லட்சுமி என்பவர் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும், விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார். இவர் சீதை, ருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுத்ததாக கருதப்படுவதுண்டு.
அமுதம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த தருணத்தில் அதிலிருந்து எண்ணற்ற பொருள் வெளிவந்தன. அதில் ஒன்றாக லட்சுமி தேவியும் தோன்றினார். லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது.
அன்னை லட்சுமி தேவி பாடல்கள்
அம்மா தாயே, மஹாலக்ஷ்மியே, எந்தன் வீட்டிற்கு நீயும் வந்திடுவாயே, உனக்காக நான் அன்புடன் பாலும் பழமும் இனிப்பும் செய்து வைத்திருக்கிறேன், அதனை நீயும் சாப்பிடம்மா.
வந்து விட்டாள் வந்து விட்டாள் என் வீட்டிற்கு மஹாலக்ஷ்மி வந்து விட்டாள் நான் அவளை நினைக்காத நாளில்லையே!
நல்ல நறுமலர்களை கொண்டு உன்னை அர்ச்சிபேனம்மா, தூப தீபம் காட்டி உன்னை வழிபடுவேனம்மா, உனக்கு அழகான பட்டாடை வாங்கி வைத்திருக்கிறேன், அதனை நீ உடுத்தி கொள்ளம்மா, தங்க நகைகளும், தங்க கொலுசும் வாங்கி வைத்திருக்கிறேன், அதனை நீ அணிந்து கொள்ளடியம்மா, என் வீட்டில் நீ நிரந்தரமாக வாசம் செய்திட வேண்டுமம்மா, உன்னை போல ஒரு நல்ல குணவதியை மணம் புரிய அருள் செய்வாயம்மா, உந்தன் கடாக்ஷம் என்றென்றும் என் வாழ்வில் இருக்க அனுக்கிரஹம் செயவாயம்மா.
தைரிய லக்ஷ்மி தாயே, எனக்கு தைரியத்தை அளித்திடு.
சந்தான லக்ஷ்மி தாயே, எனக்கு சந்தான பாக்கியத்தை அளித்திடு.
அன்ன லக்ஷ்மி தாயே, எனக்கு தினந்தோறும் அன்னத்தை அளித்திடு.
வித்யா லக்ஷ்மி தாயே, எனக்கு வித்யா செல்வத்தை தாராளமாக வழங்கிடு.
தனலக்ஷ்மி தாயே, எனக்கு தனத்தை தாராளமாக அளித்திடு.
ஆனந்த லக்ஷ்மி தாயே, நான் இவ்வுலகில் ஆனந்தமாக வாழ அருள் புரிந்திடு.
சௌபாக்கிய லக்ஷ்மி தாயே, என் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் வழங்கிடு.
அமிர்தவல்லி தாயே, தேவலோக அமிர்தத்தை எனக்கு வழங்கிடு.
கஜலக்ஷ்மி தாயே, கஜ பலத்தை எனக்கு வழங்கிடு.
நாகலட்சுமி தாயே, நாகதோஷம் என்னை அணுகாமல் நீ காப்பாத்திடு.
நவகிரஹ லக்ஷ்மி தாயே, நவகிரஹ தோஷம் என்னை அணுகாமல் நீ காப்பாத்திடு.
உன்னையே நினைத்தேன் உளமார துதித்தேன், உன் கண்கள் அழகிய மீன்களை போன்றது, உன் முகம் தாமரை மலருக்கு ஒப்பானது,, உன் உதடுகள் அழகிய ரோஜா மலர் இதழினை நினைவூட்டுகிறது, உன் பற்கள் முத்துகளை போல் பளிச்சிடுகின்றது, உந்தன் சிரசு பௌர்ணமி சந்திரனை போல் உள்ளது, உந்தன் இடை அழகிய தாமரை தண்டினை போல் காட்சியளிக்கிறது, உன் மார்பகங்கள் அழகிய அமிர்த கலசத்திற்கு ஒப்பானது, உன் செவிகள் சிவந்து காணப்படுகிறது, உந்தன் கால்கள் வாழை தண்டினை போல் காட்சியளிக்கின்றது, உன் நாசி பவளத்தை போல் காட்சியளிக்கிறது, உனது எல்லா அவயங்களும் தங்க நிறமாய் மின்னுகிறது, தாயே மகாலக்ஷ்மி, உன்னை துதிப்போருக்கு எல்லா நலன்களையும் நீ தாராளமாக வழங்கிடு.
மகாலக்ஷ்மி தாயே, நீயே ஜெகன்மாதா, ஜெகன்மோகினி, ஜெகத்ரக்ஷம்பிகை, தாயே, உன்னை புகழ வார்த்தை ஏதும் இல்லை, உன்னை மனைவியாக்கி கொண்டதனால், உன் பதி லக்ஷ்மி நாராயணன் என்று அழைக்கப்படுகின்றார்.
மகாலக்ஷ்மி மகாலக்ஷ்மி என்றே கூறிட மங்களகரமான வாழ்வை நாம் அடைந்திடுவோமே, அஷ்டலக்ஷ்மி என்றே கூறிட அஷ்டமா சித்திகளையும் நாம் பெற்றிடுவோமே.
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே நமஹ
எழுதியவர்
ரா. ஹரிஷங்கர்