மாணிக்கவாசகர் (Manickavasagar)

மாணிக்கவாசகர் (Manickavasagar)

மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாரும்,திருவெம்பாவை யுமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.

இவர் பாடிய பாடல்கள் “திருவாசகம்” என அழைக்கப்படுகின்றன. திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில்  சிவனடி சேர்ந்தார்.
இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள் என்ற பெயர்களும் உண்டு.

வரலாறு
“திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார் அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான்.

திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.
நரியைப் பரியாக்கியது
ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படிப் பாண்டிய மன்னன் பணித்தான்.

மாணிக்கவாசகர் பொன்னோடு  ஆவுடையார் கோவில் அடைந்தார். அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று மாணிக்கவாசகர் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று மாணிக்கவாசகர் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்
சிவஞானத்தை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.

தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர்.

பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகர் அழைத்துவரக் கட்டளையிட்டான்.

‘குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை’ என்று கூறி மாணிக்கவாசகர் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து ‘குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்’ என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.

சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் ‘எங்குமே குதிரைகள் தென்படவில்லை’ என்ற செய்தியோடு திரும்பினர்.

ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. ‘இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெயிலில் நிறுத்துவேன்’ என்று கூறிப் பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. மாணிக்கவாசகர் சிவனை தஞ்சம் அடைந்தார்.

உடனே சிவபெருமானின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். இதனாலே இறைவனுக்கு பரிமேலழகர் எனும் கரணியப் பெயர் ஏற்பட்டது. ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.

குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, ‘இவை உன்னுடையவை’ என்று கூறி ஒப்படைத்தான்.

அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.

வைகை வெள்ளமும் வந்தியும்
சிவபெருமானுக்கு அடியவரின் துன்பம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார்.கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது.

உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். வந்திக் கிழவி எனும் ஒரே ஒருவள் மட்டும் வீட்டிலும் யாருமில்லாமலும், ஏவலாளரும் இல்லாமல் யோசித்துக் கொன்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். “செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன்” என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது ‘வேலையைத்’ தொடங்குகிறார்.

அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது.

கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும் படவே, பாண்டியன் கலங்கிப் போனான்.

அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது, ‘மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்’ என்று அக்குரல் சொல்லிற்று. மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்துப் பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார்.

இறைவன் எழுதியவை
சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி ‘தாங்கள் யாரோ?’ என்று வாதவூரார் கேட்டார்.

‘நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்’ என்று அந்தணர் கூறினார்.
‘நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்’ என்று கூறினார் திருவாதவூரார்.

அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர் பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.
படைப்புக்கள்
திருவாசகம்
திருக்கோவையார்
அற்புதங்கள்
1.சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும் மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து கொண்டது.
2.ஊமையாயிருந்த பெண்ணைப் பேசவைத்தமை.
3.தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்றுக்கொண்டது.
4.திருச்சபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.

ஓம் ஸ்ரீ மாணிக்கவாசகரே போற்றி போற்றி போற்றி!!!
எழுதியவர்
ரா. ஹரிசங்கர்

Write Your Comment

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading