பகவான் பிரம்மா பாடல்கள், LORD BRAHMA SONGS IN TAMIL

பிரம்மா  மும்மூர்த்திகளுள் படைக்கும் தொழில் செய்பவராவார். மற்றவர்கள் விஷ்ணுவும், சிவனும் ஆவர். பிரம்மா கலைமகள் என்று அழைக்கப்பெறும் சரஸ்வதியுடன் சத்ய லோகத்தில் வசிப்பவர். இவரின் மனதிலிருந்து முதலில் தோன்றிய, சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர், என நான்கு மகன்கள் இல்லற தர்மத்தை கடைப்பிடிக்காது துறவறத்தில் ஈடுபட்டு ஞானிகளாக மாறிவிட்டனர். இவர் நான்கு தலையுடனும், நான்கு கைகளையும் கொண்டுள்ளார். அத்துடன் வேதங்களை வைத்து படைத்தல் தொழிலை செய்கிறார். இவருடைய வாகனமாக அன்னப் பறவை உள்ளது. நான்கு முகங்களை உடையவர் என்பதால் நான்முகன் என்றும், பிரம்மத்திலிருந்து தோன்றிய விஷ்ணுவின் தொப்புளிலிருந்து தோன்றியதால் பிரம்மா என்றும் அழைக்கப்படுகிறார்.

பகவான் பிரம்மா பாடல்கள்

ஓ படைப்பு கடவுளான ப்ரஹ்மவே, உன் பாதம் சரணடைந்தேனே, நீயே இவ்வுலகத்தின் தாயும் தந்தையும் ஆவாய், உன்னுடைய படைப்புகளை நீ ஆசிர்வதிப்பாய், நன்றாக ஆசிர்வதித்திடுவாயே, அவர்கள் ஆனந்தமாக வாழ அருள் புரிந்திடுவாயே.

விதியின் கடவுளே, என் மோசமான தலையெழுத்தை நீயும் மாற்றிடுவாயே, நான் மணம் புரிய ஒரு நல்ல மணப்பெண்ணை எனக்கு நீயும் காட்டிடுவாயே, அவளை எனக்கு விரைவில் திருமணம் செய்து வைத்திடுவாயே, என் மரணம் வரையிலும் அவள் எனக்கு உறுதுணையாக இருக்க அருள் புரிந்திடுவாயே.

நிம்மதியற்ற என் வாழ்க்கையை, நிம்மதியுடன் வாழ அருள் செய்ய வேண்டுகின்றேனே, உன்னை நான் மனதார வேண்டுகின்றேனே, குப்பையான என் வாழ்வை தங்கமாக மாற்றிடுவாயே, சொக்க தங்கமாக மாற்றிடுவாயே.

ஓ பிரம்மா, உன்னை தினந்தோறும் தேவர்களும் ரிஷிகளும் மற்றும் அனைத்து உலக மக்களும் துதிக்கின்றனர், உனக்கு முதலும் முடிவும் இல்லை. நீயே சிவன், நீயே விஷ்ணு, அனைத்திலும் நீயே, உன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை எனக்கு நீயும் காட்டிடுவாயே, அதை காண நானும் விருப்புகின்றேனே.

குழந்தை சுப்ரமணியன் விளையாட்டாக உன்னை தண்டித்ததை நினைத்து கோபம் கொள்ளாதே, அவனோ ஒரு தீராத விளையாட்டு பிள்ளை, விநாயகனுக்கு தோப்புக்கரணம் போட்டதை எண்ணி வருத்தம் கொள்ளாதே, அவனோ அழகிய அருமை யானைமுகன், நந்தியெம்பெருமான் உன்னை கண்டித்ததை எண்ணி வருத்தம் கொள்ளாதே, அவனோ ஒரு அடங்காத தெய்வீக காளை, சிவபெருமான் உன்னை தண்டித்ததை எண்ணி வருத்தம் கொள்ளாதே, அவனோ நம் உள்ளங்கவர்ந்த கூத்தாடி, பிருகு முனிவர் உன்னை சபித்ததை எண்ணி கவலை கொள்ளாதே, அவனோ உன்னுடைய மானஸ புத்திரன், தக்ஷன் உன்னை மதிக்காமல் போனதை எண்ணி நீ வருத்தம் கொள்ளாதே, அவனோ ஒரு ஒப்பற்ற பிரஜாபதி.

மாதா சரஸ்வதியை மனைவியாக அடைந்ததை எண்ணி ஆனந்தப்படு, ஏனெனில் அவளே விணையிசையின் மூலம் இவ்வுலகத்திற்கு ஆனந்தம் அளிப்பவள், ஸனத்குமாரர்களை படைத்ததை எண்ணி சந்தோஷப்படு, ஏனென்றால் அவர்களே இவுலகின் முதல் ரிஷிகளாவார், வியாசனை படைத்ததை எண்ணி நீ ஆனந்தப்படு, அவராலே பதினெண் புராணம் நமக்கு கிடைத்ததே, சங்குகர்ணரை நீ சபித்ததையெண்ணி நான் ஆனந்தப்படுகின்றேன், ஏனென்றால் அதனாலே பரம பாகவதன் பிரஹலாதன் மற்றும் மகான் வ்யாஸராஜர், ராகவேந்திரர் நமக்கு கிடைத்துள்ளார்.

மாதா லக்ஷ்மி, பார்வதியை எண்ணி எண்ணி பரவசப்படு அவர்களின் புகழினை நீயும் பாடி பரவசப்படு.

உனக்கு கோவில்கள் இல்லை என்று கவலை கொள்ளாதே, நான் என் மனதில் உனக்கு ஒரு கோவிலை கட்டி வைத்து அதில் உனக்கு தினந்தோறும் பூஜை செய்கின்றேனே, மிக மிக நன்றாக பூஜை செய்கின்றேனே.

சூரியன், சந்திரன், இந்திரனை நீ படைத்ததனால் இவ்வுலகம் உயர்வடைந்தது, என்னை நீயும் படைத்ததனால் உன்னை பற்றி எழுதும் பாக்கியம் எனக்கு கிடைத்ததே, அதனால் நானும் ஆனந்தம் அடைந்தேனே.

ஓம் ஸ்ரீ பிரஹ்மதேவாய நமஹ
எழுதியவர்
ரா. ஹரிஷங்கர்

Write Your Comment