பகவான் வெங்கடேஸ்வரா பாடல்கள் (LORD VENKATESWARA SONGS IN TAMIL)

ஸ்ரீ வெங்கடேஸ்வரா  என்பவர், சாட்சாத் மகா விஷ்ணுவே ஆவார். இவர் ஸ்ரீனிவாசன், பாலாஜி, வெங்கடேசன், கோவிந்தன் என்று பல பெயர்களாலும் அறியப்படுகிறார். இவருக்கு உள்ள கோவில்களில், திருப்பதி வெங்கடாசலபதி கோவில் மிகவும் பிரபலமானது ஆகும். வேங்கடம் என்ற பகுதியில் இருப்பதால் வெங்கடாசலபதி என்ற பெயர் வந்துள்ளது.

திருமலை – திருப்பதியில், வெங்கடாசலபதி கோவில் உள்ளது. தற்பொழுது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது. ஏழுமலைகளைக் கொண்டுள்ளதால், ஏழுமலையான் என்றும் வெங்கடாசலபதியை வணங்குகின்றனர். இக்கோவில், உலகின் அதிக மக்களின் வழிபாட்டுத்தளமாகவும், மிகப்பெரிய பணக்கார கோவிலாகவும் கருதப்படுகிறது. ஏழு மலை பெயர்களும் பின்வருவனவாகும்: சேஷாத்ரி, நீலத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, ருஷுபத்ரி, நாராயணாத்ரி மற்றும் வேங்கடாத்ரி.

பகவான் வெங்கடேஸ்வரா பாடல்கள்
திருவேங்கடத்தில் வாழும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா, என்னையும் நீயும் காப்பாயோ ஸ்ரீ ஸ்ரீனிவாசா.
ஹரியும் ஹரனும் ஒன்றே என்று நிரூபிப்பதைப் போல, நீயே வேங்கட ஈஸ்வரன் என்றும் அழைக்கப்படுகின்றாய்.
வருத்தப்படும் மனிதர்களே, சீக்கிரம் திருமலைக்கு சென்று நம் வெங்கடேஸ்வரனை ஆசை தீர தரிசனம் செய்யுங்கள், உங்கள் அனைத்து கோரிக்கைகளையும் அவன் நிறைவேற்றிவைப்பான். ஏழைகளின் துயர் துடைப்பவனே ஸ்ரீ வெங்கடேஸ்வரா, இந்த ஏழையின் துயர் துடைப்பாயோ ஸ்ரீ ஸ்ரீனிவாசா.

திருப்பதி சென்றால் நம் வாழ்வில் திருப்பம் வரும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா என் வாழ்வில் திருப்பம் தருவாயோ ஸ்ரீ ஸ்ரீனிவாசா.
கல்யாண வரம் தரும் கல்யாண வெங்கடேஸ்வரரே, எந்தன் வாழ்வினில் ஒளி ஏற்றிடுவாயே ஸ்ரீ ஸ்ரீனிவாசா.

ஆபத்பாந்தவா, அனாதை ரட்சகா, இந்த அனாதைக்கு வழி காட்டிட சீக்கிரம் ஒடி வாப்பா ஸ்ரீ வெங்கடேஸ்வரா.

அப்பப்பா ஏழுமலையப்பா உன்னை நினைத்தாலே மனதினில் சந்தோஷம் பெருகுதப்பா ஸ்ரீ வெங்கடேஸ்வரா.

பத்மாவதியின் பதியும் நீயே, எந்தன் இஷ்ட தெய்வமும் நீயே, வகுளமாலிகாவின் தனயனும் நீயே, வரங்களை தருபவனும் நீயே, எனதருமை ஸ்ரீ ஸ்ரீனிவாசா. பட்டுப்பீதாம்பரதாரியே, சங்குசக்கரதாரியே, உனை உறக்கத்திலும் நினைத்து மகிழ்ந்திடுவேனே ஸ்ரீ வெங்கடேஸ்வரா.
வெங்கடேஸ்வரா இனிவரும் பிறவிகளில் உந்தன் காலில் ஒரு சிறு தூசியாக விழுந்து கிடந்தாலும் போதுமே.

அழகிய நாமத்தை அணிந்தவனே, உன்னை ஆயிரம் நாமங்களால் அர்ச்சித்திடுவேனே ஸ்ரீ ஸ்ரீனிவாசா.

அலங்காரப்ரியனே உனை பலவிதமான அலங்காரங்கள் செய்து மகிழ்ந்திடுவேனே ஸ்ரீ வெங்கடேஸ்வரா.

அபிக்ஷேக பிரியனே உனக்கு பலவிதமான அபிஷேகங்கள் செய்து மகிழ்ந்திடுவேனே ஸ்ரீ ஸ்ரீனிவாசா.

போஜன பிரியனே, நல்ல சுவையுள்ள உணவினை தயார் செய்து உனக்கு ஊட்டி மகிழ்ந்திடுவேனே ஸ்ரீ வெங்கடேஸ்வரா. வேங்கடமலை சென்று வந்தாலே நம் சங்கடமலை தீர்ந்துவிடுமே.

பத்மாவதி என்று சொன்னாலே வைகுண்டபதி நம் முன் வந்து நிற்பானே.
வகுளமாளிகை என்று சொன்னாலே நாம் வாழ்வதற்கு வசதியான மாளிகையை தந்திடுவானே.

ஸ்ரீனிவாசம் என்று ஒரு தடவை சொன்னாலே நம் இதயத்தில் வாசம் செய்திடுவானே. வெங்கடேஸ்வரா நீயே கிருஷ்ணன் என்பதால் வேங்கடகிருஷ்ணன் என்று அழைக்கப்படுகின்றாய், என் கண்களுக்கு
நீ கிருஷ்ணனாகவும் காட்சியளிக்கின்றாய்!

வெங்கடேஸ்வரா நீயே ராமன் என்பதால் வேங்கடராமன் என்று அழைக்கப்படுகின்றாய் என் கண்களுக்கு நீ ராமனாகவும் காட்சியளிக்கின்றாய்!

வெங்கடேஸ்வரா நீயே நரசிம்மன் என்பதால் வேங்கடநரசிம்மன் என்று அழைக்கப்படுகின்றாய், என் கண்களுக்கு நீ நாசிம்மனாகவும் காட்சியளிக்கின்றாய்!

வெங்கடேஸ்வரா நீ பத்மாவதியின் பதி என்பதால் என்பதால் பத்மவெங்கடேசன் என்று அழைக்கப்படுகின்றாய், என் கண்களுக்கு நீ பத்மாவதி தாயாராகவும் காட்சியளிக்கின்றாய்!

வெங்கடேஸ்வரா நீ சுப்பிரமணியனின் மாமன் என்பதால் என்பதால் வேங்கடசுப்ரமணியன் என்று அழைக்கப்படுகின்றாய், எனக்கு நீ சுப்ரமண்யனாகவும் காட்சியளிக்கின்றாய்!

வெங்கடேஸ்வரா நீ கணபதியின் மாமன் என்பதால் வேங்கடகணபதி என்று அழைக்கப்படுகின்றாய், என் கண்களுக்கு நீ கணபதியாகவும் காட்சியளிக்கின்றாய்!

வெங்கடேஸ்வரா நீ சக்தி தேவியின் தமையன் என்பதால் சக்திவெங்கடேஸ்வரா என்று அழைக்கப்படுகின்றாய், என் கண்களுக்கு நீ சக்தி தேவியாகவும் காட்சியளிக்கின்றாய்!

வெங்கடேஸ்வரா உன் பரம பக்தர்கள் வியாசராஜரை போன்றோ, அன்னமாச்சார்யாரை போன்றோ, வெங்கமாம்பாவை போன்றோ, எனக்கு பாட்டெழுதவராது, ஆனாலும் உன் மீது கொண்ட மிகுந்த பக்தியினால் இப்பாடல்களை எழுதியுள்ளேன். தவறு ஏதேனும் இருந்தால் தயவு செய்து என்னை மன்னிக்கவும்.

ஓம் ஸ்ரீ வெங்கடேஸ்வராய நமஹ
எழுதியவர்
ரா. ஹரிஷங்கர்

Write Your Comment