பன்னிரண்டு ஆழ்வார்கள்(The Twelve Alvars)

பன்னிரண்டு ஆழ்வார்கள்(The Twelve Alvars)

ஸ்ரீமன் நாராயணனே கதி என வாழ்ந்த ஆழ்வார்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்திருந்தாலும், அவர்கள் போற்றிப் பணிந்ததெல்லாம் ஸ்ரீமன் நாராயணனே. இந்த ஆழ்வார்கள் திருமாலின் அம்சமாகவே கருதப்படுகின்றனர். பெருமானைப் போற்றுவதும், புகழ்வதும் மற்றும் மங்களாசாஸனம் செய்வதுமே அவர்களின் வாழ்க்கை முறையாக அமைந்தது.

பொய்கை ஆழ்வார்

கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். காஞ்சீபுரத்தில் பிறந்தார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர்.

மஹாவிஷ்ணுவின் திருச் சங்கின் அம்சமாக இவர் கருதப்படுகிறார். திருவெஃகா என்றழைக்கப்படும் இத்திருத்தலத்தில் கோயிலின் பொய்கையில், இவர் ஒரு பொற்றாமரையில் அவதரித்ததாகவும், அதனாலேயே இவருக்குப் பொய்கையாழ்வார் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.

பூதத்தாழ்வார்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடல்மல்லை என்றழைக்கப்படுகின்ற தலத்தில் பொய்கையாழ்வாரின் காலத்திலேயே வாழ்ந்தவர். ஒரு நீலோற்பல மலரில் அவதரித்தார். விஷ்ணு பகவானின் கதையின் அம்சமாகக் இவர் கருதப்படுகின்றார். ஸ்தலசயனப் பெருமானைத் துதித்துப் பாடல்கள் பல பாடியுள்ளார்.

பேயாழ்வார்

மயிலாப்பூரில் கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் குளத்தில் ஓர் செவ்வல்லி மலரில் அவதரித்தார். ஸ்ரீமந் நாராயணின் நந்தகம் என்கின்ற வாளின் அம்சமாக இவர் கருதப்படுகிறார்.

திருமழிசை ஆழ்வார

எம்பெருமானைத் தம் நண்பனாகப் பாவித்துப் பல பாடல்கள் பாடியுள்ளார். இவர் அவதரித்தது திருமழிசை என்ற ஊரில். இவர் விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகக் கருதப்படுகிறார்.

இவர் தன் வளர்ப்புப் பெற்றோருக்குப் பிறந்த கணிக் கண்ணனைத் தன் சீடனாக ஏற்று பின்னர் கணிக்கண்ணனுடன் திருக்குடந்தை சென்று ஆராவமுதப் பெருமான் மீது பல பாடல்கள் இயற்றினார்.

நம்மாழ்வார்
ஆழ்வார் திருநகரியில் கி.பி.9ம் நூற்றாண்டில் அவதரித்தார். பிறந்து பல நாட்களுக்குப் பிறகும் கண்கள் மூடிய நிலையில் தாய்ப்பால் கூட அருந்தாமல் இருந்தார். ஆனால் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். வாயிலிருந்து ஒரு சொல் கூட வரவில்லை. சடகோபன் என்றும் அழைக்கப்பட்ட இக்குழந்தை இவ்வுலக ஆசா பாசங்களிலிருந்து விலகி இருந்தான். வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணனின் அன்புக்குப் பாத்திரமான விஷ்வக்ஸேனனின் அம்சமாக நம்மாழ்வார் கருதப்படுகிறார்.

இவர் பாசுரங்களுக்குப் புத்துயிர் அளித்துப் பெருமாள் கோயில்களில் இசைக்க வைத்ததாகவும் கூறுவர்.
திருமங்கையாழ்வார்

சோழநாட்டில் திருமங்கை மன்னனாக இருந்து பின் இறைவனின் தொண்டனாகி எம்பெருமானின் அடியவர்க்காக வாழ்ந்தவர். 8வது நூற்றாண்டில் சோழவளநாட்டில் திருக்குறையலூர் என்ற ஊரில் அவதரித்தார். பெற்றோர் இவருக்கிட்ட பெயர் நீலன்.

இவர் எம்பெருமானின் சாரங்கம் என்ற வில்லின் அம்சமாகக் கருதப்படுகிறார். மணமக்கள் கோலத்தில் ஸ்ரீமந்நாராயணன் லட்சுமி தேவியுடன் இவருக்குக் காட்சியளித்து ஓம் நமோ நாராயணா என்ற எட்டெழுத்து மந்திரத்தின் பொருளுரைத்ததாக அறிகிறோம்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார்

எம்பெருமானின் அடிமையாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு பரமனை மாலைகள் அணிவித்துப் பார்த்து விப்ர நாராயணராக வாழ்ந்தவர்.

திருமண்டங்குடி என்ற சிற்றூரில் பிறந்தார். பெருமானின் வைஜயந்தி என்ற மாலையின் அம்சமாகக் கருதப்படும் இவர் திருவரங்கனைத் தம் பாசுரங்களால் பாடித் துதித்து பாத சேவை செய்தார்.

விஷ்ணு பக்தர்களின் காலடி மண்ணைத் தம் தலையிலிட்டுக் கொண்டதால் தொண்டரடிப்பொடி என்ற பெயர் பெற்றார்.

பெரியாழ்வார்

ஸ்ரீவில்லிப்புத்தூரில் கி.பி.9ம் நூற்றாண்டில்,  அவதரித்தார். கருடாழ்வாரின் அம்சமாகக் கருதப்படும் இவர் விஷ்ணுசித்தர் என்றழைக்கப்பட்டார்.

கண்ணபிரானின் கதைகளைப் பெற்றோர் மூலம் கேட்டறிந்த விஷ்ணு சித்தர் அவன் பக்தியில் திளைத்தார். ரங்க மன்னாருக்காக நந்தவனம் அமைத்து, துளசி மாலைகளை அன்றாடம் கோயிலுக்குச் சமர்ப்பித்தார். எம்பெருமானின் கட்டளைப்படி, பாண்டிய நாடு சென்று பரமனைச் சரணடைவது ஒன்றே முக்திக்கு வழிகாட்டும் என்ற தத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

மன்னன் தமக்களித்த பொன் நகைகளை ரங்கனுக்கு அணிவித்து மகிழ்ந்தார். தம் நந்தவனக் கைங்கர்யத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றார்.

ஸ்ரீ ஆண்டாள்

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெரியாழ்வார் வீட்டு நந்தவனத்தில் ஆடிப்பூரத்தன்று அவதரித்த கோதை நாச்சியார் கி.பி.9ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அறிகிறோம்.

அரங்கனையே மனத்தில் மணாளனாக எண்ணி அவளுக்கு அணிவிக்கும் மாலையை தந்தை பெரியாழ்வாருக்குத் தெரியாமல் முதலில் தான் சூடிக் கொண்ட பிறகே கோயிலுக்கு எடுத்துச் செல்வார். ரங்க மன்னார் ஆண்டாளின் அன்பையுணர்ந்தவன். அவள் அணிந்த மாலையே தனக்கு வேண்டுமென்று பணித்து, அவள் கைப்பிடித்துத் தன்னவளாக்கிக் கொண்டார். ஆண்டாள் பூதேவியின் அம்சமாகக் கருதப்படுகிறார்.

குலசேகர ஆழ்வார்

திருவஞ்சிக் கோலத்தில் கி.பி. 8ம் நூற்றாண்டில் அவதரித்தார்.
ஸ்ரீமஹாவிஷ்ணுவின் கௌஸ்துபத்தின் அம்சமாக இவர் கருதப்படுகிறார். இவர் வடமொழியிலும் தேர்ச்சி பெற்று வில் வித்தை, வாள் பயிற்சி முதலியவற்றையும் பயின்றார். பாண்டிய அரசனின் மகளை மணந்து மணவாழ்க்கையில் ஈடுபட்டு, பல போர்களையும் வென்றார்.

ஸ்ரீமந் நாராயணனே இவ்வுலக வாழ்க்கை மாயை என்பதை அவருக்குணர்த்திய பின் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு, கடவுள் பக்தியைப் பரப்புவதே தன்கடமையென எண்ணினார். ராமாயணக் கதைகளைக் கேட்டுணர்ந்து ராமபக்தியில் மூழ்கித் திளைத்தார்.

மதுரகவி ஆழ்வார்

திருக்கோவூர் என்ற தலத்தில் கி.பி. 9ம் நூற்றாண்டில் அவதரித்தார்.
நம்மாழ்வார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். சிறு வயதிலிருந்தே ஸ்ரீமந் நாராயணனிடம் பக்திகொண்டு போற்றிப் பாடிவந்தார். வடமொழிப் புலமையும் கொண்டிருந்தார்.

ஒருநாள் பூஜைகள் நடத்திய பின்பு பெரிய ஒளியைக் கண்டார். திருநகரி என்ற ஊரில் உள்ள கோயிலில் மரத்தடியில் 16 வருடங்களாகக் கண் மூடிய நிலையில் தவமிருந்த நம்மாழ்வாரைப் பற்றிக் கேள்விப் பட்டார். பேசாதிருந்த நம்மாழ்வாரைக் கண்திறக்கவும், பேசவும் வைத்தார்.
நம்மாழ்வாரையே தம் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார். அவரிடமிருந்து வேதங்களைக் கற்று பாசுரங்கள் பாடி மகிழ்ந்தார்.

திருப்பாணாழ்வார்

உரையூரில் கி.பி.8ம் நூற்றாண்டில் பாணர் என்ற இசை வழிபாடு செய்யும் குலத்தில் அவதரித்தார்.

ஸ்ரீமந் நாராயணனின் மார்பில் இருக்கும் ஸ்ரீவத்ஸம் என்கிற மருவின் அம்சமாக விளங்குகிறார். தீண்டத் தகாத குலத்தில் பிறந்தவர் என்று கருதப் பட்டதால் காவிரியைக் கடந்து அரங்கத்தம்மானைக் கண் குளிரக் காண முடியவில்லையே என்று வருந்தி, காவிரியின் அக்கரையில் நின்ற படியே திருவரங்கம் இருக்கும் திசை நோக்கித் தவமிருந்தார்.

உலோக சாரங்க முனிவரின் கனவில் தோன்றிய எம்பெருமான், அக்கரையில் தவமிருக்கும் திருப்பாணாழ்வாரை பட்டரின் தோளில் சுமந்து வரச்செய்து அவருக்குக் காட்சியளித்தார். ஆண்டாளைப் போலவே அரங்கனிடம் அன்பு வைத்து அழகாகப் பாடியுள்ளார்.

ஓம் நமோ நாராயணா
தொகுத்து வழங்கியவர்
ரா. ஹரிஷங்கர்

Write Your Comment

Discover more from HinduPad

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading