொருளைக்காக்கும் சிரமத்தை தங்களுக்கு அளித்து விட்டேனே என்று ஏங்கி, இறைஞ்சி, திருவடிகளிலே விழுந்தார் துளசிதாஸர். பொருளை மடத்திலே சேமித்து வைக்காதே, அன்னமிடு என்று சொல்லி மறைந்தனர் அவ்விருவரும். இப்படியே மீண்டும் ஒரு முறை மாய அந்தணராக வந்து அவரது கொடைத் தன்மையை சோதிக்க எண்ணி அவரது மனைவியையே தமக்கு வேண்டும் என்றுக் கேட்டனர். கேட்ட உடனேயே சிறிதும் கலங்காமல் மனைவியை அவருக்கு கொடுத்து அச்ச்செயலை எதிர்த்தவர்களையெல்லாம் கொன்று தமது தளராத உறுதியை நிலை நாட்டினார் துளசிதாஸர். சோதனையின் முடிவில் மாய அந்தணராக வந்த பகவான், தரிசனம் தந்து இறந்தவர்களை எழுப்பி மறைந்தார்.

தமிழ் நாட்டிலே சம்பந்தப்பெருமான் எலும்பைப் பெண்ணாக்கிய அற்புதம் நிகழ்ந்ததுண்டு; சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் முதலையுண்ட பாலகனை அழைத்தச் செய்தி உலகறியும். விஷம் தீண்டியவர்களை அருட்கவிதைகள் உயிர்ப்பித்த வரலாறுகளையும், நாயன்மார் சரிதங்களில் காணலாம். காசியின் சமீபத்திலே உள்ள ஒரு பெண்மணியின் துயர் கண்டு இறந்த அவள் கணவனை உயிர்ப்பித்து அளித்தார் கோஸ்வாமி துளசிதாஸர். இறைவனது திருவருள் இருந்தால் எது தான் நடவாது.

7.பக்தியைப் பரவச் செய்தல்

அக்பர் பாதுஷா மிகச் சிறந்த தெய்வ பக்தர். எம்மதமும் சம்மதம் என்ற மனநிலை உடையவர். தீன் இலாஹி என்ற பெயரால் ஒரு புதிய மதத்தையே நிலை நிறுத்த முயன்றார். ஆத்மாராம் ஸ்வாமிகளிடம், இவர் எல்லையற்ற அன்புடையவர். துளசிதாசரது சிறப்பும் அவரோடு ஊரார்க்கும் ஸ்ரீராமரை தரிசிக்கும் பேறு கிடைத்தது என்ற செய்தியும் கேட்டு ஆனந்தம் கொண்டு அவரைப் பார்க்க வந்து சேர்ந்தார் பாதுஷா.

காசி நகரிலே வாழ்ந்த முஸ்லிம்கள் தாமும் ராமனைக் காண வேண்டுமென்று விரும்பினர். அக்பர் பாதுஷாவின் வரவும் ஒன்று சேர்ந்தது; அக்பர் தமது விருப்பமும் அதுவே என, அதற்கு துளசிதாஸர் இறைவன் தாமாகவே அருள்செய்யவருவானன்றி நாம் அழைத்த போது வருவாரா? அப்படி வர மாட்டார்! அழைப்பதும் அபசாரம் என்றார். ஆனால் இதை அந்த முஸ்லிம்கள் நம்பாமல், இவன் வெறும் புரட்டன் ஊரை ஏமாற்றி வாழ்கிறான், என்று சொல்லி அவரைத் துன்புறுத்தினர்.

வேறு வழியின்றி அனுமனைத் துதித்தார் துளசிதாஸர். அவ்வளவுதான்! கில கிலவென்ற ஒலியுடன் ஒரு பெரும் குரங்குக்கூட்டம் வந்து, முஸ்லிம்களை விரட்டியது. பிழைத்தால்போதுமென்று முஸ்லிம்கள் ஓடலாயினர். பாதுஷாவோ திகைத்து துளசிதாசரிடம் வந்து இது என்ன என்றார். துளசிதாசரோ நீங்கள் விரும்பிய ராமதரிசனம் கிடைக்கப்போகிறது. அதன் முதற்படியாக ராமரது சேனைகளில் ஆயிரத்தில் ஒரு பங்கு வந்துள்ளது. பாக்கி சேனைகளும் வந்த பிறகு, ராமர் வருவார் என்றார். ராமதரிசனம் கிடைக்காவிட்டால் போகிறது, எங்கள் பிழை பொறுத்து அருள வேண்டும், என்று பாதுஷா வேண்டிக்கொண்டார். துளசிதாஸரும் புன்சிரிப்புக் கொண்டு அனுமனது திருவருளால் குரங்குகளை ஒட்டியருளினார்.

இதன் பின்னர் பாதுஷா, சில நாள் அங்கேயே தங்கினார். துளசிதாஸரது அருமையான கவிதைகளையெல்லாம் அவர் வாக்கினாலே பாடக்கேட்டு மெய்மறந்தார், மேலும் அவரது விநய பத்ரிகா, ராம சரித மானஸ், இவைகளிலே பொதிந்துள்ள நவநவமான கருத்துகளையெல்லாம், அவர் வாயிலாகவே கேட்டு, அவர் மனம் பேரானந்தத்திலே லயித்தது. தன் தர்பாரிலே உள்ள நவமணிகளுக்கெல்லாம் சிரோரத்னமாக விளங்கக் கூடியவர் அவர், என்று பெருமிதம் கொண்டார். அவரிடம் தத்துவ விளக்கங்களைக் கற்றார். முற்றும் துறந்த இந்த மெய்யடியார், தன் சபையை அலங்கரிக்க முற்பட்டார். துறவிக்கு வேந்தன் துரும்புதானே என்று அங்கேயே ஆத்மவிசாரமும் செய்தார்.

இறைவன் ஒருவனே அவனே வெவ்வேறுகாலங்களில் வெவ்வேறு தன்மையனாக அவதரித்து மக்களுக்குப் போதனைகளைச் செய்து வாழ்விக்கிறான் ஒவ்வொரு மதமும் அவனை அடையும் வழிகளே. அந்தந்தக்காலத்தின் தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மானிடவடிவந்தாங்கி வந்து மக்கள் எப்படி வாழ வேண்டும் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும், என்பதையெல்லாம் தானே நடந்துக்காட்டி, மக்களைப் பின்பற்றச் செய்கிறான், என்பதே இறைவனின் அவதார ரகசியம். வாழ வழிகாட்டியாக விளங்குவதே தெய்வமாக்கதைகளின் உள்ளுறை. ராமாயணம் வெறும் வீர சரிதைமட்டுமன்று சிறந்த அரசியல் நூல். அரசியலின் தன்மை கொடுங்கோன்மையின்மையினின்றும் மக்களை அரசன் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பவை இராமாயணத்தில் விவரிக்கப்பட்டிருக்கின்றன என்று எடுத்துரைத்தார்.

இவரது அருமையான போதனைகளினால் மனம் தெளிவுப் பெற்ற அக்பர் பாதுஷா, தமது அரசியலுக்கும் ராமசரிதமானஸ் விளங்குவதுகண்டு பெருமிதம் கொண்டார். பாரத நாடு முழுவதும் ராம சரித மானஸைப் பரவச் செய்யவும் நினைத்தார்.

பஜனை பத்ததிகளிலும் ஹரிகாத காலக்ஷேபங்களிலும் துளசிதாஸரது கனிரசம்போன்ற கவிதைகளைக் கேட்கலாம் துளஸிதாஸர் என்னும் மகானானவர்,
‘காயியே மத கஜபத கமன சங்கர சுமன பவானீ நந்தனா’
என்ற கானடா ரகத்திலே தொடங்கும் பொழுது கோஸ்வாமி துளஸிதாஸர் நம்முன் வருவார்.
தெருவீதியிலே செல்லும் வடநாட்டுப் பைராகி,
‘ஸீய ராமப்பிரேம பியூஷபூரண ஹோதோ ஜனமன பரதகோ முனிமன ஆகமஜம நியம சமதம் விஷமாவரத ஆசாரதகோ தூக்க தாஹ தாரித தம்ப தூஷண சுஜசமிச அபஹரதோகோ கலிகால துளஸி ஸை சடின்ஹி ஹடி ராமசனமுக கரதகோ’,
என்று அவரது கவிதைகளை பாடுகிறான்.
அதை ஒட்டி நமது பாகவதர்,
ராமநாமமே கற்கண்டு ரசமறியாதவன் மனம் கற்குண்டு,
என்று பாடுவதும் கேட்கிறது உண்மைதானே சந்தேகமென்ன?
ஜெய் ஸ்ரீ துளஸி தாசமஹாப்ரபு கீ ஜெய்
——————————ஓம்……………………………………….

4. நாமதேவர்

‘ரங்க ரங்க நமோஸ்துதே ஜய ரங்கநாத நமோஸ்துதே பாண்டுரங்க மோஸ்துதே ஜய பத்மநாப நமோஸ்துதே ஜய’
கதையில் வருபவர்கள்
தாம்ஸேட்டி: நாமதேவரின் தந்தை
குணாபாய்: தாயார்
ராஜாபாய் நாமதேவரின்: மனைவி
விசோபகேசர்: நாமதேவரின் குரு
கதை நிகழுமிடம்: ஸ்ரீ பண்டரிபுரம்
தோற்றுவாய்
ஸ்ரீ பண்டரிபுரத்தின் பெருமையை விளக்கிய பக்தர் ஸ்ரீ நாமதேவர், நாமத்தினுடைய பெருமையைச் சொல்லியே தேவனை அடையலாம், என்ற கொள்கையைப் பரப்பியவர் ஆதலின் நாமதேவர் என்று இவரைச் சொல்வர்.
நாமபக்தியை பஞ்சாப் வரை பரப்பியவர் இவர். பஞ்சாப் இவர் காலத்தில் முஸ்லிம்களின் ராஜ்ஜியமாக இருந்தது. மராட்டியர்களின் பாகவத சம்பிரதாய கொடியை முதலில் முஸ்லீம் ராஜ்ஜியத்தில் ஏற்றியவர் இவர். நாமதேவர் சமாதி பஞ்சாபில் குருதாஸ்புர் ஜில்லாவில் உள்ள குமான் என்னும் ஊரில் உள்ளது.

நாமதேவர் எழுதிய பாடல்களுக்கு, மராட்டி மொழியில் அபங்கங்கள் என்று பெயர். இவ்வகையான பாடல்களை முதலில் உண்டாக்கியவரும் இவரே! இவரது சில அபங்கங்கள், கிரந்த சாகையில் குருமுகியில் இருக்கின்றன. நூறு கோடி அபங்கங்களைக் கொண்டு உன்னை பாடப் போகிறேன் என்று பாகவனைப் பார்த்துக் கூறுகிறார் நாமதேவர். இவர் பாடியனவாக 2500 அபங்கங்கள் கிடைத்துள்ளன.

நாமதேவர் ஞானேசுவருடன் கூடி, இந்தியா முழுவதும் சுற்றி, பக்தி மார்க்கத்தை பரவச் செய்தார். ஹரிகீர்த்தனையில் மூழ்கி பக்தர்களைப் பரவசப்படுத்திய நாமதேவர், பாண்டுரங்கன் கோயிலை விஸ்தாரப்படுத்தினார்.

நாமதேவர் விழா, பண்டரிபுரத்தில் பாகவனோடு சேரக்கொண்டாடப் படுவதன்றி தனியே ஒரு ஊரில் கொண்டாடப்படுவதில்லை! இவருக்கு சிஷ்ய பரம்பரையும் இல்லை. தன்னுடைய அனைத்தையும் பகவான் பாண்டுரங்கரிடம் அர்ப்பணித்தவர் நாமதேவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.

மகாராஷ்டிரத்தில் பாகவத தர்மம் எப்படி உருவெடுத்தது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், நாமதேவராது ஹரிகீர்தனைகளை இன்றும் ஆராய்ச்சி செய்கிறார்கள்.

1.நாமதேவர் தோற்றம்
வடநாட்டுத் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலம் பண்டரிபுரம். அந்த தலத்திலே தையல் வேலை செய்யும் தாமசெட்டி என்றொரு பக்தர் இருந்தார். இவரது மனைவி குணாபாய். இவ்விருவரும், இறைவனிடத்திலே மாறாத பக்தி உடையவர்கள். இவர்கள் தாம் உண்ணும் உணவை பண்டரிநாதன் ஆலயத்திற்கு எடுத்துச்சென்று நிவேதனம் செய்து வருவது வழக்கம்.

இருவரும் முதுமையின் வாயிலை அடையும் சமயம், தீடீரென்று ஒரு நாள் குணாபாய் ஒரு கனவு கண்டார். இறைவன் பண்டரிநாதன் அவர் முன் தோன்றி, நாளைக் காலையில் நீ ஒரு மகனைப் பெறுவார் என்றார். திடுக்கிட்டு கண்விழித்தார் அவள்! தன் கணவரை எழுப்பி கண்ட கனவை விவரித்தாள் அவள். அவர் கைக்கொட்டி சிரித்து, அடி பேதையே, எனக்கோ அறுபதும் முடிந்தது உனக்கு அறுபது முடிய இன்னும் சிலவருடங்களே மிகுதி! இந்த நிலையில் திடீரென்று நீ நாளைக் காலையில் மகனைப் பெறுவாய் என்று ஸர்வேஸ்வரனே வந்து சொன்னாலும் நடைபெறக்கூடியதா. நீ என்னிடம் சொல்லாமல் எதையோ எண்ணிப் படுத்திருப்பாய், உன் எண்ணமே கனவாக மலர்ந்திருக்கலாம் என்றார்.

குணாபாயின் முகம் நாணத்தினால் சிவந்து இவரது பரிகாசத்தினால் சுருங்கியது. ஆனாலும் இரவிலே பகவான் வந்து சொன்னார் கட்டாயம் பலிக்கும் என்றே நம்பினாள்.

பொழுது புலர்ந்தது. தாம்ஸேட்டி வழக்கம் போல நீராடும் பொருட்டுச் சந்திர பாகா நதியை அடைந்தார். அங்கே நின்ற முன்பின் அறிமுகமில்லாத ஒரு கிழவர், ஏ தாம்ஸேட்டி உனக்கு மகன் பிறந்திருக்கிறானா? என்றார்.

தமது வீட்டில் விடியற்காலையில் நடந்தவைகளை எவரேனும் ஒட்டுக் கேட்டிருக்க கூடும் பரிகசிக்கிறான், என்று எண்ணி, பதில் பேசாமல் நதியில் இறங்கினர் தாம்ஸேட்டி.

உத்தவர் என்பவர் மிகச்சிறந்த மெய்ஞானி. ஸ்ரீமத்பாகவதத்திலே, உத்தவருக்கு கண்ணன் உபதேசித்த பகுதி, உத்தவ கீதை என்றுப் போற்றப்படும். அதிலே குறித்துள்ள போதனைகள், மிகவும் எளிமையாகவும் எளிதில் பின்பற்றக்கூடியதாகவும் இருக்கும். பகவத்கீதையின் சாரத்தை எம்பெருமான் கண்ணன் மூலமாக, அவர் வாய்மொழியாக கேட்டுப் பேறு பெற்றவர் உத்தவர். பகவான் சேஷத்திலிருந்து எழுந்தார். உத்தவரை அழைத்தார். ‘ஏ உத்தவ பாரத நாடு பக்தி யோகம் செய்ய தகுந்த ஆசான் இன்றித் தவிக்கிறது. எத்தனை எத்தனையோ மகான்களும் நூல்களும் தோன்றியும் மன அழுக்கை போக்க முடியவில்லை. என்னை அடைவதையே நோக்கமாகக் கொண்ட தாம்ஸேட்டி, அதோ சந்திரபாகா நதியிலே நீராடுகிறான். குணாபாய் மிகச் சிறந்த பக்தை. நீ மீண்டும் ஒரு குழந்தையாக பாரத பூமியிலே தோன்ற வேண்டும் அதற்கு உரியவர்கள் இவர்கள் தான் சீக்கிரம் செல்’, என்றார்.

உத்தவர் மெய்சிலிர்த்தார். இதோ என்றார். அவ்வளவு தான்! மிகப்பெரிய சிப்பி ஒன்றிலே ஒரு மானிடக்குழந்தை தெய்வ ஒளி வீச, குவா குவா என்று அழுதுக் கொண்டு, சந்திரா பாகா நதியின் மணல் தடத்தின் ஓரத்தில் நீரோட்டதின் அருகே கிடந்தது.

மூழ்கி நிமிர்ந்த தாம்ஸேட்டியின் எதிரில் சிப்பி மிதந்து கரை ஒதுங்குவதைக் கண்டார். அதிலுள்ள தெய்வக்குழந்தையைக் கண்டு, மிக்க மனமகிழ்ச்சியுடன் ஓடி எடுத்தார். ஆம் கனவு பலித்தது! குணாபாய் உன் கனவு உண்மை தான் என்று கூறியவாறு வீட்டை நோக்கி நடந்தார்.

ஈரம் சொட்ட சொட்ட கையில் குழந்தையுடன் வரும் தாம்ஸேட்டியை முன் கண்ட அந்தணர், வழிமறித்து, அது தன் குழந்தை தான் என்று வாது செய்ய, மெல்ல மெல்ல அவரிடமிருந்து தப்பித்து வீடு வந்து, ‘ஏ குணாபாய் ஓடி வா ஓடி வா உன் கனவு பலித்தது’, என்று வீடே அதிரும்படி கூறினார் தாம்ஸேட்டி. குணாபாய் ஓடி வந்தாள். அழகிய அந்தக் குழந்தையை இரு கைகளிலும் ஏந்தி மார்புற அணைத்துக்கொண்டாள். தாயுள்ளம் பெருமிதத்தால் விம்மியது.

2.நாமதேவர் அன்னமூட்டுதல்

குழந்தை நாமதேவன், அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கினான். ஒரு நாள் தாம்ஸேட்டி வெளியூர் செல்ல நேர்ந்தது. குணாபாய் வழக்கப்படி சமையல் முடித்து, பண்டரிநாதர் ஆலயத்திற்குச் செல்ல தம் கணவர் இல்லையே என்று வருந்தினாள். ஐந்து வயதே நிரம்பிய நாமதேவன், ‘அம்மா என்னிடம் கொடு நானே பூஜை செய்து நிவேதனம் ஊட்டி வருகிறேன்’, என்றான். தாயும் தட்டிலே வைத்து மூடிக் கொடுக்க, ஆலயத்தை நோக்கி நடந்தான். வழியிலே அவன் தோழர்கள் பந்து விளையாடிய இடத்திலே சற்று நின்றான். அப்பந்து வந்து நிவேதனத்தின் மீது விழுந்தது.

அடே நாமதேவ், தெருவிலே ஆடும் பந்து அசுத்தம்; அது பட்டு விட்டது; திரும்பி வந்து விடு; என்று அழைத்தாள் குணாபாய். அதை ஏற்காமல் கோயிலை நோக்கிச் சென்றான் மகன். கோயில் திறந்திருந்தது. ஆனால் பணிமக்கள் அங்கே யாரும் இல்லை. குழந்தை நாமதேவனுக்கு தந்தையார் என்னென்ன செய்வார் என்பது தெரியாது. நிவேதனத்தை திறந்து எதிரே வைத்தான். ஸ்வாமி எனக்கு ரொம்பப் பசிக்கிறது நீ சீக்கிரம் சாப்பிடு என்றான்.

இறைவன் சாப்பிடவில்லை! ஆவி அவனுக்கு அன்னம் நமக்கு என்பது குழந்தைக்கு எப்படித் தெரியும்! உம்மாச்சி சாப்பிடுவார் என்பது தான் அவனுக்குத் தெரியும். ஆகவே இறைவனை மீண்டும் வற்புறுத்தி, ‘ஏ பாண்டுரங்கா உனக்கு உன் அம்மா நிறைய பட்சணம் கொடுத்தாளா? பசிக்கவில்லையா? சாப்பிடு சாப்பிடு’ என்றான். இறைவனோ அசையவேயில்லை. குழந்தைக்கு கோபம் வந்தது. நீ சாப்பிடாவிட்டால் நான் இந்தக் கல்லிலே தலையை மோதிக்கொள்வேன் என்று சொல்லி தலையை மோதிக் கொள்ளத் தொடங்கினான்.

தீபங்கள் அசைந்தன. பரந்தமானது உத்திரியமும் மாலைகளும் அசைந்தன. வைஜயந்தி வனமாலா சங்கு சக்ர பீதாம்பரதாரியாய் இறைவன் விக்ரக வடிவிலிருந்து மாறி நின்றான். சம்மணமிட்டு அந்தத் தட்டின் எதிரே உட்கார்ந்து நீயும் நானும் ஒன்றாய் சாப்பிடுவோம் என்றான்.

நாமதேவன் தானே தட்டிலிருந்து எடுத்து இறைவனுக்கு ஊட்ட, குழந்தை போல் வாய்திறந்து அந்த அன்னத்தை உண்டான் இறைவன். தனது கைகளினால் எடுத்து நாமதேவனது சின்னஞ்சிறிய வாயிலே ஊட்டினான். இவ்வாறு இருவரும் உண்டனர். பிறகு எதிரே பூசிக்கொள்வதற்கென்று வைத்திருந்த சந்தனத்தை அவன் மீது பூசி தனது பீதாம்பரத்தை அவனுக்கு உடுத்தி அவனது சிறிய துண்டை தான் வாங்கி அணிந்து, பிறகு விக்ரகமாகவே மாறி நின்றான் பகவான். சந்தோஷம் மிகுந்தவனாய் நகைமுகத்தோடும் கையில் வெறும் தட்டோடும் வீடு திரும்பினான் நாமதேவ்.
குழந்தையின் முகமலர்ச்சியைக்கண்ட தாய் இவனே சாப்பிட்டு விட்டான் என்று கருதி நிவேதனம் எங்கே என்று கேட்டாள்.

குழந்தை உள்ளது உள்ளபடிதான் சொன்னான். அவள் நம்ப வில்லை. இந்த சமயத்தில் தாம்ஸேட்டியும் வந்தார். அவரும் திட்டத் தொடங்க, ‘அப்பா நானும் பாண்டுரங்கனும் ஒரே தட்டிலே சாப்பிட்டோம். நான் எடுத்து அவருக்கு ஊட்டினேன். அவரே எனக்கும் ஊட்டினார். பீதாம்பரத்தையும் எனக்கு உடுத்தி விட்டார். பாரும் என்று இடையிலிருந்த பீதாம்பரத்தைக் காட்டினான்’, நாம்தேவ். இறைவன் பூசிய சந்தானத்தின் சுகந்தம் அறை முழுவதும் கமழ்ந்தது. தாம்ஷெட்டியின் மனம் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தது. நாமதேவன் தமக்கு கிடைத்த வரலாற்றையும் நினைத்தார் என்றாலும் நாமதேவ் என் எதிரே ஊட்டுவாயா என்றார்.

நாமதேவ் ஆகா இதோ என்று எழுந்தான். மீண்டும் நிவேதனத்துடன் தாய் தந்தையாருடன் கோயிலுட்புகுந்தான் தனயன். பாண்டுரங்கனோ கொஞ்சத்தில் அசையவில்லை! நெடுநேரம் நாமதேவர் கதறி அழவே, மீண்டும் தோன்றித் தாமே உணவை ஊட்ட, சந்தேகம் தெளிந்த தாம்ஸேட்டி மைந்தனை வாரி எடுத்து மார்புற அணைத்து மெய்மறந்தார். கண்களில் ஆனந்த கண்ணீர் சொரிய நின்றார். புன்னகை பூத்த முகத்துடன் இவர்களையே பார்த்து நின்றான் எம்பெருமான் பாண்டுரங்கன்.

3.திருமணம்

நாமதேவரது தெய்வ பக்தி நாளுக்கு நாள் வளர்ந்தது. மகனுக்கு மணம்முடிக்க விரும்பினர் பெற்றோர். அப்பொழுது பகவான் ‘இவ்வூரிலே உங்கள் இனத்தார் ஒருவரின் மகள் ராஜாபாய் என்பவளை மணமுடியுங்கள்’, என்றான்.

அவர் யார் என்று விசாரிக்க, ‘அவர் மிகுந்த செல்வம் படைத்தவர்’, என்று தெரிந்தது. குணாபாய் இதை ஏற்கவில்லை, என்றாலும் கடவுளே சொன்னது என்று மனந்துணிந்து பெண் கேட்கப் புறப்பட்டார் தாம்ஸேட்டி. பெண்ணின் தந்தை ‘ஆயிரம் பொன் பரிசப்பணம் கொடுக்கவேண்டும்’, என்றார். பதில் பேசாமல் தாம்ஸேட்டி வீடு வந்தார்.

நடு இரவு. ஒரே இருள். தாம்ஸேட்டியின் வீட்டு முற்றத்திலே செங்கல்கள் வந்து விழுந்தன. யாரோ திருடன் என்று அவர் வெளியே வந்துப் பார்க்க, இதற்குள் திருடன் பிடிபடாமல் ஓடிப்போனான். காலையில் விழித்து எழுந்ததும் முற்றத்திலே பொற்கட்டிகள் இருப்பதுக்கண்டு வியந்தார். எடுத்து ஒரு மூலையிலே குவித்து புதைத்து வைத்து, இறைவன் திருவருளை எண்ணியெண்ணி தியானத்தில் ஆழ்ந்தார்.

அங்கே ராஜாபாய் என்ற பெண், நாமதேவரது பெருமைகளைக் கேட்டு, அவரையே மணக்க முன்வந்தாள். நம் தந்தை பரிசப்பணம் ஆயிரம் கேட்கிறாரே என்று வருந்தி நிற்க ஏழ்மையே வடிவாய் தாம்ஸேட்டியும் குணாபாயும் வந்து நிற்பதைக் கண்டாள் அவள். தந்தையோ நேற்று பதில் பேசாமல் எழுந்து போனீர்! இன்று விடிந்ததும் ஆயிரம் பொன் வந்து விட்டதா என்று ஏளனமாக பேச, பரிசப்பணம் ஆயிரம் பொன் கொடுக்கிறோம், நகைகள் பதினாயிரம் வராகன் போடுகிறோம், கல்யாண செலவுகளுக்கும் ஒரு இருபதாயிரம் வராகன், இந்தாரும் என்று கொடுத்து, இன்றைக்கே நல்ல நாள் விவாக ஏற்பாடுகளைச் செய்யும் என்று சொல்லி விடைபெற்றனர். லக்ஷதிபதி என்ற மமதைக்கொண்ட அந்த செல்வன், ஆச்சர்யத்தில் அமிழ்ந்திருக்கையில், ஓர் அந்தணர் ஓடி வந்து தாம்ஸேட்டி அழைப்பதாக அழைக்க, லக்ஷதிபதி தாம்ஸேட்டியின் வீட்டிற்கு வந்தார்.

தியானத்திலிருந்து அப்பொழுது விழித்தெழுந்த தாம்ஸேட்டி, பெண் வீட்டார் ஒரு அந்தணருடன் வருவதுக்கண்டு மரியாதை செய்யப் புறப்பட்டு கூடத்தில் அமர்த்தினார். அந்த அந்தணரோ சும்மாயிராமல் இரவு புதைத்த பொற்கற்களை சம்பந்தியின் முன்வைத்து, இவரது செல்வப்பெருக்கைக் கண்டு வியக்கவைத்தார். நாற்பதாயிரம் பொன் இறைவனே கொடுத்தது தெரிய வர, மெய்மறந்து துதிக்கலானார் தாம்ஸேட்டி.

ஒரு நல்ல நாளிலே ராஜாபாய் நாமதேவரது கரம் பற்றினாள். இறைவனே முன்னின்று நடத்திய திருமணம், இன்பமயமான இருந்ததில் வியப்பென்ன.

4.இறைவன் செய்த அற்புதங்கள்

இறைவனது வழிபாடும், விருந்தினரை உபசரித்தலுமாக, நாமதேவரது இல்வாழ்க்கை இனிமையாக இருந்தது. நூற்றுக்கணக்கான சாதுக்களுக்கு அன்னம் இட்டால் எந்த குபேரன் தான் தாங்க முடியும்! தாயும் தங்கள் பரம்பரை தொழிலான தையல் வேலை செய்து அதில் வரும் சொற்பத் தொகையிலே பண்டரிநாதனுக்கு நிவேதனம் செய்து வந்தனர். நாமதேவரோ எப்பொழுதும் ஆலயத்திலே வசிக்கலானார். கிழவரும் கிழவியும், மகனது ஏழ்மையைக் கண்டு முதுமையில் நாங்கள் பசித்திருப்பது பெரிதல்ல, குழந்தை உணவின்றி வாடுகின்றானே என்று ஏங்கினர். இந்த சமயத்திலே வீதியில் ஒரு குரல், யாரோ ஒரு மாட்டுக்காரன் மாட்டை வீட்டிற்கு எதிரில் நிறுத்திக்கொண்டு ‘ஓ நாமதேவரே’ என்று கூப்பிட்டான். குணாபாயோ, சரி சரி யாரோ வழிப்போக்கன் தனக்கும் மாட்டுக்கும் ஆகாரங் கேட்பான், நாம் என்ன செய்வது என்றெண்ணி, கோபத்தோடு நாமதேவனுமில்லை வாமதேவனுமில்லை போ போ என்றார்.

வந்தவனோ, பெருந்திண்ணையிலே உட்கார்ந்து யாரம்மா, வீட்டிலே வெளியே வராமலே பதில் சொல்கிறீர்களே, உங்கள் வீட்டில் இப்படி தான் உபசரிப்பீர்களா, நான் ஒன்றும் சாப்பிட உட்கார்ந்து விட மாட்டேன் என்று குரோதமாகச் சொன்னான். குணாபாய்க்கு கோபம் வந்தது ‘யாரடா அது எங்களைப் பற்றி அவதூறு பேசுவது இறங்கு திண்ணையை விட்டு அழகு தான் எழுந்து போ’, என்றாள். அவனோ அசைவதாயில்லை! மேலும் தாகம் அம்மணி என்றான். தாகமாயிருந்தால், சந்திரபாகா நதியிருக்கிறது வேண்டிய குளங்கள் இருக்கின்றன. வழியை விட்டு எழுந்திரு என்றாள் குணாபாய். இதற்குள் தாம் ஸெட்டியும் வந்து அவனை விரட்ட, அவன் அடடா இப்படிப்பட்டவர்கள் பிள்ளையா அந்த நாமதேவன், சரிதான் இவர்களுக்கா அந்த கேசவ சௌகார் லக்ஷம் வராகன் கொடுத்தார் என்று சொல்லி, அந்த மூட்டையிலிருந்த சில பொற்காசுகள் சிந்த மாட்டைத் தட்டி ஓட்டினான்.

உடனே முதியவர்கள், அவனிடம் நல்ல வார்த்தைகள் சொல்லி அழைத்து, கேசவ சௌகார் யார்? அவர் நாமதேவருக்கு எத்தனை பொருள் கொடுத்தார் என்று கேட்கும் பொழுதே, அந்த மனிதன் அந்தப் பைகளைக் கீழே தள்ளினான். பொற்காசுகள் வீதி முழுவதும் சிதறின! பிறகு அந்த வேலையாள் கேசவ சௌகார் இருப்பு வைகுண்டம். ஒவ்வொன்றிலும் பதினாயிரம் கட்டி வராகன் உள்ளன. பத்துப் பைகள் இதோ உள்ளன! நீர் எடுத்து வையும். நான் நதியிலே குளித்து மாட்டையும் குளிப்பாட்டி கோயிலுக்கு சென்று வருகிறேன் என்று கூறி மறைந்தான். நெடுநேரமாயிற்று அந்த மாட்டுக்காரன் வரவேயில்லை. இறைவனது திருவருள் என்று தெரிந்து, பெற்றோரும் நாமதேவரும் செய்வது இன்னது என்று அறியாமல் நிற்க, அன்பனே ‘அன்னமூட்டும் திருப்பணியைச் செய்’, என்று அசரீரி எழுந்தது. நாமதேவரது கண்களிலே ஆனந்தபாஷ்யம் பெருகி ஓடிற்று.

நாட்கள் நடந்தன. மாதங்கள் மறைந்தன. அன்னதானம் மிக மிகச் சிறப்பாக நடந்துக்கொண்டிருந்தது. லக்ஷம் வராகன் எத்தனை நாள் தான் வரும்! நாமதேவரோ அகவிலைத் தெரியாதவர். கோயிலிலே குடியேறி விட்டார். தாயும் தந்தையும் ராஜாபாயும் தான் குடும்ப நிர்வாகம் செய்து வந்தனர். மெல்ல மெல்ல வறுமையும் வந்தது. ராஜபாயும் கருவுற்றாள். பேறு காலம் நெருங்க நெருங்க, வீட்டையும் விற்க நேர்ந்தது. திறந்தவெளி பந்தலிலே தான் குடும்பமும் நடந்தது.

அன்று அந்தப்பந்தலிலே, ஓர் அழகிய குழவியை ஈன்றெடுத்தாள் ராஜாபாய். நடுநிசியிலே காற்றும் மழையும் கலந்து வீசத் தொடங்கியது. பந்தலின் கால் ஒன்று மளுக்கென்று முறிந்தது. நாமதேவர் தவிக்கலானார். அப்பொழுது அண்டை வீட்டுக்காரர் ஒரு நல்ல மூங்கிலை கொண்டு வந்து கொடுத்து, உடைந்த காலுக்கு மாற்றுக்காலாக வைக்கச் சொன்னார். அண்டை வீட்டாரது பெருந்தன்மையை வியந்தவாறு மறுநாள் கோவிலுக்குச் சென்றார் நாமதேவர்.

காலையில் தாம்ஸெட்டி அந்தப் புது மூங்கிலைப் பார்த்த உடனேயே அது பத்தரை மாற்று பசும் பொன் என்பதைக் கண்டார். திகைத்துப்போனார். வந்தது அண்டை வீட்டாரன்று! இறைவனே என்று தெளிந்து ஆனந்தக் கடலில் மூழ்கினார். சில நாள் செல்ல, இறைவன் அளித்த பொன்னும் செலவாகி விட்டது. மீண்டும் வறுமையில் உழன்றனர் நாமதேவர் குடும்பத்தினர். இவர்களது வறுமையை நினைத்துக் காலம் காத்திருக்குமா? நாமதேவர் குழந்தைக்கு ஓர் ஆண்டு நிரம்பியது. காது குத்து விழாவை சிறப்பாக நடத்த விரும்பினார் நாமதேவரின் மாமனார். அதைக்கேட்ட தாம்ஸேட்டி மகிழ்ந்தாலும், சம்மந்தி என்ற முறையிலே வரிசைகள் அளிக்க வழியில்லையே என்று வருந்தினார். அவர் துயரத்தைத் தீர்க்க, இறைவன் சௌகார் உருவத்துடன், தாம்ஸேட்டியிடம் வந்து, நாமதேவரின் நண்பன், என்று தன்னைச் சொல்லிக்கொண்டு, நிறைந்த பொன்னைக் கொடுத்தார். பின்னர் காதுகுத்து விழாவிற்கும் வந்து எல்லோரையும் வியக்கும்படி வரிசைகளையும் செய்து மறைந்தார். இப்படியே மேலும் சில முறைகள் இறைவனே வந்து கஷ்டத்தை போக்கினார். இதன் பின்பு ஞானேஸ்வரர் என்ற மகானது நட்பும் இவருக்குக் கிடைத்தது. முன்பு உத்தவ கீதையிலே எந்தெந்த கருத்துக்களை இறைவன் இவருக்கு அளித்தாரோ அவைகளையும் மற்ற பெரியவர்களின் உபதேசங்களையும் கலியுகத்தில் பக்தி கொண்டிருந்தால் முக்தி தானே வரும் என்ற கருத்தையும் பரவச் செய்தார். மகாத்மா கபீர்தாசர் இவரைப் பெரிதும் போற்றி வந்தார். பின்பு விசோபகேசர் என்ற பெரியாரிடம் ஞானதீக்ஷையும் பெற்று, ஸ்ரீ பாண்டுரங்கானது இன்னருளுக்கு உறைவிடம் ஆனார். தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே.
——————–நாம தேவா நாராயண தேவா நான்முக தேவா சரணம் சரணம்————————

5 ஸ்ரீ ஞானேசுவரர்

‘மீனமாகியும் கமடம தாகியும் மேருவை எடுக்கும் தாள் ஏளமாகியும் நர அரி ஆகியும் எண்ணருங் குறளாகியும் கூனல்வாய் மழுத் தரித்தகோ வாகியும் அரக்கரைக் கொலை செய்த வான நாயகன் ஆகியும் நின்றமால் மலரடி மறவேனே’
—வில்லிபாரதம்
கதையில் வருபவர்கள்
கோவிந்த பண்டிதர் விடோபாவின் தந்தை
சீதோபந்து ருக்மாபாயின் தந்தை
விடோபா ஞானனேஸ்வரர் தந்தை
ஞானனேஸ்வரர்
நிவர்த்தி நாத் அடியார் தமையன்
சோபான்தேவ் அடியார் தம்பி
முக்தாபாய் அடியார் தங்கை
ஸ்ரீபாதர் விடோபாவின் குரு
தோற்றுவாய்
மகாத்மா ஞானேஸ்வரரைப்பற்றி அறியாத மக்கள் மஹாராஷ்ட்ராவிலிலே இல்லை. இவரது ஒப்புயர்வற்ற தொரு நூல் தான் ஞானேஸ்வரி. ஏர் பிடித்து உழும் தொழிலாளி முதல், மேடைகளில் மீது மடை திறந்த வெள்ளம் போல் சொற்பொழிவாற்றும் பௌராணிகர் முதல், எல்லாருடைய நெஞ்சிலும் நாவிலும் இடம்பெற்று இருக்கிறது அந்நூல். மகாராஷ்டிரா மொழி எங்கெங்கெல்லாம் பேசப்படுகின்றதோ; அங்கெல்லாம் ஞானேஸ்வரியின் புகழ் பேசப்படுகிறது. பண்டித ரஞ்சகம் பாமர ரஞ்சகம் என்ற பாகுபாடின்றி, சர்வஜன ரஞ்சகமான ஒரு சிறந்த தெய்வ நூல் என்றுப் பேற்றிக்கொண்டாடப்படுகிறது.

பாவர்த்த தீபிகா என்பது தான் அவரது நூலின் பெயராக அவர் வைத்தது. பிறகு மக்கள் ஞானேஸ்வரி என்று அழைத்தனர். ராமகாதையை நாம் கம்பராமாயணம் என்று வழங்குவது போல், இந்த நூல் குறள்கள் அடங்கியது; பகவத் கீதையை ஒட்டியது; இதைத் தவிர ஞானதேவர் அபங்கங்கள் கொண்ட ஹரிபாட் என்ற நூலும், அம்ருதானுபவ எனும் அத்வைத சைவ வேதாந்த காவியமும் இயற்றியிருக்கிறார்.

பாரத நாட்டிலே வடமொழியின் வளர்ப்புப்பண்ணை என்றுக் கருதப்படும் பூனாவிலே உள்ள பாரத் இதிஹாஸ் சம்சோடக் மண்டல் என்ற ஸ்தாபனம், இவரது இலக்கிய செல்வங்களையெல்லாம் நல்ல முறையிலே தொகுத்து வைத்திருக்கிறது.

ப்ரவர நதிக்கரையிலுள்ள நெவஸேயில் கட்டப்பட்டுள்ள புதிய கோவிலில், சலவைக் கல்லினால் செய்த ஞானனேஸ்வரர் வடிவம், முழு அளவாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

சரித்திர பிரசித்தி பெற்ற புனா நகருக்குப் பதினெட்டு கல் தொலைவிலுள்ள ஆனந்தி என்ற ஊரிலே, இவரது சமாதி விளங்குகிறது. இவரது மெய்யடியார்களாலே மிக மிகச் சிறப்பான முறையிலே, இவரது குருபூஜை நடத்தப்பெறுவதை இன்றும் காணலாம். இவரது சமாதியை அடுத்து பாண்டுரங்கனது ஆலயம், கண்போர் கண்ணையும் கருத்தையும் கவரும். ஆலயத்தின் பெருமை கருதி, இந்தச்சசிற்றூரை தேவாளா ஆனந்தி என்றும் வழங்குவர்.

தமிழ்நாட்டிலே திருப்பதி திருத்தணி திருப்பரங்குன்றம் போன்ற தலங்களிலே விவாகம் செய்வதாகப் பிரார்த்தனை செய்துக் கொள்வதுபோல, மகாராஷ்டிரா மக்கள், இந்தச் தெய்வ சந்நிதியிலே, விவாகங்களையும் உபநயனங்களையும் நடத்துவர்.

1.ஸ்ரீ ஞானேஸ்வரரின் பெற்றோர்

கோதாவரி நதிதீரம். அங்கே ஆபெக்காம் என்ற ஒரு அழகிய சிற்றூர். கோவிந்த பண்டிதரென்னும் ஒரு பெரியார், நிருபமா என்ற தன் இல்லாளுடன் வாழ்ந்து வந்தார். இவர் கருணீகர் வகுப்பைச் சேர்ந்த அந்தணர். ஆகவே கணக்கெழுதும் வேலையிலே அரசர் இவரை அமர்த்தினார். இவருக்கு நெடுநாட்களுக்குப்பின் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு விடோபா என்று பெயரிட்டனர் அரசரிடம் செல்வாக்கு இருந்ததென்றாலும், வேலைக்குச் சம்பளம் மிகவும் குறைவு! ஆனாலும் விருந்தினரை உபசரிப்பதிலும் இறைவனை வழிபடுவதிலும் அவர்கள் செல்வர்களையும் விஞ்சி நின்றனர்.

நாளொரு மேனியாய் வளர்ந்தான் விடோபா. விடோபாவுக்கு மணப்பருவமும் வந்தது. கல்விக்கேள்விகளிலே சிறந்த அவன், தேசாடனம் செய்த பிறகே திருமணம் என்று சொல்லவே பெற்றோர் இணங்க வேண்டியதாயிற்று.

ஒரு வருடத்தில் தலையத்திரையை முடித்து வருவதாக புறப்பட்ட அவர், அலங்காவதி என்ற நகரை அடைந்தார். அங்கிருந்த சீதோபந்து என்பவர் இவரைத் தன் விருந்தினராக ஏற்றார். இரவில் கடவுள், சீதோபந்துவின் கனவில் வந்து, விடோபாவிற்கு உன் பெண்ணைக் கொடு என்றார். இதை அவர் விடோபாவிடம் சொல்ல அவர் நகைத்து, பெற்றோர் மணமுடிக்க விரும்பியதை மறுத்துத் தல யாத்திரை வந்தேன்! பகவான் சொல்லுவதானால் என்னிடமே சொல்வார் என்றார். சீதோபந்த், ஐயா இன்றிரவு இங்கயே இரும், கடவுள் கட்டாயம் சொல்வார் என்றார்.

சீதோபந்துவின் மகள் ருக்மாபாய் இவைகளையெல்லாம் கேட்டாள். இந்தச் செய்திகள் அந்தப் பெண்ணின் மனதிலும் கிளர்ச்சியை உண்டுப்பண்ண, அந்தப் பெண் தூங்காமல் விழுத்திருந்தாள். இரவும் வந்தது! இறைவனே விடோபாவின் கனவில் வந்து சீதோபந்துவின் மகளை மணம் செய்துக் கொள், என்றான். விடோபாவுக்கு கோபம் வந்தது! பொழுது விடிந்ததும் எழுந்து வெளியே நடந்தார். ருக்மாபாய் என்ற அந்தப் பெண், அதிகாலையில் நிசப்தமாக இவர் எழுந்துச் செல்வதுக்கண்டு தானும் கூடவே வந்து, நான் உம்மையே கணவராக வரித்து விட்டேன், ஆகவே மீண்டும் வீட்டிற்கு வாரும் என்றாள்.

விடோபாவுக்கு சினம் பொங்கி எழுந்தது. வெள்ளி முளைக்கவில்லை இந்த இருளிலே எழுந்து வந்து இப்படிப் பேசுவது நியாயமா! இதுவே குலமகளுக்கு ஏற்றதில்லை. ஆகவே உன்னை நான் மணம் செய்துக்கொள்ள போவதில்லை போ போ! நான் நாடோடி. எனக்கு குடும்பக் கட்டுக்கள் உதவா! சிறு பெண் என்ன துணிச்சலிலே எழுந்து வந்தாய். பிறர் பார்த்தால் இழிவு என்றுக்கூட எண்ணாமல், எவனோ வழிப்போக்கனைத் தடுக்க வந்தாளாம். அழகு தான் ‘சீ சீ போ உள்ளே’, என்றுக் கூச்சலிட்டார். இவரது கூச்சலையும் இருவருக்கும் நடக்கும் வாக்குவாதங்களையும் கேட்ட சீதோபந்துவும், அவர் மனைவியும் வந்து தடுக்க! இவர் அவர்களையெல்லாம் வசைமாரி பொழிய ஒரே அமளி துமளிப்பட்டது. அப்போது பகவான் அசரீரியாக வந்து ‘ஏ விடோபா இந்த ருக்மாபாய் மஹா உத்தமி அவளை மணந்துக்கொள்’, என்றான். அதற்கு மேல் விவாதம் செய்ய விதோபா விரும்பவில்லை. அன்றே ருக்மாபாயிற்கும் விதோபாவிற்கும் திருமணம் நடந்தது.

மணம் நடந்த மூன்றாம் நாள். விடோபா மாமனாரிடம், ஐயா உன் விருப்பப்படி மணமுடித்து வீட்டிர். இனி என் விருப்பப்படி தலயாத்திரை செல்கிறேன், என்று புறப்பட்டு விட்டார். மருமகனை தனியே விடவிரும்பாத சீதோபந்து, தானும் புறப்பட்டார். சில தலங்களுக்குச்சென்ற, பிறகு தாய்தந்தையரைப் பார்க்க விரும்ப, மணமகளும் மாமனும் மாமியுமாக வீடு திரும்பினார் விதோபா.

தீடீரென்று வந்த மகனை மருமகளுடன் கண்ட கோவிந்த பண்டிதர், ஆனந்தமே கொண்டார். ஏற்கனவே விரக்தியாக இருந்தவன், காஷாயம் அணியாமல், கன்னியோடு வந்ததுக் கண்டு மணம் குளிர்ந்தார். விதோபா, தாமரை இலையிலே தண்ணீர் போல குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கோவிந்த பண்டிதரும் நிரூபமாவும் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி புகுந்தனர்.

தாய் தந்தையர் அஸ்தியை புனித கங்கையில் சேர்க்கநினைத்து, ருக்மாபாயை பிறந்த வீடு செல்ல கட்டளையிட்டார் விதோபா. இல்லறம் என்ற பெயரிலேயே தன்னை மனைவி என்ற முறையில் அவர் ஏறிட்டுக் பார்த்ததில்லை, இப்பொழுது காசிக்கும் சென்றால் இனி மீளுவது சிரமம் என்று எண்ணியவளாய் பிறந்தகம் புறப்பட்டாள். பெண்ணின் இந்த அருமையான வாழ்வு அவருக்குத் தெரியாதா.

சீதோபந்து மகளை நோக்கி, ‘அம்மா நீ கௌரி தேவியை நோக்கி வழிபாடு’, என அவள் கௌரியைப் பூஜித்து வழிபடுவதோடு, மங்கள கௌரி விரதமும் நோற்று வந்தாள்.

காசியிலே ஸ்ரீ பாத ஸ்வாமிகள் என்பவரை குருவாக அடைந்து, ஞானோபதேசம் பெற்று, அங்கேயே தங்கி விட்டார் விதோபா. இந்தச் செய்தி அலங்காவதிக்கும் வந்தது.

சீதோபந்துக்கு இறைவன் மீதே கோபம் வந்தது! கோபம் ஏக்கமாக, ‘இறைவனே நீயே கட்டளையிட்டும் அவன் இவளை மதிக்கவேயில்லையே’, என்று உருகினார். ருக்மாபாயோ, கௌரியின் வழிபாட்டிலே மூழ்கியிருந்தாள். ஒரு சமயம் ருக்மாபாய் நோற்று வந்த கௌரி விரதத்தின் பலன் தான் போலும்! காசி ஸ்ரீ பாதஸ்வாமிகள் யாத்திரையாக அலங்காவதி வந்து சேர்ந்தார்கள். எல்லோருடனும் ருக்மாபாயும் வணங்கினாள். அவளது ஏங்கிய முகத்தைக் கண்ட அவர், ‘உனக்கு நான்கு மக்கள் உண்டாகட்டும்’, என்று ஆசீர்வதிக்க, சீதோபந்து இவளது வரலாறு முழுவதும் சொல்ல, அதற்கு அவர், சூரிய சந்திரர் உதிப்பது பொய்த்தாலும் என் வாக்கு பொய்த்ததில்லை என்றார். அதன் பின்னரே அவருக்குத் தன் மாணவன் விதோபாவே இவள் கணவன் என்று தெரிந்தது. பொய் சொல்லி ஞானோபதேசம் பெற்ற விதோபா மீது கடுங்கோபம் கொண்டார்.

2.ஞானேஸ்வரர் பிறப்பு

காசிக்குச் சென்ற உடனே விதோபாவை அழைத்துக் கொண்டு அலங்காவதிக்கு வந்து சேர்ந்தார். குடும்பத்தில் ஈடுபடத் தயங்கிய அவருக்கு, இது வரை நான் செய்த தவத்தை எல்லாம் அளித்தேன், இவளை ஏற்று இல்லறம் செய் என்றார். அரைமனத்துடன் வீட்டிற் புகுந்தார் விதோபா. ருக்மாபாயை அழைத்து ‘அம்மா நீ செய்த கௌரிப் பூஜை பலித்தது மும்மூர்த்திகளும் ஆதிசக்தியும் தங்கள் அம்சமான மக்களை உனக்கு அளிக்கட்டும்’, என்று வாழ்த்தினார் ஸ்ரீ பாத ஸ்வாமிகள்.

காஷாயம் பூண்டு, மீண்டும் இல்வாழ்விலே புகுந்த விதோபாவை, ஊரார் இகழ்ந்தனர். ஊரார் பழிக்கு அஞ்சி, விதோபா காட்டிலே குடிசை கட்டி அதிலேயே வாசிக்கலானார். உரிய காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தனர். ‘சிவபெருமானது அம்சமாக நிவிர்த்திநாத்தும் மகாவிஷ்ணுவின் அம்சமாக ஞானேஸ்வரரும் பிரம்மாவின் அம்சமாக சோபான் தேவரும் பராசக்தியின் அம்சமாக முக்தபாயும்’, தோன்றினர்.

குழந்தைகள் நாட்டின் செல்வம்; வீட்டின் தெய்வம்; கோடித் துக்கம் குழந்தை முகத்திலே தெளியும்; நான்கு குழந்தைகளும் விளையாடுவது கண்டு மெய்மறந்து பொங்கிப் பூரித்தனர் பெற்றோர். ஆனால் இவர்களைப் பாதுகாக்க பொருள் வேண்டாமா? காட்டிலே கண்களை மூடிக்கொண்டிருந்தால் கடமையை எவர் செய்வர் என்ற கேள்வி அகண்டகாரமாக இவர்கள் முன் எழுந்தது. அங்கே சீதேபந்துவும் பிட்சை எடுத்தே பிழைத்தார். ருக்மாபாய் மீண்டும் நாட்டிற்கே செல்ல விரும்ப, விதோபா மறுத்து விட்டார். அவள் துணிச்சலாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு அலங்காவதி சென்றாள். நானே துறக்கவில்லை அவளாகவே போய் விட்டாள் இதுவும் நன்மைக்கெவெனநினைத்தார் விதோபா.

வீட்டிற்குள் நுழைந்த பிறகே, தந்தையின் நிலை அவளுக்குத் தெரிந்தது. ‘நானே பிச்சையெடுக்கிறேன். இவர்களை எப்படி காப்பாற்றுவேன்’, என்று கண்கலங்கினார் சீதோபந்து. பிறகு நான் கிழவன், என்னால் என்ன செய்ய முடியும். நீ போய் உன் கணவனையும் அழைத்து வா, ஏதாவது தொழில் செய்வோம் என்றார்.

ருக்மாபாய் சென்ற போது குடிசையில் ஒருவருமே இல்லை. அவளுக்கு விஷயம் விளங்கி விட்டது தேடித்தேடி கடைசியில் கண்டுபிடித்தாள். குழந்தைகளின் பொருட்டு வீடு திரும்ப வேண்ட, அவர் மறுத்து பழைய குடிசையிலே தங்குவதாக வாக்களித்து, நாற்பத்து மூன்று அழகிய பாக்களால் கடவுளைத் துதித்தார். ருக்மாபாய் வேறு வழியின்று வீடு திரும்பினாள்.

3.ஞானேசுவரர்

சீதோபந்து பிட்சை எடுத்தே பிழைத்தார். அவரோடு கூடவே ஞானதேவரும் பிட்சைக்கு புறப்பட்டார். மூட்டை நிறைந்தது. அதில் ஒரு பகுதியை சிறிய மூட்டையாக்கிப் பேரனிடம் கொடுத்தார் சீதோபந்து. கால் தடுக்கிக் கீழே கொட்டி விட்டார் ஞானதேவர். பாட்டனார் கோபம் மிகுந்து பேரனை அடிக்க போக, பாட்டனாரைப் பிடித்து தள்ளிவிட்டான். அரிசியோ நாற்புறமும் சிதறி ஓடியது. பாட்டன் மூட்டையை கிழே போட்டு விட்டு பேரனைத் துரத்த, ஒரே அமளி துமளி. பாட்டனார் ஓடி பேரனைப் பிடித்து பளீர் பளீர் என்று மொத்த, பேரன் உரத்த குரலில் ஓலமிடத் தொடங்கினான். கூட்டம் கூடி விட்டது! சாஷாத் மஹாவிஷ்ணுவின் அம்சமான ஞானதேவன் மத்தால் மொத்துண்டடு போதாதென்று மீண்டும் அடிபடுகின்றானே என்று தேவர்கள் வருந்தினார்.

பிறகு பாட்டானும் பேரனும், சிதறிய பொருள்களைச் சேர்த்து எடுத்து கொண்டு கிளம்பினர். இப்படி பிட்சை எடுப்பதிலே காலம் சென்று கொண்டிருந்தது. ஒருநாள் ஒரு வீட்டில் சமாராதனை நடந்துக்கொண்டிருக்கையில், சீதோபந்து பேரர்களுடன் அங்கே சென்றார். அங்கு உட்கார்ந்திருந்த வைதீகர்கள், சன்யாசி சம்சாரியானவன் குழந்தைகள் இவர்கள் பிரஷ்டர்கள். இவர்களோடு சமபந்திபோஜனம் செய்வார்களா எழுந்திருந்து போடா வெளியே என்று முதுகில் அறைய, அப்போழுது மற்றோர் அந்தணர், சீதோபந்துவும் நம்மோடு உட்கார தகுதியற்றவர். பிரஷ்டனது மக்களுடன் தானே இவர் வாழ்கிறார் என்றார். யாரடா பிரஷ்டன் ப்ரஹ்மஞானி மீண்டு வந்தால் பிரஷ்டனா அவன் என்ன தவறு செய்து விட்டான் குருவின் ஆணை மீண்டு வந்தான் என்று கூச்சலிட்டுத் தன் கையிலிருந்த பஞ்ச பாத்திரத்தை வீசினார் சீதோபந்து.

அந்தப் பாத்திரம் ஒருவரது நெற்றியிலே பட்டு ரத்தம் கசிந்தது. எது சமயம் என்றிருந்த வைதீக கும்பல், சீதோபந்துவை நன்றாக அடித்து விட்டது. மயக்கமாய்க் கீழே விழுந்தார் கிழவர். ஞானேஸ்வரர் அருகிலிருந்த மூங்கிலை எடுத்து கிழவர்களை அடிக்கும் சூரர்களே வாருங்கள் என்று சுழற்றத் தொடங்கினார். அந்தணர்கள் அடிபட்டு பயந்து ஒதுங்கினர். அப்பொழுது தமையனான நிவர்த்திநாத் ‘ஞானேஸ்வரா பொறு பொறு’, என்று கையமர்த்தினார்.

அடிபட்ட அந்தணர்கள், அரசனிடம் சென்று முறையிட்டனர். அரசன் தனது ஆட்களை அனுப்பி அழைக்க, சீதோபந்து அடிபட்டு படுத்தப்படுகையாக இருபது கண்டு, ஞானேஸ்வரரை மட்டும் அழைத்துச்சென்றனர்.

முறைப்படி அரசன் ஞானேஸ்வரரை விசாரிக்க, முதியவரான என் பாட்டனாரை அடித்தார்கள் நான் அடித்தேன் என்றார். அரசன் பாட்டனாரை அடித்த காரணம் கேட்க, ஓர் அந்தணர் எழுந்து ப்ரஹ்டனானவன் குழந்தைகள் இச்சிறுவர்கள், இவரை பந்தலிலே வைத்துக்கொண்டு சாப்பிட கூடாது என்றோம். அவன் கோபித்தான்; வார்த்தை வளர்ந்தது என்றார்; அதற்கு ஞானேஸ்வரர் எனது தந்தை ப்ரஹ்மஞானி, மணந்தும் துறவியானார். குருவின் ஆணையால் மீண்டும் இல்லற தர்மத்தை ஏற்றார். இதில் பிரஷ்டன் என்றுக் கூற இடமெங்கே! ப்ரஹ்மஞானனந்து ப்ராஹ்மணன் என்று வேதம் சொல்கிறது என்றார்.

அதற்கு அந்த அந்தணர் துறவுக்கோலத்தில் இருந்த பொழுது ஆசாரம்கெட்டு பலவீட்டிலும் உணவுஉட்கொண்டிருக்கலாம் அது தள்ளவேண்டியது தானே என்றார்.

பலர் வீட்டிலும் பிக்ஷை ஏற்கும் சந்யாசியை, ‘நாம் ப்ரஹ்மஞானி என்றழைக்கவில்லையா’, அவருடன் பந்தியிலே உண்ணுவதைப் பெரும் பாக்கியமாகக் கருதவில்லையா! மனிதன் பிறப்பினால் உயர்ந்து விடுகிறானா? தான் செய்யும் செயல்களிலே உயர்வடைகிறானா? என் தந்தை இயற்கையிலே ஞானி. காசிவாஸியாகிய ஸ்ரீபாதஸ்வாமிகளிடம், ஞானதீக்ஷைப் பெற்று, பல்வேறுவகையான சாதனைகளையும் கைக்கூடியவர். குருவின் ஆணைக்காகவே மீண்டும் இல்லறம் புகுந்தார். அவரைப் ப்ரக்ஷ்டன் என்று சொல்லுபவர்கள் வேறு எந்தக் குற்றத்தையாவது செய்தவரா என்பதை விளக்கட்டும் என்றார் ஞானேஸ்வரர்.

சின்னஞ்சிறு குழந்தை ஞானேஸ்வரன் எவ்வளவு நன்றாக எடுத்துரைத்தான்! பிறப்பு நலம் தருமோ பேதையீரே! உண்மையில் விதோபா பகிஷ்கரிக்க தக்கவரா? இது வீண் பொறாமையினாலும் பிறரைப் பழிப்பதே செயலாகக்கொண்டிருப்பதாலும் எழுந்தச் சண்டை. குழந்தை உங்கள் பந்தியில் உட்கார்ந்தது நியாயமல்ல, அவர் வயதென்ன தகுதியென்ன அவர்கள் பந்தியிலே உட்கார்ந்து புசிக்கும் தகுதி உங்களுக்குத் தான் இல்லை, வெறும் மந்திரங்களை உச்சரிப்பதினாலே நீங்கள் உயர்ந்தவர்களாகிவிட மாட்டீர்கள். எந்த உண்மையை அறிய இவைகள் வழிகாட்டுகின்றனவோ, அவற்றை நீங்கள் அறியவில்லை. வீணாகக் குழந்தைகளையும் கிழவரையும் அடித்துப் பாபத்தை தேடிக்கொண்டீர்கள் என்றுச் சொல்லி, எட்டே வயது நிரம்பிய அந்த ஞானேஸ்வரனை, ‘அப்பா வா’, என்று இரு கைகளாலும் வாரித் தழுவிக் கொண்டான் அரசன்.

பிறகு அவர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து பல்லக்கில் ஏற்றி, காட்டிற்குச் சென்று விதோபவை அழைத்து வாருங்கள் என்றான்.

கிழவரும் பேரன்மார்களும் காட்டிலே விதோபா வசிக்குமிடம் சென்று, அவரை அழைக்க, அவர் நாடு திரும்ப விரும்பவில்லை நான் நான்கு நாட்களில் அழைத்து வருகிறேன் என்று மற்றவர்களை வழியனுப்பி நிவர்த்திநாத்துடன் ஞானேஸ்வரர் தங்கினார்.

4.தந்தையும் தனயனும்

மற்றவர்கள் சென்ற பின், ஞானேஸ்வரர் தந்தையின் மடிமீது அமர்ந்தார். நிர்விகல்ப சமாதியிலே ஆழ்ந்திருந்த விதோபா, உணர்வற்று மெய்மறந்திருந்தார். ஆனால் அவர் தெளிந்து எழுந்த உடன் தாம் என்னென்ன கேட்க வேண்டும் என்பதை நினைத்த வண்ணம் இருந்தார் ஞானேஸ்வரர்.

நிஷ்டை கலைந்தது. ஞானேஸ்வரர் தந்தையை நாட்டிற்கு அழைந்தார். அவரோ ‘சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டாது நாட்டிலே வந்து செய்ய கூடியதென்ன’, என்றார்.

சுட்டமண் ஒட்டாது என்ற மனநிலை வந்தப்பின், நாட்டில் இருப்பதும் காட்டில் இருப்பதும் ஒன்று தானே, என்றார் மகன். நாட்டிலே ‘தொல்லைகள் சூழும் தியானம் கலையும்’, என்றார் விதோபா.

திடமான ஞானி, ஞானிகள் சூழ்ந்திருந்தாலும் அஞ்ஞானிகள் சூழ்ந்திருந்தாலும், பூரண ஞானத்தை இழந்து விட மாட்டான். சூழ்நிலையினால் அவன் மனம் சலித்து விடாது. திடம் இல்லாதவன் தனித்து ஏகாந்தத்தில் இருந்தாலும், சலித்தே தான் போவான். ஆகவே தனிமை நாடி தவம் செய்வது என்பது ஒரு நிலை தானே. அந்த நிலையைத்தாண்டிய பின் குழப்பம் என்ன? ஜனக மஹாராஜனை காட்டிலும் சிறந்த உவமை வேண்டுமா என்றார் ஞானேஸ்வரர்.

இப்படித் தொடங்கிய விவாதம் நெடுநேரம் நடந்தது. விதோபா மகனது கேள்விகளுக்கும் உவமைகளும் விடையளிக்க மாட்டாமல் திணறிப்போனார். வேதாந்ததத்துவங்களும் யோகசாதனைகளின் வழிகளும் அவற்றால் அடையும் பலன்களும் இந்தச் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு எவ்வாறு விளங்கியது. விளங்கியவற்றை மீண்டும் எடுத்துரைக்கவும் வாதம் செய்யவும் எப்படி திறமை பெற்றனர் என்று திகைத்து போனார். கண்கள் பனி சோர மக்களை மார்புடன் தழுவிக்கொண்டார் விதோபா. அப்பொழுது அவருக்குத் தமது தனயர்கள் சிவபெருமானும் சக்ரதாரியுமே என்று தோன்றலாயிற்று.

5.பக்தி வெள்ளம்

மீண்டும் இரண்டாம் முறையாக மைந்தர் பின்தொடர வீட்டில் புகுந்தார் விதோபா. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற ஆன்றோர் வாக்கிற்கு இணங்க, அதுகாறும் தமது தவத்தினால் ஞானத்தினாலும் யோகத்தினாலும் பெற்ற இனிய அனுபவங்களையெல்லாம் பிறர்க்கு எடுத்துரைத்து போதிக்க முயன்றார் அவர். யோகியும் ப்ரஹ்மஞாநியும் ஓரளவு தன்னலம் உடையவர்களே, தமது முன்னேற்றம் ஒன்றே குறுக்கோளாகி நிற்பர். ஆனால் பிறர்க்கு தெய்வ நெறியை வழங்கும் பக்தன், தன்னோடு எல்லாரையும் தன்னுடைய குறிக்கோளாகிய இறைவனது திருவடித்தாமரைகளுக்கு அழைத்து செல்கிறான், என்ற எண்ணம் தோன்றவே தெய்வத்திருநெறியைப் பரப்ப முற்பட்டார்.

அரசனிடமிருந்து அழைப்பு வந்தது. ராஜ சபையை நாடிச் சென்றார் விதோபா. நெடுநேரம் அரசனுக்கு நன்மொழிகள் பலக்கூறி ஆசிர்வதித்தார். பிறகு அரசன் மந்திரியிடம் ஒரு ஓலையளித்து, பைடன்புரியிலே நமது குருநாதர் இருக்கிறார். அவரிடம் சென்று இவர் எல்ல விதமான நலன்களும் நிறைந்தவர் பகிஷ்கரிப்பது தவறு என்ற அத்தாட்சியைப் பெற்று வா என்று அனுப்பினார். விஷயம் இன்னது என்று விளங்காத விதோபா, மந்திரியுடனும் மக்களுடனும் பைடன்புரி சென்று அரசனது முடங்கலைக் கொடுத்தார்.

மந்திரியின் மூலம் வந்த ஓலையையும், விதோபாவையும் அவர் மைந்தர்களையும் பார்த்தவுடன், ஏற்கனவே அலங்கவடியிலிருந்து இருபது அந்தணர்கள் விதோபாவைப் பற்றி எழுதிய முடங்கலும் நினைவில் வர, ‘சீ சீ இவர்கள் ப்ரஷ்டர்கள் இவர்களை ஏற்பது நியாயம் அல்ல’, என்று நினைத்து, அவர்களோடு வாது செய்ய, ஞானேஸ்வரர், ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஆணித்தரமாக பதிலளித்தார் வாதம் வளர்ந்தது.

இதனால் மனம் கசந்த விதோபா, ஞானேஸ்வரா எழுந்திரு போகலாம் என்றார்.
அதற்கு ஞானேஸ்வரர் இவர்கள் குலைப்புக்கு நீர் அஞ்ச வேண்டாம். இவர்கள் அரசனது ஓலைக்கு ஒரு பதில் சொல்லவேண்டுமல்லவா அதைச் சொல்லட்டும் என்றார்.
அந்த குருவுக்கோ கோபம் பொங்கி எழுந்தது. உங்களுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது பேசாமல் வந்த வழியே போகலாம் என்றார்.

அதற்கு நிவர்தினாத் ‘ஏ பூசுரரே வேதத்தை கொடுத்த வியாச பகவான் வசிஷ்டர் விஸ்வாமித்ரர் இவர்களெல்லாம் பிறப்பினால் உயர்ந்தவர்களா? செயலினால் உயர்ந்தவர்களா? என்றார். அப்பொழுது அங்கே தண்ணீர் சுமந்து வரும் ஓர் எருமை வந்துக்கொண்டிருந்தது. அதை கண்ட ஞானேஸ்வரர், ‘இந்த எருமைக்கு இணை தான் நீங்கள். வேதம் ஓதியிருந்தால் அல்லவா அதன் கருத்தும் உள்ளுறையும் தெரியும் உங்களோடு வாதம் செய்வதை விட இந்த எருமையோடு பேசலாம்’, என்றார்.

அதற்கு அவர்கள் ஆம் ஆம் உன்னோடு வாதாடத்தக்க அறிவு அதற்குத்தான் உண்டு என்றார்கள்.
இந்த எருமைக்கு இருக்கும் அறிவில் ஆயிரத்தில் ஒரு பங்கு உமக்கு இருக்குமானால், நீரும் கொண்டாடத்தக்கவர் தான்! என்றார் ஞானேஸ்வரர்.
குரு கொதித்து எழுந்தார். கூட இருந்த அந்தணர்கள், அடா துஷ்டா இதற்கு என்ன அறிவு உண்டு. அதில் ஆயிரத்தில் ஓர் பங்கு எங்களுக்கில்லை என்றாயே. அதன் அறிவைக் காட்டு. இல்லாவிடில் உன்னை இங்கேயே வெட்டிப் போடுவோம் என்று அந்த எருமையை அவர் முன் நிறுத்தினர். கூட்டத்தைக் கண்டு எருமை மிரண்டது. உடனே ஞானேஸ்வரர் அதன் மீது தன் கையை வைத்து ‘எ எருமையே மனிதன் பிறப்பினால் அந்தணனா தவத்தினால் அந்தணனா ப்ரஹ்மத்தை அறியும் ப்ரஹ்மஞானத்தினால் ப்ராஹ்மணனா கர்மா காரியங்களில் ப்ராஹ்மணனா இதை தெளிவாகச் சொல்ல வேண்டும்’, என்றார்.

கூட்டம் கூடத் தொடங்கிற்று. அப்பொழுது தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. பகுத்தறிவற்ற விலங்கினமாகிய எருமை, வாய் திறந்து மனித பாஷையிலே, வடமொழியில் இனிய குரலில் ரிக்கு யஜுர் சாம அதர்வணம் என்னும் நான்மறைகளில் சாரத்தையும் சொல்லிக் கடைசியாக பின்வரும் நான்கு ஸ்லோகங்களையும் சொல்லிற்று.

‘ஜன்மனா ஜாயதே சூத்ர கர்மணா ஜாய தெத்வஜ வேத முக்யந்து விப்ரநாம் ப்ரஹ்ம ஞானந்து ப்ராஹ்மண
தாசிகர்பா ஸம்பூதம் நாரதஸ்ய மகாமுனி தபஸப் ப்ரஹ்மானோத் புத்துவதான்யவ் ஜாதம் நகரையேத்த
பூர்வாசி கர்ப்ப ஸம்பூதம் வஷிஷ்டஸ்ய மாமுனி தபஸாப் ப்ரஹ்மானோத் புதுவ தாஸ்யஜாடம் நன்காராய்த்
சுணங்கி கர்ப்ப ஸம்பூதம் சௌனகஸ்ய மகாமுனி தபஸப்ப்ரஹ்மானோத புதுவ தாஸ்யஜாடம் நன்காராய்த்’,
என்று சொல்லிற்று. கூடியிருந்த விப்ரோத்தமர்கள் திகைத்துப் போயினர். ஞானேஸ்வரர் பார்வைக்குச் சிரியவரேயன்றி, ஞானத்திலும் தெய்வபக்தியிலும் பெரியவர் என்று அவரை வணங்க முற்பட, அடக்கம் மிகுந்த ஞானேஸ்வரர், உங்கள் பணிவை இறைவனுக்கு அற்பணியுங்கள். நான் எல்ல வகையிலும் சிறுவன் என்று தடுத்தார். வேறுசிலர் இவன் சூனியம்கற்ற மந்திரவாதி என்று பயந்தனர், வேறு சிலர் தூற்றினார்.

இதன் பின்னர், தன்னை அணுகியவரையெல்லாம் பக்தராகினார். அணுகாதவரையும் தமது மாசற்ற அன்பினால், வலிய சென்று தடுத்தாட்க்கொண்டு, பக்தி யோகம் ஞான யோகம் கர்மா யோகம் என்று மூன்று வகையாக, அவரவர் மனபக்குவத்துக்கும் தகுதிக்கும் ஏற்ப உபதேசம் செய்தார். பிறகு தனது சீடர்களை நோக்கி, ‘நான் ஒரு நாள் த்யானத்தில் அமருவதாகவும், அப்படியே மஹாசமாதியில் இருந்து விடுவதாகவும், தம் மீது கூசாமல் செங்கற்களை அடுக்கி சம்மதிக்கட்ட வேண்டும்’, என்று சொன்னார். இதற்குச் சீடர் ஒப்பவில்லை. அவர்களுக்கு அநேக விதமான நியாயங்களைக் கூறி இசைய வைத்தார். தாம் வந்த நோக்கம் மக்களது மனதில் பகைமையை ஒழித்து பக்திப் பயிரை வளர்த்து நல்வாழ்வு வாழச்செய்வதே அது முடிந்து விட்டது, இனி அவர் வகுத்த வழியிலே சென்று வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டியதே கடமை என்று எடுத்துரைத்தார்.

விசாபகேசன் என்று ஓர் இளைஞனுக்கு உபதேசித்தார் என்றும், அவரே நாமதேவராது குரு என்றும், கர்ணன் பரம்பரை செய்தி உண்டு. சீடர்கள் மறுத்தும் பட்டினத்து அடிகள் போல தியான நிலையிலே மஹாசமாதியடைந்தார். அந்தச் சமாதி தான், இன்று பக்தர்கள் சென்று வழிபடும் புனிதத்தலமாகத் தேவனை ஆனந்தி என்றுப் போற்றப்படுகிறது.
……………………..ஜெய் ஸ்ரீ ஞானேஸ்வர் மகாராஜ் கி ஜெய்………………………………………………………………………

 

6 ஸ்ரீ சக்குபாய்

‘மேவரும் ஞானானந்த வெள்ளமாய் விதித்தோன் ஆகி
மூவரும் ஆகி அந்த மூவர்க்கும் முதல்வனாகி
யாவரும் யாவுமாகி இறைஞ்சுவார் இறைஞ்சப் பற்பல
தேவரும் ஆகிநின்ற செங்கண்மால் எங்கள் கோவே’
வில்லிபாரதம்
கதையில் வருபவர்கள்
கங்காதர ராவ்: சக்குபாயின் தந்தை
மித்ரு ராவ்: கணவன்
கமலாபாய்: தாய்
மாய பக்தர்: இறைவன்
கதை நிகழும் இடங்கள்: சிங்சிறுணிபுரம் பண்டரிபுரம் சிந்து தேசத்தில் ஓர் சிற்றூர்
1.பிறப்பு
நமது நாட்டுத் திருத்தலங்களையும் ப்ரஹ்மஸ்வரூபமாகவே குறிப்பதுண்டு. ‘அன்னப்ப்ரஹ்மம் ஜெகந்நாதம்’, என்றும் தாரக ப்ரஹ்மம், காசி என்றும் பூரணப் ப்ரஹ்மம், திருப்பதி என்றும் நாதப்ரஹ்மம், பண்டரிபுரம் என்றும் சொல்லுவதுண்டு! இன்றும் அங்கே பஜனை செய்பவர்களின் ஜால்ராக்களின் இனிய ஒலி, அது நாதப்ரஹ்மம் தான் என்பதை மெய்ப்பிக்கும். இறைவன் புண்டரீகனுக்காக வந்து, ஒரு செங்கலின் மேல் நின்ற திருக்கோலமாகக்கராட்சி தருகிறான். அந்த திவ்ய மங்கள விக்ரகத்தை, வாயினார் பாடி மனதினார் சிந்தித்து அருள் பெற்றவர் பலர். அத்தகையவர்களுள் பண்டரிபுரத்திற்கு அருகே உள்ள சிங்சசிறுணிபுரம் என்ற கிராமத்தில் வாழ்ந்த கங்காதர ராவ் என்பவரும் ஒருவர்.

இவரது மனைவி கமலாபாய் என்பவர், கல்வி கேள்விகளிலும் தெய்வ பக்தியிலும் சிறந்தவர். நெடுநாள் புத்திரப்பேறில்லாத இந்தத் தம்பதிகளுக்கு, ஒரு நாள் இறைவன் கனவிலே வந்து, ஒரு தெய்வ மகள் உங்களுக்கு பெண்ணாகப் பிறப்பாள். அவளால் நாட்டு மக்கள் எல்லாரும் பயன் பெறுவர், என்று உரைத்தான். அந்ததெய்வ திருவாக்கின்படி தோன்றினாள் சக்குபாய்.

குழந்தை சக்குபாய், மெல்ல மெல்ல வளர்ந்தாள்; தவழ்ந்தாள்; தளர்நடை நடந்தாள்; சின்னஞ் சிறு கிளி போல் பாடியும் ஆடியும் மகிழ்வூட்டினாள். பெற்றோர் இன்பத்தில் ஆழ்ந்தனர். பகலில் விளையாட்டில் கூட, பாடலும் பஜனையும் தெய்வ வழிபாடும் மழலை சொற்களும் ஒலிக்கும்.

ஒரு நாள் அவள் தன் தோழிகளுடன் வீதியிலே சிறுவீடு கட்டி விளையாடிக்கொண்டிருந்தாள். அப்பொழுது தோழிகள் ஏதோ காரணமாக வீடு சென்றிருந்தனர். ஒரு கிழவர் தம்பூராவை மீட்டிக் கொண்டு பாடிக்கொண்டே வந்துக்கொண்டிருந்தார். அந்தக் குரலின் இனிமை எல்லோரையும் மெய்மறக்கச்செய்தது. அவர் மெல்ல, இவள் சிறுவீடு கட்டியிருக்கும் இடம் வந்தார். அதை வீடென்று மதியாமல் காலினால் சிதைத்து மேலே சென்றார்.

சக்கு பாய்க்கு அசாத்தியமான கோபம் வந்தது! நான் எவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு கட்டினேன் நொடியிலே களைத்து விடீரே இப்படி குழந்தைகள் செய்வதைக்கலைக்கலாமா நில்லுங்கள் இதை ஏன் கலைத்தீர், சொல்லிவிட்டுத் தான் போக வேண்டும் என்றாள். கிழவர் மிகவும் பணிவான குரலில், அம்மா நான் வேண்டுமென்று கலைக்கவில்லை, பகவானை தியானித்து கண்களை மூடிக்கொண்டிருந்தேன், ஆகவே பார்க்கவில்லை, உனக்கு வேண்டுமானால் இதே மாதிரி நானே கட்டித்தருகிறேன் என்றார்.
ஆமாம்! தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் தவறு தவறு தானே! நீங்கள் மெய்மறந்திருந்தாலும், பிறருக்கு இடையூறு செய்யலாமா? என்று கோபத்துடன் கேட்டாள். கிழவரோ மிகுந்த கனிவுடன், “அம்மா குழந்தாய், நான் தான் தவறு என்று ஒப்புக்கொள்கிரேனே என்ன செய்யச் சொல்லுகிறாய்”, என்றார்.
இந்தத் தவறுக்கு பதிலாக உங்கள் தம்பூராவை எனக்கு கொடுத்து விடுங்கள் என்றாள்.

கிழவர் நகைத்தார். தம்பூராவும் உன் மண்வீடும் சமமா! அழகு தான், என்று நடந்தார். இவளோ பிடிவாதமாக அந்தத் தம்பூராவே வேண்டும், என்று வற்புறுத்த, அவர் விருப்பம் இல்லாதவர் போல் நடித்து, கடைசியில் தம்பூராவைக் கொடுத்தார். அவரது சங்கீதத்திலே ஈடுபட்டு தம்பூராவைக் கேட்டாள்; அவரும் கொடுத்து விட்டார்; அதை எப்படி மீட்டுவது என்று விளங்காமல் விழிக்க; அவர் அதையும் கற்பித்து, அவள் செவிகளில் அஷ்டமா மந்திரத்தையும் உபதேசித்தார். மேலும் இந்த மந்திரத்தை, நாள்தோறும் ஜபம் செய் என்றார். அதற்கு அவள், இந்தப் பெயருள்ளவர்கள் எங்கள் தெருவிலே பலர் இருக்கிறார்கள். இது யாருடைய பெயர் என்று கேட்க, அவர் கஜேந்திரன் சரித்திரத்தை சொல்லி அஷ்டோத்திரத்தின் பெருமையை விளக்கினார். பின் சுருக்கமாக ப்ரஹலாதனின் கதையைச் சொல்லி, நீ குழந்தையாக இருந்தாலும், இதைச் செய்து வா, உனக்கு எல்லா நலன்களும் உண்டாகும், என்று ஆசி கூறி பண்டரிபுரம் போவதாகச் சொல்லி நடக்க, சக்கு பாய் மிகுந்த அன்புடன் மறுபடி எப்போது வருவீர்கள் என்றாள். ஐந்து மாதம் ஆகும் என்றார். ‘அவ்வளவு நாட்கள் ஆகுமா’, என்று கேட்க இல்லை அம்மா. நினைத்த பொது வருவேன் என்றார்.

சக்குபாய், தம்பூராவை அவரிடமே கொடுத்து, நான் ஏதோ விளையாட்டாக கோபத்தில் கேட்டேன் என்று சொல்லி வணங்கினாள். அவர் மீண்டும் பாடிக்கொண்டே நடந்தார். அவரது கானமும் நெடுநேரம் வரையில் வீதியிலே ஒலித்தது.
பெரியவர் வந்து போனது முதல் அவள் மனதிலே புதியதோர் உற்சாகம் பிறந்தது.
எந்த நேரமும் அவள் வாய் அஷ்டாக்ஷர மந்திரத்தையே உச்சரித்துக்கொண்டிருந்தது. தன் தோழிகளுடன் முன் போல ஓடிப்பிடித்து விளையாடுவதில் மனம் செல்லவில்லை. எப்பொழுதும் தனிமையே நாடினாள். அவள் தோழிகளுக்கு இந்த மாறுதல் புதுமையாக இருந்தது. ஏன் சக்கு உனக்கு உடம்பு சரியில்லையா என்றனர். அவளோ மிகவும் அமைதியாக, ‘எனக்கு உபதேசம் செய்ய பெரியவர் வருவார் அவரைப் பார்க்காமல் நான் உங்களோடு விளையாடப் போவதில்லை’, என்றாள்.

பக்தர் போல வந்த ஒருவர் இந்தப்பெண்ணின் மனதை கெடுத்து விட்டார்! இவளுக்கு புத்தி கலங்கி விட்டது என்று அவர்கள் நினைத்தனர். இதை அவள் தாயிடமும் சொல்லி விட்டனர்.

கமலா பாய் கவலை அடைந்தாள். தன் மகள் இப்படி பிரமை பிடித்தவள் போல் இருப்பதுக்கண்டு, இறைவனே என் பெண் பக்தியில் சிறந்து விளங்குவாள், என்று உரைத்தீரே அவள் பித்தாகி விடுவாள் போலிருக்கிறதே! இறைவா பாண்டுரங்க நீ தான் காப்பாற்ற வேண்டும், என்று கல்லும் கரைந்து உருகி வேண்டினாள். இந்த நிலையில் சக்குபாய் வயது பத்தும் முடிந்தது. சரி இவளுக்கு மணம் முடிக்க வேண்டும், என்று வரன் தேட ஆரம்பித்தனர். இதை அறிந்த சக்கு பாய், ‘எனக்குத் திருமணம் வேண்டாம் நான் பாண்டுரங்கனையே தான் திருமணம் செய்துக்கொள்வேன்’, என்றாள். இப்படியே சில வருடங்கள் சென்றன.

இந்த சமயத்தில் மித்ருராவ் என்னும் இளைஞன், சிந்து தேசத்திலிருந்து வந்து சேர்ந்தான். வந்தவன் சக்குபாயை தனக்கு மணம் செய்துத் தரும்படி கேட்டான். அவனுடைய அறிவையும் ஆற்றலையும் அழகையும் கண்டு மகிழ்ந்தார் கங்காதர ராவ்.

ஊரிலேயே பெண்ணுக்கு பைத்தியம் என்று பட்டம் சூட்டி வைத்திருக்கிறார்கள். உள்ளூரான் எவனும் மணக்க முற்பட மாட்டான். ஆகவே இவன் வலிய வந்தவன், இவனை விடக்கூடாது என்று முடிவு செய்தார் அவர். இதுவரை திருமணமே வேண்டாம் என்ற சக்கு பாய், அந்த வரனை மணக்க இசைந்து விட்டாள். இதுவும் இறைவன் திருவருள் என்றே கருதி, வெகுசீக்கிரத்திலே ஒரு நல்ல நாளில் திருமணமும் செய்வித்தார் கங்காதர ராவ். ஊரார் பெருமகிழ்ச்சிக்கொண்டனர்.

மணம் முடிந்து சில நாட்கள் கழித்து மித்ரு ராவ் சிந்து தேசத்தில் உள்ள தன் ஊருக்கு சக்குபாயை அழைத்துச் சென்றான்.

புக்ககத்தின் சூழ்நிலை, அவள் மனதில் ஒரு விதமான மாறுதலையும் செய்யவில்லை. மித்ரு ராவ் தானே தேடி மணந்த மனைவி, தன்னிடம் எல்லையற்ற அன்பைச்சொரிவாள், மகிழ்விப்பாள், என்று எண்ணியிருந்தான். ஆனால் அவளோ, வேலைகள் செய்வதும் ஈசுவரத்யானம் செய்வதுமாய் இருந்தாள். புதிய மருமகள் வேலைகளை ஒழுங்காகச் செய்கிறாள் என்று மாமியார் முதலில் ஸந்தோஷமடைந்தாள். நாட்கள் செல்ல செல்ல அவள் மீது குற்றம் சுமத்தவும், ஓயாமல் வேலை செய்யும் படி வற்புறுத்தவும் தொடங்கினர். அவளோ எவ்வளவு வேலைகள் இட்டாலும், பொறுமையாக செய்து கொண்டும், அதே சமயம் ஈசுவரத்யானம் செய்துக்கொண்டும் இருந்தாள். சிற்சில சமயம் வேலை செய்துகொண்டிருக்கும் போதே த்யானத்தில் ஆழ்ந்துவிடுவது உண்டு. பெருக்கி மொழுகி பாத்திரம் துலக்கி, தண்ணீர் சுமந்து, மாவரைத்து, இப்படி நாள் முழுவதும் ஓயாத வேலை, ஓயாத தொல்லை.

ஒரு நாள் பாத்திரங்கள் தேய்க்கும் பொழுது, தனைமறந்து தெய்வ நினைவிலே ஈடுபட்டு விட்டாள். அதைக்கண்ட மாமியும் நாத்தியும் எப்பொழுதும் இவளுக்கு எங்கயோ நினைவு என்று ஏசிப் பேசி கண்டபடி திட்டினார்கள். மேலும் தன் மகனை அழைத்து அடப்பாவி முன்பின் தெரியாத இடத்தில் போய் இந்தப் பெண்ணை பிடித்து வந்தாயே, இவளால் யாருக்கு என்ன சுகம்? உன்னையும் மனிதனாக மதிக்கவில்லை, எங்கள் மனதையும் வாட்டி எடுக்கிறாள். அடித்தாலும் வைதாலும் மரம் போல நிற்கிறாள். உள்ளுரிலே பெண்களே அற்றுப்போய் விட்டார்களா? எங்கிருந்தோ இந்தப் பீடையை அழைத்து வந்து துன்புறுத்துகின்றாய், என்று திட்டலானாள் அவனுக்கோ கோபம் மூண்டது. சக்குபாயை வாய் வலிக்கத் திட்டி, கை வலிக்க அடிக்கலானான். அப்பொழுது, அவளுக்கு ப்ரஹலாத விஜயம் கண் முன் எழுந்தது. ‘பரம பக்தன் பிரஹலாதன் தந்தையிடமே துன்பப்பட்டான் நாம் இவர்களிடம் துன்பப்படுகிறோம்’, என்று எண்ணினாள்.

வீட்டிலே உள்ளவர்கள், பைத்தியமா என்றும் பேயோ பிசாசோ என்றும் கேட்டு அதற்குரிய வைத்தியங்கள் பேயோட்டுதல் இவைகளை செய்ய முற்பட்டார்கள். இவளோ ஒன்றுக்கும் வாய்திறவாமல் மௌனியாக எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாள். இப்படிப் பணத்தையும் செலவு செய்து மாறும் குணம் அடையாமல் முன் போலவே இருக்க, மாமியாரது கோபம் பொங்கி எழுந்தது இவளை பரபர என்று இழுத்துப் போய் ஒரு தனி அறையிலே அடித்து கதவை பூட்டி விட்டாள்.

சக்குபாயின் மனம் குளிர்ந்தது. இனி நாம் நிச்சிந்தையாக பகவானை பயணிக்கலாம் என்று அகமகிழ்ந்தாள். தனியறையில் அவள் மனம் த்யான சமாதியில் ஆழ்ந்தது. நாமோ உழைக்கவும் இவர்களுக்கு பணிசெய்யவும் பின்வாங்கவில்லை. வீட்டை விட்டு வெளியே போகவும் இல்லை. நம்மைத் தனியே வைப்பானேன், இதுவும் அவன் அருள் என்று நாமஸ்மரனை செய்ய தொடங்கினாள்.

முன் வந்த பக்தர் வடிவிலேயே வந்து, அவள் அடைபட்டிருந்த சன்னல் வழியே பார்த்து, அம்மா சக்கு பாய் நான் வந்து விட்டேன். உன் துன்பங்கள் நீங்கி விடும் என்றான். அவனது குரல் அவளுக்கு அமுதாய் இனித்தது. நமது குருநாதர் வந்து விட்டார். இனி இறைவன் அருள் கிடைத்தே தீரும் என்று நம்பிக்கை கொண்டாள். ஆகவே மேலும் துதிகள் செய்யத் தொடங்கினாள்.

அந்த மாயா பக்தர், அவள் வீடு வாசலில் நின்று, அம்மா தாயே பிச்சையிடுங்கள் என்று கூறினார். உள்ளிருந்த சக்குபாய் மாமி, கோபத்தோடும் வெறுப்போடும் வெளியே வந்து, ஏன் அய்யா உங்களுக்கு எல்லாம் வேறு வேலை செய்து பிழைக்கத் தெரியாதா? சோம்பேறியாய் பிட்சை எடுப்பது எதற்கு இது என்ன மானம்கெட்ட வாழ்கை? ‘இங்கே பிச்சையும் இல்லை முட்டியும் இல்லை போ போ’, என்று சீறினாள்.

அம்மணி கோபம் வேண்டாம். உலகத்திலே நல்லுபதேசம் செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அதோடு ஏதோ உயிர் நிற்பதற்காக சில கவளங்கள் கேட்கிறோம். இறைவனைப் பாடுவதும் பக்தி பிரச்சாரமும் செய்வது தான் எங்கள் பணி. இந்த வீட்டிலே உள்ளவர்கள் தர்மசிந்தனை உள்ளவர்கள், என்று சொன்னார்கள். அதனால் இங்கே வந்து கேட்டேன். மேலும் உலக வாழ்வு அநித்தியம். இறைவன் திருவடி ஒன்று தான் என்றென்றும் உள்ள பேரின்பம், என்று மக்களுக்கு உணர்த்தவே நான் பண்டரிபுரத்திலிருந்து ஊரூராய் சுற்றி வருகிறேன் என்றார் அந்த மாயா பக்தர்.

இதற்குள்ளே உள்ளிருந்து வெளியே வந்த மித்ரு ராவ், பிச்சைக்காரன் வம்பு செய்கிறான் என்று நினைத்து, இறங்கு அய்யா கீழே, பொழுது விடிந்ததும் வந்து விடுகிறார்கள். சோம்பேறிகளுக்கு இது ஒரு தொழில். ராம கிருஷ்ணா என்று கூறிக் கொண்டு வருவதும், இல்லாவிட்டால் அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு ஓடுவது என்று கடுமையாக திட்டலானான். மேலும் வர வர இது பெருந்தொல்லையாகிவிட்டது. வீட்டில் இருக்கிற தொந்தரவுகளும் துன்பங்களும் போதாதென்று, இவன் வேறு வந்து கழுத்தை அறுக்கிறான் போ போ என்றான்.

அதற்கு அந்த மாயா சித்தர் மிகவும் பரிவான குரலில் அப்பா உனக்கு என்ன துன்பம் என்னிடம் சொல்லக்கூடாதா? இந்த வீடு வழியே வரும் பொது ஜன்னலருகே ஒரு பெண் அழுதுக்கொண்டிருப்பது போல் தெரிந்தது என்ன சங்கதி என்று கேட்டார்.

மித்ருராவின் மனம் கனிந்தது. அய்யா அவள் என் மனைவி. அவளுக்கு பைத்தியமோ பேயோ பிசாசோ பிடித்திருக்கிறது. அதனால் அவளை அறையில் போட்டு பூட்டி வைத்திருக்கிறோம் என்றான். அவன் முகத்திலே துயரம் படர்ந்தது.

உடனே அவர் அப்படியா எனக்கும் கொஞ்சம் மந்திர சித்தி உண்டு. பல பேர்களுடைய வ்யாதியைப் போக்கியிருக்கிறேன் இவளையும் நிச்சயமாக குணப்படுத்தி விடுவேன் என்னைக் கண்டவுடன் எப்பேர்ப்பட்ட பேயாயிருந்தாலும் ஓடி விடும்! அவளை நான் பார்க்கலாமா? என்று மிகுந்த பரிவுடன் கேட்டார். மித்ருராவிற்கு அவரிடம் நம்பிக்கை உண்டாயிற்று; அவரை வீட்டிற்கு அழைத்துத் சென்றான்.

அதுவரையில் அமைதி இழந்தவளாய் இருந்த சக்குபாய், தன் கணவனுடன் வருபவர், தனக்கு முதன் முதலாக உபதேசம் செய்த பெரியவர் என்பதைக் கண்டாள். அவர் வருவார் வருவார் என்று நெடுநாளாய் எதிர்பார்த்தால் அல்லவா; அவரை நேரில் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது. மித்ரு ராவ் ஆச்சரியத்தினால் திகைத்தான். அவன் மிகுந்த வணக்கத்துடன் அவரை கும்பிட்டு வரவேற்றான்.

தன் மனைவி முகத்தில் மகிழ்ச்சி தோன்றுவதையும், தங்களைக் கரங்குவித்து அவள் வணங்குவதையும் கண்டா மித்ருராவ் சந்தோஷம் அடைந்தான். அந்தப் பக்தரால் அவளது நோய் நீங்கி விடும், என்றும் இன்னும் சில நாட்களில் ஆவலுடன் இல்லறவாழ்க்கையை இன்பமாக நடத்தலாம் என்றும் எண்ண அவன் மனம் நிறைந்தது.

சக்குபாயை சிறிது நேரம் உற்றுப்பார்த்த அவர், அப்பா உன் மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது, அதை ஒட்டி விட்டால் எல்லாம் சரியாகிவிடும், அதை ஓட்டுவதற்கு அவளை முதலில் நதியிலோ குளத்திலோ ஸ்னானம் செய்விக்க வேண்டும் பிறகு மந்திரங்களை சொன்னால் பேய் பறந்து ஓடும் என்றார்.

கிழவர் குளக்கரைக்குச் செல்ல எழுந்தார். மித்ரு ராவ் தானும் மனைவியை அழைத்துக் கொண்டு பின் தொடர்ந்தான். அவரைப் படித்துறையில் உட்கார வைத்துத் தான் பற்குச்சிகளை ஒடிக்க அடுத்துள்ள வேப்ப மரத்தில் ஏறினான். அது சமயம் சக்குபாய் ஸ்வாமி ஐந்து நாட்களில் வருகிறேன் என்று சொல்லி இவ்வளவு நாட்கள் கழித்தா வருவது, தங்களது வரவை எதிர்பார்த்து பார்த்து அலுத்துப் போனேன்; இப்பொழுதாவது வர வேண்டும் என்று தோன்றியதே அதுவே போதும் என்றாள்.

அதற்கு அவர். ‘அம்மா கவலைப்படாதே விதிப்படி தான் எல்லாம் நடைபெறும் இல்வாழ்க்கையில் இருந்து கணவனுக்கும் மற்றவர்க்கும் பணிசெய்து அதற்கிடையே தெய்வ வழிபாடும் செய்வது தான் முறை இல்லறத்தாளுக்கு முக்தி இல்லை என்று உனக்கு யார் சொன்னது? பிருந்தாவனத்து கோபிகைகள், தமது இல்வாழ்வோடு பக்தியையும் கடைபிடிக்கவில்லையா? இல்லறத்தை நல்லறமாய் செய்பவன் தான் சுலபமாக முக்தியைப் பெறுகின்றான். ஆகவே கணவன் மனம் நோகாமல் நடந்து, அவனை திருப்தி செய். அதுவே உனக்கு தவம் என்றார். மேலும் இல்வாழ்க்கை அனுபவித்த பிறகே அதிலுள்ள பற்று விடும், என்று அவர் சொல்லி வாய் மூடும் முன் மித்ரு ராவும் அங்கே வந்து சேர்ந்தான். பக்தர் அவனைப் பார்த்து, ‘அப்பா நாளை முதல் இவள் பெயரால் தான தர்மங்கள் செய்து வா. நானும் என்னாலியன்றவைகளைச் செய்கிறேன். இனி செல் நீயும் உன் மனைவியும் சுகமாக வாழ்வீர்கள் என்று சொல்ல’, மித்ரு ராவ் தானதர்மங்கள் செய்ய இசைந்தான்.

பிறகு அவர் சக்குபாயை குளத்தில் மூழ்கச் செய்தார். தாமும் பத்மாசனமிட்டு உட்கார்ந்து, மந்திரங்களை சொல்லலானார். பெரியவரது செயலினால், மனநிம்மதி பெற்ற சக்குபாய், முகமலர்ந்து, எல்லாரிடமும் கலகலவென்று சிரித்துப் பேசலானார். மாய பக்தரும் இனிமேல் அவளுக்கு ஒரு விதமான கலக்கமும் இராதென்று சொல்லி ‘தானதர்மங்களை விடாமல் செய்ய வேண்டும்’, என்றும் சொல்லி விடைபெற்றுப் போனார். சக்குபாய் தன் கணவனோடு மகிழ்ந்து அளவளாவி இருக்கலானாள். கிழவரின் பெருமையை எண்ணி எண்ணி மனம் பூரித்தான் மித்ரு ராவ்.

அழகாகக் குடித்தனம் செய்யும் சக்குபாயைக் கண்டு ஊரே வியந்தது. அவளது பொறுமையினாலே நோய் நீங்கியது என்று எண்ணி, அவளை சாந்த சக்கு பாய் என்றும் குறித்தனர். வாழ்கை இன்பமயமாகவே ஓடிக்கொண்டிருந்தது, என்றாலும், அவள் அகமனத்தில் மீண்டும் அந்த பக்தரை பார்க்க வேண்டும் என்ற பேராவல் ஓளிந்துக்கொண்டு, அவ்வப்போது மெல்ல மெல்ல தலையை நீட்டி எட்டி பார்த்தது. ஆகவே நாட்கள் செல்ல செல்ல வீட்டில் அலுப்பு தட்ட ஆரம்பித்தது, இனம்புறியாததோரு கவலை பீடிக்க, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமும் எழுந்தது.

ஒரு நாள் தண்ணீர் கொண்டு வரப்போன சக்குபாய், திடீரென்று குளத்தில் குதித்து விட்டாள். தனது, பக்தை இப்படி உயிர் விடுவதை இறைவன் பொறுப்பானா! உடனே மாயபக்தர் உருவத்தில் வந்து, கரை சேர்த்து, அவளை பார்த்து, ‘அம்மா சக்குபாய் என்ன காரியம் செய்து விட்டாய்! தற்கொலை செய்துக்கொள்வது மஹாபாவம் என்று தெரியாதா? இப்படி செய்வதனால் உனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை என்றல்லவா தோன்றுகிறது. இதென்ன பேதமை என்று அறிவுரைகள் கூறினார்.

தற்செயலாக குளக்கரைக்கு வந்த சில பெண்கள், இதைப் பார்த்து, அய்யா உம்முடைய மனைவியை புகழ்கிறீரே, குளக்கரையில் யாரோ ஒருவனுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறாள். பழைய சிநேகம் போலிருக்கிறது, வந்து பாரும் என்று சொன்னார்கள்.

அவன் ஓடி வந்து சக்குபாயைத் திட்டி விட்டு பக்தரைப் பிடித்து அடிக்க கை ஒங்க, அங்கு வந்த சிலர், அடா, மித்ரு இந்த கிழவரை கை ஒங்க அவர் என்ன தவறு செய்தார்! அவள் வயதென்ன? இவள்வயதென்ன? ஊரார் சொன்னால் உன் சொந்த புத்தி எங்கே போயிற்று? முதலில் அவர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதையாவது கவனித்தாயா? முழுமூடா என்று ஏசினார். அப்பொழுது அந்த மாய பக்தர், ‘ஏ மித்ரு ராவ் உன்னை இது வரையில் மிகுந்த அறிவுடையன் என்று நினைத்தேன். நீ பரம முட்டாள் என்பதை இப்பொழுது தான் கண்டேன்! உனக்காக நான் எவ்வளவு பாடுபட்டிருக்கிகறேன்! உன் மனைவியின் பேயை ஒட்டி நல்வாழ்வு வாழ வழி செய்தவன் என்பதை மறந்து நன்றி கெட்டவனாக பேசுகிறாய், உன் மனைவி குளத்தில் தவறி விழுந்து விட்டாள். தற்செயலாக வந்த நான் இறங்கி மீட்டு கரை சேர்ந்தேன். அதற்கு நீ நன்றி செலுத்த வேண்டியிருக்க, தகாத வார்த்தைகளை பேசினாய்! போனது போகட்டும், இனியேனும் இவளை நல்ல முறையில் வைத்துக்காப்பாற்று என்று சொல்லியவாறு வேகமாக நடந்து மறைந்து போனார். அவர் சென்ற திசையையே நெடுநேரம் பார்த்து நின்ற மித்ருராவ், அவளையும் அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான்.
பிறகு சிலநாட்கள் வரை அவர்களது இல்வாழ்க்கை அமைதியாகச் சென்றது. பின்பு ஒரு நாள் குளத்திற்குத் தண்ணீர் எடுக்கப் போன பொழுது, அந்தச் சாலையோடு ஒரு பஜனை கோஷ்டி ஒன்று பண்டரிபுரம் ஏகாதசி உற்சவத்திற்கு போவதைப் பார்த்தாள். குடத்தை இடுப்பில் வைத்தவளாய் அந்த கோஷ்டியை நெருங்கினாள்.

அந்த கோஷ்டியிலே, மகான் கபீர்தாஸ் ராமதாஸ் நாமதேவ் ஆகியோர் இருப்பது தெரிந்தது. குடத்தை வைத்து விட்டு அந்த கோஷ்டியை வலம் வந்து அவர்களது பாதத்தில் வீழ்ந்து வணங்கினாள். கபீர்தாஸ் அவளது முகப்பொலிவைக்கண்டு, இவள் சிறந்த பக்தை என்று கண்டுக்கொண்டார். அவள் தானும் அவர்களுடன் பண்டரிபுரம் வருவதாகச்சொல்ல, அதற்கு கபீர்தாஸ், அம்மா நீ எங்களுடன் வருவது தவறு. உன் கணவரோடு வந்து செவிப்பது தான் முறை. இல்லாவிடில் அவரே வந்து அழைத்துப்போங்கள், என்று உத்தரவு அளிக்க வேண்டும். ஆகவே நீ வீட்டிற்குச் சென்று அவருடன் வருவதற்கு உரியவைகளைச் செய் என்றார்.

சாதுக்களிடம் விடைபெற்று வீடு சென்ற சக்குபாய், தன் கணவரிடம் பண்டரிபுரத்தில் ஏகாதசி உற்சவம், நிரம்பவும் விசேஷமாம் எல்லாரும் போகிறார்கள் நாமும் போய் வருவோம் என்றாள்.

அதற்கு மித்ரு ராவ், வருஷந்தோறும் தான் ஏகாதசி வருகின்றது இப்பொழுது எனக்கு வசதி இல்லை. அடுத்த வருஷம் போவோம் என்றான். இப்பொழுது கொஞ்சம் அன்பும் ஆதரவும் காட்டி வருகிறார்கள், நாம் கேட்ட உடனே ஒப்புப் கொள்வார்கள், என்று அவளது பேதை மனம் நினைத்தது. அவன் மறுக்கவே இவள் பிடிவாதம் மேலோங்கியது. சிறு பொறி பெருந்தீயாகி அவன் இவளை நன்றாக அடித்து, ஓர் அறையில் தூணோடு கட்டி வைத்து அந்த அறையையும் பூட்டி விட்டான்.

சக்குபாய் ஏங்கி ஏங்கித் துடித்து, இறைவனை வேண்டலானாள். ஏ பண்டரிநாத உன் திருவிழாவை வந்து காணாமல் நான் உயிர் வாழ்ந்து தான் என்ன பயன்? ஏன் கணவருக்கும் மாமி நாத்தி இவர்களுக்கும் நல்ல புத்தி கொடுக்க கூடாதா? அவர்களே வந்து உன் திவ்யமங்கள விக்ரகத்தை பார்க்கக் கூடாதா, அவர்களுடனாவது நானும் வருவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமே என்று பரிதவித்தாள். இறைவன் அவளுக்கு உதவ திருவுள்ளம் கொண்டான். ஒரு பெண் போல உருவெடுத்து வந்து பூட்டை திறந்து, அறைக்குள் நுழைந்து, அம்மா சக்கு பாய் உன் தெய்வ பக்தி போற்றத்தக்கது. அதோ பாகவத கோஷ்டி செல்கிறது. இந்தத் தூணில் உனக்கு பதிலாக நான் கட்டுண்டு கிடக்கிறேன். நீ அவர்களுடன் சென்று திரும்பும் வரையில், நீ என்றே என்னும்படி நடந்து கொள்கிறேன் என்றாள். முதலில் தயங்கி வாதாடிய பின், சக்குபாய் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொண்டாள். உலகம் எல்லாம் முயன்றும் கட்ட முடியாத அந்த மாயனை, தன் வீட்டுக் கயிற்றினால் தூணோடு சேர்த்துக் கட்டினாள் சக்குபாய். பிறகு கதவையும் முன் போலவே பூட்டி விட்டு, ஓடோடிச் சென்று கபீர்தாசரை வணங்கினாள். அவள் இறைவனை கட்டியதும், இறைவன் தன் அடியார் நலம் கருதி கட்டப்பட்டதையும், ஞானதிருஷ்டியினால் உணர்தார் கபீர்! அன்று சகாதேவன் கட்டினான், இன்று கலியுகத்தில் இந்தப் பெண் கட்டி விட்டாள் என்னே பக்தியின் பெருமை! என்று வியந்தவராய் இவளையும் உடன் அழைத்துச் சென்றார்.

அங்கே பண்டரிபுரம் சென்றதும், ஆசை தீர பீமா நதியில் நீராடித் தூய மனத்தினராய் கோவிலை அடைந்தனர். மூலவராய்க் காட்சி தரும் எம்பெருமானைக் கண்ணாரக் கண்டு தாமே தழுவித் பூசனைகளையும் முடித்து இன்பக்கடலிலே மூழ்கினர். விட்டல விட்டல ஜெ ஜெ விட்டல பாண்டுரங்க பண்டரிநாத என்ற கோஷம் விண்ணையும் மண்ணையும் நிறைந்தது.

ராதாருக்மணி சமேதனாகக் காட்சிதரும் உற்சவமூர்த்தியின் எதிரே ஜெல் ஜெல் என்று ஜால்ராக்களின் ஒலியோடு சக்குபாயின் இனிய சரீரம் இறைவனது நாமாவளிகளை பொழிந்து கொண்டிருந்தது அந்தத் தேவகானத்திலே மெய்மறந்த பக்தர் குழாம் தாமரையைச் சூழும் வண்டுகளைப்போல அவனைச் சூழ்ந்து நின்றது.

அங்கே சக்குபாய் மெய்மறந்திருக்க, இங்கே மித்ருராவ் பூட்டை திறந்து, ‘ஏ சக்கு பண்டரிபுரம் பாகவத தரிசனம் எப்படி இப்பொழுதாவது புத்தி வந்ததா இனியாவது உன் பிடிவாதத்தை விடுகிறாயா’, என்றான். பகவான் சக்குபாயாகவே தோன்றி, மிகவும் நயமான குரலில், இந்தக் கயிறு மிகவும் இறுக்கி துன்புறுத்துகிறது. இதை சற்றே தளர்த்துங்கள், இனி உங்கள் சொற்படியே கீழ்ப்படிந்து நடக்கிறேன் என்றாள்.

மித்ருராவ் சந்தோஷத்தில் ஆழ்ந்தான். சரி இவளை பிடித்திருந்த ப்ரஹ்மராக்ஷஸம் ஒழிந்தது போலிருக்கிறது, என்று நினைத்து, கட்டுகளை அவிழ்த்து விட்டு, உள்ளே செல் என்றான். மாய சக்குவோ மாமன் மாமிகளுக்கும் கணவனுக்கும் அன்பை பொழிந்து பணி புரியலானாள். மித்ருராவ் தன் மனைவியின் அன்பையும் ஆதரவையும் கண்டு பூரித்துப் போனான்.

பண்டரிபுரத்திலே நாள்தோறும் மலர் கொய்வதும், மாலை கட்டுவதுமாக கோவிலிலேயே தங்கித் த்யானிப்பதுமாக இருந்தாள் சக்கு பாய். ஒரு நாள் நந்தவனத்திலே ஒரு பாம்பு தீண்ட, மயக்கம் தலைக்கு ஏற, மெல்ல மெல்ல நடந்து பாண்டுரங்கன் சந்நிதியில் வந்து வீழ்ந்தாள். உயிர் பொய் விட்டது என்று கருதிய அர்ச்சகர், பக்தர்கள் எல்லோரும் ஒரு வீட்டு கொடியிலே கிடத்தி விட்டு ஆலயத்தில் சம்ரோக்ஷனை செய்யப்புகுந்தனர்.

இந்தச் செய்திக் கேட்ட சிலர், மித்ருராவிடம் சென்று தெரிவிக்க, மித்ரு ராவ் எங்கள் வீட்டை பற்றி வம்புகள் பேசுவது தான் உங்கள் பொழுது போக்கு. இனி இங்கே நின்றால் நல்ல மரியாதை கிடைக்கும், ஓடுங்கள் ஓடுங்கள் என்று கூவினான். தன் மனைவி அழகாகக் குடித்தனம் செய்வதைக் காண பொறுக்காத பொறாமைக்காரர்களின் கற்பனை என்று எண்ணினான்.

அங்கே பண்டரிபுரத்தில் இறைவன் ஒரு விஷ வைத்யனாக வந்து, அந்த வீட்டிலே கிடந்த அவளை எழுப்பி, வீடு திரும்பும்படி புத்தி கூறினான். அவளோ பண்டரிபுரத்தை விட்டு போக விரும்பவில்லை, தானே துணைக்கு வருவதாகவும், வீட்டிலே தங்கி, மற்றவர்களுக்கு இதமாய் நடந்து அவர்களுக்கும் பக்தி உண்டாக்கும்படி செய்ய வேண்டும் என்று சொல்லி தானே அவளது ஊர் குளக்கரை வரை துணையும் வந்தான் பண்டரிநாதன்.

குளத்தின் படிகளில் இறங்கிய சக்குபாய், தான் தனக்கு பதிலாகக் கட்டிவைத்த பெண்மணி மிகவும் ஒய்யாரமாகக் குடத்தை எடுத்துக்கொண்டு நடந்து வருவது கண்டாள். அவள் இவளை நெருங்கி வந்து, ‘ஏ சக்கு பாய் நல்ல காரியம் செய்தாய். போன உடனே வந்து விடுவதாக என்னை கட்டி வைத்து விட்டு, நீ நிம்மதியாக ஈஸ்வர சந்நிதியில் நின்று விட்டாயே! அழகு தான். உதவி செய்ய வந்ததற்கு நல்ல மரியாதை வைத்தாய் போதும் உன் நட்பு”, என்று படபடத்தாள்.

உண்மையிலே சக்குபாயின் மனம் துணுக்குற்றது. அடடா எத்தகைய பெருந்தவறு செய்து விட்டோம் என்று எண்ணி கண்ணீர் பெறுக, என் தோழி நீ என்னை மன்னிக்க வேண்டும் தெய்வ சந்நிதியில் எனக்கு வீட்டு ஞாபகமே எழவில்லை நீ மன்னிக்க தான் வேண்டும் மன்னித்தேன் என்று சொல் என்று அவள் கைகளிரண்டையும் பிடித்து கெஞ்சினாள் சக்கு பாய். சக்குபாயின் கண்ணீர் துளிகள் அந்தத் தோழியின் கைகளின் மீது விழுந்தன அவ்வளவு தான்.

சங்குசக்ர கதாபத்மதாரியாக இறைவன் அவள் முன்னே நின்றான். முகத்திலே புன்னகை வாத அபாய கரங்கள் இரண்டும் அவள் மீது கவிந்தன. மஹாப்ரபு நீரா வந்து கட்டுண்டீர், ஏ அச்சுத பத்மநாபா ஆனந்தா என்று மெய்மறந்து கூச்சலிட்டவளாய் தடாலென்று அவனது மலரடியிலே வீழ்ந்து விட்டாள் சக்கு பாய்.

இறைவனது கருணைக் கண்கள் அவளை நோக்கின. மணிமகுடம் சற்று தாழ்ந்தது. மிகவும் அன்பும் பரிவும் கலந்த குரலிலே,’ ஏ சக்கு பாய் எழுந்திரு உன் பக்தி மேன்மேலும் வளரட்டும் இன்னும் சிலகாலம் இல்லறத்தை செம்மையாக நடத்து உன் கணவனையும் திருப்தி செய்’, என்று சொல்லி மறைந்தான்.

மெல்ல மெல்ல நடந்து வீடு சேர்ந்தாள் சக்குபாய். அவளது செயல்களில் மாறுதல் கண்டு வியந்த மித்ரராவ் அவள் அருகில் வந்து, ஏ சக்குபாய் உண்மையைச் சொல்லி விடு எல்ல செயல்களிலும் இன்று மாறுதல்கள் தெரிகின்றன நேற்று நடந்தது வேறு இன்று நடப்பது வேறு உண்மையைச் சொல் என்று அன்புடன் கேட்டான்.

அதற்கு அவள் நாதா தங்கள் என்னை ஏகாதசி உற்ஸவத்திற்கு போகாமல் தடுடீர்களல்லவா நான் கட்டுண்டு கிடக்கும் பொழுது இறைவனையே த்யானித்துக் கொண்டிருந்தேன். கருணை வள்ளலான இறைவன், ஒரு பெண்ணாக வந்து எனது கட்டுகளை அவிழ்த்து விட்டு எனக்குப் பதிலாக தன்னைக் கட்டும்படி சொன்னான். என்னை பண்டரிபுரத்திற்கு அனுப்பினான். இது நாள் வரை தங்களுக்கு பணிவிடை செய்தவன் அவன் தான்! நீங்கள் தான் பாக்கியசாலி. பகவானே மனைவியாகிப் பணிவிடை செய்ந்திருக்கிறான். என் மீது இருப்பதை விட தங்களின் மீதே அவன் அருள் மாரி பொழிந்திருக்கிறான். தங்கள் அதை அறியவில்லை என்று சற்று பெருமூச்செறிந்தாள் சக்கு பாய்

மித்ருராவ் அயர்ந்தே போனான். என்ன பாண்டுரங்கனா! என் மனைவியாக நடித்தான். அடடா அறியாமல் மோசம் போனேனே, அவனிடமே குற்றவேல்களை ஏற்றுக் கொண்டேன். அடடா, அவனுக்கு அபசாரம் செய்து விட்டேனே, சக்கு பாய் நான் உன் அழகில் மயங்கி ஆசை கொண்டேன், ஆனால் உன் பெருமையை உள்ளபடி உணராத அசடனாகி விட்டேனே, ‘ஏ சக்கு நீ தான் என் குரு நீ தான் என் வழிகாட்டி’, என்று புலம்பினான்.
சக்குபாயின் அகமும் முகமும் ஒருங்கே மலர்ந்தது. தன் கணவனுக்கு தெய்வத்தின் திருவருள் கிட்டி விட்டதென்று பெருமகிழ்ச்சிக்கொண்டாள். இருவரும் ஒருவரையொருவர் தேற்றியவராய், பகவத் குணங்களையும் இறைவனது திருவிளையாடல்களையும் பாடி மகிழ்ந்தனர்.

மித்ரு ராவ் தானும் ஷேத்ராடனம் செய்ய விரும்ப, இருவரும் பாரத நாட்டிலுள்ள தளங்களையெல்லாம் தரிசிக்க முற்பட்டனர். தலயாத்திரை முடிந்து, மீண்டும் பண்டரிபுரத்திற்கே வந்து, தெய்வ த்யானத்தில் தாமும் ஈடுபட்டு, தம்மை அடுத்தோரையும் ஈடுபடச்செய்து பின், இறைவனது திருவடிகளில் ஒடுங்கினார்.

ஏ பாரத தாயே சக்குபாயைப்போன்ற பக்தியில் சிறந்ததொரு மகளை மீண்டும் பெருவாயோ.
………………….. ஜெய் ஸ்ரீ சாந்த சக்கு பாய் அன்னையே போற்றி போற்றி……………………………

7 ஸ்ரீ புரந்தர தாசர்

பண்டரிபுரத்திற்கு அருகில் வேமனபுரி என்றோர் அழகிய சிற்றூர். நீர்வளம் மிகுந்தது. என்றென்றும் பசுமையாகவே விளங்குவது. அவ்வூரில் உள்ள மக்கள் தெய்வபக்தியிலே சிறந்து விளங்கினார். செல்வம் மிகுந்த ஆண்ட ஊரில், அருள் செல்வம் பொருட் செல்வம் கலைச்செல்வம் ஞானச்செல்வம் ஆகிய இந்நான்கையும் ஒருங்கே பெற்ற மாதவ்ராவ் என்ற பெரியவர் ஒருவர் இருந்தார். இவர் மனைவி ரத்னாபாய். நெடு நாட்களுக்கு பிறகு இறைவன் அருளால் ஒரு மைந்தன் தோன்றினான்.

ரகுநாதன் என்று பெயரிட்டு, அருமையும் பெருமையுமாக வளர்த்தனர். அவன் கல்வி கேள்விகளிலும் இசைக்கலையிலும் வல்லவனாக இருந்தான். அவனுக்கு தக்க வயது வந்ததும், லேவாதேவி என்று கூறும் வட்டிக்கடை வியாபாரத்தில் அமர்த்தி, தமது சுற்றத்தை சேர்ந்த லக்ஷ்மிபாய் என்ற அழகிய பெண்ணை மனம் செய்து வைத்தனர் பெற்றோர். இல்லறம் தொடங்கிச் சிறந்த முறையிலே நடந்தது. வட்டிக்கடை வளர, வளர, ரகுநாதனது பேராசையும் லோபித்தனமும் கூடவே வளரலாயிற்று, பணத்தையே குறிக்கோளாகக் கொண்ட ரகுநாதன், பேராசைக் கொண்டு அநியாய வட்டி வாங்கலானான். தெய்வ வழிபாடு, பூஜை, அன்னதானம், இவைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று! வீட்டிலே ஒரே அடக்குமுறை தாண்டவமாயிற்று. வயிறு நிறைய உணவு கிடைப்பதும் அரிதாயிற்று. எப்பொழுதும் ஒரே த்யானம் பணம் பணம் பணம் அதிலே வட்டி வட்டிக்கு வட்டி …………………..இப்படி ஓடிக்கொண்டிருந்தது அவன் சிந்தனைகள்.

தப்பித்தவறி எவரேனும் உன் தந்தை இப்படி வட்டி வாங்கியதில்லை என்றாலும், செல்வம் குவிந்தது அன்னதானம் ஏராளமாகச் செய்தார், நீயோ இப்படி கஞ்சன் என்று பெயரெடுக்கிறாயே, ஏதோ வருவாயில் ஒரு சிறிதளவேனும் நல்லச் செயல்களுக்கு என்று ஒதுக்கக் கூடாதா, என்று கேட்டு விட்டால் போதும், ரகுநாதனுக்கு உடனே மிக்க கோபம் உண்டாகி விடும். வந்தவர்களுக்கு உயிரின் மீதிக்கு ஆசை இருந்தால் ஓடி விட வேண்டியது தான். லக்ஷ்மிபாய் பாவம்; தன் கணவனின் லோபித்தனத்திற்கு முன் ஒன்றும் செய்ய முடியவில்லை; வருந்திக்கண்ணீர் சொரிவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.

இப்படியே இல்வாழ்க்கை வற்றி வறண்டு ஓடிக்கொண்டிருந்தது. லட்சுமி பாய் ஒரு அழகிய பெண் குழந்தையை ஈன்றாள். அந்தக் குழந்தைக்கு ருக்மணிபாய் என்று பெயரிட்டனர். குழந்தையின் வரவால், ரகுநாதனது மனதில் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை.

நாரத முனிவரை உலகிற்கு அனுப்பிய இறைவன் தான் திருவுள்ளம் கொண்டிருந்தால், முதலிலே நல்வாழ்வு வாழும்படி பணிந்திருக்க முடியாதா! முடியும். அனால் ஏன் அப்படிச் செய்யவில்லை! மனிதன் செய்யக் கொடிய தவறுகளையெல்லாம் செய்த பின்பும், திருந்தி தெய்வ வாழ்கை வாழ முடியும் என்பதை உலகிற்கு காட்டவே, இவ்வாறு செய்தார். ரகுநாதனை நல்வழிப்படுத்த இறைவன் செய்த முயற்சிகள் பல, அர்ஜுனனுக்கும் உத்தவருக்கும் கீதாபதேசம் செய்தது போல ரகுநாதனுக்கும் போதிக்கின்ற முறையிலே, நம் எல்லோருக்கும் போதிக்கின்றான் இறைவன்.

ஒரு நாள் காலை வேமண்ணாபுரி வீதியிலே, ஒரு கிழவர், ரகுநாதன் என்ற வட்டி வியாபாரி வீடு எது என்று கேட்டுக் கொண்டே வந்தார். தம்மை விசாரித்தவர்களிடம், கொஞ்சம் பண உதவி வேண்டும், என்றார். ஐயோ பாவம்! அவன் கொடையாளி என்று உமக்கு யார் சொன்னார்கள் வேறு யாரையாவது பார்த்தாலும் பலன் உண்டு என்று சொன்னார் சிலர். அவனிடமே செல் என்று பரிகசித்தனர் சிலர். அதை ஏற்காமல் மெல்ல மெல்ல நடந்து ரகுநாதராவின் வீட்டை அடைந்தார் முதியவர்.

அவரது பஞ்சைக்கோலம் கண்ட ரகுநாதன் இந்தப் ப்ராஹ்மணனிடம் என்ன இருக்கப் போகிறது அடகு வைக்க, என்று எண்ணி, யாரையா நீர்? அசத்திய வேலை இருக்கிறது, வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லும் என்றான்.

கிழவர் ஏதேது ஆரம்பமே சுபசகுனமாகக் காணோமே என்று நினைத்து, மூட்டையை அவிழ்த்து, எலுமிச்சம் பழம் ஒன்றை கையிலெடுத்து, சடமானம் பவதி என்று பஞ்சாதி சொல்லி, தலையில் அக்ஷதையை போட்டு எலுமிச்சம் பழத்தை கையிலே கொடுத்தார். ரகுநாதன் அதைக் கையில் வாங்கி கொண்ட பின், ஓகோ விவகாரம் என்று நினைத்தேன். யாசகம் சரி தான், என்று உறுமியவனாய் பேரேடுப் புத்தகத்தில் கண்களை ஓட்டினான்.
கிழவர் மிகவும் நயமான குரலில், சுவாமி, நீங்கள் மஹாப்ரபு, எனக்கு ஒரே ஒரு மகன்! விவாகம் செய்விக்க வேண்டும். ஓர் ஆயிரம் வராகன் தானமாகக் கொடுத்தால், ஒரு குடும்பத்தை காத்த புண்ணியம் உண்டு, கிருபை செய்யவேண்டும் என்று கூழை கும்பிடு போட்டார்.

சீறி எழுந்தான் ரகுநாதன். அய்யா உனக்கு உண்மை தெரியாது, இந்தத் தொழிலே தரித்திரத் தொழில்! எனக்கு உணவு கிடைப்பதே துர்லபம். குலகௌரவத்தைக் காப்பாற்ற, இந்த வீட்டில் இருக்கிறேன், பணமாவது காசாவது போம் என்று இரைந்தான்.

கிழவர் அசைவதாயில்லை. மேலும் நகர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தார். அப்பா நம்முடைய நாடு கொடைவள்ளல்கள் மிகுந்த நாடு. மகாபலி என்ன, சிபிச்சக்ரவர்தி என்ன, கர்ணன் என்ன, இப்படி எத்தனை எத்தனையோ மகான்கள் பிறந்த நாடு, என்று மிகவும் அமைதியாக தானத்தின் பலன்களைப் பற்றி பேசலானார். ரகுநாதனோ ஏன் அய்யா கிழவனாயிற்றே என்று பொறுத்தேன் முடிந்ததோ, ‘இன்னும் இருக்கிறதோ’, போதும் உன் உபதேசம் இதை யார் கேட்கிறார்களோ அவர்களிடம் சொல், ஏன் பொழுதெல்லாம் வீணாகி விட்டது, என்னிடமிருந்து ஒரு செப்பு காசும் கிடைக்காது எழுந்திரு என்றான்.

கிழவரோ அசட்டு சிரிப்புடன், சுவாமி இப்படிப் பேசலாமா, என்று மேலும் தொடங்க, கோபம் மிகுந்த ரகுநாதன், கிழவரைக் கழுத்திலே கையைக் கொடுத்து தள்ளினான். கிழவர் வெகுண்டு அவனைக் கட்டி பிடித்தார். இருவரும் கீழே உருண்டனர். ரகுநாதனது குடுமி அவிழ்ந்தது. துணிகள் அழுக்காயின. அட பிச்சை எடுக்கும் கிழத்திற்கு இவ்வளவு பலமா? என்று வியந்து உதறிக்கொண்டு தன் நகைக்கடையை திறக்க ஓடினான் ரகுநாதன்.
இங்கே கிழவர் சற்றே அயர்ந்திருந்து, நல்ல வியாபாரி என்று எண்ணி இவன் மனைவியின் குணம் எப்படியோ பாப்போம், என்று வீட்டிற்குள் நுழைந்தார்.

ஏதோ வேளையில் ஈடுபட்டிருந்த லக்ஷ்மிபாய் முதிய அந்தணர் வருவதுக்கண்டு எழுந்து வந்து நமஸ்கரித்தாள். அவர் சோபன அக்ஷதயை அவள் தலையில் போட்டு, ‘’தீர்க்க சுமங்கலி பவ, என்று ஆசி கூறினார். அவளது புன்னகை முகம் கண்டு கிழவரது மனம் மலர்ந்தது. அம்மா, உன் கணவரிடம் யாசகம் கேட்க வந்தேன். அவரோ கிழவரென்று பாராமல் அடித்துக்கீழே தள்ளி விட்டார். நீயோ வந்து நமஸ்கரிக்கின்றாய். நீயாவது எனக்கு உதவி செய்வாயோ, இந்த முதுமையில் பெரிய கடமை காத்து நிற்கிறது. ஒரே ஒரு மகன் அவனுக்கு விவாகம் செய்து வைக்க வேண்டும், அதற்குப் பண உதவி கோரித்தான் இங்கே வந்தேன். நீயோ ஸாக்ஷத் மஹாலக்ஷ்மி போல் இருக்கிறாய், உன்னால் தான் ஏன் குடி விளங்க வேண்டும் என்று பன்னி பன்னிப் பேசினார். லக்ஷ்மிபாயின் மனம் நெகிழ்ந்தது. ஐயோ பாவம் ஏழை ப்ராஹ்மணர் என்ன செய்வார் நம்மிடம் பணம் ஏது! இருப்பதே இந்த மூக்குத்தி ஒன்று தான்! வீட்டில் பணம் இருந்தும் அது என் கைக்கு வாராது! இந்த மூக்குத்தி நல்ல உயர்ந்த ஜாதி வைரம்! மூவாயிரம் பொன் பெறும், இதைக்கொடுத்து அவர் குறை தீர்ப்போம் என்று எண்ணினாள்.

பிறகு கிழவரிடம், ஸ்வாமி என்னிடம் ஒரு மூக்குத்தி தான் உள்ளது. இதைக்கொண்டு நீர் விவாகமும் செய்யலாம். மேலும் குடித்தனம் செய்யவும் உதவும். இது மூவாயிரம் பொன் பெறும். கள்ள விலைக்கு விற்றால் 2000 கட்டாயம் கிடைக்கும். இன்னொரு விஷயம், இது கணவருக்கு தெரிந்தால் கஷ்டம். ஆகவே உடனே புறப்பட்டு வேற்றூர் செல்லும் என்று எச்சரிக்கை செய்து, மூக்குத்தியைக் கொடுத்தாள். நாற்புறமும் திருப்பி திருப்பிப் பார்த்து பயந்தவராய்த் வெளியேறினார் கிழவர்.

சற்று நேரத்திற்கெல்லாம் மிகுந்த செல்வம் கொழிக்கும் ஒரு ரத்ன வியாபாரி கைகளிலே மோதிரங்கள் மின்ன, மார்பிலே ஹாரம் ஜொலிக்க, ரகுநாதனது கடைக்குள் நுழைந்தார். மலர்ந்த முகத்துடன் எழுந்து வந்து வரவேண்டும் வரவேண்டும் என்று வரவேற்றான் ரகுநாதன். அவர் மிகவும் அமர்த்தலாய், ‘என்னிடம் ஒரு உலர்ந்த மூக்குத்தி இருக்கிறது விலைக்கு எடுத்துக்கொள்ள முடியுமா பாருங்கள்’, என்று லக்ஷ்மிபாயின் மூக்குத்தியை நீட்டினார். கையிலே வாங்கி திரும்பத் திரும்ப பார்த்தான் ரகுநாதன். பிறகு அலட்சியமான குரலில் ஆயிரம் பொன் பெறும் என்றான். மேலும் இது தன் மனைவியின் மூக்குத்தியோ என்ற சந்தேகமும் எழுந்தது! ஆயிரம் பொன் என்ற சொல் கேட்டு வெகுண்டார் வந்தவர். என்னய்யா, மூவாயிரம் பொன் பெறும் பொருளை, கூசாமல் ஆயிரம் என்கிறீரே, சரி சரி அதையாவது சீக்கிரம் எடும் எனக்கு நேரமாகிறது என்றார் வந்தவர்.

அவரது அவசரம் ரகுநாதனது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. தன் வீட்டு மூக்குத்தியையே திருடி, வந்தது போதும், என்று விற்கவந்தவன் என்றும் தோன்றிற்று. உடனே வீட்டிற்குச் சென்று பணம் கொண்டு வருவதாகச் சொல்லி விட்டு அவரைக் கடையிலே இருக்கும்படி சொல்லி ஒரு மனிதனைக் காவலும் வைத்து வீடு திரும்பினான் ரகுநாதன்.

எதிர்பாராத நேரத்தில், கணவன் வருவதைக் கண்டு எழுந்தாள் லக்ஷ்மிபாய். எ லக்ஷ்மி உன் மூக்குத்தியை எடுத்து வா என்றான் ரகுநாதன். அவள் தவித்துப்போனாள். பகவானே இதுவும் உம்முடைய சோதனை தானோ! உன் அடியார்க்குத் தானே கொடுத்தேன்! என்று சொல்லி பெட்டியிலே தேடுவது போல் பாவனை செய்தாள்.

ஆனால் அந்தப் பெட்டியின் ஒரு ஓரத்திலே ஓர் அழகான மூக்குத்தி இவளுடையது போலவே கிடந்தது. அதன் ஒளி கண்களை கூச செய்தது; இறைவன் திருவருள் தான் இந்த வடிவில் வந்தது என்பது புலனாயிற்று; நெஞ்சுருகி இறைவனைப் பணிந்தாள்; பிறகு மூக்குத்தியை ரகுநாதனிடம் கொடுத்தாள்.

ரகுநாதனது வியப்பு அதிகமாயிற்று. அது அவளுடைய மூக்குத்தி அல்ல, அதைக்காட்டிலும் உயர்ந்தது. ஆகவே லக்ஷ்மியை அழைத்து, லக்ஷ்மி இது உனக்கு ஏது? நான் இது வரை வாங்கியவற்றுள் இவ்வளவு ஒளி உள்ள வைரம் கிடையவே கிடையாது. இது உன்னுடைய மூக்குத்தியே அல்ல. உண்மையைச் சொல். இது ஏது நான் உன் மீது கோபம் கொள்ள மாட்டேன் நடந்ததை உள்ளபடி சொல் என்றான்.

அதைக் கேட்ட லக்ஷ்மிபாய், ‘ஸ்வாமி நான் என்னுடைய மூக்குத்தியை இங்கு வந்திருந்த கிழப்ராஹ்மணனுக்கு தானமாகக் கொடுத்து விட்டேன். தங்கள் வந்து கேட்டு அதட்டியதும் என்ன செய்வது என்று தெரியாமல் நகைப்பெட்டியிலே தேடுவது போல் பாவனை செய்தேன். ஆனால் அப்பொழுது நான் பகவானை நோக்கி, என்னைக் காப்பாற்றும் என்று வேண்டினேன். என் வேண்டுகோளிகிறங்கிய பகவான், இந்த மூக்குத்தியை இங்கே வைத்திருக்கிறான் என்று நினைக்கிறேன். இதைப் பார்த்தாலே இது தேவர்களுக்கு உரியது என்று தெரிகிறது என்றாள். இறைவனது கருணையை எண்ண எண்ண அவளது கண்களிலே நீர் மல்கி நின்றது.

ரகுநாதன் திகைத்துப் போனான். உண்மையான தெய்வ பக்தி இருந்தால், இறைவன் அருள் செய்வான் என்று நினைத்தான்.

லக்ஷ்மிபாயின் இளகிய நெஞ்சம், தரும சிந்தனை, கருணை, இவைகளை எண்ணி எண்ணி வியந்தான். அவளுக்கு இறைவனது அருள் எவ்வளவு சுலபமாக கிட்டி விட்டது என்பதை நினைக்க நினைக்க அவன் உள்ளம் பூரித்தது. லக்ஷ்மி நீ பாக்கியசாலி, இறைவன் என்று தெரியாமல் கொடுத்து விட்டாய். நானோ அடித்து தீச்சொல்லால் புண்படுத்தி அனுப்பிவிட்டேன். அடடா பண்டரிநாதனே இப்படி வந்திருக்கிறார் என்று தெரிந்துக்கொள்ளாத பாவியானேனே! லக்ஷ்மி எழுந்து வா, கடையிலே அந்த வியாபாரியை உட்கார வைத்து விட்டு, இங்கே காலம் கடத்தலாமா, வா சீக்கிரம் போவோம்! என்று கூறி, விடுவிடுவென்று கடையை நோக்கி ஓடினான் ரகுநாதன்.

கடையின் கதவு திறந்திருந்தது. கடை முழுவதும் சந்தனமும் சம்பிராணியும் நிறைந்திருப்பது போல நறுமணம் வீசியது. ஆனால் அங்கே வீற்றிருந்து மாயா வியாபாரியைக் காணோம். மெய்மறந்து கண்கள் பனி சோர, அந்தத் தரையிலே பணிந்து எழுந்து உதிர்ந்த மலரிடல்களையும் இறைவனது பாதத்துளிகளையும், தன் சிரமீது வைத்து நெஞ்சுருக இறைவனை வேண்டி நின்றான். அவன் எவ்வளவு நேரம் இப்படி மெய்மறந்திருந்தானோ தெரியாது! கோவிலின் மணியோசை அவன் நிஷ்டையைக் கலைத்தது. தடுத்தாட்கொள்ள வந்த தெய்வமே மீண்டும் ஒரு முறை காட்சி தர மாட்டாயா, என்று கரைந்து ஓலமிட்டது அவன் உள்ளம்.

தான் செய்த தவறுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாய் இறகு முளைத்து எதிரே வந்தன. தன்னுடைய அநியாய வட்டியினால், எத்தனைக் குடும்பம் சீர்குலைந்தனவோ என்று எண்ண எண்ண அவன் மனம் தவித்தது.

பணத்தைப் புதைத்து வைத்ததில் யாருக்கு என்ன பயன், இனி ஏன் வாழ்நாள் முழுவதும் இறைவனது திருப்பணிகளில் அர்ப்பணம் செய்வேன். அவன் கொடுத்த பொருள் அவன் அடியார் பணிக்கே இறைவன் தொண்டர் உள்ளத்து ஒடுக்கம், ஆகவே தொண்டருக்கும் தொண்டனாய்ப் பணி செய்வேன் என்று மனதுள் சபதம் செய்தான்.

அவனைப் பின் தொடராமல் வீட்டிலே தங்கிய லக்ஷ்மிபாய், கணவன் கடையிலிருந்து திரும்பியதும் அவனது முகத்தோற்றம் கண்டு மெய்சிலிர்த்தாள். அந்த ஒரு சம்பவத்தில் கணவனது மனம் மாறியதை நினைத்து நினைத்துப் பூரித்துப்போனாள். கடைக்குச் சென்ற பின் நடந்தவைகளைக் கூறி தனது முடிவான தீர்மானத்தையும் அவளிடம் சொன்னான் ரகுநாதன். பண்டரிநாதனது பேரருளை எண்ணி எண்ணி கரைந்துருகினாள் லக்ஷ்மிபாய்.

ரகுநாதனது மனமாற்றம் நொடிப்பொழுதில் ஊர் முழுவதும் பரவியது. எல்லோரும் இறைவனது கருணையை புகழலாயினர். அவனது பெட்டியிலே அடைக்கப்பட்டிருந்த செல்வக்குவியல் கோவில் குளம், சத்திரம், நந்தவனம் வேதா பாடசாலைகள், தத்துவ வியாகரணம் ஆராய்ச்சி கழகங்கள், ஹரிகதை காலக்ஷேப மண்டபங்கள், இப்படிப் பல்வேறு வகையாக உருவெடுத்தன. இவைகளுக்கெல்லாம் மணிமுடி போல பண்டரிபுரத்திலே நாதபிப்ரஹ்ம மடம் என்ற மாளிகையில் எப்பொழுதும் பகவானது திவ்யா நாமங்கள் எதிரொலித்துக்கொண்டே இருந்தன.

ஏற்கனவே இசையில் வல்லவனான ரகுநாதனது நெஞ்சிலே உறங்கிக்கிடந்த சக்திகளை இறைவனது கருணைப்பெருக்கு தட்டி எழுப்பியது. அந்த சக்தி இப்பொழுது பீறிட்டெழுந்து இறைவனது பாமாலைகளாக வடிவேடுத்தது.
செல்வத்தையெல்லாம் இறைவன் பணியிலே செலவிட்டு, அந்தணருக்குரிய உஞ்சவிருத்தியை மேற்கொண்டான் ரகுநாதன். அவனோடு அவனது அருமை மகள் ருக்மணியும் இன்னிசையை பொழிந்து, அவனது கீதங்களை பாடலானாள். மக்களது அழகு சங்கீத ஞானம் அடக்கம் ஒழுக்கம் இவைகளைப்பார்க்கும் பொழுது இவளுக்கு ஏற்ற வரன் எங்கிருக்கிறானோ என்ற ஏக்கம் லக்ஷ்மிபாயின் நெஞ்சிலே எழும்.

பக்தி செய்ய வேண்டியது தான்! அதன், பொருட்டு கடமையை மறந்தும் இருக்கலாமா? முதலில் ஒரே கஞ்சத்தனம்! பிறகு வாரி இறைத்தான்! இப்பொழுது பெண் வளர்ந்து நிற்கிறாள். இவனோ பஜனையில் காலம் கழிக்கிறான் எல்லாம் எல்லை மீறிய காரியமாகவே இருக்கிறது அந்தப் பெண் லக்ஷ்மி பாய் தான் என்ன செய்வாள் என்று பேசினார் ஊரார்.
ஒரு நாள் ஒரு கிழவர் வந்து ‘ஏன் ரகுநாதரே உமது மகளுக்கு மணமுடிக்க வேண்டாமோ’, என்றார்.

ரகுநாதனோ மிகவும் அமைதியாக, நான் எல்லாவற்றையும் அவனது திருவடிகளில் அர்ப்பணித்து விட்டேன். அவன் விட்ட வழி என்றான். அவனது உறுதி, கிழவரை திகைக்கச் செய்தது. பிறகு உன் மகளை பார்த்தால் எனக்கு இரக்கம் உண்டாகிறது. உனக்கு ஒரு உதவி செய்ய விரும்புகிறேன். அடுத்துள்ள கிஷ்கிந்தாபுரியில், கேசவராவ் என்ற ஒரு செல்வன் இருக்கிறான். அவன் குமாரன் உன் பெண் ருக்மணிக்கு ஏற்றவன். நீ சரி என்றால் இந்த விவாகத்தை நானே முன் நின்று முடித்துவைக்கிறேன் என்றார்.
ரகுநாதனது மனம் குளிர்ந்தது.

கிழவர் அங்கிருந்து கிஷ்கிந்தாபுரி சென்று கேசவராவைப் பார்த்து, அய்யா பக்கத்து ஊராகிய வேமன்னபுரியிலே ரகுநாதராவ் என்ற பக்தர் ஒருவர் இருக்கிறார். மிகுந்த செல்வந்தர். ஆனால் இப்பொழுது சொல்வதையெல்லாம் திருப்பணியிலே செலவு செய்து, வறியவராய் வாழ்கிறார். அவருக்கு ருக்மணிபாய் என்ற ஓர் அழகான பெண் இருக்கிறாள். எனக்கோ குழந்தைகள் இல்லை. அந்தப் பெண்ணை நான் சுவீகாரம் செய்துக்க கொண்டு, அருமையாக வளர்த்து வருகிறேன். விவாகப்பொறுப்பு முழுவதும் என்னைச் சேர்ந்ததே! ஏதோ பகவான் எனக்கு கொஞ்சம் பொருள் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒரு செப்பு காசும் செலவு செய்ய வேண்டாம். இந்த ஊரில் இம்மாதிரியான நடந்ததில்லை என்று சொல்லும்படி நடத்தி வைக்கிறேன், என்றார் கேசவராவ். பெண்ணைப் பார்த்து நிச்சியதார்த்தம் செய்ய வேமன்னப்புரியிற்கு எப்பொழுது போகலாம் என்றார்.

அந்த சிரமம் உங்களுக்கு வேண்டாம் ரகுநாதராவோ உங்களைச் சரியானபடி உபசரிக்கத் தெரியாதவன். நான் சொல்வதை நம்பித் தான் நீங்கள் நிச்சயிக்க வேண்டும் என்றார் கிழவர். பெண்ணின் தாய் தந்தையர் இன்றியே முஹுர்த்தமும் வைத்து நடப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் நடந்தன.
கிழவர் வேமனபுரியிற்கு வந்து, ரகுநாதனிடம் உன் மகளுக்கு நாளையே கல்யாணம் நடக்கும் என்றார் அவர்கள் திகைக்க நான் எல்ல ஏற்பாடுகளையும் செய்து விட்டேன் புறப்படுங்கள், என்று சொல்லி புறப்படச் செய்தார்.

மகளுடைய திருமணம், கிழவர் ஏற்பாடு கிஷ்கிந்தாபுரியில் நடக்கப் போகிறது, ஆகவே பாகவத கோஷ்டிகளையெல்லாம் அழைத்துக்கொண்டு, தம்புரா வீணை ஜால்ரா சிப்லா, மிருதங்கம், முதலிய வாத்திய கோஷ்டியோடு பெண் வீட்டார் கிஷ்கிந்தாபுரிக்குள் புகுந்தனர். பக்தர்களின் மிகுதியும் அவர்களின் நாம சங்கீர்த்தனைகளின் பேரொலியும், ரகுநாதன் தானே இயற்றிய அற்புதமான கீதங்களைத் தந்தையும் மகளும் பாடுவதைக்கண்ட அவ்வூர்வாசிகள், ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.

கிழவரோ, ரகுநாதனது அருகிலே நின்று, தமது துதியிலே தாமே லயித்தவராய், பேஷ் பலே சபாஷ் என்று உற்சாகமூட்டிக்கொண்டிருந்தார். விவாகம் வெகு சிறப்பாக ஒரே வியக்கும்படி ஐந்து நாட்கள் நடந்தது. ஊரார் அவரை ரகுநாததாசர் என்று அழைக்கலாயினர்.

தென்னாட்டுத் திருத்தலங்களுள் ஒன்று திருப்பதி. அங்கு ஏழுமலையான், நின்ற திருக்கோலமாகக் காட்சி தருகின்றான். இந்தப் பெருமாளை, ஆழ்வார்களும் மற்றுமுள்ள பக்தர்களும், அன்றும் இன்றும் என்றும் புகழ்ந்து புகழ்ந்து பாடிப் பணி செய்கின்றனர். இது மட்டுமா? ஜைன முனிவரான இளங்கோ அடிகள், இந்த எம்பெருமானது ரூப சௌந்தர்யத்தில் ஈடுபட்டு, எப்படிப் பாடுகிறார்!

இந்தத் திருத்தலத்திலே வந்து, சில நாட்கள் லக்ஷ்மிபாயுடன் தங்கினார் ரகுநாததாசர். அந்தப்பதியிலே, புரண்தரி என்னும் தாசி தெய்வ பக்தி மிகுந்தவள் என்றும், புனிதமான வாழ்கை நடத்துபவள் என்றும் புகழ் பெற்றிருந்தாள். அவள் இந்த பரம பாகவதத் தம்பதி பாடிச் செல்வதுக் கண்டு, தன் இல்லத்திலே விருந்தினராக இருக்கும்படி வேண்டிக்கொண்டாள். அவரும் அவள் வீட்டிலே தங்கலானார். அவ்வாறு தங்கியிருக்கும் பொழுது, தினந்தோறும் நடு இரவில், புரந்தரி அம்மையார் காலில் சதங்கையும் கையில் வீணையுமாய் எங்கேயோ சென்று நெடுநேரம் கழித்து திரும்பி வருவதை ரகுநாதராவ் கண்டார். அந்த அம்மையார் அவ்வாறு நாள்தோறும் எங்கே செல்லுகிறார் என்று தெரிந்துக்கொள்ள விரும்பினார். ஒரு நாள் புரந்தரியிடம், அம்மணி தங்கள் நள்ளிரவில் எங்கே செல்லுகிறீர்? நடனத்துக்குரிய அலங்காரங்களுடன் வீணையும் எடுத்துச் செல்லுகிறீர்களே அது எங்கே என்றார்.

புரந்தரி உண்மையைச் சொல்ல தயங்கினாள். பிறகு பரம பக்தரான அவரிடம் மறைக்கக் கூடாது என்று எண்ணி, ‘ஸ்வாமி நான் தினந்தோறும் கோவிலுக்கு தான் செல்லுகிறேன். இறைவன் எனக்காகக் கதவைத் திறந்து வைத்திருப்பார். நான் நடனமாட, இறைவன் வீணை வாசிப்பார், பிறகு நான் வீணை வாசிக்க, அவர் நடனமாடுவார் இது வேறு ஒருவருக்கும் தெரியாது, எங்கள் இருவருக்குமே தெரியும்! உங்களிடம் நான் மறைக்க விரும்பவில்லை, ஆகவே சொன்னேன் என்றாள்.

புரந்தரியின் சொற்களைக் கேட்டு ரகுநாததாசர் மிகவும் ஆச்சரியமடைந்து, அவளால் தான் தனக்கு கடவுள் தரிசனமும் நற்கதியும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார்.

அப்படியா, இன்றிரவு தங்கள் என்னையும் அழைத்துச் செல்ல வேண்டும். எம்பெருமான் ஆடும் நடனத்தைக் காணவும், அவரது வீணாகானத்தை கேட்கவும், என் மனம் துடிதுடிக்கிறது. தாங்கள் எனக்குக் கட்டாயம் இவ்வுதவியைச் செய்து தான் தீர வேண்டும் என்று சொன்னார்.

அவளால் இவரது வேண்டுகோளை மறுக்க முடியவில்லை. எனவே அவள் அன்றிரவு ரகுநாததாஸரைத் தன்னுடன் அழைத்துச் சென்று, ஒரு தூண் மறைவில் இருக்கச் செய்தாள் தான் மட்டும் தனியே பகவானுடன் ஆடவும் பாடவும் சென்றாள்.

வழக்கம் போல முதலில் புரந்தரி பாடலானாள். இறைவன், அவளது வீணைக்கும் குரல் ஒலிக்கும் இசைய நடனம் ஆடினான். ரகுநாததாசரோ சங்கீத நிபுணர், எனவே அவர் புரண்தரியின் பாடலிலே மெய்மறந்து, தாளம் போட்டுக் கொண்டிருந்தார். ரகுநாதருக்கு அருள் செய்ய விரும்பினார் பகவான். ஆகவே அவளது பாட்டு முடிந்ததும் தான் வீணையை எடுத்து, மறுபடி சுருதி சேர்த்து, மிகவும் அபஸ்வரமாக வாசித்து, பாடலானான். இந்த அபஸ்வரத்தை பொறுக்க முடியாத ரகுநாதர் ‘எ புரண்டரி இதென்ன அபஸ்வரம், தலை வெடித்து விடும் போலிருக்கிறதே’, என்று எழுந்து வந்தார்.

பகவானும் உள்ளம் உவந்து அவரை அழைத்தான். மூலப்பலமறைக்கு முன்னேயும் காலிகட்கு பின்னேயும் செல்லும் இறைவன், ரகுநாதருக்கு எதிரில் நின்றான். ரகுநாததாசர் மெய்மறந்தார். ‘இறைவனே ஆண்டவனே உமது திருவருள் இருந்தவாறு தான் என்ன, நான் பலகாலம் உருகி வழிபட்டதெல்லாம் இன்றே சபலமாயிற்று’, என்று அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். இறைவன் அவரை புரண்தரியிடமே ஞானோபதேசம் பெறச்செய்து, புரந்தரதாசன் என்ற பெயர் பெற்று, பாகவத கோஷ்டியிலே விளங்க அருள் செய்து, மறைந்து போனான். சிலகாலம் தலயாத்திரை செய்து வீடு திரும்பினார் புரந்தரதாசர்.

வீட்டை அடைந்த புரந்தரதாசருக்கு, சோதனை காத்து நின்றது. லக்ஷ்மிபாய் ஏதோ தையல் வேலை செய்யும் பொழுது, சம்பந்தி வீட்டிலிருந்து மகள் பெரியவளான செய்தியும், அதை அடுத்து இவர்கள் சீர்வரிசை செய்ய வேண்டியது பற்றியும், கேசவராவ் சொல்லி அனுப்பினார். கேசவராவால் அனுப்பப்பட்டவர் வந்த சமயம், லக்ஷ்மியின் விரலில் ஊசி குத்தவே, அவள் மிகுந்த கோபத்தோடு, கணவர் எங்கே என்ற அவரிடம் ‘பண்டரிநாதனுக்கு அழப் போயிருக்கிறார்’, என்று சொன்னாள்.

அதைக் கேட்ட அந்த மனிதர், கேசவராவிடம் சென்று இப்பொழுது அங்கோ அக்ஷயபாத்திரமும் சிபிலக்கட்டையும் தான் மீதி, என்று சொல்லிப்போனார் விவாகம் நடந்தது போல் இப்பவும் சீர்வரிசை வரும் என்று எதிர்பார்த்த கேசவராவ் ஏமாற்றமடைந்தார்.

ஆனால் இந்த ஏமாற்றம் நெடுநேரம் நிற்கவில்லை. முன்பு வந்த கிழவர், மேலும் ஏழ்மை கோலத்துடன் வந்து, ஒரு பட்டியல் கேட்டு, அதில் உள்ளபடி சாமான்கள் பாத்திரம் பண்டங்கள் புடவைகள் வேஷ்டிகள் நகைகள், சில பைகளிலே பூவராகன்கள் சகிதம் வந்து, வீட்டையே நிரப்பினார். மனம் மகிழ்ந்து, சாந்தி கல்யாண வைபோகங்களை நடத்திக்கொண்டார் கேசவராவ்.

அங்கே நடைபெற்றவைகளை கேட்டு, வேம்மனபுரி மக்கள் அதிசியத்தில் ஆழ்ந்தனர். ஆனால் புரந்தரதாசரோ, ‘நமக்காக இறைவன் மீண்டும் வந்து சிரமப்படும்படி நடந்துக்கொண்டோமே, ஆண்டவனே என் பிழை பொறுத்தருள வேண்டும்’, என்று இறைஞ்சினார். இதன் பின் ஒரு சமயம், இசைப்பயிற்சி கைவராத சில பக்தர்களை இவர் அலட்சியமாக பேச, இவர் ஊமையாகிவிட்டார். இறைவனுக்கு அபசாரம் செய்வதை விட அவன் தொண்டனுக்கு அபசாரம் செய்வது கொடியது என்று அறிந்து வருந்திய பின், பேச முடிந்தது. இதன் பின் அப்பண்ணா என்ற சீடனை நெய் வாங்கி வர அனுப்ப, அவனைச் சுங்கச்சாவடியார் பற்றிக்கொள்ள, இறைவனே நெய்குடம் தூக்கியாக வந்த அற்புதம் நிகழ்ந்தது.

வித்தையும் பக்தியும் இருந்தது ஞானோபதேசமும் ஆயிற்று. ஆனால் தான் என்ற அகம்பாவம் உண்டாயிற்று. தான் சங்கீத நிபுணன், தான் ஒழுக்கத்தால் உயர்ந்தவன், என்ற கர்வம் தலைநிறைந்திருந்தது. சீடர்களைக் குட்டுவதும் திட்டுவதும் பரிகசிப்பதும் பிறருக்கு மனத்தாங்கல் உண்டு பண்ணிற்று.

இவரது கர்வத்தை ஒடுக்க இறைவன் ஒரு நாள் தனது கைகாப்புகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு, புரந்தரதாசர் போல வேடம் தரித்து, பண்டரிபுரத்தில் வசித்த புனிதவதியான லீலாவதி என்னும் தேவதாசி வீட்டிற்கு போய், அவளிடம் ஆசைக்கொண்டு வந்திருப்பதாகச் சொன்னான். புரந்தரதாசருடைய பெயரையும் புகழையும் கானத்தையும் கேட்டிருந்த அவள் மிகுந்த தயக்கத்துடன், சுவாமி என் வீட்டிற்கு தங்கள் வந்தீர்கள் என்ற அவப்பெயரை உங்களுக்கு உண்டாக விரும்பவில்லை, போம் என்றாள்.
சரி போனாற் போகட்டும். உன்னைப் பார்த்ததே போதும்! அவ்வளவாவது கிடைத்ததே சந்தோஷம்! இதைப், பெற்றுக்கொள் என்று ஒரு பொற்காப்பை அளித்துப் போனான் இறைவன்.

மறுநாள் அர்ச்சகர், பொற்காப்பைக் காணாமல் ஊர் முழுவதும் தமுக்குப் போடச் சொல்ல, லீலாவதி கோவில் உடமை என்றறிந்து, அதை அரசன் சபைக்கு எடுத்துச் சென்று, புரந்தரதாசர் தான் கொடுத்தார் என்று சொன்னாள். அரசனது காவலாட்கள் புரந்தரதாசரைப் பற்றி இழுத்து வந்தனர். புரந்தரதாசரோ தாம் பண்டரிபுரம் வரவேயில்லை என்று ஆனமட்டும் சொன்னார். ஆனால் லீலாவதியோ இவரே தான் வந்தவர் என, வழுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பக்தர் என்ற காரணத்தால் முப்பது கசையடிகள் என்றான் அரசன்.

அப்பொழுது இறைவன் அசரீரீயாக ‘ஏ அரசனே காப்பாய் யார் திருடியது என்று கண்டுபிடிக்க இயலவில்லையே! கோயில் பூட்டியபடி இருக்க எவர் எடுக்க முடியும். கதவு பூட்டியபடியே இருந்தது என்பதை உன்னிடம் அர்ச்சகர் சொல்லவில்லையா புரந்தரதாசரது பெருமையை உலகம் அறியவும் அவருக்கு தண்டனை அளித்து ஆட்கொள்ளவுமே இப்படி சூழ்ச்சி செய்தேன் சாந்தமும் சமத்துவபாவமும் இல்லை கர்வமும் அகம்பாவமும் போகவே இந்தத் தண்டனை சிஷ்யராக வந்தவரையெல்லாம் குட்டியும் அடித்தும் அபசாரத்திற்கு உள்ளானார் தொண்டர்குலம் ஒரே குலம் என்பதை உணரட்டும்’, என்று கூறினான்.

புரந்தருக்கு அப்பொழுதே மெய்ஞ்ஞானம் உதித்தது. இறைவனது திருவருளை வியந்து வியந்து, அற்புதமான ஒலிமாலைகளைத் தொடுத்தார். இவரது இசைமாலைகளைத் தாஸர்வாள் பதம் என்றும் தேவர்நம என்றும் போற்றி புகழ்கிறது, சங்கீத உலகமும் பக்தி உலகமும்!

அழகிய ஆடரங்கு வன்னச் சீலைகள் காற்றிலே அசைந்து ஆடுகின்றன. திடும் திடும் என்று மிருதங்கத்தின் கும்காரம் ஜல் ஜல் என்ற ஜால்ராக்களின் ஓசை, இவைகளின் ஊடே, மெலிய சிலம்பொலி, கலீர் கலீர் என்று ஒலிக்கிறது. அன்னமென அல்லமென ஆமென அடிபெயர்ந்து நடந்து, மேடையின் நடுவே வந்து கரங்குவித்து வணங்குகிறாள் பாரத நாட்டியம் பயிலும் சிறுமி. முதற்சருதி முடிந்து விட்டது அடுத்து அபிநயம்.

கிருஷ்ணா நீ பேகனே பாரோ என்ற பாடலுக்கு அபிநயம் பிடிக்கிறாள். கவிதையின் இனிமையும் சொற்சுவையும் பொருட்சுவையும் யமுனா கல்யாணியின் குழைவும் நம்மை மெய்மறக்கச்செய்கின்றன. தெய்வ நங்கை யசோதைப்பெற்ற செல்வன் நம் கண் முன்னே தோன்றுகிறான். ஆடுகின்ற பொற்பதுமை பாடுகின்றது. தாயிகே பாயள்ளி என்று பாடுகிறாள். வைய மேலும் காண்டாள் பிள்ளை வாயுளே என்ற ஆழ்வார் பாசுரம் நம் கண் முன்னே விரிகிறது. மெய்சிலிர்த்துக்கண் பனி சோர உணர்விழந்துப்போகிறோம். மீண்டும் கிருஷ்ணா நீபேகனே பாரோ என்று தொடங்கும்பொழுது தான் அடடா இது யாருடைய கவிதை புரந்தரதாசருடையது தான் வேறு யார் தான் இப்படிப் பாட முடியும் என்கிறோம்.
…………………….. விட்டல விட்டல புரந்தர விட்டல விட்டல பாண்டுரங்க விட்டல விட்டல ……………………
தொகுத்து வழங்கியவர்
ரா. ஹரிஷங்கர்

Write Your Comment

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading